முகப்பு

20 August 2022

மனதில் நிற்கும் தட்டச்சு

1975இல் பள்ளி விடுமுறையில் கற்க ஆரம்பித்த தட்டச்சுப் பயிற்சியானது, கல்லூரியில் சேர்ந்தபின்னரும் தொடர்ந்தது. மேல்நிலைத் தட்டச்சில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெற்றி பெற்றேன். குடும்ப சூழல் காரணமாக பள்ளியில் படித்தபோதே கூடுதல் தகுதிகளைப் பெறவும், வேலையில் சேர்வதற்கு தயார்படுத்திக்கொள்ளவும் தட்டச்சு, இந்தி,  சுருக்கெழுத்து ஆகியவற்றைக் கற்றதோடு, தஞ்சாவூர் வேலை வாய்ப்பகத்திலும் பெயரைப் பதிவு செய்தேன். 

மே 1976 தேர்வுக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படம்

முதலில் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்திலும் (கும்பகோணம் ரெட்டியார் குளத்தின் கீழ்க்கரை), பின்னர் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்திலும்  (கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி) ரெமிங்டன்,  ஹால்டா, காட்ரேஜ் ஆகிய தட்டச்சுப்பொறிகளில் பயிற்சி பெற்றேன்.

2018இல் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலைய நிறுவனர் திரு பாஸ்கரன் உடன்


தட்டச்சு செய்யும்போது தட்டச்சு செய்யப்படும் செய்தியைத்தான் (The matter to be typed) கண்கள் கவனிக்கவேண்டுமே தவிர தட்டச்சுப் பொறியில் நாம் அடிக்கும் எழுத்து விழுவதையோ (Typed matter on the paper), விசைப்பலகையையோ (Keyboard) பார்க்கக்கூடாது. முதல் வரிசையில் உள்ள எண்களைத் தட்டச்சு செய்யும்போதுகூட அவற்றைப் பார்க்காமல் தட்டச்சு செய்தால்தான் தட்டச்சின் வேகம் அதிகமாகும். வலது கை விரல்களுக்குரிய எழுத்துகளையும், இடது கை விரல்களுக்குரிய எழுத்துகளையும் சீரான வேகத்தில் தட்டச்சிட வேண்டும். ஆள்காட்டி விரல் மூலமாகக் கொடுக்கப்படும் வேகமே சுண்டு விரலால் அடிக்கும்போதும் தரப்படவேண்டும். 

தட்டச்சு செய்த தாளில் கிட்டத்தட்ட எத்தனை தவறுகள் உள்ளன (typos in the typed matter) என்று சொல்லும் அளவிற்கான அனுபவத்தை எளிதில் பெறலாம். தட்டச்சின்போது பிழை ஏற்படும் சூழல் எழும்போது வேகத்தைக் குறைத்து தவறாகத் தட்டச்சிட உள்ள எழுத்தில் உள்ள விரலைப் பின்னோக்கி இழுத்து பிழைகளைத் தவிர்க்க முடியும். 

வாராந்திர, மாதாந்திரத் தேர்வுகளின்போது கீழ்நிலை, மேல்நிலை என்ற இரு பிரிவுகளில்  மதிப்பெண்ணும் தகுதியும் பட்டியலாகவும், பிழையே இல்லாமல் இருப்போர் தட்டச்சிட்ட தாள்களும் (Typed matter with NIL mistake)  அறிவிப்புப்பலகையில் வைக்கப்படுவது வழக்கம்.  நான் தட்டச்சு செய்த தாள்கள் பல முறை அங்கு இடம் பெற்றிருந்தன.  

தட்டச்சு செய்பவர் எண்ணம் முழுக்க அதில் மட்டுமே இருக்கவேண்டும் என்றும்,  தரப்படும் மூலம் (Original in handwritten script) கையெழுத்துப்படியாக இருந்தால் அதைத் தட்டச்சு செய்யும்போது ஏதேனும் தவறு இருந்தால் அதனையும் திருத்தி சரியாக தட்டச்சிடவேண்டும் என்றும் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.  ஏதாவது குறுக்கீடு இருந்தால் தட்டச்சிடுவதை நிறுத்திவிட்டு, நிலைமை சீரானபின்னர் தொடரலாம். தட்டச்சு செய்கின்ற பொருண்மையிலும், தட்டச்சு முறையிலும் கவனமாக இருக்கவேண்டும்.  

இரண்டாவது தாளில் அரசாணை, கடிதம், தணிக்கை அறிக்கை போன்றவை இருந்தன. அரசாணையிலும், கடிதத்திலும் தரப்பட்டுள்ளவை கையால் எழுதப்பட்டிருக்கும். அந்த எழுத்தினைப் புரிந்து தட்டச்சு செய்யவேண்டும். பத்திகளை இடம் மாற்றி ஆங்காங்கே கோடு போட்டு இடம் மாற்ற வேண்டும் என்ற குறிப்பு காணப்படும். அவ்வாறே சொற்களுக்கிடையே இடைவெளி, தேவையற்ற சொல் நீக்கம் போன்றவை அந்தந்த குறிப்புகளோடு காணப்படும். அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். தணிக்கை அறிக்கை போன்றவற்றை பேலண்ஸ் ஷீட் என்ற முறையில் தட்டச்சிட வேண்டும். தனித்தனியாக இரு தாள்களில் தலைப்பு, வலப்புற இடப்புற வரிகளை எழுத்து அளவினை எண்ணிக்கொண்டு அமைக்கும் பணியை நுட்பமாக மேற்கொள்ளவேண்டும். தட்டச்சிட்டபின் இரு தாளையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது ஒரே தாளில் தட்டச்சிட்டதுபோன்ற தோற்றத்தை அது தரும். 

பள்ளிக்காலத்தில் பெற்ற பயிற்சியானது பணிக்காலத்தில் டெலக்ஸிலும், மின்சாரத் தட்டச்சுப் பொறியிலும், தொடர்ந்து கணினித்தட்டச்சிலும் உதவியது. நண்பர்கள் என்னை ரிதமிக் டச் டைப்பிஸ்ட் (rhythmic touch) என்பர்.  அறைக்கு உள்ளே நான் தட்டச்சு செய்வதை வெளியில் இருந்துகொண்டே நான்தான் தட்டச்சு செய்வதாக அவர்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன். தட்டச்சினை ஒரு பணியாகவோ, பொழுதுபோக்காகவோ கருதாமல் ஒரு கலையாகவே நான் உணர்ந்துள்ளேன்.

1980களின் ஆரம்பத்தில், தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தட்டச்சுப்பணியில்

என்னுடன் ராஜசேகரன், மோகன், மதியழகன், சங்கர், ஐயப்பன், லட்சுமிகாந்தன், தயாளன், நாராயணன் உள்ளிட்டோர் தட்டச்சு பயின்றனர். பலருடைய பெயர் நினைவில்லை. அப்போது பயின்ற மோகன் தற்போது சென்னையில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்திவருவது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. 

கும்பகோணம் கும்பேஸ்வரர் வடக்கு வீதியில்
பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையம்
 
தட்டச்சுப் பயிற்சியின்போது மாதத்திற்கு முதலில் பயிற்சிக்கட்டணம் ரூ.5இல் தொடங்கி, ரூ.7, ரூ.10 என்றானது. அப்போது எங்கள் அத்தை திருமதி இந்திரா தருவார்கள். என் படிப்பை ஊக்குவித்தவர்களில் அவர் முதலிடத்தைப் பெறுகிறார். படித்து வெற்றி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். படிப்பின் ஆரம்பக் காலம் முதல் கல்லூரியில் முதலாண்டு படித்தவரை அவர் தொடர்ந்து உதவி செய்தார். குடும்ப சூழல் காரணமாக அவர் எங்களை விட்டு  பிரிந்து  சென்றது ஒரு தனிக்கதை.

18 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

10 comments:

  1. உங்களின் ஈடுபாடு, திறன்கள் என்றும் நினைத்துக் கொள்வேன்...

    ReplyDelete
  2. கல்லூரியின் இளங்கலை முடித்த பிறகு, தட்டச்சு வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேனிலை தேர்ச்சி பெற்றேன். சுருக்கெழுத்து வகுப்பிற்கு சில நாட்கள் சென்றதோடு நின்றுவிட்டேன். அன்று கற்றுக் கொண்ட தட்டச்சுதான் இந்நாள் வரை கைகொடுத்து உதவுகிறது.
    அக்காலை நினைவலைகளை தங்களின் பதிவு மீண்டும் அசைபோட வைத்துவிட்டது. நன்றி ஐயா

    ReplyDelete
  3. தங்களது பழைய நினைவலைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  4. உங்கள் ஈடுப்படும், தவறின்றி செய்ய வேண்டும் என்றுகற்கும் திறனும் சிந்தவை,

    நானும் ஆங்கில தட்டச்சு மேனிலை தேர்ச்சிப் பெற்று சுருக்கெழுத்து தேர்வு எழுதவில்லை. அதன் பின் நீங்கள் சொல்லியிருப்பது போல் மின்சாரத்தில் இயங்கும் தட்டச்சுப் பொறியிலும் அடித்ததுண்டு. மின்னணு தட்டச்சுப் பொறியிலும் கற்றுக் கொண்டு செய்ததுண்டு. அதன் பின் இப்போது கணினியில் வேகமாகத் தட்டச்ச முடிவதற்கு அன்று கற்ற தட்டச்சுதான் காரணம்.

    கீதா

    ReplyDelete
  5. உலக வரலாற்றில் தட்டச்சு என்பது வீரியம் மிகுந்த கலைக்கல்வி . அதனை சிறுவயதிலேயே நன்கு உள்வாங்கி வாழ்வில் உயரவும் ஏணியாக்கியமை போற்றத்தக்கது. பயணித்த காலத்தில் சந்தித்தோரை நன்றியுடன் நினைவுகூர்வது வணங்கத்தக்கது.

    ReplyDelete
  6. அருமை ஐயா. நான் மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகள் ஆயின. அந்தக் காலக்கட்டத்தில் தட்டச்சு ஆங்கிலமும் , தமிழும் தேர்ச்சி பெற்றேன். வி.டி.சி என்று அழைக்கப்பட்ட வாண்டையார் தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றேன். தஞ்சாவூர் தட்டச்சுப் பயிற்றகத்தில் தமிழ் தட்டச்சு முடித்தேன். எனக்குக் கற்றுக் கொடுத்த மகாலெட்சுமி என்பவரை கடந்த சூன் மாதம் எதிர்பாராமல் சந்தித்தேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  7. ஐயா, மிகவும் அருமையான பதிவு. செய்யும் வேலை எதுவாயினும் அதில் ஒன்றிச் செய்தால் வெற்றிகள் நிச்சயம் என்பதை விளக்கும் பதிவு. நானும் தட்டச்சுப் பயின்றுள்ளேன். இவ்வளவு சிரத்தையாகப் பயிற்சி பெற்றது இல்லை. காலத்தின் கட்டாயத்தால் பயின்றேன். ஆனால், அது இன்றளவும் எனது பணி, பொழுதுபோக்கு, இணையத்தில் தமிழ்ப்பணி என்று பலவிதத்தில் கை கொடுக்கிறது. கற்ற வித்தை என்றும் வீண் போகாது என்று சொல்வார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் படிப்படியாக முன்னேறிய விதம் மற்றவர்களுக்குப் பாடம்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு ஐயா! 90-களின் தொடக்கம் வரை தட்டச்சு என்பது ஒரு தனிக் கலையாக இருந்தது. தட்டச்சு பயின்றால் வேலை கிடைக்கும் என்கிற சூழல் இருந்தது. அதற்காகவே பட்டம் படித்தவர்கள், பாதியில் படிப்பை விட்டவர்கள், குறிப்பாகப் பெண்கள் தட்டச்சு பயின்றனர். கணினி வந்த பிறகு தட்டச்சு போய்த் எல்லாம் தட்டெழுத்தாகி விட்டது. தட்டச்சின் பொற்காலத்தைச் சேர்ந்தவரான உங்கள் துய்ப்புகள் சுவை!

    ReplyDelete
  9. தமிழ் , ஆங்கிலம் இரண்டும் ஒரே நேரத்தில் தட்டச்சு படித்த காலங்கள் நினைவுக்கு வந்தன.
    பழைய படம், பழைய நினைவுகள் அருமை.

    ReplyDelete
  10. தட்டச்சு பற்றியும் அதில் உங்கள் அனுபவம் பற்றியும் சுவையான பதிவு

    ReplyDelete