முகப்பு

21 December 2013

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்

வணக்கம். இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியை நிறைவு செய்தேன். அதிலிருந்து ஒரு பாடலை உரையுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

பெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியைக்கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கண்மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ! (எண்.628)

முன்பு பெரிய வெள்ளம் வந்தபோது ஓர் ஆலந்தளிரிலே குழந்தை வடிவாய்க் கொண்டு உலகங்களை எல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கியவனே! கால்வாய்களிலேயுள்ள இரத்தினங்களைக் கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே! திருவாலி திருநகரிக்குத் தலைவனே! அயோத்திக்குத் தலைவனே! தாலேலோ. 


 
இதற்கு முன்னர் படித்து நிறைவு செய்த பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு பாடலும் உரையுடன். 

(1) பெரியாழ்வார் திருமொழி : பெரியாழ்வார்
தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி. (எண்.78)

வானில் விளங்கும் சந்திரனே! வெண்மையான நிலாவை உடைய முற்றத்தில் வந்து நீ, நான் விளையாடும்படி வருவாயாக என்று, சந்திரனை அழைத்து நின்று கொண்டு உன்னைப் புகழ்கின்ற ஆயர்களுடைய தலைவராகிய நந்தகோபர் மகிழும்படி, சப்பாணி கொட்டுக. திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருப்பவனே! சப்பாணி கொட்டுக.

(2) திருப்பாவை: ஆண்டாள்
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் - அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று - ஏலோர் எம்பாவாய். (எண்.484)

மாசற்ற மாணிக்கங்கள் பதித்த மாளிகையில் எல்லாத் திசைகளிலும் விளக்குகள் எரிய, அகிற் புகையின் நறுமணம் தவழ, தூங்குவதற்கான படுக்கையில் உறங்குகின்ற மாமன் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடு. (அவள் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்க அவள் தாயிடம் முறையிடுகிறார்கள்) மாமியாரே! அவளை எழுப்புவீர்களா? உங்கள் மகள் ஊமையோ? அல்லது செவிடோ? ஆழ்ந்த தூக்கமோ? அல்லது நெடுநேரம் தூங்குமாறு மந்திரத்தினால் கட்டுப்பட்டாளோ? மாமாயவன், மாதவன், வைகுந்தன் என்னும் அவனுடைய பல திருநாமங்களைப் பாடினோம்

(3) நாச்சியார் திருமொழி : ஆண்டாள்
பால் ஆலிலையில் துயில் கொண்ட
பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய் தாற்போல்
வேண்டிற்று எல்லாம் பேசாதே,
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
குடந்தைக் கிடந்த குடம் ஆடி,
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
நெறி மென் குழல் மேல் சூட்டிரே. (எண்.628)

பால் பாயும் பருவமுடைய ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளிய பெருமானுடைய வலையிலே அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து, வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற்போல (கொடுமையாக) உங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்வதைத் தவிர்த்து, இடைப் பிள்ளையாய் (இடைச்சாதிக்குரிய) கோலைக் கொண்டு பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய், திருக்குடந்தையில் திருக்கண் வளந்தருளுமவனாய்க் குடக் கூத்தாடியவனுமான கண்ணபிரானுடைய பசுமை பொருந்திய குளிர்ந்த அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து நெறிப்புக் கொண்டதாயும், மென்மையாயும் உள்ள என் கூந்தலிலே சூட்டுங்கள்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011

15 December 2013

மண்டேலா விடுதலை நாளை நினைவுகூர்வோம்

உலகம் போற்றும் உத்தமத் தலைவர்.  வாழும்போதே வரலாறு படைத்தவர். பொறுமையின் சிகரமாக வாழ்ந்தவர். மன உறுதியில் ஈடு இனணயற்றவர். வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அவர்தான் உலகம் போற்றும் மடிபா என்கிற நெல்சன் மண்டேலா. அவர்  நம்மைவிட்டுப் பிரிந்து அடக்கம் செய்யப்படும் இந்நாளில்(15.12.2013), அவரின் 27ஆண்டு சிறைவாசம் முடிந்த அந்நாளை (11.02.1990) நினைவுகூர்வோம். 



பிப்ரவரி 11, 1990 - காலை 
விடுதலைக்கு முதல் நாள் சில மணி நேரமே தூங்கிய மண்டேலா, பிப்ரவரி 11 அதிகாலை 4.30க்கு எழுந்தார். காலைக்கடன்களை முடித்தபின், உணவு உண்டார். கேப் டவுனில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளைச் சார்ந்த பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் விடுதலையாவது பற்றியும்,  பேசவுள்ள பேச்சைக் குறித்தும் ஆவன செய்ய கேட்டுக்கொண்டார். 

முதல் பொழிவாற்ற விருப்பம்
சிறையில் இருந்தபோது பரிவு காட்டிய பார்ல் நகர மக்களிடையே முதலில் சொற்பொழிவாற்றவேண்டும் என்பதே அவருடைய  பேரவா.  ஆனால் அது நல்ல யோசனையல்ல என்று கருதியவரவேற்புக்குழுவோ கேப் டவுனில் உள்ள க்ராண்ட் பேரேட் என்னும் இடத்தை தீர்மானித்தது. 

முதல் நாள் இரவு 
மக்களிடம் தான் கொண்ட ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுததும் வகையில் விடுதலையான முதல் நாள் இரவை கேப் ப்ளாட்சில் கழிக்க விரும்பினார். ஆனால்  பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளையர்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு வீட்டில் மண்டேலா தங்கவேண்டும் என்று அவர் நண்பர்களும்,  மனைவியும் விரும்பினர்.  சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவர் அங்கு இருக்க அனுமதிக்கப்படவில்லை.  அவ்வாறு வெள்ளையர் வசிக்கும் ஓர் ஆடம்பரமான பகுதியில் தங்கினால் அது தவறான கணிப்பை உண்டாக்கும் என்பது அவர் எண்ணம். ஆனால் வரவேற்புக் குழுவினரோ டுடுவின் காலகட்டத்தில் அனைத்து இனத்தவரும் அங்கு வந்துள்ளனர் என்றும் அனைத்து இனத்தவருக்கும் அவ்விடம் பொதுவானது என்றும் விளக்கினர். 

சிறையில் அவருடைய சொத்து
20 ஆண்டுக்கும் மேலான சிறை வாழ்க்கையில் அவரிடம் சில பொருள்களே இருந்தன. அண்மையில் சில வருடங்களாக அதிகமான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை
நூல்களும், தாள்களும்தான். 

வின்னி வருவதில் தாமதம்
அவர் விடுதலையாவதற்காகக் குறிக்கப்பட்ட நேரம் மதியம் 3.00. மணி ஆனால் வின்னி, வால்டேர் மற்றும் பிற விமானப் பயணிகள் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 2.00 மணி வரை வரவில்லை. 

இறுதியாக சிறை உணவு
சிறை அதிகாரி ஸ்வார்ட் மண்டேலாவுக்கு இறுதி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். கடந்த இருஆண்டுகளாக உணவு அளித்தமைக்காக மட்டுமன்றி நட்போடு இருந்தமைக்காகவும் அவருக்கு நன்றி கூறினார் மண்டேலா. 

அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு
சிறை அதிகாரி ஜேம்ஸ் கிரிகரியை அன்போடு கட்டியணைத்தார்.  போல்ஸ்மோர் தொடங்கி விக்டர் வெர்ஸ்டெர் வரை பல இடங்களில் பல ஆண்டுகள் இருந்தபோதும் எப்போதும் சிறை அதிகாரிகளுடன் அரசியல் பேசியதேயில்லை. இருப்பினும் அவர்களுக்கிடையேயான பிணைப்பினை எடுத்துச்சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரை விட்டுச்செல்வது மண்டேலாவுக்கு ஏக்கத்தைத் தந்தது. கடந்த இருபத்தேழரை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தபோதிலும் ஸ்வார்ட், கிரிகரி, பிராண்ட் போன்ற சிறை அதிகாரிகள் மனித நேயத்தின் மீதான மண்டேலாவின் நம்பிக்கையை மேம்படுத்தியவர்கள் ஆவர். 

சிறையதிகாரிகளுக்குப் பிரியாவிடை  
மண்டேலாவையும் வின்னியையும் காரில் சிறையின் முகப்பு வாயில் வரை அழைத்துச்செல்வதாகத் திட்டமிடப்பட்டது. இவ்வளவு நாளும் தன்னை பார்த்துக்கொண்ட சிறையதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பிரியாவிடை தர விரும்பி அதிகாரிகளிடம் கூறினார்.  முகப்பு வாயிலில் அவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் தனக்காகக் காத்திருப்பர் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகூற தான் விரும்புவதாகவும் கூறினார்.  

விடுதலையை நோக்கி வருதல்
3.00 மணிக்குப் பின் சில நிமிடங்கள் கழித்து SABC நிகழ்ச்சிப்பொறுப்பாளர்   மண்டேலாவிடம் காரை விட்டு இறங்கி வாயிலுக்கு முன்பாக சிறிதுதூரம் வரவேண்டும் என்றும் அப்போதுதான் மண்டேலா விடுதலையை நோக்கி நடப்பதை அவர்கள் படமாக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

பரபரப்பான காத்திருப்பு
மதியம் 3.30 மணிக்கு மண்டேலா மிகவும் பரபரப்போடு காணப்பட்டார். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. வரவேற்புக்குழுவினரிடம் தன் மக்கள் தனக்காக 27 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், இனியும் அவர்களைக் காக்கவைக்கக்கூடாது என்றும் கூறினார். 4.00 மணிக்குச் சற்று முன்பாக அங்கிருந்து மோட்டார் காரில் குழுவாக அனைவரும் கிளம்பி வெளியே வர ஆரம்பித்தனர்.

வாயிலை நோக்கி நடத்தல்
வாயிலுக்கு கால் மைலுக்கு முன் ஒரு நிறுத்தத்தின் அருகே கார் மெதுவாகச் சென்றது. வின்னியும் மண்டேலாவும் சிறை வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.  

சிறிய குழப்பம்
தமக்கு முன் என்ன நடக்கிறது என முதலில் மண்டேலாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 150 அடிகளுக்குள் அவர் இருக்கும்போது ஏதோ ஒரு குழப்பமான நிலை இருப்பதைப்போல உணர்ந்தார். அதிக எண்ணிக்கையிலான மக்கள், நூற்றுக்கணக்கான புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சியினர், பத்திரிக்கைத்துறையினர், ஆயிரக்கணக்கிலான அபிமானிகள் அங்கு இருந்தனர்.  அவருக்கு ஒரு புறம் அதிர்ச்சி மறுபுறம் கலக்கம். உண்மையில் இவ்வாறான ஒரு காட்சியை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் மக்கள் இருப்பர், அவர்களிலும் பெரும்பாலானோர் சிறை அதிகாரிகளாகவும் அவர்களுடைய குடும்பத்தினராகவும் இருப்பர் என அவர் நினைத்திருந்தார். 

உற்சாக வரவேற்பு
20 அடிக்குள்ளாகவே கேமராக்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டன. எங்கும் சத்தம். பத்திரிக்கையாளர்கள் உரக்கக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிக எண்ணிக்கையில் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை நெருங்க ஆரம்பித்தனர்.  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாக வாழ்த்தொலி எழுப்பினர். சொல்லப்போனால் அது ஒரு மகிழ்ச்சியான ஆரவாரம். ஒரு தொலைக்காட்சி நிருபர் ஏதோ ஒரு பொருளை அவரை நோக்கிக் கொண்டுவந்தார். தான் சிறையில் இருக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்ட  ஓர் ஆயுதமோ என மண்டேலா வியந்துபோவதற்குள் வின்னி அவரிடம் அது ஒரு மைக்ரோபோன் என்று கூறினார். 

வலது கை முட்டியை உயர்த்தி கர்ஜனை
கூட்டத்தின் நடுவில் மண்டேலா வலது கைமுட்டியை உயர்த்துகிறார். ஒரு பெரிய கர்ஜனை. இவ்வாறு கடந்த 27 வருடங்களாக அவரால் செய்யமுடியவில்லை. அது தற்போது அவருக்குப் புதிய விதமான பலத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. 

மகிழ்ச்சியும் ஏக்கமும்
இவ்வாறான ஒரு வரவேற்பைப் பெற்றதில் மண்டேலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியே. இருந்தாலும் அவருடைய சிறையதிகாரிகளுக்கு பிரியாவிடை கூற வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது.  

புதிய வாழ்க்கை ஆரம்பம்
மற்றொரு புறத்தில் உள்ள கதவுகள் வழியாக காரில் போவதற்காக,  மண்டேலா கடைசியாக நடந்தபொழுது  71 வயதிலும்கூட தனக்கு வாழ்க்கை புதிதாக ஆரம்பமாவதுபோலத் தெரிவதாக உணர்ந்தார். அத்துடன் 10,000 நாள் சிறை வாழ்க்கை முடிந்தது.

நன்றி : Long Walk to Freedom, Nelson Mandela, 1962-1994, Vol.II, Abacus, pp.340-342

08 December 2013

முதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம்


வணக்கம். ஓராண்டாக காலையில் தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க எண்ணி, ஆரம்பித்து, தொடர்ந்து முதல் மூன்று திருமுறைகளான ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்துள்ளேன். தலத்தின் சிறப்பு, இறைவனின் பெருமை, இயற்கையின் அழகு என்று பல்வேறு கோணங்களில் மிகவும் சிறப்பாக ஞானசம்பந்தர் பாடியுள்ள இப்பாடல்களைப் படிக்கப் படிக்க தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் மிகும் என்பது நான் அனுபவத்தில் கண்டதாகும். ஞானசம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு திருமுறையிலிருந்தும் ஒரு பாடலைப் பொருளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் திருமுறையிலுள்ள பாடல் நான் பிறந்த மண்ணான குடமூக்கு என்றும் குடந்தைக்காரோணம் என்றும் அழைக்கப்படும் கும்பகோணம் நகரைப் பற்றியதாகும். தொடர்ந்து இரண்டாம் திருமுறை (சீகாழி) மற்றும் மூன்றாம் திருமுறையிலிருந்து (திருநல்லூர்ப்பெருமணம்) ஒவ்வொரு பாடல்கள் தரப்பட்டுள்ளன.


முதல் திருமுறை (திருக்குடந்தைக்காரோணம்) 
முடியார்மன்னர் மடமான்விழியார்
மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும்
பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக்
குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார்
காரோ ணத்தாரே.(பதிகத்தொடர் எண்.72 பாடல் எண்.4)

மாடவீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழிகளை உடைய மகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப் பணிந்துபோற்ற விடைக் கொடியோடு விளங்குபவராவர்.

இரண்டாம் திருமுறை(திருப்பிரமபுரம்)
நன்னெஞ்சே யுனையிரந்தேன்
நம்பெருமான் றிருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய்
உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத்
தாரமுதை யெப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே

பார்கண்ணே பரிந்திடவே. (பதிகத்தொடர் எண்.176 பாடல் எண்.4)

நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபெருமான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள் செய்ய அவனையே பார்.

மூன்றாம் திருமுறை (திருநல்லூர்ப்பெருமணம்)
நல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேய நம் பானே.  (பதிகத்தொடர் எண்.383 பாடல் எண்.1)
 

அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.

பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008