முகப்பு

18 December 2024

அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) : பட்டப்படிப்பு 1976-79

அண்மையில் கும்பகோணத்திற்குச் சென்றபோது அந்நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய, கல்லூரிக்கால நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இனிமையான நினைவுகளைத் தேடிச் சற்றே பின்னோக்கிச் செல்வோமா?

இளங்கலை (1976-79) படிக்கும்போது கல்லூரிக்கு
எடுத்துச்சென்ற கோப்பு அட்டை

கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (P.U.C.,) வரை தமிழ் வழியிலேயே (Tamil medium) படித்தேன். புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றபின்னர் இளங்கலைக்கு (B.A.,) விண்ணப்பிக்க வேண்டிய நேரம். அப்போது நண்பர்கள் இளங்கலை வகுப்பினை ஆங்கில வழி படித்தால்தான் வேலை எளிதாகக் கிடைக்கும் என்றனர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்தியும்,  தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்க ஆரம்பித்தேன். 

ஆங்கிலவழிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தன.

  • படித்துமுடித்தபின் வேலைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற ஆர்வம்.
  • வேலைக்கான விண்ணப்பத்தையே ஆங்கிலத்தில்தான் அனுப்பவேண்டும் என்ற நிலை. 
  • வேலையில் சேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
  • வேலை பெறும் அளவிற்கு தகுதியை உயர்த்திக்கொள்ளல்.
  • ஆங்கில வழியில் படிப்பது சிரமம் என்று நண்பர்கள் கூறிய சவாலை ஏற்றல்.
  • படித்த படிப்பிற்கு உள்ளூரில் வேலை கிடைக்குமா என்ற ஐயம்.
  • 1974இல் தொடங்கிய தட்டச்சு, அனுபவம், தி இந்து (ஆங்கிலம்) வாசிப்பனுபவம்.  
தமிழ்வழிப் படித்த மாணவருக்கு  ஆங்கில வழி வகுப்பில் இடம் கிடைக்குமா என்ற ஐயம் எழவே இளங்கலை பொருளாதாரம் ஆங்கில வழி (B.A. Economics/English medium) மற்றும் தமிழ் வழி (B.A. Economics/Tamil medium) என்ற வகையில் இரு விண்ணப்பங்கள் போட்டேன். இரண்டிற்கும் நேர்காணல் வந்தது. ஆங்கிலவழி வகுப்பில் சேர்ந்தேன்.

முதலாண்டு (Part I Tamil Paper I, Part II English Paper I, Ancillary: History of India). இரண்டாமாண்டு (Part I Tamil Paper II, Part II English Paper II, Ancillary: Outlines of Political Theory, Main: Economic Thought). மூன்றாமாண்டு (Main: Micro Economic Theory, Macro Economic Theory, Monetary and International Economics, Fiscal Economics, Indian Economic Development) என்ற வகையில் பாடங்கள் அமைந்தன. ஆரம்பத்தில் மாணவர்கள் ஆங்கிலவழி படிப்பதாகக் கூறுவர், ஆனால் தேர்வு தமிழில் எழுதுவர் பல நண்பர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிப்பது சிரமம் என்று சில ஆசிரியர்கள் கூறினர். புதிய நண்பர்களோ ஆங்கிலவழிப் படித்தால் தேர்ச்சி பெறமுடியாது என்றனர். முதல் ஒரு மாதம் எதுவுமே புரியவில்லை. வகுப்பிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்றுகூட நினைத்ததுண்டு. பொறுமையாக ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தபோது சற்றுப் புரிய ஆரம்பித்தது. கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது அழகான கோப்பு அட்டையை எடுத்துச்சென்றேன். தாளை வாங்கி அதில் அடுக்கிவைத்துக்கொள்வேன். புல்ஸ்கேப் (fool's cap) தாளில் மூலையில் ஒரு துளையிட்டு (Single punch hole, inserting tag) பாடவாரியாகப் பிரித்துக்கொண்டு குறிப்பெடுத்துக்கொள்வேன். சமயத்தில் சுருக்கெழுத்திலும்கூட (English  shorthand) குறித்துக்கொள்வேன். அப்போதே ஆசிரியர்கள் சுருக்கெழுத்திலேயே குறிப்பெடுப்பதை வியப்போடு பாராட்டினர். வீட்டில் வந்தபின் அந்தந்த பாடத்திற்குரிய தாள்களை தனியாகக் கோர்த்துவைப்பேன். இவ்வாறு வகுப்பு நடக்கும்போது நான் எடுத்து பாதுகாத்த குறிப்புகள் தேர்வுக்காலத்தில் எனக்கு அதிகம் உதவின.

கல்லூரி நூலகத்தில் சென்று பாடங்களுக்கான (Source books for the Main subject and ancillary subjects) நூல்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். சில நூல்களை சாத்தாரத்தெரு மூலையிலும், டவுன் ஹைஸ்கூல் எதிரிலும் உள்ள பழைய புத்தகக்கடைகளில் குறைவான விலைக்கு வாங்கினேன். பெரிய நூல்களாக அவை இருந்தன. தலைப்புகள், உள் தலைப்புகள், தேவையான இடங்களில் படங்கள் என்ற வகையில் பிரமிப்பை உண்டாக்கின. பல சொற்கள் புதியனவாக இருந்தன. 

தி இந்து ஆங்கில நாளிதழை வாசிக்க ஆரம்பித்த அக்காலகட்டத்தில் முதலில் எளிதாக உள்ளவற்றைப் படித்துவிட்டு, பின்னர் சற்று சிரமமானவற்றைப் படிப்பேன். அதே உத்தியைக் கொண்டு பாடங்களைப் படித்தேன். நான் எடுத்த நூல்களில் எனக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளைக் கொண்ட பாடங்களை முதலில் படிக்க ஆரம்பித்து, பின்னர் மற்றவற்றைத் தொடர்ந்தேன். சில சமயங்களில் ஆசிரியர் கூறுகின்ற, அப்போதுதான் முதன்முதலாக அறிந்த, ஆங்கிலச்சொற்களைக் குறித்துக்கொண்டேன். இந்த முறை மூலமாக ஒவ்வொரு நாளும் புதிய சொற்களையும், அவற்றுக்கான பொருளையும் அறிய ஆரம்பித்தேன். பாடங்களில் வரும் சில சொற்கள் (fiscal, inflation, budget, poverty line) தி இந்து நாளிதழில் இருப்பதைக் கண்டு வியந்தேன். பொருளாதாரம் தொடர்பான பல சொற்களை நாளிதழ் மூலமாக அறிந்தேன். படிக்கின்ற பாடத்தில் அவை வரும்போது மிகவும் வியந்துபோவேன். ஆங்கில மொழி  மீதான பயம் நீங்க ஆரம்பித்தது.  

முதலாண்டில் தமிழ், ஆங்கிலத்துடன் ஒரு துணைப்பாடமாக இந்திய வரலாறு ஆங்கிலத்தில் எழுதவேண்டியிருந்தது. அதனை ஆங்கிலத்தில் எப்படியும் எழுத முடிவெடுத்தேன். முதன்முதலாக மொழியல்லாத ஒரு பாடத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது அப்போதுதான். அதில் தேர்ச்சி பெற்ற துணிவு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வாறே எழுதவும், வெற்றி பெறவும் உதவின.  புகுமுக வகுப்பில் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றதைப்போலவே பட்டப்படிப்பிலும் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றேன்.  

இவ்வாறாக மூன்றாண்டுகளை நிறைவு செய்தேன். தமிழ்வழிப் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அந்தந்த பாடத்திற்குரியனவற்றில் பயன்படுத்தப்படுகின்ற தமிழ் சொற்களையும் எளிமையாக அறியமுடிந்தது. தமிழ்வழிப் படித்திருந்தால் இன்னும் அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்கலாமோ என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டேயிருந்தது.

கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குடும்பத்தின் இயல்பு நிலை அதிகம் பாதிக்கப்பட்டது. முதலாண்டில் மாமாவும் (அப்பாவின் தங்கையின் கணவர்), இரண்டாம் ஆண்டில் தாத்தாவும் (அப்பாவின் அப்பா), மூன்றாம் ஆண்டில் அப்பாவும் இயற்கையெய்தனர். இடி மேல் இடி. எங்கள் தாத்தாவுக்கு (அவர் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த அவருடைய மைத்துனரின்) கடையிலிருந்து வந்துகொண்டிருந்த உதவிப்பணம் நின்றது. நாங்கள் அனைவரும் அனாதையானது போல் உணர்ந்தோம். வீடு மட்டுமே சொத்து. மற்றபடி வருமானம் எதுவுமில்லை. எங்கள் அம்மா வீட்டில் மேலும் சில பகுதிகளை வாடகைக்குவிட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல்.  

இவ்வாறான சூழலில் நான் பல இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபோது வந்திருந்த எங்கள் சிறிய தாத்தாவின் மருமகன் என் கல்வித்தகுதிகளைக் கேட்டபின்  சென்னையில் விடுப்புப்பணியிடத்தில் (leave vacancy) நான் பணியில் சேர உதவினார்.  இளங்கலை தேர்வு முடிவு எதிர்பார்த்த நிலையில் ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த் தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை, இந்தி பிராத்மிக் தேர்ச்சி ஆகியவையே எனக்கு அப்போது வேலை கிடைக்க உதவியது. இளங்கலை மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் சிரமப்படவேண்டியிருந்திருக்கும்.  நான் சேர்ந்த நிறுவனத்தில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், நான் அப்போது பெற்றிருந்த பிற தகுதிகள் அங்கு நான் சிறப்பாகப் பணியாற்ற உதவியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.   

இக்காலகட்டத்தில்தான் ஏதோ ஒரு பாடப்பிரிவிற்காக முதன்முதலில் மாணவிகள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். 

வகுப்பு நண்பர் ஜெனத்தீன்ராஜ், மாணவர் தலைவராகப் போட்டியிட்டபோது அவருக்கு வாக்குக் கேட்டோம்.

முதலாண்டில் ஒரு ஆசிரியை (Fiscal Economics) ஆறு வகுப்புகள் மட்டும் எடுத்தார். மற்றபடி அனைவரும் ஆசிரியர்களே.

ப்ளானிங் பார்ம் (Planning Forum) என்ற அமைப்பில் நானும் நண்பர் சந்திரசேகரும் போட்டியிட்டு இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்கினைப் பெற குலுக்கல் முறையில் அவர் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் செயல்பட்டோம். இத்தேர்தலுக்கான நோட்டீசை நாங்கள் இருவருமே சென்று தனித்தனியாக அச்சடிக்கக் கேட்டு, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் இருந்த கலாநிதி பிரஸில் தந்தோம். 

சம்பிரதி வைத்தியநாதன்தெருவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்தே சென்றேன். சைக்கிள், ரேடியோ போன்றவை எங்களுக்கு மிகவும் தூரம். 

இளங்கலை வணிகம் படித்த நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனின் நட்பு கிடைத்தது இக்காலகட்டத்தில்தான்.

அரங்கேற்றம், அவள் ஒரு தொடங்கதை,  அபூர்வ ராகங்கள் படங்களில் ஆரம்பித்த பாலசந்தர் திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து இன்னும் அதிகமானது.

அதற்கெல்லாம் மேலாக என் வாழ்வில் இக்காலகட்டம் போதிய கல்வித்தகுதி, துணைத்தகுதி, தன் காலில் நிற்றல், யாரையும் சாரா பண்பு, போன்ற பல அனுபவங்களைத் தந்தது. 

இது தொடர்பான முந்தைய பதிவு.


அரசினர் கலைக்கல்லூரி : புகுமுக வகுப்பு 1975-76

மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-79)

01 December 2024

வரலாற்றில் ஐயம்பேட்டை : என். செல்வராஜ்

திரு என். செல்வராஜ், வரலாற்றில் ஐயம்பேட்டை என்ற நூலில்  மண்ணின் பெருமைகளை சோழர் காலம், தஞ்சை நாயக்கர் காலம், தஞ்சை மராட்டியர் காலம் ஆகிய காலகட்டங்களில் தொடங்கிப் பல சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தியுள்ளார்.  



ஐயம்பேட்டையில் உள்ள 45 கோயில்களைப் பட்டியலிட்டுள்ளதோடு சில கோயில்கள், அங்கு நடைபெறும் விழாக்கள், சக்கரவாகேஸ்வரர் சப்தஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணன் பஜனைக்கூடம் ஆகியவற்றைப் பற்றியும், சமூகத்தினர் என்ற வகையில் பட்டு சாலிய சமூகத்தினர், சௌராஷ்டிர சமூகத்தினர், குதினி நெசவுக்கலைஞர்கள் மற்றும் பிற சமூகத்தினரைப் பற்றியும் விவாதிக்கிறார்.

ஆற்காடு நவாப்-சாவடி நாயக்கர் மோதல், உடையார்பாளையம்-ஜமீன் சாவடி நாயக்கர் மோதல், அண்ணன்மார் சுவாமிகள்-ஐயம்பேட்டை தொடர்பு, ஐயம்பேட்டையில் சத்ரபதி சிவாஜியின் பட்டத்தரசி, ஆற்காடு நவாப்-மன்னர் பிரதாம சிம்மர் போரும் சமாதானமும் என்ற தலைப்புகளின் மூலமாக வாசகர்களை அக்காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். 

ஆச்சார்யன் பெரியநம்பிகள் திருவரசு, ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ பதரா மன்னார் ஆர்ய பாகவத ஸ்வாமிகள், ஸ்ரீ வேங்கடஸுரி ஸ்வாமிகள், ஸ்ரீமத் வேங்கட ரமண பாகவதர்,  சத்குரு ஸ்ரீ தியாக பிரம்மம், பெங்களூர் நாகரத்தினம்மா, சூலமங்கலம் ஸ்ரீ வைத்தியநாத பாகவதர் ஆகியோரைப் பற்றிய பதிவுகள் மூலமாக பல அரிய செய்திகளைப் பகிர்கிறார். 

ஐயம்பேட்டை அரண்மனை, சோழர் காலப் புத்த செப்புத்திருமேனி,  விஜயராகவ நாயக்கர் காலச்செப்பேடு,  நில விற்பனைச் செப்பேட்டு ஆவணம் போன்ற வரலாற்றுச் சான்றுகளை ஆராய்வதுடன், உப்பு சத்தியாகிரகத்தில் ஐயம்பேட்டையின் பங்கினை நினைவுகூர்கிறார். இந்நூலிலிருந்து சில குறிப்பிடத்தக்கப் பகுதிகளைக் காண்போம். 

"…ஐயம்பேட்டை வரலாற்றுப் பின்னணியை நாம் சூலமங்கலத்தின் வாயிலாகத் தான் அறியவேண்டியுள்ளது. காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் தென் கரை கிராமமான சூலமங்கலத்தின் வட பகுதி, குடமுருட்டி ஆற்றின் தென் கரையை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகியவை காலங்கள் தோறும் எவ்வாறு பெயர் மாற்றம் பெற்றன என்பதில்தான் ஐயம்பேட்டை வரலாறும் உள்ளடங்கியுள்ளது. " (.32)

"......சூலமங்கலம் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்ட பகுதி இராமச்சந்திரபுரம் ஆகப் புது அவதாரம் எடுத்து, வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் கண்ட கிராமமாக மாறிப்போனது…இராமச்சந்திரபுரத்தில் சில காலம் வாசம் செய்த செவ்வப்ப நாயக்கர் குடும்பம், தஞ்சையில் அரண்மனை,  கோட்டை கொத்தளங்கள், அகழி சீரமைப்புப்பணிகள்  பூர்த்தி  சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை." (.37)

"செவ்வப்ப நாயக்கர் தன்னுடைய ராஜகுரு கோவிந்தய்யன் நினைவாக இவ்வூருக்குத் தென்மேற்கில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு ஐயன்பேட்டை என்று பெயரிட்டார். இவ்வூர் வணிகப்பெருவழியில் இருந்ததால் ஐயன் என்பதோடு பேட்டை இணைக்கப்பட்டு ஐய(ன்)ம்பேட்டை ஆயிற்று." (.49)

"…….ஐயம்பேட்டையின் வரலாறு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமஸ்வாமி ஆலயத்தினை மையமாகக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்….ஐயம்பேட்டை சிறு நகரிலுள்ள கோயில்களில் இவ்வாலயமே காலத்தால் முற்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தின் பின்னணியில் இரண்டு அரச வம்சாவளியினர் வரலாறும் அடங்கியுள்ளது." (.121)

"திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றாக ஐயம்பேட்டை இல்லை. இருப்பினும் ஏழூர்ப் பல்லக்குத் திருவிழாவில் பங்கு வகிக்கும் சிவாலயம் ஐயம்பேட்டை ஆற்றங்கரைக்கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்." (.140)

"ஐயம்பேட்டையின் அடையாளமாக இருந்த அரண்மனை, தர்பார் மண்டபம் பழமையின் அடையாளமாகவும் இருந்த குளம் ஆகியவை எல்லாம் சுவடழிந்துப் போய்விட்டன. பெயர் சொல்லிக்கொண்டு இருப்பது பள்ளிக்கூடம் உள்ள மண்டபத்தின் 25 சதவிகிதம் மட்டுமே. அதற்கு என்ன காலக்கெடு, யார் வைத்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்?" (.227)

"ஆற்றங்கரை சந்தியா மண்டபத்திற்கு அருகில் ஒரு துளசி மாடத்தையும், அதில் இருந்த கல்வெட்டுப் பலகையையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நூலாசிரியர் கண்டறிந்தார்….ஐயம்பேட்டைப் பகுதி கோயில்கள் எதிலும் பழமையான கல்வெட்டுகள் காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டின் இக்கல்வெட்டே மிகப் பழமையான ஒரே ஒரு கல்வெட்டு என்ற பெருமையும் இதற்கு உண்டு." (.251)

இந்நூல் ஐயம்பேட்டையைப் பற்றிய ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது. சில வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை இளந்தலைமுறையினருக்கு உதாரணமாக அமையும் வகையில் நூலாசிரியர் முன்வைத்துள்ளார். பொதுமக்கள் மட்டுமின்றி ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெருந்துணையாக உள்ள இந்நூலைப் படைத்துள்ள அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : வரலாற்றில் ஐயம்பேட்டை
ஆசிரியர் : என். செல்வராஜ் (அலைபேசி 94434 48159)
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள்ஸ் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014 , மின்னஞ்சல் support@nhm.in, தொலைபேசி +91-44-4200-9603, அலைபேசி +91-95000 45609
ஆண்டு : 2024
விலை : ரூ.325

நன்றி : புக் டே தளம். நூல் அறிமுகம்

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்




தினமணி, 9 டிசம்பர் 2024

தினத்தந்தி, 9 டிசம்பர் 2024

தினமலர், 10 டிசம்பர் 2024


திரு அய்யம்பேட்டை என்.செல்வராஜ் நூல் வெளியீட்டு விழா

10 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

18 November 2024

ஆவணக்குரிசில் விருது

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து தஞ்சாவூரில் 17 நவம்பர் 2024இல் நடத்திய 57ஆவது தேசிய நூலக வார விழாவில் ஆவணக்குரிசில் என்ற விருதினைப் பெற்றதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். விழாப் பொறுப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  

நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற்ற இவ்விழாவின் ஒரு பகுதியாக வாழ்நாள் சாதனையாளர், ஆவணக்குரிசில், எழுத்துலகின் இளம்பரிதி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.







முந்தைய விருதுகள்


நிகரிலி சோழன் விருது, 2022


தகைசால் தமிழர் விருது, 2023

மும்முடிச்சோழர் விருது, 2023


08 November 2024

சிற்பக்கலை : முனைவர் க. மணிவண்ணன்


முனைவர் க.மணிவண்ணன் எழுதியுள்ள சிற்பக்கலை என்னும் நூலுக்கான என்னுடைய அணிந்துரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

**********************************************

அணிந்துரை

முனைவர் க. மணிவண்ணன் எழுதியுள்ள சிற்பக்கலை என்னும் நூல் சிற்பக்கலை என்ற தலைப்பில் தொடங்கி, புது ஆயக்குடி சோழீஸ்வரர், பழைய ஆயக்குடி அகோபில வரதராஜப்பெருமாள், பாலசமுத்திரம் வரதராஜப்பெருமாள், பழனி லட்சுமிநாராயணப்பெருமாள், வேலாயுதசுவாமி, பெரியநாயகியம்மன், மாரியம்மன், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன், திண்டுக்கல் அபிராமியம்மன், மலைக்கோட்டை அபிராமியம்மன், கோட்டை மாரியம்மன் ஆகிய கோயில்களைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலின் நிறைவில் துணைநூற்பட்டியல் இடம்பெற்றுள்ளது.

8 நவம்பர் 2024இல் நூலாசிரியர் நூலின் படியை வழங்கல் 






தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என்ற பல்வேறு பிரிவுகளில் அமைந்த இக்கோயில்களுக்கு நேரில் சென்று விமானம், சிகரம், கோபுரம், தூண்கள், வாயில் நிலைகள், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், வாகன மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற சிற்பங்களைப் பற்றி நூலாசிரியர் விவாதித்துள்ளார். “தமிழ்நாட்டுக் கோயில்களில் சிற்பக்கலை பெரிதும் இடம்பெற்றிருக்கிறது. அதில் தெய்வ உருவங்கள் முதன்மை வகிக்கின்றன. இவை குறிப்பொருளைப் புலப்படுத்துகின்றன....தமிழகச் சிற்பிகள் தம் உள்ளத்தில் எழுகின்ற கருத்துகளைப் பொருளுருவில் அமைக்கும் திறமையுடையவர்கள். அவர்களுடைய மனதில் எழுகின்ற அழகுணர்ச்சியானது உரிய வடிவம் தரும்போது கலையாகப் பரிணமிக்கிறது. படைக்கப்படுகின்ற கலைப்பொருள்கள் பயன்பட வேண்டுமாயின் அதில் பொருந்திய வடிவமும், ஒத்திசைவும் அமையவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறாக அமைந்த பொருள் அழகுடையதாகிறது. அழகே இறைவன், இறைவனின் அழகே ஆன்மா, ஆன்மாவின் அழகே சிற்பத்தின் வாயிலாக வெளிப்படுகிறது. கலைகளின் அழகைக் காண்பவர் தம் ஆன்மாவின் அழகைக் காண்கிறார்.” என்று நூலாசிரியர் தன்னுடைய உரையில் கூறுகிறார்.

தமிழகத்தில், குறிப்பாக பாண்டிய நாடு சேர, சோழ, பாண்டிய, விஜயநகர, மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் சிற்பங்கள் செதுக்கி வைக்கும் மரபு பின்பற்றப்பட்டது தொடங்கி விவாதிக்கின்ற நூலாசிரியர் தமிழகத்தின் போற்றத்தக்க கலைகளில் சிறப்பான இடத்தைப் பெறுகின்ற சிற்பக்கலையைப் பற்றி பொதுவாகவும், சிறப்பாகவும் சிந்திக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறார். இக்கலையின் தோற்றம், நோக்கம், கற்பனை, புராணப்பின்னணி ஆகிய கூறுகளையும், சங்க காலம் தொடங்கி பல்லவர், சோழர், மதுரை நாயக்கர் காலங்கள் அது பெற்ற பல்வேறு மாற்றங்களையும், செப்புத்திருமேனி, கருங்கல், சலவைக்கல், சுதை, தந்தம், மரம் ஆகியவற்றால் ஆன சிற்பங்களை அமைப்பையும் வடிக்கும் விதத்தையும் நுணுகி ஆராய்கிறார். சிற்பங்களைப் பாதுகாக்கவேண்டிய முறையை நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்போது அவை இன்னும் சிறப்பாக அமையும் என்று கூறி அதற்கான அதற்கான பாதுகாப்பு முறைகளையும் விவாதிக்கிறார்.

குறிப்பிட்ட ஒரு கோயிலைப் பற்றி விவாதிக்கும்போது அக்கோயில் அமைவிடம், பல்வேறு காலகட்டங்களில் மன்னர்களின் பங்களிப்பு, கோயிலின் அமைப்பு, அதன் பகுதிகளில் காணப்படுகின்ற சிற்பங்களின் உருவ அமைப்பு, அதில் காணப்படுகின்ற வேலைப்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார். உதாரணமாக சிவன் கோயில் என்று எடுத்துக்கொண்டால் மூலவர், இறைவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் போன்ற இறை சிற்பங்களையும், இயற்கை, மனிதன், அலங்கார வேலைப்பாடுகள், இலக்கிய, வரலாற்றுப் புராணப்பின்னணியின் அடிப்படையில் அமைந்துள்ள சிற்பங்களை உள்ளிட்டவற்றையும் விவாதிக்கிறார்.

ஒரு கட்டுரையில் இறைவியின் சிற்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சுமார் மூன்று அடி உயரமுள்ள இறைவியின் சிற்பம் சுஹாசனத்தில் தெற்கு நோக்கி உள்ளது. அவரது வலது கையில் பத்மும், இடது கை டோல முத்திரையுடனும் உள்ளது. அழகிய மகுடம், சரப்பள்ளி, கண்டிகை, ஆரம், கை வளை, பல்வேறு அணிகலன்கள், பாதம் வரையிலான ஆடை அமைப்புகள், மார்புக்கச்சை, உதரபந்தம் போன்ற கலைக்கூறுகள் சிற்பத்திற்கு அழகூட்டுகின்றன. விஜயநகர, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த, முற்றுப்பெறாத இச்சிற்பம் பல்வேறு அணிகலன்களையும், ஆடைகளையும் கொண்டுள்ளது…தேவகோஷ்ட தோரணப்பகுதியில் இறைவியின் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவை சிற்பக்கலையின் வளர்ச்சியினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மேற்குப்புறக் கருவறையின் வெளிப்புறத் தேவகோஷ்டத்தில் இறைவியின் நின்ற கோல சிறிய புடைப்புச்சிற்பம் திரிபங்க நிலையில் உள்ளது. அணிகலன்களும், ஆடை அமைப்பும் நிறைவாக உள்ளன. இரண்டு கைகளில் ஒன்றில் பத்மம் உள்ளது. மற்றொரு கை அபய முத்திரையில் உள்ளது. வடக்குப்புறக் கருவறையின் வெளிப்புறத் தேவகோஷ்டத்தில் இதேபோன்ற கோலத்தில் சமபங்கத்தில் நான்கு கைகளுடன் ஒரு சிற்பம் உள்ளது. மேல் இரு கைகளில் பத்மங்களும், கீழ் இரு கைககளில் அபய, வரத முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன. அலங்காரத்திற்கு தேவையான அனைத்துக் கோட்பாடுகளும் இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளன. கிழக்குப்புறக் கருவறையின் வெளிப்புறத் தேவகோஷ்டத்தில் இறைவியின் அமர்ந்த கோல சிற்பம் நான்கு கைகளுடன் உள்ளது. மேலிரு கைகளில் சிவனுக்குரிய ஆயுதங்கள் உள்ளன. அபய, வரத முத்திரைகள் உள்ளன. ஒரு சில சிற்பங்களில் விஷ்ணுவிற்குரிய ஆயுதங்களான சங்கு சக்கரமும், அபய வரத முத்திரைகளும் உள்ளன.”

ஒவ்வொரு சிற்பத்தையும் பார்க்கவேண்டிய உத்திகளை அவருடைய எழுத்து மூலமாக அறியமுடிகிறது. சிற்பங்களைப் பற்றிய அடிப்படையான செய்திகள் மட்டுமன்றி, முக்கியமான செய்திகளையும் அவர் முன்வைக்கும் விதம் படிக்கும் வாசகரையும், பக்தரையும் மிக நெருக்கமாக அழைத்துச்செல்வதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. ஆங்காங்கே கட்டடக்கலையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

நூல்: சிற்பக்கலை
ஆசிரியர்: முனைவர் க. மணிவண்ணன் (அலைபேசி 99654 93171)
பதிப்பகம்: ஜி.எம்.அமுதன் பதிப்பகம், நாயக்கர்பேட்டை, பாரதி நகர், இளங்கார்குடி, பாபநாசம், தமிழ்நாடு 614 203 (அலைபேசி 94882 21817)
பதிப்பாண்டு:  செப்டம்பர் 2023
விலை ரூ.300

08 October 2024

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்களும் உதவலாம்.

 நண்பர்களுக்கு வணக்கம். தேவியர் இல்லம் திரு ஜோதிஜி அவர்களின் பதிவினைத் தந்துள்ளேன். நம்மால் ஆன உதவியை திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்குச் செய்வோம்...பா.ஜம்புலிங்கம்

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்களும் உதவலாம்.



ஜனவரி 2024 க்குப் பிறகு இன்று தான் இங்கே உள்ளே வந்துள்ளேன். வலைபதிவில் எழுதியது போதும் என்ற மனநிலை உருவானது.  2009 ஜுலையில் வலைபதிவு எழுத்துப் பயணத்தை தொடங்கினேன். முழுமையாக 15 வருடங்கள். மனதில் இருந்த, உருவான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டு வந்தேன்.  மே 4  2024 அன்று கடைசியாக எழுதினேன்.  மே 5 அதிகாலை செய்தி வந்தது.  அம்மா காலமாகிவிட்டார்.  ஃபேஸ்புக்கில் எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.  எழுத்துலகில் இருந்து முழுமையாக 150 நாட்களாக என்னை துண்டித்துக் கொண்டு விட்டேன்.

சென்ற வாரம் வரை பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து ஊருக்கு பயணம் செய்வதில் முக்கால்வாசி நேரம் முழுங்கி விடுகின்றது. மே தொடங்கி நேற்று வரை எங்கும் எதிலும் எதைப்பற்றியும் எழுதவில்லை. எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விட்டேன். மிக நெருக்கமானவர்கள் அழைத்துக் கேட்ட போதும் கூட இங்கு இப்போது எழுதும் தகவல்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  காரணம் எல்லாவற்றிலும் இருந்து விலகியிருக்க விரும்பினேன்.  அடுத்த ஒரு வருடம் இப்படியே இருந்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக.

கடந்த 15 வருடங்களை பின்னோக்கி திரும்பிப் பார்க்கையில் உணர்ச்சி, உணர்வு, அறிவு இவை மூன்றும் என்னை வழி நடத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.  நான் சார்ந்துள்ள தொழில் வாழ்க்கையில் கிடைக்காத நண்பர்கள் அனைவரும் என் எழுத்துலக வாழ்க்கையின் மூலம் தான் கிடைத்தார்கள்.  அதில் ஒருவர் திண்டுக்கல் தனபாலன்.

உலகம் முழுக்க குறைந்த பட்சம் 5000 க்கும் மேற்பட்ட வலைபதிவர்களின் வாழ்க்கையோடு, அவர்களின் நம்பிக்கையோடு, எழுத்துலக வளர்ச்சியோடு தொடர்புடையவர். அசாத்தியமான திறமைசாலி. எதையும் எவரிடமிருந்து எதிர்பார்க்காத தன்னலம் கருதாத யோகி.  அதனால் தான் அவரை வலையுலக சித்தர் என்று அனைவரும் அழைத்தனர். பொருத்தமான பட்டமிது.

சமூகவலைதளங்கள் பக்கம் அதிகம் செல்லாமல் இருந்த எனக்கு நண்பர் ஒருவர் முரளி அவர்கள் திண்டுக்கல் தனபாலன் குறித்து எழுதியிருந்த கடித வடிவத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.  தனபாலன் கடைசியாக என்னிடம் பேசியது என் அம்மா இறந்த அதே மே மாதம். வீடு கட்டியிருந்தார். புதுமனைபுகுவிழாவிற்கு வாட்ஸ் அப் வாயிலாக அழைத்து இருந்தார். அப்போதே பேச முடியாத நிலையில் இருந்தார் என்பதனை சென்ற வாரம் தான் உணர்ந்து கொண்டேன். 

அப்போது கூட அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

திண்டுக்கல்லுக்கு குடும்பத்தோடு செல்ல தயாராக இருந்தோம்.  அம்மா இறந்த செய்தி வர அவரிடம் தெரிவித்து விட்டு மறந்து விட்டோம்.  முரளி கடிதம் பார்த்து தனபாலனை அழைத்து பேசினேன்.  கோவை  மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இதயம் சார்ந்த சிகிட்சை எடுத்து சில மாதங்களாக முழு ஓய்வில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  அவரே என்னிடம் சொன்னது.  ஒரு நிமிடம் கூட என்னால் பேச முடியாத நிலையில் இருந்தேன்.  உங்களுடன் இவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்றார்.  அந்த அளவுக்கு உடல் பலகீனப்பட்டு உள்ளதை உணர்ந்து கொண்டேன்.

அவர் செய்து கொண்டு இருந்த தொழிலை இனி தொடர முடியாது.  தறி மூலம் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள் தொடங்கி பலவிதமான சேலைகள் வரைக்கும் தமிழகம் எங்கும் பெரிய மற்றும் சிறிய ஜவுளிக்கடைகளுக்கு வழங்கிக் கொண்டு இருந்தார்.  சிறிய முதலீடு என்ற போதிலும் அவருக்கு ஏற்கனவே நிரந்தரமாக இருந்த சர்க்கரை நோய் காரணமாக தொழிலை சுருக்கி வேலையாட்கள் மூலம் செய்து கொண்டு இருந்தார்.  

ஓரே மகள் பொறியியல் படிப்பு முடித்து பெங்களூரில் பணியாற்றிவிட்டு இப்போது பணிமாறுதல் கேட்டு கோவையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். இப்போது தான் பணியைத் தொடங்கியிருப்பதால் இயல்பான சம்பளம் தான்.  நிச்சயம் தனபாலன் போன்றவர்களுக்கு வாழும் போதே வலையுலகம் அவரை அங்கீகரிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். காரணம் அவர் வலையுலகத்திற்கு செய்துள்ள பணி என்பது தமிழ்த்தாத்தா உவேசா போன்றதற்கு சமமானதாகவே நான் கருதுகிறேன்.  அவர் ஐம்பெரும் காப்பியங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்.

தனபாலன் ஆயிரக்கணக்கான பேர்களை நம்பிக்கையூட்டி வலையுலகத்தில் பயணிக்க வைத்தார். அவர்கள் கேட்ட தொழில் நுட்ப பிரச்சனைகளை தீர்த்து உதவினார்.  புதுப்புது வலையுலக ரகசியங்களை வெளியுலகத்திற்கு அப்படியே வெளிப்படையாக எழுதி புரிய வைத்தார். தன்னுடைய பொன்னான நேரத்தை பின்னூட்டம் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதி எழுதியவருக்கு உற்சாகத்தை உருவாக்கி தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க வைத்த பெருமை தனபாலன் ஒருவருக்கே உண்டு என்றால் அது மிகையல்ல.

பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளார் என்பதனை உணர்ந்து கொண்டேன்.  கடந்த சில மாதங்களில் அவர் மருத்துவமனைகளில் செலவளித்த தொகை என்பது மிகவும் பெரியது.  தொடர்ந்து தொழிலில் இருந்து தேக்கம் என்பது அவரை கடந்த சில வருடங்களாக திக்குமுக்காட வைத்துக் கொண்டு இருந்தது என்பதனை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.  அவர் எதையும் என்னைப் போல தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுவெளியில் வைப்பதில்லை.

அண்ணே எங்கேயாவது உட்கார்ந்து வேலை செய்யும்படி ஒரு வேலை அமைந்தால் கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று அவர் சொன்னபோது திட்டி அலைபேசியை துண்டித்தேன்.  அவர் உடல்நிலை இனி ஒத்துழைக்காது. அடுத்த வருடம் நிச்சயம் மகளுக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளார். தொடர்ந்து செய்தே ஆக வேண்டிய மருத்துவ செலவுகள் ஒரு பக்கம். மற்றொருபுறம் அடிப்படை வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் விசயங்கள் என்று இரண்டு பக்கமும் அவரை இனி வரும் காலம் துரத்தும்.

அவரால் தொடர்ந்து பேச முடியாது. மூச்சு இழைப்பு, தடுமாற்றம் வரலாம். அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம். 

அவர் எந்த உதவியையும் யாரிடமும் கேட்கவில்லை. நான் இப்போது இங்கு எழுதுவதும் அவருக்குத் தெரியாது. அவர் அனுமதியில்லாமல் என் விருப்பத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன். அவருடைய இரண்டு  அலைபேசி எண்களை இங்கே எழுதியுள்ளேன்.  இரண்டிலும் ஜிபே வழியாக பணம் அனுப்ப வசதியுள்ளது என்பதனை உணர்ந்து கொண்டேன்.  

வெளிநாட்டில் வாழ்கின்ற நண்பர்கள் நிச்சயம் இந்த பணியை உங்களை சார்பாக தொடங்கலாம். தொடரலாம். அனுப்பியவர்களை வாட்ஸ்அப் வழியாக தகவல் தெரிவிக்கலாம்.  நீங்கள் செய்யக்கூடிய உதவி என்பது மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவரக்கூடும்.  மனச்சிக்கலில் அதிகமாக இருப்பது பணச்சிக்கல் தான்.  இது தீர்ந்து போனால் உளச் சிக்கலில் எவ்வித பிரச்சனைகளும் உருவாகாது என்று நம்புகின்றேன்.

இந்தப் பதிவு எத்தனை பேர்களின் பார்வைக்குச் சென்று சேரும் என்பது எனக்குத் தெரியாது.  நான் ஏன் நீண்ட காலம் எழுதாமல் இருந்த காரணத்தை வலைபதிவு மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்?  இனி இவர் எழுதவே மாட்டார் என்று கேட்பதையும் நிறுத்திவிட்டார்கள். எனவே இதை வாசித்து முடித்தவர்கள் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கலாம். அதுவும் ஒரு உதவி தான்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் எழுதவிரும்பவில்லை. காரணம் அவ்வுலகம் வேறு. மனிதர்களை அரசியல் ரீதியாக பிரித்து வைத்து இருப்பதும் அநாகரிகத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதே அதன் முதன்மை நோக்கமாக உள்ளது.  உணர்வுகள் மழுங்கிப் போய் வன்மத்தை வகைதொகையில்லாமல் வளர்த்து வைத்திருப்பவர்களிடம் என்ன பேசினாலும் எடுபடாது. வலையுலகம் வேறு. மற்ற சமூக ஊடகங்கள் உலகம் வேறு.

ஏன் திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் உருவானால் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் வெவ்வேறு காலகட்டத்தில் தன் குடும்பம் தங்கள் வசதி என்பதனையும் கடந்து அவர்களுக்குத் தெரிந்த வகையில் சமூகத்தின் ஏதோவொரு அசைவில் அடுத்த அடி நகர பலரும் முன்னேற காரணமாக இருந்து உள்ளனர் என்பதனை உங்கள் இதயம் உணரட்டும்.  உங்கள் உதவிகள் மூலம் பலவீனப்பட்டு இருக்கும் தனபாலன் இதயத்தில் மலர்ச்சி உருவாகட்டும்.  

எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு யூபிஐ வழியாக அனுப்ப விரும்பினால் கீழ்கண்ட அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

99443 45233   90439 30051

 வங்கி பரிவர்த்தனை மூலம் அனுப்ப முடியும் என்பவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற நண்பர்களை அனுப்பச் செய்து அவர்களுக்கு நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்.  அவர் தற்போது இருக்கும் சூழலில் அதிக நேரம் பேச இயலாது என்பதால், இப்படியொரு ஒரு காரியம் செய்யப்போகின்றேன் என்று சொன்னால் நிச்சயம் மறுப்பார் என்பதால் நான் எதையும் கேட்கவில்லை.

(இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். சிறிய உதவி என்று யோசித்துக் கொண்டு இருக்காமல் தயங்காமல் உதவுங்கள்)

15 July 2024

சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள் : முனைவர் இராச. கலைவாணி, முனைவர் சு. தமிழ்வேலு

முனைவர் இராச.கலைவாணியும், முனைவர் சு.தமிழ்வேலுவும் இணைந்து எழுதியுள்ள சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள் என்ற நூல்  நரம்புக்கருவி (யாழ், வீணை), காற்றுக்கருவி (குழல், கோடு, சங்கு, சூறைச்சின்னம், வயிர்), தோற்கருவிகள் (ஆறெறிப்பறை, கிணைப்பறை, சிறுபறை, தண்ணுமை, துடி, தொண்டகப்பறை, பறை, முரசு, முருடு, முழவு), கஞ்சக்கருவிகள் (கைத்தாளம், மணி), குயிலுவக்கருவிகள், பல்லியம் என்ற உட்தலைப்புகளில் பல்வேறு வகையான இசைக்கருவிகளைப் பற்றி ஆராய்கிறது.

நூலாசிரியர்கள், இசைக்கருவிகளின் அமைப்பு, பகுதிகள், வளர்ச்சி நிலை, பல்வேறு வகைகள், சிறப்பு, பயன்பாடு ஆகியவற்றை இலக்கியம் உள்ளிட்ட சான்றுகளோடு விவாதிக்கின்றனர். நூலில் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றைக் காண்போம்.

"சங்க இலக்கியத்தில் வீணை என்னும் சொல் பெயரளவில் கூட பதிவு பெறாத நிலையில் சிலப்பதிகாரத்தில் நாரதன் இசைக்கும் கருவியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." (.67)

"நாட்டிய அரங்கில் உள்ள அனைத்துக் கருவிகளையும் முதன்மையான கருவியாக நின்று வழி நடத்தக்கூடியது வங்கியம் என்றழைக்கப்படும் குழலே ஆகும்." (.70)

"பக்தி இலக்கியங்கள் சங்கை ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகப் பதிவு செய்துள்ளன......இன்றைக்கு இறப்புச்சடங்கு நடக்கும் இடங்களில் சேகண்டி என்னும் இரும்புக்கோல் கொண்டு அடிக்கும் வெண்கலத்தட்டுடன் இணை ஒலியாகச் சங்கு பயன்படுத்தப்படுகிறது. " (.92)

"வயிர் என்பது ஒரு வகை ஊது கொம்பு. சங்க காலம் முதலே மிகுதியான பயன்பாட்டில் உள்ள கருவியாகத் திகழ்ந்து வருகிறது. இக்கருவி தனித்தும் பிற இசைக்கருவிகளுடன் இணைந்தும் இசைக்கப்பட்டுள்ளது." (.102)

"தண்ணுமை என்னும் இருமுகப்பறை இரு புறமும் நீண்டு குவிந்து நடுப்பக்கம் அகலமாக அமைந்த பறையாகும். இது தோலினால் இருபுற வாய்களும் மூடப்பட்ட, வார்க்கட்டுகளால் இழுத்துக்கட்டப்பட்ட பறையாகும். மிகத் தொன்மையான பறையாகும்." (.119)

"பறை என்பது பல்வேறு வகையான முழக்கும் தோற்கருவிகளின் பொதுப்பெயர். அதைப் போல் பறை என்பது நெல் முதலான தானியங்களை முகத்தல் அளக்கும் அளவை என்னும் பொருண்மையிலும் சிலப்பதிகாரத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது." (.139)

"முரசு காலை முரசு, வீர முரசு, போர் முரசு, வெற்றி முரசு, மணமுரசு, பொது முரசு, நியாய முரசு, நாள் முரசு எனப் பல செயல்பாடுகளுக்கப் பயன்படுத்தும் வகையில் பல வகைகளாக இருந்துள்ளன. காலை நேரத்தில் கொட்டப்படுவது காலை முரசம் ஆகும்…..திருமண நிகழ்வை அறிவிக்கவும், திருமண நிகழ்வின்போதும் இசைக்கப்படுவது மண முரசாகும்…..." (.146)

"கோவலன் கண்ணகி இருவருக்குமான திருமணத்தை ஊர் முழுவதும் அறிவிக்கின்றனர். அப்போது முரசுடன் முருடு என்னும் தோற்கருவியும் இசைக்கப்பட்டுள்ளது. " (.160)

"காளை மாடுகள், பசுக்கள் ஆகியவற்றின் கழுத்தில் மணி கட்டப்படுவது பழமையான வழக்கமாகும். இனிமையான ஒலிநயம் அல்லது தங்களது மாடுகளைத் தனித்து அடையாளப்படுத்த அல்லது மாடுகளின் இருப்பையும் வருகையையும் அறிந்துகொள்ள எனப் பல்வேறு பயன்பாடுகளை முன்னிறுத்தி மணிகள் கட்டப்பட்டன. சிறிய அளவிலான மணிகள் கயிறு கொண்டு கட்டப்படும் வழக்கம் இன்றும் நிலைபெற்றிருக்கின்றது…சிலப்பதிகாரத்தில் பசுக்கள் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. அம்மணி அறுந்து வீழ்தல் என்பது தீய அறிகுறியாகக் கருதப்பட்டது….." (.172)

நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்ற விளக்கங்களும், ஒப்புநோக்கும், சான்றுகளும் ஒவ்வொரு இசைக்கருவியைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதலைத் தருகிறது. சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான பயன்பாட்டைத் தர அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெரிதும் போற்றத்தக்கதாகும். தொடர் களப்பணியும், பரந்த வாசிப்பும் நூல் சிறப்பாக அமையப் பெருந்துணை புரிந்துள்ளது. அரியதொரு நூலைப் படைத்துள்ள ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள்
ஆசிரியர் : முனைவர் இராச. கலைவாணி, முனைவர் சு.தமிழ்வேலு
பதிப்பகம் : ஏழிசைப்பதிப்பகம், தமிழ்க்கலையகம், 15/1, மாந்தோப்புத்தெரு, மூங்கில் தோட்டம், மயிலாடுதுறை 609 305 (அலைபேசி 99655 33832/96299 08792)
ஆண்டு : 2024
விலை : ரூ.200

04 July 2024

Art of Kongunadu (A Collection of Research Articles) : Dr. K. Manivannan

Dr. K. Manivannan's Art of Kongunadu (A Collection of Research Articles) contains 17 articles on the architecture and sculpture of the temples of Kongu region of Tamil Nadu, India. All the articles have endnotes. This book also contains photographs of salient features of selected temples which enable the reader for easier understanding. The bibliography is replete with primary and secondary sources. The glossary is an important addition to this work.  

Jambulingam with author Dr Manivannan/June 2023

In the first chapter the author gives a bird's eye view of the historical significance of the study area, the Kongu Mandalam known for its unique history, culture, art, civilization, and customs,  in brief, based on literature and stone gravings. In the other chapters he discusses about the selected temples of Coimbatore, Dindigul and Tirupur districts of Tamil Nadu. They include the temples of Munthondriswara (Avinashi), Renganatha Perumal (Karamadai), Kannadi Perumal, Magudeeswara (Kodumudi), Ayaduki Cozheeswara, Periyanayahi, Vaheeswara (Palani),  Kulaseharaswami (Sozhamadevi), Vinayaka and Nataraja  (Udumalpet). He put forths the historical background, significance of art and archiecture and the notability with reliable sources. The way he discusses the points prove the depth of his field study.

While discussing about a temple he starts with the location of the temple and analyses its art and architecture. Wherever necessary he gives the apt the literary, inscription and other sources. The special features of garbagriha, (in some temples pradaksinapatha), Antarala, Maha mandapa, Mukha mandapa, Vahana mandapa, Prakara, Nandhi, Palipita, Dvajasthamba, Deepastamba,  Gopura, and Vimana are dealt with. Location of Temple tank, and Temple tree are discussed in detail. In some places he also spells out the development of temple arts.

The role of sculptures, inevitable in temple arts is widely analysed. Starting from the presiding deity Linga and the Devi, he pinpoints the iconographical features of all the murtis. They include Vinayaka, Muruga with his consorts Valli and Deivanai, Dakhinamurti, Brahma, Durga, Chandikeswara, Nayanmars,  In the Vishnu temples the sculptures of the presiding deity with his consorts Sridevi and Bhudevi are dealt with in meticulous manner.

The history of the temples through the ages gives the reader a clear outlook to understand their salient characters. The metamorphosis the temples faced during the period of different rulers are laid out in order with relevant explanations in detail. 

Daily pujas, rituals carried out in the temples and the special days of the temples are also given. This book will be a helpful guide for devotees and the public. I wish the author, with the blessings of the Almighty, cover the other areas of Tamil Nadu and bring out the glimpses of other temples in the coming days.   

----------------------------------------------------

Dr. K.Manivannan (Mobile: 99654 93171), Art of Kongunadu, (A Collection of Research Articles), GM Amudhan Publicaitons, Papanasam, Dec 2020, Rs.200

----------------------------------------------------