முகப்பு

27 January 2022

தஞ்சையும் அரண்மனையும் : முனைவர் மணி. மாறன்

முனைவர் மணி. மாறன் எழுதியுள்ள தஞ்சையும் அரண்மனையும் என்னும் நூல் சுற்றுலாப்பயணிகளுக்கான ஒரு அழகிய கையேடாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள நூலாகும். நூலை வாசிக்கும்போதே தஞ்சாவூரையும், அருகிலுள்ள பகுதிகளையும் சுற்றிவந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.


இந்நூல் தஞ்சாவூரின் வரலாற்றுச்சிறப்புகளையும், கலையின் அருமைகளையும் மிக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளைக் கண்ட கோட்டையும் அகழியும் சூழ்ந்த தஞ்சாவூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை, கலைக்கூடம், காவல் கோபுரம், சங்கீத மகால், சரசுவதி மகால் நூலகம், மராட்டா தர்பார் ஹால், ராயல் அருங்காட்சியகம், சரபோஜி அருங்காட்சியகம், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், ஐந்தடுக்கு மாளிகையான சர்ஜா மாடி, இந்தியாவிலுள்ள பெரிய பீரங்கிகளில் ஒன்றான இராஜகோபால பீரங்கி அமைந்துள்ள பீரங்கி மேடு, மணிக்கூண்டு, சிவகங்கைப்பூங்கா, இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தமிழ்ப் பல்கலைக்கழகம், ராஜராஜன் மணிமண்டபம். மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களைப் பற்றி இந்நூலில் காணலாம்.

தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் மாலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, உலோகச் சிலைகள் தயாரிப்பு, குத்துவிளக்குகள், நெட்டி வேலைப்பாடு, பட்டுப்புடவை உற்பத்தி, கலம்காரி துணி வேலைப்பாடு, கோயில் குடை வேலைப்பாடு என்ற வகையில் கலைகளின் தாயகமாக தஞ்சாவூர் விளங்குவதை இந்நூல் விவாதிக்கிறது. தஞ்சாவூரின் சிறப்புகள் சிலவற்றை இந்நூலிலிருந்து காண்போம்.

"2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்களில் தஞ்சாவூர் என்ற ஊர் பற்றிய குறிப்பு எங்கும் காணப்பெறவில்லை. சோழ நாடாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தின்கண் உள்ள வல்லம், ஆவூர், ஆர்க்காடு, கிழார் போன்ற ஊர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன." (ப.8)

"சாகித்ய ரத்னாகரம், இரகுநாத விலாசம், இரகுநாதப்புதயம், மன்னாருதாச விலாசம் போன்ற நாயக்கர் காலத்தில் எழுந்த நூல்களின் வழியாக தஞ்சைக் கோட்டை, அகழி, அரண்மனை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது." (ப.9)

"தற்போது ஆயுத கோபுரம் என்றழைக்கப்படும் எட்டு அடுக்குகள் கொண்ட மாட மாளிகையே இந்திரா மந்திரம் எனப்படுவதாகும். ஒவ்வொரு அடுக்கின் நடுப்பகுதியிலும் மன்னரின் படுக்கைக்குரிய கட்டில்களும், விதானங்களும் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்." (ப.16)

"....பெரிய கோயில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுவதும் வீணாகாமல் இருக்கும் பொருட்டு மாமன்னன் இராஜராஜனால் சிவகங்கை என்ற பெயரில் குளம் வெட்டி காக்கப்பெற்று, அக்குளத்தில் நீரானது சேகரிக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பின் வழிகாட்டி மாமன்னன் இராஜராஜனே ஆவான்..." (ப.32)

தஞ்சாவூரைப் பற்றி மட்டுமன்றி அருகிலுள்ள மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திருவையாறு, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருபுவனம், சிதம்பரம், தரங்கம்பாடி, பூண்டி மாதா கோயில், கல்லணை, திருவாரூர், நாகூர், வேளாங்கண்ணி, மனோரா, அலையாத்திக் காடுகள், புதுக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், நவக்கிரகத் தலங்கள் ஆகிய ஊர்களைப் பற்றிய பறவைப்பார்வையினையும் இந்நூல் கொண்டுள்ளது.

தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண விரும்புவோருக்கும், புகழ் பெற்ற கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள விழைவோருக்கும் இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும். அரிதின் முயன்று செய்திகளைத் திரட்டி, சிறப்பான நூலை எழுதியுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : தஞ்சையும் அரண்மனையும்
ஆசிரியர் : முனைவர் மணி. மாறன்
பதிப்பகம்: ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர் 613 009, (அலைபேசி 82487 96105)
பதிப்பாண்டு: அக்டோபர் 2021
விலை ரூ.100


10 comments:

  1. தங்களது விளக்கம் நூலை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

    நூலாசிரியர் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான விபரங்கள்! விலாசம் குறித்துக்கொண்டேன். ஊருக்கு வரும்போது இந்த புத்தகத்தை வாங்க வேண்டும். இந்த ஜவுளி செட்டி தெரு எங்கிருக்கிறது?

    ReplyDelete
  3. சிறப்பான நூலாகத் தெரிகிறது. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  4. சிறப்பானதொரு அறிமுகம்.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம். தஞ்சை அரண்மணையைப் பார்த்திருந்தாலும் அதைப்பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    நல்ல நூலைப் பற்றிய அறிமுகம். தாங்கள் நூலைப் பற்றி விளக்கமாக சொல்லியதற்கும், அருமையான நூலை எழுதியவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. நல்ல அறிமுகம். தஞ்சை அரண்மனை பார்த்ததும் இல்லை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா

    கீதா

    ReplyDelete
  8. பார்க்க வேண்டும் என்று நினைத்த இடம். நீர் மேலாண்மை எல்லாம் எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார் இராஜ ராஜ சோழன்! நூல் அறிமுகம் நன்று அறிமுகத்திற்கும் நன்றி.

    துளசிதரன்

    ReplyDelete