முகப்பு

21 May 2014

கோயில் உலா : ஏப்ரல் 2014

26.4.2014ஆம் நாள் தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் இந்த ஆண்டின் முதல் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் சோழ நாட்டுத் தலங்களில் காவிரியின் வட கரையில் உள்ள ஆப்பாடி (திருவாய்ப்பாடி), சேய்ஞலூர், கடம்பூர் (மேலக்கடம்பூர்), ஓமாம்புலியூர், கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்குருக்காவூர், திருமுல்லைவாயில் (8 சிவத் தலங்கள்), காழிச்சீம விண்ணகரம் (ஒரு வைணவத்தலம்) சென்றோம். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் புகழ் பெற்றதாகும். 




காலையில் சென்ற கோயில்கள்


 

 
 1)ஆப்பாடி(பாலுகந்தநாதர்/பெரியநாயகி/அப்பர் பாடல்)
கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில்  உள்ளது. இத்தலத்திற்கு அருகே மண்ணியாறு ஓடுகிறது. சண்டேச நாயனார் பேறு பெற்ற தலம். 

2)சேய்ஞலூர் (சத்தியகிரீசுவரர்/சகிதேவியம்மை/ஞானசம்பந்தர் பாடல்)
கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருவாய்பாடிக்கு வடமேற்கே 1 1/2 கிமீ தூரத்தில்  மண்ணியாற்றின் கரையில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சண்டேச நாயனார் அவதரித்த தலம்.

3)கடம்பூர்(அமிர்தகடேசுவரர்/சோதிமின்னம்மை/சம்பந்தர், அப்பர் பாடல்)
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று எய்யலூர் சாலை வழியே சென்று இத்தலத்தை அடையலாம். கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.

 4)ஓமாம்புலியூர் (பிரணவபுரீசுவரர்/பூங்கொடிநாயகி/சம்பந்தர்,அப்பர் பாடல்)
சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் போகலாம். ஐந்து புலியூர்கள் : பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் ஆகியனவாகும்.

5)கானாட்டுமுள்ளூர் (பதஞ்சலிநாதர்/கானார்குழலி/சுந்தரர் பாடல்)
சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது.


மாலையில் சென்ற கோயில்கள் 
 
 
 
 
 
6)திருநாரையூர் (சௌந்தரநாதர்/திரிபுரசுந்தரி/சம்பந்தர், அப்பர் பாடல்)
சிதம்பரம் காட்டுமன்னார்குடி சாலையில்,குமராட்சியை அடுத்து 1 கிமீ. தொலைவில் உள்ளது. நம்பியாண்டார் நம்பியாண்டார் நம்பி அவதரித்த தலம். பொல்லாப்பிள்ளையார் அருளால் இவர், தில்லையில் சேமித்துவைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
7)திருக்குருகாவூர்(வெள்ளிடைஈசர்/காவியங்கண்ணி/ஞானசம்பந்தர்,சுந்தரர்  பாடல்)
தென்திருமுல்லைவாயிலிலிருந்து எளிதில் செல்லலாம். சீர்காழி-திருமுல்லைவாயில் பாதையில் 6 கிமீ செயன்று வடகால் என்னும் ஊரில் பிரியும் வழியில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்றழைக்கப்படுகிறது. 

8)திருமுல்லைவாயில்(முல்லைவனநாதர்/அணிகொண்டகோதை/ஞானசம்பந்தர் பாடல்)
சீர்காழியிலிருந்து அளக்குடி வழியே 13 கிமீ தொலைவில் இத்தலம் உள்ளது. தென்திருமுல்லைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஊர், கடற்கரையோரத்தில் உள்ளது. கோயிலுக்கு எதிர்க்கோடியில் கடல் உள்ளது.

9)காழிச்சீம விண்ணகரம்
(திரிவிக்ரமன்/லோகநாயகி/திருமங்கையாழ்வார் பாடல்)
மயிலாடுதுறை சிதம்பரம் சாலையில் சீர்காழி உள்ளது. இத்தலப் பயணத்தில் நாங்கள் பார்த்த ஒரே பெருமாள் கோயில் சீர்காழியிலுள்ள விக்ரம நாராயணப்பெருமாள் (தாடாளன்) கோயில். அழகான உலகளந்த பெருமாளை கருவறையில் காணமுடிந்தது. திருக்கோயிலூர் மற்றும் காஞ்சீபுரத்தில் உள்ள சிற்பங்களைவிட இச்சிற்பம் சிறியதாக இருப்பினும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. விண்ணகரங்கள் என கருதப்படுபவை பரமேச்சுவர விண்ணகரம், காழிச்சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுர விண்ணகரம் ஆகியவையாகும்.

துணை நின்றவை
திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 6/00 017, தொலைபேசி  28144995, 28140347,43502995


தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, சிவ.ஆ.பக்தவச்சலம், 42, சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 632 602, 2005, தொலைபேசி  04171-222946

108 வைணவ திவ்யதேச வரலாறு, ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 85/1, கோட்டையூர் சாலை, செக்காலை, காரைக்குடி, தொலைபேசி  425929 


நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருக்கு நன்றி.

28 comments:

  1. இதுவரை செல்லாத அறியப்படாத கோயில்களின் தகவல்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பயணத்தில் மேலும் பல புதிய கோயில்களுக்குச் செல்வோம். நன்றி. கடந்த வாரம் புதுக்கோட்டை கணினிப் பயிற்சி வகுப்பில் தங்களின் பொழிவின் மூலமாக பல புதியனவற்றை அறிந்தோம். நன்றி.

      Delete
  2. கண்டேன் கண்டேன்.. கண் குளிரக் கண்டேன்.. திருத்தலங்களின் படங்களுடன் மேல் விவரங்களையும் பதிவு செய்திருந்தது - இனிமை.. இன்று காலையில் நான் கண்ட முதல் பதிவு தங்களுடையது.

    எங்களுக்கும் திருத்தல தரிசனம் செய்வித்த தங்களுக்கும் - முனைவர் திரு.வீ.ஜெயபால் அவர்களுக்கும் மற்றும் குழுவினர் அனைவருக்கும் அன்பின் வணக்கமும் நன்றியும்!.

    வாழ்க நலம்!...

    ReplyDelete
    Replies
    1. பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு முதல் சென்றுவருகிறோம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  3. வணக்கம் ஐயா
    அனைவரும் அறியும் வண்ணம் திருத்தலங்களை அறிமுகம் செய்து பதிவாக தந்தமைக்கு நன்றிகள் ஐயா. தங்களின் ஆன்மீகப்பயணத்தைப் பற்றியும் திருத்தலங்களின் சிறப்பு பற்றியும் படங்களே எடுத்துரைக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இத்தலங்களில் அழகான சிற்பங்களைக் கொண்ட மேலக்கடம்பூர் பற்றி தனியாகப் பதிய உள்ளேன். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  4. அருமையான தலங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எங்கள் பயண அனுபவங்களை ரசித்த தங்களுக்கு நன்றி.

      Delete
  5. திருத்தல யாத்திரைகளை அருமையான
    பதிவாக்கியதற்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மனதிற்கு நிறைவைத் தருகின்றன.

      Delete
  6. ஆன்மீக சுற்றுலா! படங்களுடன் கூடிய பதிவு நிறைவாக இருந்தது.மேற்கோள் நூல்கள் பற்றிய விவரம் குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன். நன்றி. கடந்த வாரம் புதுக்கோட்டை கணினிப் பயிற்சி வகுப்பில் தங்களைச் சந்தித்தது மறக்கமுடியாத அனுபவம்.

      Delete
  7. தங்களுடன் இணைந்து பயணித்ததைப் போன்ற ஓர் உணர்வு
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அத்தகைய உணர்வினை என் பதிவு ஏற்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  8. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பயண அனுபவம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஆலயங்களின் படங்கள் மிக அழகு வாழ்த்துக்கள் ஐயா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. சண்டேச நாயனார் அவதரித்த மற்றும் பேறுபெற்ற தலங்களுக்கு ஒரே நாளில் சென்றது மறக்கமுடியாத அனுபவம். வருகைக்கு நன்றி.

      Delete
  9. படங்களின் கீழே எந்தக் கோவில் என்று குறிப்பிட்டிருக்கலாமோ?ஒரு முறை நாங்கள் ஒரு பயணமாக நகரத்தார் கோவில்கள் ஒன்பதுக்கும் சென்று வந்தோம் . இம்மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்டாஆலயதரிசனம் செய்யத் தூண்டியது என்ன.?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அடுத்த பதிவிலிருந்து தவறாமல் பெயரைக் குறிப்பிடுவேன். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிறந்த மண் என்ற நிலையில் கோயில்கள் மீதும், வரலாற்றின் மீதும் அதீத ஈடுபாடு. பள்ளி நாள்களில் அருகிலுள்ள பழையாறை, பட்டீஸ்வரம் போன்ற இடங்களுக்கு நடந்தும் மிதிவண்டியிலும் செல்லும்போதெல்லாம் (கல்கியின் பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்) வந்தியத்தேவன் இவ்வழியாகத் தானே குதிரையில் போயிருப்பான் என்று கூறிக்கொண்டே செல்வோம். அப்போது அருகேயுள்ள தாராசுரம், நாதன்கோயில், திருச்சத்திமுற்றம் போன்ற கோயில்களுக்குச் சென்றுள்ளோம். அதன் தொடர்ச்சியே இது. தங்களின் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  11. ஆலயம் செல்வது சாலவும் நன்று என்றாள் அவ்வை .

    ஆடலரங்கதிர்க்குதான் அதிக கூட்டம் செல்கிறது. இன்று

    நல்லதோர் வாழ்க்கை நெறியைத் தரும் தெய்வ வழிபாடு

    இதர வழிபாடுகள் வெறியைத்தான் தூண்டி அகத்திலும் புறத்திலும் அமைதியை இழக்கச் செய்கின்றன.

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. Nfhapy;fSf;F nrd;W te;jJ Nghy; cs;sJ

    ReplyDelete
  14. ஐயா கோயில் உலா கட்டுரை அனைவரும் கூறியவாறு அருமையாக உள்ளது. நம் பல்கலைக்கழகத் தோழியருடன் ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்களுக்குச் சென்று வழி பட்டு வருகிறேன். அடுத்த ஆண்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள சிவத்தலங்களுக்குச் சென்றுவர உள்ளேன். பயனுள்ள குறிப்புகள் மிக்க நன்றி.
    ச.மல்லிகா

    ReplyDelete
  15. எங்களது பயணம் தங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டியதறிந்து மகிழ்ச்சி. இப்பதிவில் உள்ள மேலக்கடம்பூர் பற்றி தனியாக எழுத உள்ளேன். தாராசுரத்தைப் போல பார்க்கவேண்டிய கோயில்களில் அதுவும் ஒரு கோயிலாகும். தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. அறியாத பல விசயங்கள் அறிந்துகொண்டேன் ஐயா, தங்களின் தெய்வீகத்தொண்டுக்கு இறையருள் கிடைக்கட்டும்.
    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
  17. வருகைக்கும், வாழ்த்துக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து மேலும் பல கோயில்களுக்குச் செல்வோம். நன்றி.

    ReplyDelete
  18. அருமையான தலங்கள். அருமையான படங்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  19. தங்களின் வருகைக்கு நன்றி. இம்மாதம் வேறு சில தலங்களுக்குச் செல்லவுள்ளோம். சென்றபின் அப்பயணம் பற்றி தங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

    ReplyDelete
  20. வணக்கம்!

    புண்ணியச் சுற்றுலாப் போந்த புகைப்படம்
    கண்ணில் இருக்கும் கமழ்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete