முகப்பு

21 May 2014

கோயில் உலா : ஏப்ரல் 2014

26.4.2014ஆம் நாள் தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் இந்த ஆண்டின் முதல் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் சோழ நாட்டுத் தலங்களில் காவிரியின் வட கரையில் உள்ள ஆப்பாடி (திருவாய்ப்பாடி), சேய்ஞலூர், கடம்பூர் (மேலக்கடம்பூர்), ஓமாம்புலியூர், கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்குருக்காவூர், திருமுல்லைவாயில் (8 சிவத் தலங்கள்), காழிச்சீம விண்ணகரம் (ஒரு வைணவத்தலம்) சென்றோம். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் புகழ் பெற்றதாகும். 




காலையில் சென்ற கோயில்கள்


 

 
 1)ஆப்பாடி(பாலுகந்தநாதர்/பெரியநாயகி/அப்பர் பாடல்)
கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில்  உள்ளது. இத்தலத்திற்கு அருகே மண்ணியாறு ஓடுகிறது. சண்டேச நாயனார் பேறு பெற்ற தலம். 

2)சேய்ஞலூர் (சத்தியகிரீசுவரர்/சகிதேவியம்மை/ஞானசம்பந்தர் பாடல்)
கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருவாய்பாடிக்கு வடமேற்கே 1 1/2 கிமீ தூரத்தில்  மண்ணியாற்றின் கரையில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சண்டேச நாயனார் அவதரித்த தலம்.

3)கடம்பூர்(அமிர்தகடேசுவரர்/சோதிமின்னம்மை/சம்பந்தர், அப்பர் பாடல்)
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று எய்யலூர் சாலை வழியே சென்று இத்தலத்தை அடையலாம். கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.

 4)ஓமாம்புலியூர் (பிரணவபுரீசுவரர்/பூங்கொடிநாயகி/சம்பந்தர்,அப்பர் பாடல்)
சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் போகலாம். ஐந்து புலியூர்கள் : பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் ஆகியனவாகும்.

5)கானாட்டுமுள்ளூர் (பதஞ்சலிநாதர்/கானார்குழலி/சுந்தரர் பாடல்)
சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது.


மாலையில் சென்ற கோயில்கள் 
 
 
 
 
 
6)திருநாரையூர் (சௌந்தரநாதர்/திரிபுரசுந்தரி/சம்பந்தர், அப்பர் பாடல்)
சிதம்பரம் காட்டுமன்னார்குடி சாலையில்,குமராட்சியை அடுத்து 1 கிமீ. தொலைவில் உள்ளது. நம்பியாண்டார் நம்பியாண்டார் நம்பி அவதரித்த தலம். பொல்லாப்பிள்ளையார் அருளால் இவர், தில்லையில் சேமித்துவைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
7)திருக்குருகாவூர்(வெள்ளிடைஈசர்/காவியங்கண்ணி/ஞானசம்பந்தர்,சுந்தரர்  பாடல்)
தென்திருமுல்லைவாயிலிலிருந்து எளிதில் செல்லலாம். சீர்காழி-திருமுல்லைவாயில் பாதையில் 6 கிமீ செயன்று வடகால் என்னும் ஊரில் பிரியும் வழியில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்றழைக்கப்படுகிறது. 

8)திருமுல்லைவாயில்(முல்லைவனநாதர்/அணிகொண்டகோதை/ஞானசம்பந்தர் பாடல்)
சீர்காழியிலிருந்து அளக்குடி வழியே 13 கிமீ தொலைவில் இத்தலம் உள்ளது. தென்திருமுல்லைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஊர், கடற்கரையோரத்தில் உள்ளது. கோயிலுக்கு எதிர்க்கோடியில் கடல் உள்ளது.

9)காழிச்சீம விண்ணகரம்
(திரிவிக்ரமன்/லோகநாயகி/திருமங்கையாழ்வார் பாடல்)
மயிலாடுதுறை சிதம்பரம் சாலையில் சீர்காழி உள்ளது. இத்தலப் பயணத்தில் நாங்கள் பார்த்த ஒரே பெருமாள் கோயில் சீர்காழியிலுள்ள விக்ரம நாராயணப்பெருமாள் (தாடாளன்) கோயில். அழகான உலகளந்த பெருமாளை கருவறையில் காணமுடிந்தது. திருக்கோயிலூர் மற்றும் காஞ்சீபுரத்தில் உள்ள சிற்பங்களைவிட இச்சிற்பம் சிறியதாக இருப்பினும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. விண்ணகரங்கள் என கருதப்படுபவை பரமேச்சுவர விண்ணகரம், காழிச்சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுர விண்ணகரம் ஆகியவையாகும்.

துணை நின்றவை
திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 6/00 017, தொலைபேசி  28144995, 28140347,43502995


தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, சிவ.ஆ.பக்தவச்சலம், 42, சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 632 602, 2005, தொலைபேசி  04171-222946

108 வைணவ திவ்யதேச வரலாறு, ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 85/1, கோட்டையூர் சாலை, செக்காலை, காரைக்குடி, தொலைபேசி  425929 


நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருக்கு நன்றி.

06 May 2014

வாசிப்பைப் போற்றுவோமே : நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருச்சந்தவிருத்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியை தொடர்ந்து  திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் என்ற நூலை அண்மையில் நிறைவு செய்தேன். படிக்க மனதிற்கு அலாதியான நிம்மதியைத் தரும் அந்நூலிலிருந்து சில பாடல்களைப் பொருளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

சென்னையை அடுத்துள்ள திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதாரம் செய்தவர் திருமழிசையாழ்வார். தன் இறுதிக்காலத்தில் திருக்குடந்தையை அடைந்து தம்முடைய பல சுவடிகளையும் ஆற்றில் விட பல நூல்கள் மறைய, திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்னும் இரு நூல்கள் மட்டும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து இவர் திருவடியடைய அவற்றை ஏற்றுக் கொண்டார். பின் ஆராவமுதனைச் சேவித்து, படுத்துக் கிடப்பதற்குக் காரணம் என்னவென்பதைக் கிடந்தவாறெழுந் திருந்து பேசு என்றதும் பெருமாளும் தம் முடியைத் தூக்கினார். அந்த எளிமைக்குக் கலங்கிய ஆழ்வார், வாழிகேசனே என்று வாழ்த்த பெருமாளும் உத்தானசாயியாய் இருந்துவிட்டார். இவ்வாறு பல காலம் இருந்த ஆழ்வார் திருக்குடந்தையிலேயே பரமபதித்தார்.  இத்தகைய பெருமையுடைய திருமழிசையாழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தத்திலிருந்து சில பாடல்களை உரையுடன் படிப்போம். 

ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி, மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொரு ஓசையாய் ஐந்தும் ஆய ஆய மாயனே! (எண்.753)

எம்பெருமான் ஆறு கருமங்களுக்கும் தலைவன். அச்செயல்களை மேற்கொள்ளத்தக்க ஆறு பருவங்களுக்கும் தலைவன். ஆறு யாகங்களாலும், ஐந்து வேள்விகளாலும், ஐந்து ஆகுதிகளாலும் ஆராதிக்கத் தக்கவன், ஐந்து அக்கினிகளை உடலாகக் கொண்டவன். மிக்க அதிசயத்தை உடைய ஞானம், விரக்திகளாகிற இரண்டையும் அளிக்க வல்லவன். அவற்றுக்குச் சாதனமான பரபக்தி, பரஞானம், பரமபக்திகளாகிய மூன்றையும் அளிக்க வல்லவன்.விவேகம், விமோகம், அப்யாசம், கிரியை, கல்யாணம், அநவசாதம், அநுத்தர்ஷம் என்கிற ஏழு குணங்களுக்கும் தலைவன். ஞானம், சக்தி, பலம், ஐஸ்வரியம் (செல்வம்), வீரியம், தேஜஸ் என்கிற ஆறு குணங்களுக்கும் தலைவன். மேலும் அப்பெருமான் பாப சம்பந்தமற்றவன், கிழத்தனமற்றவன், மரணமற்றவன், சோகமற்றவன், பசியற்றவன், தாகமற்றவன். அடியார்களுக்கு ஏற்ற குண விபூதிகளை உடையவன். வேறு வேறு வகையான ஞான வழிகளை உண்டாக்கியவன். உண்மை ஞானிகளுக்கு மெய்யன். அல்லாதவர்க்குப் பொய்யன். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகீய ஐந்தும் ஆன கோபல குலத்தில் வந்தவரித்த மாதவனே!
 


 

ஆதி ஆதி ஆதி நீ; ஓர் அண்டம் ஆதி;  ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்!
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி, ஆயன் ஆய மாயம் என்ன மாயமே? (எண்.785)


பெருமானே! உலக உற்பத்திக்கு அடிப்படையான முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக் காரணம் என்கிற மூன்று விதமான காரணமும் நீயே ஆகிறாய்; அண்டத்துக்குட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் த்லைவனாகிறாய். இப்படிச் சகல காரண பூதனாகையாலே, சோதித்தறிய வேண்டாத பரஞ்சோதி நீயே! அவ்வாறாக என்றுமுள்ள வேதத்தில் ஒளி விடுபவனே! வேதங்களுக்குத் தலைவனே! அந்த வேதத்தில் சொல்லப்படும் யாகத்தால் ஆராதிக்கப்படுபவனே! இவ்வுலகத்திற்கும், பரமபதத்திற்கும் தலைவனே! இவ்வாறு எல்லாவற்றுக்கும் காரணனாய் இருந்தும் இடையனாய்ப் பிறந்த மாயம் என்ன ஆச்சர்யம்? 

தோடு பெற்ற தண் துழாய்  - அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப்புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமா சொலே. (எண்.797)


இதழ் விரியப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையையும், அடியவர்களிடம் அசைகின்ற திருமுடியையும் உடையவனே! ஸ்ரீபாஞ்சசன்னியம் என்னும் சங்கைத் தரித்து, சக்கரத்தாழ்வானை ஏந்தி அழகிய திருச்சிறகை உடைய கருடாழ்வாரை வாகனமாக நடத்திச் செல்கிறாய். அந்தோ! அக்காலத்திலிருந்த மக்கள் பெற்ற இக்காட்சியாகிய நன்மையை நான் அடைய இயலவில்லை ஆயினும், நாய் போல இழிந்தவனான அடியேன் மோட்சத்தை அடைந்து, இச்சரீர நீக்கம் பெற்று, இனி ஒரு சரீரம் எடுப்பதைப் போக்கும் உபாயத்தை அருளிச் செய்யவேண்டும். 

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995