முகப்பு

21 July 2022

கோயில் உலா : 2 ஜூலை 2022

2 ஜூலை 2022இல் அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த, இவ்வாண்டின் மூன்றாவது கோயில் உலாவில் பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி,  வலிவலம்,  கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் எட்டுக்குடி (சுப்பிரமணியசுவாமி) மற்றும் தில்லைவிளாகம் (வீரகோதண்டராமர்) ஆகிய கோயில்கள் தவிர பிற கோயில்கள் தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களாகும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ள இக்கோயில்கள் அனைத்தும் நான் முதல் முறை பார்க்கின்ற கோயில்களாகும். 

பரிதிநியமத்தில் குழுவினர் சிவ புராணம் ஓத அங்கிருந்து கோட்டூர் சென்றோம். வளரும் இளம் நாதஸ்வரக்கலைஞர்களின் திறமையைக் கண்டு ரசித்தோம். பின் பயணத்தைத் தொடர்ந்தோம். எட்டுக்குடியில் மதிய உணவுக்குப் பின் சற்றே ஓய்வெடுத்தோம்.

1) பரிதிநியமம், தஞ்சாவூர் மாவட்டம்  
பரிதியப்பர்-மங்களநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் அருகில் உள்ள தலம். 

2) கோட்டூர், திருவாரூர் மாவட்டம்  
கொழுந்தீஸ்வரர்-தேனார்மொழியாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்தும், மன்னார்குடியிலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். 



3) திருக்களர், திருவாரூர் மாவட்டம்  
களர்முளைநாதர்-இளங்கொம்பன்னாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில்  உள்ள தலம். 

4) சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்), நாகப்பட்டினம் மாவட்டம்  
பொன்வைத்தநாதர்-அகிலாண்டேஸ்வரி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடியிலிருந்து  3 கிமீ தொலைவில் உள்ள தலம். 

5) எட்டுக்குடி , நாகப்பட்டினம் மாவட்டம்  
சுப்பிரமணியசுவாமி  

6) வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம் 
மனத்துணைநாதர்-வாளையங்கண்ணி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கீவளூர் வழி சென்று இத்தலத்தை அடையலாம்.


7) கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்), திருவாரூர் மாவட்டம் 
நடுதறியப்பர்-மாதுமையம்மை 
நாவுக்கரசர் பாடல் பெற்றது
நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சாலையில் சாட்டியக்குடி கூட்டுரோட்டில் பிரியும் சாலையில் 2 கிமீ சென்று ஆதமங்கலம் அடுத்து கோயில்கண்ணாப்பூர் கூட்டுரோடு என விசாரித்து அங்கிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் 1 கிமீ சென்றால் தலத்தை அடையலாம்.

8) கச்சினம் (கைச்சினம்), திருவாரூர் மாவட்டம்  
கைச்சினேஸ்வரர்-வெள்வளைநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தலம்.


9) தண்டளை நீள்நெறி (தண்டலச்சேரி), திருவாரூர் மாவட்டம்  
நீள்நெறிநாதர்-ஞானாம்பிகை 
ஞானசம்பந்தர், பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தலம்.


10) கற்பகநாதர்குளம் (கடிக்குளம்), திருவாரூர் மாவட்டம் 
கற்பகநாதர்-சௌந்தரநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி தொண்டியக்காடு சாலையில் இத்தலம் உள்ளது.



11) தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம்  
வீர கோதண்டராமர் 


ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கின்ற அனுபவங்கள் மனதில் நிற்கும் வகையில் உள்ளன. இந்த உலாவும் அவ்வாறே அமைந்தது.

vட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவராக முருகன், வள்ளி தெய்வானையுடன் மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் சௌந்திரேஸ்வரர் சன்னதியும், இடது புறத்தில் ஆனந்தவல்லியம்மன் சன்னதியும் உள்ளன. (எண்கண்ணில் மூலவராக  பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். முருகனுக்கு தனி சன்னதி உள்ளது.) வலிவலம் கோயிலைப் பார்த்தபோது கீவளூர் கேடிலியப்பர் கோயில் நினைவிற்கு வந்தது. சற்றொப்ப அக்கோயிலைப் போலவே இருந்தது. கற்பகநாதர் கோயிலில் நந்தி மண்டபம் கோயிலுக்கு முன் இருந்ததைக் கண்டோம். தில்லைவிளாகம் ராமர் கோயில் இப்பகுதியிலுள்ள பஞ்சராமர் தலங்களில் (முடிகொண்டான் ராமர், அதம்பார் கோதண்டராமர், பருத்தியூர் ராமர், வடுவூர் கோதண்டராமர் ஆகியவை பிற ராமர் கோயில்கள்). கருவறையில் உலோகத்திருமேனியாக இருந்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் எங்களை அதிகம் ஈர்த்துவிட்டன. முதன்முதலாக கருவறையில் இங்குதான் உலோகத் திருமேனியை பார்த்தேன். ராமபிரானை வழிபட்டுவிட்டு, உலாவினை நிறைவு செய்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு சுமார் 10.30 மணியளவில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா

9 comments:

  1. அழகிய படங்களுடன் விவரங்கள் தந்தமைக்கு நன்றி. நானும் தரிசனம் செய்து கொண்டேன்.

    ReplyDelete
  2. கோவில் படங்கள் யாவும் அழகு.  ஆலத்தம்பாடியில் என் மாமா பணிசெய்த காலங்களில் அங்கு வந்திருக்கிறேன்.  கோவில் சென்றதில்லை.  எட்டுக்குடி கோவிலில் எங்கள் உபய நாள் முன்னர் இருந்ததது என்று நினைவு.

    ReplyDelete
  3. உலா சிறப்பு ஐயா... படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  4. எட்டுக்குடி முருகனை எப்போது தரிசிப்பேனோ தெரியவில்லை. நீண்ட நாளாக தள்ளிக்கொண்டே போகிறது.

    ReplyDelete
  5. மிக அருமை ஐயா ....கண்டு தரிசனம் பெற வேண்டிய அற்புத ஆலயங்கள்

    ReplyDelete
  6. கோவில் உலா அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    முன்பு தரிசனம் செய்து இருக்கிறோம்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. கோபுர தரிசனம் பெற்று கொண்டேன். பதிவை படித்து முடிக்கையில் கோவில் உலாவில் நாங்களும் கலந்து கொண்ட உணர்வினைப் பெற்றோம் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. உலாவும், பதிவினில் உலவும் படங்களும் அருமை

    ReplyDelete