முகப்பு

13 July 2014

வாசிப்பை நேசிப்போம் : ஜ. பாக்கியவதி*


 

ஒரு விடுமுறையின்போது படிக்கும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது. தற்போது தொடர்ந்து செய்தித்தாளை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு, வாசிப்புப் பழக்கம் பல பயன்களைத் தந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

திருமணத்திற்கு முன்பாக நான் ரேடியோவில் பாட்டுகள், செய்திகள், ஒலிச்சித்திரம் போன்றவற்றை ஆர்வமாகக் கேட்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை எனது சகோதரர்கள் கதைப்புத்தகம் வாங்கித் தருவார்கள். அதை சகோதர - சகோதரிகள், அண்ணிகள் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். என் தந்தை அவ்வப்போது செய்தித்தாளை வாங்கிப் படிப்பார்கள். அப்போது வாசிக்கும் பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது.

எங்களது திருமணத்திற்குப் பின் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச் சொன்னார் என் கணவர். எனக்கு அப்போது படிப்பில் கவனம் இல்லை. குடும்பத்தைக் கவனிப்பதும் தொடர்ந்து மகன்களை வளர்ப்பதிலும்தான் கவனம் இருந்தது. படிப்பு என்பது ஏதோ ஒரு அனாவசிய சுமை போல எனக்கு அப்போது இருந்தது. என் கணவரோ பல ஆண்டுகளாக ஆங்கில நாளிதழ் வாசகர். நாங்கள் வீட்டில் மகன்களோடு நாளிதழைப் படிப்போம். விடுமுறை நாள்களில் எங்களது வாசிப்பின் நேரம் அதிகமாக இருக்கும். என் கணவர் எனக்கும் என் மகன்களுக்கும் ஆங்கில நாளிதழை வாசித்து அதைத் தமிழில் அப்படியே சொல்லித் தருவார்.

எங்களது இரு மகன்களும் அவ்வாறு படிக்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இரு மகன்களும் தினமும் மாறி மாறி ஆங்கில இதழைத் தமிழில் படித்துக் காண்பிப்பர். இவர்கள் பேசுவதையும் வாசிப்பதையும் நான் தொடர்ந்து கேட்பேன். நான் இவ்வாறு கேட்கும்போது வீட்டில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சியை அணைத்துவிடுவோம். புதிய சொல், புதிய செய்தி, புதிய சம்பவம் என சுவாரசியமாக எங்களது வாசிப்பு தொடரும். மகன்கள் படித்து வேலைக்குச் சென்றவுடன் செய்தித்தாள் வாசிப்பைத் தொடர ஆரம்பித்தேன். எங்கள் குடும்ப நண்பர் ஒருமுறை ஏதாவது ஒரு செய்தித்தாளை தினமும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் உண்டாக்கினார். ஐந்து வருடங்களாகத் தான் தமிழ் நாளிதழ் (தினமணி) படித்துவருகிறேன்.

முன்பு தொலைக்காட்சி எங்காவது ஒரு வீட்டில் இருக்கும். அதில் செய்திகள், பாட்டு கேட்பது வித்தியாசமாக இருந்தது. தொலைக்காட்சியில் செய்தி கேட்கும்போது சமயத்தில் படத்துடன் பார்க்க வாய்ப்பு உள்ளது. சில செய்திகளைத் திரும்பத் திரும்பப் போட்டுக் காண்பிப்பர். விபத்து போன்ற செய்திகளை அவ்வாறு காண்பிக்கும்போது கஷ்டமாக இருக்கும். இவ்வகையான பாதிப்பினை செய்தித்தாள் ஏற்படுத்தாது. தற்போது மாணவ - மாணவிகள் முதற்கொண்டு டச்போன், நெட், பேஸ்புக் என்ற நிலையில் பேசிக்கொள்கிறார்கள். அவை தொடர்பான செய்திகளைக் கூறுகிறார்கள். ஆனால் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் பற்றிக் கேட்டால் விழிக்கிறார்கள். எட்டாவது படித்த என்னால் அவர்கள் கேட்கும் நாட்டு நடப்புகளுக்குப் பதில் கூறமுடியாது.

வீட்டில் இருக்கும் பெண்மணிகள்கூட செய்திகளைப் பார்ப்பது, கேட்பது போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறார்கல். என் தாயார், வயது 83. வீட்டில் தொலைக்காட்சியில் செய்தி கேட்கிறார்கள். செய்தித்தாளைப் புரட்டி தலைப்புச் செய்திகளைப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்து ஐந்தாம் வகுப்பு படித்த அவர்கள் செய்தித்தாள் படிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பேரன் பேத்திகளால் பதில் கூறமுடியவில்லை.

என் மாமியார், வயது 70. ஆறாம் வகுப்பு வரை படித்தவர்கள். 10 வருடங்களுக்கு முன்பே தன் பேத்தியின் கணவர் ஜம்முவில் ராணுவத்தில் பணியாற்றிய இடமான ரஜோரிக்குத் தனியாகச் சென்றார்கள். திரும்பி வரும்போது பேத்தியின் குடும்பத்தோடு வந்தார்கள். அவர்கள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை ஈடுபாட்டோடு படிப்பார்கள்.

வேலைக்குப் செல்பவர்கள் வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசி அதற்குப் பின் படிப்பைப் பற்றியும், வாசிப்பைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டில் இருப்போர் உரிய நேரத்தை அதற்காக ஒதுக்க வேண்டும். பொது அறிவைப் பற்றியும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தற்போதைய தலைமுறையினர் பேஸ்புக், பிளாக், டச்போன், ஐபேட் போன்றவற்றை தம் அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலவேண்டும். 

தமிழகத்தில் இந்தியாவில், வெளிநாட்டில் நடந்த மற்றும் நடக்கின்ற அரசியல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதனைப் பற்றி நண்பர்களோடும், உறவினர்களோடும் கலந்துபேச வேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் நல்ல நூல்களை வாசித்தல், செய்தித்தாள் வாசித்தல் போன்ற பழக்கங்களை உண்டாக்க வேண்டும். அவர்களும் இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். 

இதுபோன்ற வாசிப்பின் முக்கியத்துவத்தை நம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நிலையில் அவர்கள் சரியான வாழ்க்கைப் பாதையில் செல்வதோடு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகவும் அமைவர்.

*தினமணி சென்னைப்பதிப்பில்  என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரை
நன்றி : தினமணி, சென்னை, 7 ஜூலை 2014, கருத்துப்பேழை, பக்கம் 6

40 comments:

  1. சிறப்பான கட்டுரை... தங்களின் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  2. அன்பின் ஜம்புலிங்கம் - கட்டுரை அருமை

    பொறுமையாக முழுவதும் படித்தேன். எட்டாம் வகுப்பு படித்தவர் இவ்வாறு எழுதுவதென்றால் அது முனைவராகிய தங்களின் பயிற்சியும் ஊக்குவித்தலும் உதவியதனால் தான்.

    புதிய செய்தி - புதிய சொல் - புதிய சம்பவம் - சிந்தனைகளின் அடிப்படை இவை தானா ? நன்று நன்று.

    மகிழ்ச்சியினையும் நல்வாழ்த்துகளையும் துணைவியிடம் தெரிவிக்க வேண்டுகிறேன். - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. எனது பயிற்சிக்கும் ஊக்குவித்தலுக்கும் மேலாக அவரது முழு ஈடுபாடு இவ்வாறான கட்டுரைக்குக் காரணம். திண்டுக்கல் தனபாலன் கடிதத்தையும், தங்களது கடிதத்தையும் துணைவியார் பார்த்தார், நன்றி கூறினார்.

      Delete
  3. அருமையாக எழுதி உள்ளார்! அவரின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது! ஊக்குவித்த தங்களின் பண்பும் போற்றத்தக்கது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தினை எனது மனைவியுடன் கூறினேன். தங்களுக்கு எங்களின் நன்றி.

      Delete
  4. தங்களின் துணைவியாருக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு எங்களின் நன்றி.

      Delete
  5. மிகவும் அருமை!.. வாசிப்புக்கு நிகர் ஏதுமில்லை!..
    நல்ல சிந்தனையைத் தூண்டி விடும் காரணிகளுள் வாசிப்பும் ஒன்று!.. இனியதொரு பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வருகையும் வாழ்த்தும் உவகை தந்தது. நன்றி.

      Delete
  6. தங்களிின் துணைவியாருக்கு வாழ்த்துக்கள் ஐயா.
    எனது ''ஹிந்தமிழ்'' காண்க...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தை அவரிடம் கூறிவிட்டேன். தங்களின் பதிவைப் படித்தேன். நன்றி.

      Delete
  7. வணக்கம்
    ஐயா
    வாசிப்பு ஒரு மனிதனை பூரணத்துவப்படுத்தும் என்பதில் ஐயமில்லை தங்களின் பதிவின் வழி கண்டேண். பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பின் மீதான தங்களின்கருத்திற்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  8. அருமையான ஒரு பதிவு! வாழ்த்துக்கள் தங்கள் மனைவிக்கு! வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழுமை அடையச் செய்யும்! நல்ல புத்தகங்கள் நல்ல உற்ற நண்பர்கள்!
    வாசித்தல் நமது சிந்தனையைத் தூண்டி, நமது மனதை விரிவடையச் செய்து பண்படுத்தும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தினை என் மனைவியிடம் கூறினேன். தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

      Delete
  9. உங்களை கணவராக பெற்ற உங்கள் துணை மிகவும் பாக்கியவதிதான் அவரது பெயரும் பாக்கியவதி என்று அறிந்த போது ஆச்சிரியம் அடைந்தேன்


    படித்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு மொக்கை துணுக்கை சொல்லி அதுவும் பத்திரிக்கையில் வந்தவுடன் அவங்க பண்ணும் அலும்பு இருக்கே அதை சொல்லி மாளாது ஆனால் எட்டாம் வகுப்பு படித்தவர் இவ்வாறு எழுதுவதென்றால் நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும் உங்களையும்தான் சார்

    உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. இது என் மனைவி எழுதி வெளியான இரண்டாவது கட்டுரை. தங்களின் வாழ்த்து எங்களை புளகாங்கிதமடையச் செய்தது. நன்றி.

      Delete
  10. Behind every man there is a woman என்பார்கள். ஆனால் உங்கள் மனைவியின் பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அறிய முடிகிறது வாசிப்பு சுவாசிப்பு என்பார்கள். அவரது எழுத்துக்கள் பத்திரிக்கையில் காணும்போது அவர் நிச்சயம் மகிழ்ந்திருப்பார் என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்போது வெற்றி பெறமுடியும் என்பதற்கு இக்கட்டுரை ஒரு சான்று. தான் எழுதிய எழுத்தினை அச்சில் பார்க்கும்போது கிடைக்கும் இன்பத்திற்கு நிகர் எதுவுமில்லை என்பதை அவர் உணர்ந்ததை நான் அறிந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  11. வாசிப்பை சுவாசிக்கும் பாக்கியத்தை பெற்றவரின் எழுத்துகள் ரசிக்கவைத்தன,, பத்திரிகை வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறியதுபோல நான் பெற்றது பாக்கியமே. வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  12. வாசிப்பு என்பதின் மகத்துவத்தைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருங்கள். அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டுசெல்லும் வல்லமை தாய்மார்களுக்கே உண்டு. உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நூலைப் படித்துள்ளேன். தற்போது தங்களின் கருத்தை அறிந்து நெகிழ்ச்சியடைகின்றேன். தங்களைப் போன்றோரின் ஆதரவு இன்னும் என்னை எழுதத் தூண்டுகிறது. நன்றி. - பாக்கியவதி

      Delete
  13. வணக்கம் நல்வாழ்த்துகள் அய்யா,

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  14. வாசிப்பில் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்கவேண்டும என்பதை அறியமுடிகிறது/ அ.கலைமணி

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையின் சுருக்கமாக வந்துள்ள உங்களின் கருத்துக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

      Delete
  15. இந்த மொபைல் யுகத்தில் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் நம் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஏற்படுத்த வேண்டும்... காமிக்ஸ், சிறுகதை, வார பத்திரிக்கை, நாவல் என என் பெற்றோர்கள் எனக்கு படிக்க நிறைய உற்சாகப் படுத்தினார்கள்... இப்பொழுது என் பிள்ளைகளை டிவியில் இருந்து பிடுங்கி விளையாட அனுப்புவதே பெரும்பாடாக இருக்கிறது... அவர்களுக்கு படக்கதைகள் வாங்கித் தருகிறேன்... பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நாம்தான் பழக்கப்படுத்தவேண்டும். அவ்வப்போது நாம் அவ்வாறு பயிற்றுவித்தால் நாம் வெற்றி பெறலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  16. Congratulations.Kamban veettu kattuthariyum kavi paadum!

    ReplyDelete
    Replies
    1. என்னால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்பதைவிட அவருடைய ஆர்வமே இதற்குக் காரணம். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் இன்னும் அவரை எழுதவைக்கும் என நம்புகிறேன். நன்றி.

      Delete
  17. பெற்றோரும் நண்பரும் ஏன் ஆசிரியர் கூட செய்ய இயலாத விடயம் அறிவுரையையும் தந்து பொது அறிவையும் பெருக்கிவிடும் வாசிப்பு என்பது உண்மை தான்.தங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்கள் ....! அலுங்காமல் குலுங்காமல் எவ்வளவு அழகாக எழுதியுள்ளார்கள். தொடர்ந்து எழுத மீண்டும் என் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  18. என் மனைவிக்கு இவ்வாறான ஓர் ஆர்வம் வெகுநாளாக இருந்தது. எழுத்து வடிவில் வெளிப்படுத்த சற்று காலம் பிடித்தது. அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே இது. தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. ஐயா கட்டுரை படித்தேன் நெருக்கமாகவும் நேரே பேசுவது போலவும் இருக்கிறது. கற்றலில் கேட்டலே நன்று என்பதை இரு வழியிலும் தெரிவித்துள்ளார்கள். மிக அருமை தொடர வேண்டும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்களின் எழுத்து அவரை மென்மேலும் எழுதவைக்கும் என்று நம்புகிறேன்.

      Delete
  20. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete