முகப்பு

18 June 2024

திருக்குறள் பழநிதீபன் உரை

பழநிதீபன் எழுதியுள்ள திருக்குறள் உரை என்னும் நூல் 133 அதிகாரங்களுக்குமான உரையினைக் கொண்டு அமைந்துள்ளது. அதிகம் பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற பொருண்மையில் நூல் எழுத மேற்கொண்டுள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அறத்துப்பால் (பாயிரம் தொடங்கி இல்லறவியல், துறவிவறவியல், ஊழியல்), பொருட்பால், (அரசியல், அங்கவியல், குடியியல்), இன்பத்துப்பால் (களவியல், கற்பியல்) என்ற வகையில் பிரித்து, நுணுக்கமாக உரையினைத் தந்துள்ளார். எளிய சொற்கள், புரியும் வகையில் அமைந்துள்ள நடை, ஆங்காங்கே சில உதாரணங்கள் என்ற வகையில் படிப்போர் மனதில் பதியும் வகையில் உரை அமைந்துள்ளது. குறிப்பிட்ட பொருள் தொடர்பான தொடர் வாசிப்பும், ஒப்புநோக்கலும் நூலாசிரியர் தன்னுடைய கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கப் பெரிதும் உதவியுள்ளதைக் காணமுடிகிறது. ஊடாக சமுதாயக் கண்ணோட்டத்தை அவர் வெளிப்படுத்துகின்ற முறையானது அவருடைய சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்துகிறது. தம் சிந்தனைக்கேற்றவாறு அதன் கருத்துகளை முற்றிலுமாக மனதில் இருத்திக்கொண்டு அதனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு குறளையும் தடித்த எழுத்தில் அமைத்து, அடுத்து அதற்கான உரையினை சற்றே உள்ளடக்கித் தந்துள்ளவிதம் சிறப்பாக உள்ளது. 


முன்னுரையில் நூலாசிரியர், திருக்குறள் தொடர்பாக நூல் எழுதி வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதற்கான சூழலைக் கூறியுள்ளார். அவருடய அந்த ஈடுபாடும், விடாமுயற்சியும் தற்போது நூலாக வெளிவடிவம் பெற்றுள்ளது. 

"உலகச் சமயங்களில் சிவனியம், மாலியம், கிறித்துவம், இசுலாம் முதலியவை இறையச்சத்தை மையமாகக் கொண்டு சுழல்கின்றன. பௌத்தம் அறன் அச்சத்தையும், சமணம் இன்னா செய்யாமை அறனையும் முதன்மையாகக் கொண்டு சுழல்கின்றன. ஆரிய சனாதன சமயமோ, இவை இரண்டிலும் சேராமல், வேத மந்திரங்களை மையமாகக் கொண்டு ஓர் அதிசயத் தொங்குத் தோட்டமாக அந்தரத்தில் திகழ்கிறது. திருக்குறள் என்னும் தமிழ்த்தேர், இன்னா செய்யாமை, அறனச்சம் ஆகிய இரண்டின் கலவையால் செய்யப்பட்ட அச்சாணியை நடுவாகக் கொண்டு உலகில் வலம் வருவதை, குறளை உள்ளது உள்ளவாறே அணுகி, ஆழ்ந்தும், ஆய்வு மனத்தோடும், கற்கும்போது அறியமுடிகிறது." என்கிறார். 

குறளில் வரும் அந்தணன் யார்? திருக்குறள் அறநூலா, இலக்கியமா?, முயற்சியா, ஊழா? பகவத் கீதையும், திருக்குறளும் என்ற உட்தலைப்புகளில் பிற்சேர்க்கையில் பல கேள்விகளையும், அவை தொடர்பான விவாதங்களையும் எடுத்துரைக்கிறார். பலவாறான கோணங்களில் அவர் நோக்குகின்ற பாங்கு வாசகரை அதிகம் சிந்திக்க வைக்கிறது. நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள பாட்டு முதற்குறிப்பு வாசகர்களுக்கு மிகவும் துணையாக உள்ளது. 

வள்ளுவரின் கருத்தியலை, தனித்துவத்தை, சரியான வழியில் மனதில் உள்வாங்கிக்கொண்டு, பகுத்தறிவு நிலையில் உயர்ந்து, இவ்வுலகில் தாமும் நல்வாழ்வு வாழ்ந்து, உலகச் செழிப்புக்கும் உறுதுணை புரிவார்கள் எனில், அதுவே இந்நூலுக்கும் தனக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுவதாகத் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அவ்வகையில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம். அவருடைய முயற்சி போற்றத்தக்கது. மனம் நிறைந்த வாழ்த்துகள். 

---------------------------------------------------------------------------------------------------

நூல் : திருக்குறள் பழநிதீபன் உரை
உரையாசிரியர் : ந.பழநிதீபன் 
பதிப்பகம் : பழநிமாறன் பதிப்பகம், 1/101, இராமலிங்கசாமி மடம் தெரு, அரையாளம் கிராமம் &  அஞ்சல், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 632 326,   snpalani267@gmail.com (98427 05710)
ஆண்டு : முதற்பதிப்பு, ஜூன் 2024
விலை : ரூ.320
---------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. சிறப்பான அறிமுகம் ஐயா. நன்றி.

    ReplyDelete