முகப்பு

08 December 2013

முதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம்


வணக்கம். ஓராண்டாக காலையில் தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க எண்ணி, ஆரம்பித்து, தொடர்ந்து முதல் மூன்று திருமுறைகளான ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்துள்ளேன். தலத்தின் சிறப்பு, இறைவனின் பெருமை, இயற்கையின் அழகு என்று பல்வேறு கோணங்களில் மிகவும் சிறப்பாக ஞானசம்பந்தர் பாடியுள்ள இப்பாடல்களைப் படிக்கப் படிக்க தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் மிகும் என்பது நான் அனுபவத்தில் கண்டதாகும். ஞானசம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு திருமுறையிலிருந்தும் ஒரு பாடலைப் பொருளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் திருமுறையிலுள்ள பாடல் நான் பிறந்த மண்ணான குடமூக்கு என்றும் குடந்தைக்காரோணம் என்றும் அழைக்கப்படும் கும்பகோணம் நகரைப் பற்றியதாகும். தொடர்ந்து இரண்டாம் திருமுறை (சீகாழி) மற்றும் மூன்றாம் திருமுறையிலிருந்து (திருநல்லூர்ப்பெருமணம்) ஒவ்வொரு பாடல்கள் தரப்பட்டுள்ளன.


முதல் திருமுறை (திருக்குடந்தைக்காரோணம்) 
முடியார்மன்னர் மடமான்விழியார்
மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும்
பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக்
குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார்
காரோ ணத்தாரே.(பதிகத்தொடர் எண்.72 பாடல் எண்.4)

மாடவீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழிகளை உடைய மகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப் பணிந்துபோற்ற விடைக் கொடியோடு விளங்குபவராவர்.

இரண்டாம் திருமுறை(திருப்பிரமபுரம்)
நன்னெஞ்சே யுனையிரந்தேன்
நம்பெருமான் றிருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய்
உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத்
தாரமுதை யெப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே

பார்கண்ணே பரிந்திடவே. (பதிகத்தொடர் எண்.176 பாடல் எண்.4)

நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபெருமான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள் செய்ய அவனையே பார்.

மூன்றாம் திருமுறை (திருநல்லூர்ப்பெருமணம்)
நல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேய நம் பானே.  (பதிகத்தொடர் எண்.383 பாடல் எண்.1)
 

அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.

பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008 

4 comments:

  1. பகிர்விற்கு நன்றி ஐயா.
    தொடருங்கள்
    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உடன் வருவதற்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. Replies
    1. இப்பயணத்தில் தங்களைப் போன்றோர் துணை வருவது எனக்கு நிறைவைத் தருகிறது.

      Delete