முகப்பு

14 November 2014

தஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்


தஞ்சாவூரின் வரலாற்றினைப் பற்றிய ஒரு முழுமையான நூல் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தஞ்சாவூர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்நூலைப் பல முறை வாசித்துள்ள போதிலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாகப் படிப்பதைப் போல் நான் உணர்கிறேன். அந்நூலைப் பற்றிய எனது வாசிப்பை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.


மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் தஞ்சை என்னும் திருவூர், ஆழ்வார்கள் பார்வையில் தஞ்சை, முத்தரையர்களின் தலைநகரம் தஞ்சையே, சோழநாட்டுத் தலைநகரங்கள், விஜயாலய சோழன் கைப்பற்றிய தஞ்சை நகரம், தஞ்சை நிசும்பசூதனி, சோழர் காலத் தஞ்சாவூர், தஞ்சையில் சோழர் அரண்மனையும் பிற இடங்களும், கருவூர்த் தேவர் கண்ட தஞ்சை, தஞ்சாவூர் பெருவழிகள், தஞ்சாவூர் நகரின் பேரழிவு, தஞ்சையிலிருந்த சோழர் கால மருத்துவமனை, இராஜராஜனின் அரண்மனை இருந்த இடம் எது?, கல்வெட்டில் தஞ்சை நகரமும் மும்முடிச்சோழன் திருமதிலும், சோழர் காலத் தஞ்சாவூர் புதிய முடிவு, பாண்டியர் ஆட்சியில் தஞ்சாவூர், தஞ்சைத் திருக்கோயில்கள் (பல்லவ, சோழ, பாண்டிய காலம் வரை), விஜயநகரப் பேரரசின் காலத்தில் தஞ்சை, மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சை என்ற 20 தலைப்பிலான கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் தஞ்சை இராஜராஜேச்சரம் பற்றிய பதிவும், மூன்றாம் பகுதியில் தஞ்சை நாயக்கர் காலக்கோட்டையும் அரண்மனையும் மற்றும் தஞ்சை மராட்டியர் கோட்டையும் அரண்மனையும் என்ற தலைப்பிலான கட்டுரைகளும் அமைந்துள்ளன. 

'தஞ்சை என்ற பெயர்க்குறிப்பை முதன்முதலாக அழகு தமிழில் நமக்குக் காட்டுபவர் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளே. இவர் சிவாலயங்கள் இருந்த ஊர்களுள் ஒன்றாகத் தஞ்சையைக் குறிப்பிடுகிறார்.'  (ப.1)

'.......தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வட பத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள். இதனை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.....' (ப.24)

'தஞ்சாவூர் நகரைத் தொலைவிலுள்ள நகரங்களோடு இணைக்கும் பல வழிகள் இருந்துள்ளன. அவற்றுள் மூன்று பெருவழிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் வாயிலாகக் கிடைக்கின்றன.' (ப.55)

'வெண்ணாற்றங்கரை என்னும் பகுதிக்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு எவ்வாறு வழங்கியதென அறியமுடியவில்லை....' (ப.78)

'.......இராசராசன் எழுப்பிய கோயிலுக்குக் கொல்லிமலையிலிருந்தும், நர்மதையாற்றங்கரையிலிருந்தும் கற்களைக் கொணர்ந்தான் எனக் கூறுவர். இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தஞ்சைக்குத் தென் மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்களையே இங்கு பயன்படுத்தி இருக்க வேண்டும்....' (ப.188) 

'...அரண்மனை ஓவியக்கூடத்தில் சித்திரங்களைக் கண்டுகளித்த இம்மன்னன் பெருங்கோயிலையும் சித்திரக்கோயிலாகவே படைக்கச் செய்தான். அவன் காலத்தில் அடியிலிருந்து முடி வரை இங்கே ஓவியங்களாகவே  இருந்திருக்க வேண்டும்....' (ப.239)

'நாயக்கர் காலத் தஞ்சாவூர்க் கோட்டையினுள் அரண்மனையோடு இணைந்து மிகச் சில வீதிகளும், கோயில்களும் மட்டுமே திகழ்ந்தன.  ஆனால் பிற்காலத்தில் கணக்கற்ற சந்துகளும் கோயில்களும் தோன்றி நகரின் அழகைக் குறைத்துவிட்டன.....' (ப.317)

'....இந்த அரண்மனையில் திகழ்ந்த ஒரே வாயில் தெற்கு வாயிலாகும். தற்போதைய சரஸ்வதி மகால் நூலகத்திற்கு நேர் பின்புறம் உயர்ந்த கோபுரத்துடன் அடைக்கப்பெற்ற வாயிலோடு திகழும் கட்டடமே தெற்கு வாயிலாகும். இது மிகச் சிறந்த கலைநயம் வாய்ந்ததாகும். இதன் கட்டுமான அமைதி ஹம்பியில் காணப்பெறும் கமல மஹால் என்னும் தாமரை மகாலின் வடிவமைப்பையே ஒத்து காணப்படுகிறது......' (ப.330)

'சர்ஜா மாடி சரபோஜி மன்னரால் எடுக்கப்பெற்றதாகும். மராட்டியர்களால் கட்டப்பெற்ற மிக உயரமான அரண்மனைக் கட்டடம் இதுவேயாகும். ஐந்து மாடிகள் கொண்ட இக்கட்டிடம் ஆங்கிலேயர்களின் தொழில்நுட்ப அறிவோடு, முகலாய கட்டடக்கலையின் சில அம்சங்களும் பெற்றுத் திகழ்கின்றது. ஒவ்வொரு மாடியிலும் பிதுக்கம் பெற்ற பால்கனி அமைப்போடு கூடிய பலகணிகள் உள்ளன......' (ப.353)

கோட்டை தொடங்கி கோயில் வரை பல நூற்றாண்டு கால தஞ்சையின் வரலாற்றினை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. ஆங்காங்கே இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள், உரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன. மோடி ஆவணக் குறிப்புகள் பற்றியும் ஆங்காங்கே விவாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூரின் பலவகையான பெருமைகளைப் பற்றி அறிய இவ்வரிய நூலை வாசிப்போமே. குடவாயில் பாலசுப்ரமணியன் (அலைபேசி 9843666921), தஞ்சாவூர் (கி.பி.600-1850), அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1997, ரூ.150


நாம் முன்னர் படித்த இந்நூலாசிரியரின் நூல்
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)

11 comments:

  1. கு.வா பா. அய்யாவுடன் நேரில் ஒருமுறை பேசுகிற வாய்ப்பு கிடைத்தது.
    நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி
    படிக்க விழைகிறேன்.
    நன்றி அய்யா

    ReplyDelete
  2. நூல் அறிமுகம் அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. தஞ்சையின் வரலாற்றினைப் பற்றிய நூலின் இனிய அறிமுகம் கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. தஞ்சையைப் பற்றிய தகவல்கள் எமக்கு புதியவையே நீல் வாங்குவேன் முனைவர் அவர்களே....

    ReplyDelete
  5. தஞ்சையை பற்றிய வியப்பான தகவல்கள் அறிய முடிகிறது! நூலை வாசிக்கும் ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது பதிவு! நன்றி!

    ReplyDelete
  6. ஐயா நு லின் அறிமுகம் இந்நுலினை உடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்துகிறது. தஞ்சையில் பிறந்து வளர்ந்து படித்து வேலை பார்த்து, திருமணம் முடித்து, குழந்தைகள் பிறந்து, அவர்களது
    படிப்பும் அனைத்தும் தஞ்சையிலேயே உள்ள போது
    எனக்கு சரியான நேரத்தில், தஞ்சை பற்றிய இந்நுலினை தெரிவித்தமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. கு பா அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் அவரின் உழைப்பைப் பற்றியும், தொல்லாய்வுகளின் தேர்ச்சி பற்றியும் அறிவார்கள்!
    அவரின் தமிழறிவு நான் வியந்த ஒன்று.
    அருமையான நூல் பகிர்வு மற்றும் அங்கங்கிருக்கும் சுவையூட்டும் பகுதிகளைத் தொட்டுக் காட்டிச் சென்றிருப்பது நூலை முழுவதும் படிக்க வேண்டும் என எண்ணத் தூண்டுவதாக உள்ளது.
    நன்றி அயயா!

    ReplyDelete
  8. மிகவும் நன்று . . .

    ReplyDelete
  9. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
    அன்புடன்
    தங்களின் நண்பன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
  10. வணக்கமட
    ஐயா.

    அரிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. அருமையான அறிமுகம்

    ReplyDelete