முகப்பு

06 May 2014

வாசிப்பைப் போற்றுவோமே : நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருச்சந்தவிருத்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியை தொடர்ந்து  திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் என்ற நூலை அண்மையில் நிறைவு செய்தேன். படிக்க மனதிற்கு அலாதியான நிம்மதியைத் தரும் அந்நூலிலிருந்து சில பாடல்களைப் பொருளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

சென்னையை அடுத்துள்ள திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதாரம் செய்தவர் திருமழிசையாழ்வார். தன் இறுதிக்காலத்தில் திருக்குடந்தையை அடைந்து தம்முடைய பல சுவடிகளையும் ஆற்றில் விட பல நூல்கள் மறைய, திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்னும் இரு நூல்கள் மட்டும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து இவர் திருவடியடைய அவற்றை ஏற்றுக் கொண்டார். பின் ஆராவமுதனைச் சேவித்து, படுத்துக் கிடப்பதற்குக் காரணம் என்னவென்பதைக் கிடந்தவாறெழுந் திருந்து பேசு என்றதும் பெருமாளும் தம் முடியைத் தூக்கினார். அந்த எளிமைக்குக் கலங்கிய ஆழ்வார், வாழிகேசனே என்று வாழ்த்த பெருமாளும் உத்தானசாயியாய் இருந்துவிட்டார். இவ்வாறு பல காலம் இருந்த ஆழ்வார் திருக்குடந்தையிலேயே பரமபதித்தார்.  இத்தகைய பெருமையுடைய திருமழிசையாழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தத்திலிருந்து சில பாடல்களை உரையுடன் படிப்போம். 

ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி, மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொரு ஓசையாய் ஐந்தும் ஆய ஆய மாயனே! (எண்.753)

எம்பெருமான் ஆறு கருமங்களுக்கும் தலைவன். அச்செயல்களை மேற்கொள்ளத்தக்க ஆறு பருவங்களுக்கும் தலைவன். ஆறு யாகங்களாலும், ஐந்து வேள்விகளாலும், ஐந்து ஆகுதிகளாலும் ஆராதிக்கத் தக்கவன், ஐந்து அக்கினிகளை உடலாகக் கொண்டவன். மிக்க அதிசயத்தை உடைய ஞானம், விரக்திகளாகிற இரண்டையும் அளிக்க வல்லவன். அவற்றுக்குச் சாதனமான பரபக்தி, பரஞானம், பரமபக்திகளாகிய மூன்றையும் அளிக்க வல்லவன்.விவேகம், விமோகம், அப்யாசம், கிரியை, கல்யாணம், அநவசாதம், அநுத்தர்ஷம் என்கிற ஏழு குணங்களுக்கும் தலைவன். ஞானம், சக்தி, பலம், ஐஸ்வரியம் (செல்வம்), வீரியம், தேஜஸ் என்கிற ஆறு குணங்களுக்கும் தலைவன். மேலும் அப்பெருமான் பாப சம்பந்தமற்றவன், கிழத்தனமற்றவன், மரணமற்றவன், சோகமற்றவன், பசியற்றவன், தாகமற்றவன். அடியார்களுக்கு ஏற்ற குண விபூதிகளை உடையவன். வேறு வேறு வகையான ஞான வழிகளை உண்டாக்கியவன். உண்மை ஞானிகளுக்கு மெய்யன். அல்லாதவர்க்குப் பொய்யன். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகீய ஐந்தும் ஆன கோபல குலத்தில் வந்தவரித்த மாதவனே!
 


 

ஆதி ஆதி ஆதி நீ; ஓர் அண்டம் ஆதி;  ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்!
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி, ஆயன் ஆய மாயம் என்ன மாயமே? (எண்.785)


பெருமானே! உலக உற்பத்திக்கு அடிப்படையான முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக் காரணம் என்கிற மூன்று விதமான காரணமும் நீயே ஆகிறாய்; அண்டத்துக்குட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் த்லைவனாகிறாய். இப்படிச் சகல காரண பூதனாகையாலே, சோதித்தறிய வேண்டாத பரஞ்சோதி நீயே! அவ்வாறாக என்றுமுள்ள வேதத்தில் ஒளி விடுபவனே! வேதங்களுக்குத் தலைவனே! அந்த வேதத்தில் சொல்லப்படும் யாகத்தால் ஆராதிக்கப்படுபவனே! இவ்வுலகத்திற்கும், பரமபதத்திற்கும் தலைவனே! இவ்வாறு எல்லாவற்றுக்கும் காரணனாய் இருந்தும் இடையனாய்ப் பிறந்த மாயம் என்ன ஆச்சர்யம்? 

தோடு பெற்ற தண் துழாய்  - அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப்புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமா சொலே. (எண்.797)


இதழ் விரியப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையையும், அடியவர்களிடம் அசைகின்ற திருமுடியையும் உடையவனே! ஸ்ரீபாஞ்சசன்னியம் என்னும் சங்கைத் தரித்து, சக்கரத்தாழ்வானை ஏந்தி அழகிய திருச்சிறகை உடைய கருடாழ்வாரை வாகனமாக நடத்திச் செல்கிறாய். அந்தோ! அக்காலத்திலிருந்த மக்கள் பெற்ற இக்காட்சியாகிய நன்மையை நான் அடைய இயலவில்லை ஆயினும், நாய் போல இழிந்தவனான அடியேன் மோட்சத்தை அடைந்து, இச்சரீர நீக்கம் பெற்று, இனி ஒரு சரீரம் எடுப்பதைப் போக்கும் உபாயத்தை அருளிச் செய்யவேண்டும். 

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995

20 comments:

  1. நிச்சயம் படிக்கவேண்டும் என்னும்
    ஆவலைத்தூண்டிப் போகும்
    அற்புதமான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஆழ்வாரின்
      பிரபந்தமும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமானதாக உள்ளதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. வருகைக்கு நன்றி.

      Delete
  2. படிக்கப் படிக்க நெஞ்சம் இனிக்கிறது ஐயா

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நாளாகப் படிக்காமல் விட்டுவிட்டுமோ என்ற குறையில்லை எனக்கு. இப்போதாவது படிக்க ஆரம்பித்தோமே என்ற நிம்மதி. வருகைக்கு நன்றி.

      Delete
  3. சந்த விருத்தம்
    சிந்தை கவர்ந்தது

    அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. சந்த விருத்த நோக்கில் தாங்கள் நோக்கிய விதம் சிறப்பாக உள்ளது. வருகைக்கு நன்றி.

      Delete
  4. உண்மைதான் ஐயா..
    படிக்கப் படிக்க மனதிற்கு அலாதியான நிம்மதியைத் தரும் திருப்பாசுரங்கள் திருமழிசை ஆழ்வாருடையது!..

    பதிவின் இனிமை கண்டு மனம் மகிழ்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. தற்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் அருளிய திருமாலையைப் படித்துவருகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  5. படித்து மகிழ்ந்தேன், பருகி மகிழ்ந்தேன் அமுதம்!
    kbjana.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அமுதமான திவ்யப்பிரபந்தத்தை உடன் பருகியமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  6. எனக்கும் இதைப் படிக்க வேண்டுமென்ற ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்

    ReplyDelete
  7. எனது பகிர்வு தாங்கள் பிரபந்தத்தைப் படிக்கத் தூண்டியறிந்து மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  8. நிச்சயம் படிக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எனது வாசிப்புகளை நேசித்துத் தொடர்ந்து வரும் தங்களுக்கு நன்றி.

      Delete
  9. தங்களின் பதிவும் தமிழார்வமும் அருமை...
    பணி தொடரட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஆழ்வாரின் எழுத்துக்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக உள்ளதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  10. முடிவில் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தது அருமை ஐயா உங்களைத்தொடந்தால் பல ஆன்மீக விசயங்கள் எனக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் கிடைக்கும் தங்களை பாராட்ட எமக்கு வயதில்லை. ஆகவே நன்றி.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  11. முடிந்தவரை படிக்கவும், பகிரவும் முயற்சி செய்கிறேன். தங்களைப் போன்றோர் துணைக்கு வரும்போது மென்மேலும் எழுதவேண்டும் என்ற ஆவல் மிகுகின்றது. தங்களின் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  12. திருமழிசை ஆழ்வாரின் ஜீவ சமாதி குடந்தையில் உள்ளது என்று படித்துள்ளேன். உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வாய்ப்பு இருந்தால் சென்று வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரையின் இணைப்பைத் தந்துள்ளேன்.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

      Delete