முகப்பு

07 July 2014

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருச்சந்தவிருத்தத்தைத் தொடர்ந்து தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியை நேற்று நிறைவு செய்தேன். 

சோழ நாட்டுத் தலமான புள்ளம்பூதங்குடிக்கு அருகிலுள்ள மண்டபங்குடியில்  பிறந்த விப்ரநாராயணர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து பெருமாளுக்குத் தொண்டு செய்துவந்தார். அப்போது உத்தமர்கோயிலில் பிறந்த தேவதேவி தம் தமக்கையோடும் தோழிகளோடும் உறையூர் சென்று அரசன் முன் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்றுத் திரும்பும்போது இவருடைய சோலையில் தங்கினாள். அவர் இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இவரைத் தன் வலையில் வீழ்த்துவதாகச் சபதம் செய்து அவ்வாறே செய்தாள். பின்னர் இவரைப் பிரிந்து தன் ஊரை அடைந்தாள். இவர் அவள் வீட்டை அடைய பணம் இல்லாதவரை வெளியில் நிறுத்தினாள். இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமான், ஆலயப் பொன்வட்டிலைக் கொண்டு சென்று அவருடைய தோழன் என்று கூறி அவளிடம் தர, அவள் இவரை உள்ளே அனுமதித்தாள். ஆலய வட்டில் காணவிலை என்று கோயில் அர்ச்சகர் அரசனிடம் கூற, அவன் விசாரணை செய்ய இவர்தான் களவாடினார் என்று சிறைப்படுத்தினான். பெருமான் அன்றிரவு அரசனின் கனவில் நிகழ்ந்தது கூற, மறுநாள் அரசன் இவரை விடுவித்தான். தான் தவறியதற்குப் பரிகாரமாக அரங்கனடியார்களுடைய பாத தீர்த்தத்தைப் பருகி தூயரானார். பின்னர் தொண்டரடிப்பொடி என்னும் பெயர் பெற்று, திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்கிற இரு திவ்யப் பிரபந்தங்களை அருளினார். அவர் இயற்றிய பிரபந்தங்களிலிருந்து சில பாடல்களை உரையுடன் படிப்போம்.  

திருமாலை
பச்சை மா மலைபோல் மேனி,
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர, யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகருளானே!
(எண்.873)

அடியவர்களுக்காகத் திருவரங்கத்தில் நித்தியவாசம் செய்பவனே! பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும், பவளம் போன்ற திருவாயையும், செந்தாமலை மலர் போன்ற திருக்கண்களையும் உடையவனாய், அடியாரை ஒருநாளும் நழுவ விடாதவனே! நித்தியசூரிகளுக்குத் தலைவ்னே!  இடையர்களுக்குத் தலைவனே!  என்னும்படியான இச்சுவையை விட்டு (உன் திருநாமங்களைச் சொல்லும்) நான் வெகுடதூரம் போய் பரமபதத்தை ஆளும்படியான அச்செல்வத்தைப் பெறுவதாயினும் (அதை) விரும்பமாட்டேன். 

வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை, அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
(எண்.885)

திருவரங்கத்தின் வண்டுகளின் கூட்டங்கள் சோலைகளில் ரீங்காரம் செய்கின்றன; மயில் கூட்டங்கள் நடனமாடுகின்றன; மேகங்கள் மேலே வந்து அணைந்து நிற்கின்றன; குயில் கூட்டங்கள் ஒன்றையொன்று அழைக்கின்றன; தேவாதி தேவனான சர்வேஸ்வரன் நித்தியவாசம் செய்கிறான். சம்சாரத்திற்கு ஆபரணமாகவுள்ள (இப்படிப்பட்ட பெருமைகளையுடைய) திருவரங்கம் என்று வாயால் சொல்லாத, நன்றி இல்லாத மூர்க்கர்கள் மேல் விழுந்து சாப்பிடும் சோற்றை விலக்கி, நீங்கள் நாய்க்குப் போடுங்கள். 
 


 


திருப்பள்ளியெழுச்சி
கடி - மலர்க் கமலங்கள் மலர்ந்தன, இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன், இவனோ?
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர், சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துவளமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்தருளாயே. 
(எண்.926)

சோலைகளின் நடுவிலுள்ள நீர்நிலைகளில் தாமரை மலர்கள் மலர்ந்தன. கதிரவனும் கடலின் மேற்பரப்பில் தோன்றிவிட்டான். அழகிய இடையுள்ள பெண்கள் காவிரியில் நீராடி தம் குழல்களைப் பிழிந்து உதறி ஆடை உடுத்திக் கரையேறினர். காவிரி சூழ்ந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமானே! தொண்டரடிப் பொடி என்னும் திருநாமமுடைய அடியேன், துளசி மாலையைத் தொடுத்து எடுத்துக்கொண்டு தங்களுக்கு அணிவிக்க வருகின்றேன். அடியவனான என்னை இரங்கத்தக்கவன் என்று அருள் செய்து உன் அடியார்க்கு ஆட்படுத்த அருள் செய்வாயாக. அரவணைவிட்டுப் பள்ளி எழுந்தருள்க.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995

இதுவரை நாம் நிறைவு செய்த பிரபந்தங்கள்
பெரியாழ்வார் திருமொழி
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்தவிருத்தம் 

27 comments:

  1. வணக்கம்
    ஐயா

    பிரபந்தம் பற்றி மிக அருமைய கூறியுள்ளீர்கள் புதிய வெளியீடாக வந்தமை பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போதுதான் பார்ப்பது.......: சித்திரையில் - பார்ப்போம் சிங்காரியே சொல்லு நித்திரையும் போனதடி நின்று பதில் சொல்லும் சித்திரை மாத சுடும்வெயில் சுர் என்று என்னை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. விடுமுறை நாள்களில் மட்டுமே பிரபந்தம் படிக்க ஆரம்பித்தேன். தேவாரத்திலிருந்து சற்று மாறுபட்டிருப்பினும் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. நன்றி.

      Delete
  2. ரசிக்க வைக்கும் விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடுத்த வாரம் அமலனாதிபிரான் படிக்கவுள்ளேன்.

      Delete
  3. இனிய பதிவு..
    அடியவனான என்னை இரங்கத் தக்கவன் என்று அருள் செய்வாயாக!..
    ஓம் நமோ நாராயணாய!..

    ReplyDelete
    Replies
    1. பிரபந்தத்தைப் படிக்கும்போது கிடைக்கும் இன்பத்தை விளக்குவது சற்று சிரமமே. வருகைக்கு நன்றி.

      Delete
  4. தேவாரத்தினை விடப் பிரபந்தங்களில் சுவைசற்று அதிகம் தான் முனைவரே!
    தமிழை அமுதென்னும் காரணத்தை அறிய விரும்புவோர்கள் ஆழ்வார் பாசுரங்களை நோக்கப் புலப்படுமெனக் கருதுகிறேன்.
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பல ஆண்டு நான் நினைத்த கனவு இப்போது நிறைவேறுவதறிந்து மகிழ்ச்சி. பிரபந்தத்தைப் படித்து ரசிப்பதில் அதீத இன்பம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. மிக அருமையானதொரு பகிர்வு! விளக்கம் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எப்பாடலைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் மேலிடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு சிறப்பாக உள்ளதைப் படிக்கும்போது உணர முடிகிறது.

      Delete
  6. அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஐயா, தங்களைப்பாராட்ட இயலாத வயதெனக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசிக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.

      Delete
  7. ஆழ்வார் பாசுரங்கள் அனைத்திலுமே தமிழ் கொஞ்சி விளையாடும்! அருமையான விளக்கம்! பதிவும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆழ்வார்களின் பிரபந்தங்கள் மனதை ஈர்ப்பனவாக உள்ளன. நன்றி.

      Delete
  8. அருமையான பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் வாசிக்கும் நூல்களைப் பற்றிய பதிவுகளை விரும்பிப் பார்த்து கருத்து கூறும் தங்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  9. கண்டேன். கருத்து பகிர்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா!

    மிக அருமையான பதிவும் பகிர்வும் ஐயா!
    மனதை அப்படியே கட்டிப்போடுகிறது.
    மீண்டும் மீண்டும் படித்துத் தெளிய வேண்டும்...

    பகிர்தலுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. பெரியாழ்வார் திருமொழியில் தொடங்கி படிக்க ஆரம்பித்தபொழுது இருக்கும் மன நிலையைவிட தற்போது அதிகமான ஈடுபாடு உள்ளதை படிக்கும்போது உணரமுடிகிறது. நன்றி.

      Delete

  11. வணக்கம்

    திருமால் அடியில் திளைத்தஆழ் வார்போல்
    வருமா எனக்குமொரு வாழ்வு?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  12. வணக்கம்

    நாலாறு அகவையில் நாலா யிரம்நுாலைக்
    கோலமுற கொண்டேன் மனனமென! - மாலவனின்
    தாமரைத் தாள்களைத் தாம்கண்டு நாள்தோறும்
    பாமறை செய்வேன் பணிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  13. திவ்யப்பிரபந்தம் வாசிப்பதில் உள்ள நிறைவைத் தங்களைப் போன்றோரிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள் மூலமாக உளமார உணரமுடிகிறது. நன்றி.

    ReplyDelete
  14. இச்சுவை தவிர, யான் போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்,
    அரங்கமா நகருளானே/

    காவியச்சுவை மிகுந்த பக்தி ரசம் சொட்டும் அருமையான நாலாயிரம் அமுதத்துளிகளின் அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  15. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  16. அருமை ஐயா..

    கோவிலின் படியாய் இருப்பேன்...மரமாய் இருப்பேன் என்றெல்லாம் வருமே..கல்லூரியில் படித்தது..அது எந்த பாடல் ஐயா? கூகுளில் தேடலாம்..அதை விட உங்களிடமே கேட்டுவிடலாம் என்று தான்..நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி பாசுரம் "ஊனேறு செல்வத்து உடற் பிறவி " என தொடங்கும் பாசுரம்

      Delete
  17. இதுவரை படித்த நினைவில்லை. தாங்கள் கூறிய பாடலை என் நண்பர் ஒருமுறை நினைவுகூர்ந்தார். கோயிலின் படியாய், மரமாய், மலையாய்...என்ற நிலையில் அவர் கூறியது நினைவிருக்கிறது. நன்றி.

    ReplyDelete