முகப்பு

04 June 2023

கல்லாகிப் போனவர்கள் : வே. பார்த்திபன்

திரு வே. பார்த்திபன் எழுதியுள்ள கல்லாகிப் போனவர்கள் என்னும் நூல் நடுகற்கள் ஓர் அறிமுகம் என்பதில் தொடங்கி, பெருங்கற்கால பண்பாட்டில் நடுகற்கள், சங்ககால நடுகற்கள், கோட்டுருவ நடுகற்கள், விலங்கினங்களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்கள், சதியேற்ற நடுகற்கள், தூங்குதலை நடுகற்கள், ஏறுதழுவல் நடுகற்கள், சில முக்கியமான நடுகற்கள் ஆகிய தலைப்புகள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.



"ஆரம்பகட்டத்தில் இறந்தவர் நினைவாய் ஒரு பெரும் கல்லெழுப்பி வணங்கியதும், பின்னர் கி.மு.4ஆம் நூற்றாண்டு அளவில் அக்கற்களில் இறந்தவரின் பெயரையும், ஊரினையும், இறந்த காரணத்தினையும் பொறித்துள்ளனர்." (பக்கம் 19)

"பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான நடுகல் தொடர்ந்து கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது." (ப.23)

"நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகிறது....கொடுமணலில் அமைந்துள்ள நெடுங்கல் உயரமான நெடுங்கற்களுள் ஒன்றாகும்." (ப.25)

"வரலாற்று சிறப்புமிக்க மனித உருவத்தையொத்த சிலைகள இரண்டு தமிழகத்தில் உள்ளது. அவற்றுள் ஒன்று தண்டராம்பட்டு தாலுகா தா.மோட்டூர் கிராமத்தில் உள்ளது. மற்றொன்று விழுப்புரம் மாவட்டம் உடையார்நத்தம் பகுதியில் உள்ளது."(ப.27)

"சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நடுகற்கள் தற்பொழுது முதன்முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கியக் காலத்தை உறுதிப்படுத்த புதிய சான்றுகள் கிடைத்துள்ளன." (ப.32)

"...அன்றாடம் பழகும் விலங்கினங்கள் இறந்துபட்டால், அவ்விலங்கினங்களுக்குக் கல்லெழுப்பி வணங்கினர் நம் முன்னோர்." (ப.42)

"தமிழகப் பகுதியில் கிடைத்த தூங்குதலை நடுகல்லிற்கும், ஏனைய பகுதிகளில் கிடைத்த தூங்குதலை நடுகல்லிற்கும் பண்பாடுரீதியாய் முக்கிய வேறுபாடு உண்டு. தமிழக நடுகற்களில் வீரன் தன் தலையை தானே அரிந்துகொண்டு மரிக்கிறான். ஆனால் பிற மாநிலங்களில் கிடைத்த நடுகற்களில் வீரன் தலையினை மற்றொருவர் வெட்டி, பலி கொடுப்பதாய் அமைந்துள்ளது நோக்கத்தக்கது." (ப.55)

"நவகண்டம், அரிகண்டம் குறித்து இலக்கியக் குறிப்புகள், நடுகற்கள் நிறைய உண்டு. யமகண்டம் எனும் ஒரு வழக்கமும் இருந்தது என்பதை காளமேகரின் கூற்றின் வாயிலாக அறியமுடிகிறது. "(ப.71)

"இந்தியாவில் தொன்மை வாய்ந்த நடுகற்கள் பாறை ஓவிய பதிவாய் காணப்பவது விலங்கினங்களுடன் பூசலிட்டு இறந்த வீரனை போற்றுவதாகவே உள்ளது. "(ப.95)

நூலாசிரியரின் களப்பணிகளும், அவர் தருகின்ற இலக்கியம் உள்ளிட்ட பிற சான்றுகளும், ஒப்புநோக்கு முறையும் பல அரிய செய்திகளைத் தருவதை நூலில் முழுமையாகக் காணமுடிகிறது. தலைப்புகளைப் பிரித்து உரிய ஒளிப்படங்களை ஆங்காங்கே இணைத்து விளக்கங்களைத் தெளிவாகத் தந்துள்ள விதம் போற்றத்தக்கது. தமிழ்நாடு மட்டுமன்றி அதற்கப்பாலும் உள்ள சான்றுகளைத் தரும்போது நூலாசிரியரின் பரந்துபட்ட வாசிப்பை உணரமுடிகிறது.

சிறப்பான நூலை எழுதியுள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தற்குரியது. அவருக்கும், நேர்த்தியாக பதிப்பித்த ஆதிவனம் பதிப்பகத்தாருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : கல்லாகிப் போனவர்கள்
ஆசிரியர் : வே. பார்த்திபன் (அலைபேசி 97900 76772)
பதிப்பகம்: ஆதிவனம், 31,பட்டேல் வீதி, முதல் தளம், ஈரோடு, 638 001
பதிப்பாண்டு: 2023
விலை ரூ.150

8 comments:

  1. நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    முனைவர் அவர்களின் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete
  2. நல்லதொரு அறிமுகம்.

    ReplyDelete
  3. மிகச்சிறந்த கண்ணோட்டம் ஆய்லரின் எழுத்தை கூர்நோக்கிய பின்னூட்டம் சிறப்பு அய்யா

    ReplyDelete
  4. நடுகற்களை நானும் பார்த்திருக்கிறேன். அவற்றை வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? நான், கோவில் போல எழுப்பி அவற்றில் வைத்துள்ள சிலைகள் அல்லது நடுகற்களைச் சொல்லவில்லை.

    தன் தலையைத் தானே அரிந்துகொள்ளும் சிலை நான் சில கோவில்களில், குறிப்பாக துர்கை சிலை அருகில் கண்டிருக்கிறேன். இறைக்காக பலி, அல்லது, அரசனைக் காக்கும் black cats அதாவது உள்வட்டப் பாதுகாப்புப் படை வீர்ர்கள் அரசன் இறந்தாலோ, தங்கள் கடமை தவறிவிட்டாலோ இப்படி தற்கொலை செய்துகொள்வார்கள் எனப் படித்திருக்கிறேன். அவர்களுக்கும் நடுகல்லா?

    ReplyDelete
    Replies
    1. ஆம். இவ்வாறான பல கேள்விகளுக்கு இந்நூல் விடையளிக்கிறது.

      Delete
  5. நடுகற்கள் ஒரு சில பார்த்திருக்கிறேன். குறிப்பாக - இது தனிப்பட்ட முறையில் அதாவது குடும்ப அமைப்பில் - நான் அறிந்த ஒரு வீட்டில் வீட்டு விலங்கான நாய்க்கும் (பைரவர் என்று), பசுவிற்கும் மூதாதையற்குப் பொதுவாக அக்கல்லிலேயே குறிப்புகள் இருக்க காலம் காலமாக வழிபட்டு வந்தனர். அதன் பின் தற்போதைய தலைமுறை வெளிநாட்டில் எனவே அந்த இடத்தை விற்று கட்டிடம் வந்துவிட்டது. அப்போதுஎன்னிடம் புகைப்படக் கருவி இல்லை என்பதால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

    நல்லதொடு அறிமுகம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லதொடு - நல்லதொரு. தட்டச்சும் போது விசைப்பலகையில் உள்ள கீ கள் தளர்வாக இருப்பதால் எழுத்துகள் மாறுகின்றன

      கீதா

      Delete