முகப்பு

15 December 2013

மண்டேலா விடுதலை நாளை நினைவுகூர்வோம்

உலகம் போற்றும் உத்தமத் தலைவர்.  வாழும்போதே வரலாறு படைத்தவர். பொறுமையின் சிகரமாக வாழ்ந்தவர். மன உறுதியில் ஈடு இனணயற்றவர். வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அவர்தான் உலகம் போற்றும் மடிபா என்கிற நெல்சன் மண்டேலா. அவர்  நம்மைவிட்டுப் பிரிந்து அடக்கம் செய்யப்படும் இந்நாளில்(15.12.2013), அவரின் 27ஆண்டு சிறைவாசம் முடிந்த அந்நாளை (11.02.1990) நினைவுகூர்வோம். 



பிப்ரவரி 11, 1990 - காலை 
விடுதலைக்கு முதல் நாள் சில மணி நேரமே தூங்கிய மண்டேலா, பிப்ரவரி 11 அதிகாலை 4.30க்கு எழுந்தார். காலைக்கடன்களை முடித்தபின், உணவு உண்டார். கேப் டவுனில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளைச் சார்ந்த பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் விடுதலையாவது பற்றியும்,  பேசவுள்ள பேச்சைக் குறித்தும் ஆவன செய்ய கேட்டுக்கொண்டார். 

முதல் பொழிவாற்ற விருப்பம்
சிறையில் இருந்தபோது பரிவு காட்டிய பார்ல் நகர மக்களிடையே முதலில் சொற்பொழிவாற்றவேண்டும் என்பதே அவருடைய  பேரவா.  ஆனால் அது நல்ல யோசனையல்ல என்று கருதியவரவேற்புக்குழுவோ கேப் டவுனில் உள்ள க்ராண்ட் பேரேட் என்னும் இடத்தை தீர்மானித்தது. 

முதல் நாள் இரவு 
மக்களிடம் தான் கொண்ட ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுததும் வகையில் விடுதலையான முதல் நாள் இரவை கேப் ப்ளாட்சில் கழிக்க விரும்பினார். ஆனால்  பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளையர்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு வீட்டில் மண்டேலா தங்கவேண்டும் என்று அவர் நண்பர்களும்,  மனைவியும் விரும்பினர்.  சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவர் அங்கு இருக்க அனுமதிக்கப்படவில்லை.  அவ்வாறு வெள்ளையர் வசிக்கும் ஓர் ஆடம்பரமான பகுதியில் தங்கினால் அது தவறான கணிப்பை உண்டாக்கும் என்பது அவர் எண்ணம். ஆனால் வரவேற்புக் குழுவினரோ டுடுவின் காலகட்டத்தில் அனைத்து இனத்தவரும் அங்கு வந்துள்ளனர் என்றும் அனைத்து இனத்தவருக்கும் அவ்விடம் பொதுவானது என்றும் விளக்கினர். 

சிறையில் அவருடைய சொத்து
20 ஆண்டுக்கும் மேலான சிறை வாழ்க்கையில் அவரிடம் சில பொருள்களே இருந்தன. அண்மையில் சில வருடங்களாக அதிகமான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை
நூல்களும், தாள்களும்தான். 

வின்னி வருவதில் தாமதம்
அவர் விடுதலையாவதற்காகக் குறிக்கப்பட்ட நேரம் மதியம் 3.00. மணி ஆனால் வின்னி, வால்டேர் மற்றும் பிற விமானப் பயணிகள் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 2.00 மணி வரை வரவில்லை. 

இறுதியாக சிறை உணவு
சிறை அதிகாரி ஸ்வார்ட் மண்டேலாவுக்கு இறுதி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். கடந்த இருஆண்டுகளாக உணவு அளித்தமைக்காக மட்டுமன்றி நட்போடு இருந்தமைக்காகவும் அவருக்கு நன்றி கூறினார் மண்டேலா. 

அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு
சிறை அதிகாரி ஜேம்ஸ் கிரிகரியை அன்போடு கட்டியணைத்தார்.  போல்ஸ்மோர் தொடங்கி விக்டர் வெர்ஸ்டெர் வரை பல இடங்களில் பல ஆண்டுகள் இருந்தபோதும் எப்போதும் சிறை அதிகாரிகளுடன் அரசியல் பேசியதேயில்லை. இருப்பினும் அவர்களுக்கிடையேயான பிணைப்பினை எடுத்துச்சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரை விட்டுச்செல்வது மண்டேலாவுக்கு ஏக்கத்தைத் தந்தது. கடந்த இருபத்தேழரை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தபோதிலும் ஸ்வார்ட், கிரிகரி, பிராண்ட் போன்ற சிறை அதிகாரிகள் மனித நேயத்தின் மீதான மண்டேலாவின் நம்பிக்கையை மேம்படுத்தியவர்கள் ஆவர். 

சிறையதிகாரிகளுக்குப் பிரியாவிடை  
மண்டேலாவையும் வின்னியையும் காரில் சிறையின் முகப்பு வாயில் வரை அழைத்துச்செல்வதாகத் திட்டமிடப்பட்டது. இவ்வளவு நாளும் தன்னை பார்த்துக்கொண்ட சிறையதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பிரியாவிடை தர விரும்பி அதிகாரிகளிடம் கூறினார்.  முகப்பு வாயிலில் அவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் தனக்காகக் காத்திருப்பர் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகூற தான் விரும்புவதாகவும் கூறினார்.  

விடுதலையை நோக்கி வருதல்
3.00 மணிக்குப் பின் சில நிமிடங்கள் கழித்து SABC நிகழ்ச்சிப்பொறுப்பாளர்   மண்டேலாவிடம் காரை விட்டு இறங்கி வாயிலுக்கு முன்பாக சிறிதுதூரம் வரவேண்டும் என்றும் அப்போதுதான் மண்டேலா விடுதலையை நோக்கி நடப்பதை அவர்கள் படமாக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

பரபரப்பான காத்திருப்பு
மதியம் 3.30 மணிக்கு மண்டேலா மிகவும் பரபரப்போடு காணப்பட்டார். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. வரவேற்புக்குழுவினரிடம் தன் மக்கள் தனக்காக 27 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், இனியும் அவர்களைக் காக்கவைக்கக்கூடாது என்றும் கூறினார். 4.00 மணிக்குச் சற்று முன்பாக அங்கிருந்து மோட்டார் காரில் குழுவாக அனைவரும் கிளம்பி வெளியே வர ஆரம்பித்தனர்.

வாயிலை நோக்கி நடத்தல்
வாயிலுக்கு கால் மைலுக்கு முன் ஒரு நிறுத்தத்தின் அருகே கார் மெதுவாகச் சென்றது. வின்னியும் மண்டேலாவும் சிறை வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.  

சிறிய குழப்பம்
தமக்கு முன் என்ன நடக்கிறது என முதலில் மண்டேலாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 150 அடிகளுக்குள் அவர் இருக்கும்போது ஏதோ ஒரு குழப்பமான நிலை இருப்பதைப்போல உணர்ந்தார். அதிக எண்ணிக்கையிலான மக்கள், நூற்றுக்கணக்கான புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சியினர், பத்திரிக்கைத்துறையினர், ஆயிரக்கணக்கிலான அபிமானிகள் அங்கு இருந்தனர்.  அவருக்கு ஒரு புறம் அதிர்ச்சி மறுபுறம் கலக்கம். உண்மையில் இவ்வாறான ஒரு காட்சியை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் மக்கள் இருப்பர், அவர்களிலும் பெரும்பாலானோர் சிறை அதிகாரிகளாகவும் அவர்களுடைய குடும்பத்தினராகவும் இருப்பர் என அவர் நினைத்திருந்தார். 

உற்சாக வரவேற்பு
20 அடிக்குள்ளாகவே கேமராக்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டன. எங்கும் சத்தம். பத்திரிக்கையாளர்கள் உரக்கக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிக எண்ணிக்கையில் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை நெருங்க ஆரம்பித்தனர்.  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாக வாழ்த்தொலி எழுப்பினர். சொல்லப்போனால் அது ஒரு மகிழ்ச்சியான ஆரவாரம். ஒரு தொலைக்காட்சி நிருபர் ஏதோ ஒரு பொருளை அவரை நோக்கிக் கொண்டுவந்தார். தான் சிறையில் இருக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்ட  ஓர் ஆயுதமோ என மண்டேலா வியந்துபோவதற்குள் வின்னி அவரிடம் அது ஒரு மைக்ரோபோன் என்று கூறினார். 

வலது கை முட்டியை உயர்த்தி கர்ஜனை
கூட்டத்தின் நடுவில் மண்டேலா வலது கைமுட்டியை உயர்த்துகிறார். ஒரு பெரிய கர்ஜனை. இவ்வாறு கடந்த 27 வருடங்களாக அவரால் செய்யமுடியவில்லை. அது தற்போது அவருக்குப் புதிய விதமான பலத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. 

மகிழ்ச்சியும் ஏக்கமும்
இவ்வாறான ஒரு வரவேற்பைப் பெற்றதில் மண்டேலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியே. இருந்தாலும் அவருடைய சிறையதிகாரிகளுக்கு பிரியாவிடை கூற வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது.  

புதிய வாழ்க்கை ஆரம்பம்
மற்றொரு புறத்தில் உள்ள கதவுகள் வழியாக காரில் போவதற்காக,  மண்டேலா கடைசியாக நடந்தபொழுது  71 வயதிலும்கூட தனக்கு வாழ்க்கை புதிதாக ஆரம்பமாவதுபோலத் தெரிவதாக உணர்ந்தார். அத்துடன் 10,000 நாள் சிறை வாழ்க்கை முடிந்தது.

நன்றி : Long Walk to Freedom, Nelson Mandela, 1962-1994, Vol.II, Abacus, pp.340-342

7 comments:

  1. மண்டேலாவின் விடுதலையை வரவேற்று ஆரவாரம் என்பது தென்னாப்பிரிக்காவில் உண்மைதான். இதே நாளில் திருச்சியில் திமுகவின் திருப்புமுனை மாநாடு நடந்துகொண்டிருந்தது. அப்போது முரசொலி மாறன் மத்திய அமைச்சர். அவருக்கு இந்திய அரசிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. அதைக் கலைஞரிடம் பகிர்ந்துகொள்கிறார். மேடையில் இருந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. பகல் 12.00 மணி என்று நினைவு. ஆற்காடு வீராசாமி ஒலிவாங்கியின் முன்பு வருகிறார். ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மோடு பகிர்ந்துகொள்ளகிறார் என்று அறிவித்தவுடன் கலைஞர் ஒலிவாங்கியின் முன்பு நின்று, தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இதை இந்திய அரசின் வெளியுறவுத் துறை இந்தச் செய்தியை உறுதி செய்துள்ளது என்று முடிக்கும் முன்பு மாநாட்டு திடலில் இருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரம் அடங்க சுமார் 10 நிமிடங்கள் பிடித்தது. அந்த ஆயிரக்கணக்கில் எழுப்பப்பட்ட ஆரவாரத்தில் நானும் ஆரவாரம் செய்தேன் என்ற நினைவை நண்பர் ஜம்புலிங்கம் அவர்களின் கட்டுரை மறுஒளிபரப்பு செய்தது. விழிகளில் நீர் வழிந்தது. அந்த மகத்தான மாவீரனுக்கு நம் வீரவணக்கம்.
    -முனைவர் தி.நெடுஞ்செழியன்

    ReplyDelete
  2. உணர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இம்மானிதர் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமையே.

    ReplyDelete
  3. எழுச்சி மிக்க மொழிபெயர்ப்பு. மண்டேலாவின் நினைவை மறுபடியும் கனலாக எழச்செய்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  4. நன்றி. எழுதும்போது அந்நாளில் அக்கூட்டத்தில் ஒருவனாக இருந்த உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  5. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    இணைப்பு : http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_17.html

    ReplyDelete
  6. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. கண்டேன், மகிழ்ச்சியடைந்தேன், அன்புக்கு நன்றி,

    ReplyDelete