முகப்பு

04 March 2016

ஐந்து மகாமகம் கண்ட அனுபவங்கள் : பத்திரிகை.காம்

நான் கண்ட ஐந்து மகாமகங்களைப் பற்றிய பதிவு பத்திரிகை.காம். இதழில் 1 மார்ச் 2016 அன்று வெளியாகியுள்ளது. எனது மகாமக அனுபவங்களை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. அவ்விதழில் வெளியான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். அளவில் சற்றே பெரிய கட்டுரை. பொறுமையுடன் வாசிக்க அழைக்கிறேன். 



எனக்கு நினைவு தெரிந்து நான் ஐந்து மகாமகங்களிலும் கலந்துகொண்டுள்ளேன். இதுவரை ஐந்து மகாமகங்களைப் பார்த்துள்ளேன். ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமானது. 

14.2.1968 
25, சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரம். கும்பகோணத்தில் எங்கள் இல்லம் இருந்த முகவரி. அப்போது தெருவின் பெயரில் அக்கிரகாரம் என்றே இருந்தது. நான் பார்த்த முதல் மகாமகம். கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் மூன்றாம் வகுப்போ நான்காம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த காலம்.  அப்பள்ளி ஆசிரியர்களிடம் நான் வாங்கிய அடியை என்றுமே மறக்கமுடியாது. நம்பர் கிளாஸ் எனப்படும் நிலையில் கடைசியாகப்போகப்போக அடி, தாமதமாக வந்தால் கொக்கு போடல், தவறு செய்தால் கல் சிலேட் தலையில் உடைக்கப்பட்டு, மாட்டப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படல், இவற்றுக்கெல்லாம் பயந்து பள்ளிக்குப் போகாமல் இருந்தால் சக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி இழுத்துச் சென்றுவிடுவர். இப்பள்ளியில் விலங்குக்கட்டை தண்டனைகூட உண்டு. (எனக்கு விலங்குக்கட்டை போடவில்லை). எங்களின் வாழ்க்கை நல்ல நெறியில் அமைய அடித்தளமிட்ட பள்ளியில் மகாமகம் பற்றி பேசிக்கொண்டார்கள். மறுநாள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் அவசியம் வந்துவிடவேண்டும் என்ற பயம் மட்டுமே. ஏதோ அரைகுறையான நினைவுகளே. பொதுவாகவே எந்த ஒரு விழாவென்றாலும் அதைப் பற்றியே பேசுவார்கள். கூட்டம்கூட்டமாகச் செல்வார்கள். கும்பகோணத்தில் நாளெல்லாம் கோயில் திருவிழா என்ற நிலையில் மகாமக விழாவிற்காகக் கிளம்பிய நினைவு உள்ளது. அவசரம் அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடியிருந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிய நினைவு உள்ளது. வேறு எந்த நினைவும் இல்லை. எங்கோ கூட்டிப்போகிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு கிளம்பிச் சென்றேன்.  செல்லும்போது நவராத்திரியின்போது ஒவ்வொரு வீடாகச் சென்று சுண்டல் வாங்கித் தின்பது நினைவிற்கு வந்தது. நவராத்திரி கொலு கொலு சுண்டல் என்று கூறிக்கொண்டே செல்வோம். மகத்திற்கு போனால் நமக்கு அதிகம் சுண்டல் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குடும்பத்தாரோடு கிளம்பினேன்.  ஆனால் மனதிற்குள் பயம். மறுநாள் வந்து பள்ளிக்குச் செல்லவேண்டுமே என்று.    

1.3.1980
நான் பார்த்த இரண்டாவது மகாமகம். தெருவின் பெயர் இக்காலகட்டத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெரு என்று மாறி பின்னர் கே.ஜி.கே.தெரு என்றானது. புகுமுக வகுப்பும் (PUC), இளங்கலைப் பொருளாதாரமும் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படித்து முடிந்து, தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இரண்டாவது மகாமகம். கல்லூரிப்படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் நிலை. கல்லூரிக் காலத்தில் சினிமாக் கொட்டகைகளுக்கு ஈடாக எங்களுக்குப் புகலிடம் தந்தவை கோயில்களே. அவ்வவ்போது நடைபெறும் விழாவைக் காண நண்பர் குழாமாக கோயில்களுக்குச் செல்வது எங்களுக்குப் பிடித்திருந்தது. நவராத்திரியின்போது பெரும்பாலும் அனைத்து நாள்களிலும் கோயில்களுக்குச் சென்றுவிடுவோம். ஒரே கோயிலில் ஐந்து தேர்கள், ஓலைச்சப்பரங்கள், குளத்தில் தெப்பங்கள் என்ற நிலையில் பார்க்க ஆசையாக இருக்கும். பக்தி என்பதைவிட ஏதோ ஒருவகையான கொண்டாட்டமாகவே இம்மகாமகம் எங்களுக்கு அமைந்தது. பணியில் சேர்ந்த நிலையில் அதிகம் விடுப்பு எடுக்க முடியா சூழல். இருந்தபோதிலும் மகாமகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வழக்கம்போலவே. குடும்பத்தினருடன் சென்றேன். அதிக பரபரப்பின்றி நிதானமாக விழா நிகழ்வுகளைக்கண்டோம். கடவுள் நம்பிக்கை இல்லாத எனது நண்பர்களும்கூட மகாமகத்தில் கலந்துகொண்டு பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். தீர்த்தவாரி என்பன பற்றி அறியாமல் குளத்திற்குச் சென்றோம், குளித்தோம். வரும்வழியில் பல கடவுளர்கள் உற்சவமூர்த்தியாக ஊர்வலமாக வருவதைக் கண்டு மகிழ்ந்தோம். கல்லூரிக்காலத்தில் எங்களுக்கு படிக்கும் வாய்ப்பைத் தந்தது கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம். அக்காலகட்டத்தில் நாங்கள் அங்கு பார்த்த மகாமகம் மலர் பற்றிய நினைவு வரவே அங்கு சென்று மலரை மறுபடியும் பார்த்தேன். மூன்று மகாமகங்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த மலரைப் பார்த்தபோது மகிழ்வாக இருந்தது. இவை போன்ற நிகழ்வுகளே கும்பகோணம் மீதும், கோயில்கள் மீதும், மகாமகம் மீதும் எங்களுக்கு ஆர்வத்தை அதிகம் உண்டாக்கியிருந்தன என்பதே உண்மை.



18.2.1992
முதல் நாள் மகாமக ஏற்பட்டினைக் காண்பதற்காக ஊரை முழுக்கச் சுற்றி வந்தோம். எங்கு பார்த்தாலும் பக்திப்பரவசம். அதிகமான கடைகள். ஊரெங்கும் விழாக்கோலம். ஒருவரையொருவர் விசாரிக்கும்போது தத்தம் உறவினர்களோ, நண்பர்களோ வந்துவிட்டார்களா என்று ஆவலோடு கேட்டுக் கொள்வதைக் காணமுடிந்தது. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்து விழாவுக்கு அழைத்தோம். நம் வீட்டு நிகழ்வில் ஏதாவது இனிப்பு பரிமாறப்படும்போது ஆர்வமாக, அதிகமாக எடுத்துக்கொள்வதைப் போல நம்மூர் கோயில்களில் உள்ள கூட்டத்தைப் பார்த்ததும் சென்று பார்க்கும் ஆர்வம் வந்தது. மறுநாள் குளத்திற்குச் செல்லும்போது கூட்டம் அதிகமாக இருப்பதைக் காணமுடிந்தது. குளத்தில் சென்று குளித்துவிட்டு, காவிரியாற்றுக்கும் சென்றுவிட்டுத் திரும்பினோம். இம்மகாமகத்தின்போது நடைபெற்ற விபத்துமகாமக வரலாற்றில் ஆறாத ஓர் வடு.

1992 மகாமகத்திற்காக தமிழ்ப்பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சானதைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நம்மூர் விழாவிற்கு நாம் பணியாற்றும் இடத்தில் மலர் அச்சிடுவதைக் கண்டதும் மகிழ்ச்சி ஏற்பட்டது.  
தமிழ்ப்பல்கலைக்கழகம் புலவர் கோ.மு. முத்துசாமிபிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்திருவிழாவும் என்ற நூலை மகாமகத்திற்காக வெளியிட்டது. கும்பேஸ்வரர் கோயிலைப் பற்றியும் மகாமகத்திருவிழாவைப் பற்றியும் பல அரிய தகவல்களையும் அந்நூல் கொண்டிருந்தது. அந்நூலுக்கு தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அணிந்துரை அனுப்பியபோது அவரிடம் நேர்முக உதவியாளராக நான் பணியாற்றிய நிலையில் மகாமகம் தொடர்பாக நாம் எழுதி ஒரு கட்டுரை வெளிவரவேண்டும் என்ற ஓர் உந்துதல் மனதில் தோன்றியது. நம்மால் முடியுமா என்ற ஐயம்கூட.   
6.3.2004
குடும்பச்சூழல் காரணமாக கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு நிரந்தரமாகக் குடியேறும் சூழலைத் தந்த மறக்கமுடியாத மகாமகம். நான் விரும்பிய கும்பகோணத்தைவிட்டு நான் சற்று விலகிச்செல்லும் நிலையில் மனதில் கனத்தைத் தந்த மகாமகம். தஞ்சாவூரில் புதிய முகவரி கிடைத்ததும் இம்மகாமகத்தில்தான். புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும்போதே மகாமக நாளில் மகாமகத்திலிருந்தும், பொற்றாமரைக்குளத்திலிருந்தும், காவிரியாற்றிலிருந்தும் எடுத்துவந்த புனித நீரை மனையில் தெளித்தோம். 28, 29 பிப்ரவரி 2004 இரு நாள்கள் தஞ்சையிலிருந்து கிளம்பி கும்பகோணம் சென்றோம். தங்கையின் வீட்டில் தங்கி அங்கிருந்து மனைவி, இரு மகன்களையும் தீர்த்தவாரி காணுகின்ற 15 சைவ, வைணவக் கோயில்களுக்கும் அழைத்துச்சென்றேன். இவ்வாறாக அழைத்துச்செல்லும்போது குடும்பத்தினருடன் இவ்வாறான ஒரு வாய்ப்பு வாழ்நாளில் இன்னுமொரு முறை அமையுமோ என்று கூறிக்கொண்டே சென்றேன். ஒத்துழைப்பு கொடுத்து குடும்பத்தினரும் உடன் வந்ததை மறக்கமுடியாது. 

கும்பகோணத்திலுள்ளோர் மகாமகத்தின்போது வெளியூரிலுள்ள நண்பர்களையும், உறவினர்களையும் தம் இல்லத்திற்கு வரவும், மகாமகத்தில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுப்பர். அவ்வாறு பல நண்பர்கள் எங்களுக்கு விடுப்பு விடுத்தனர். அவ்வகையில் தாராசுரம் மேலச்சத்திரத்திலிருந்து எனது நண்பர் எங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழ் 1.3.2004இல் கிடைத்தது. அழைப்பிற்கு நன்றி கூறினேன்.



மகாமக நாளன்று காலை 5.50க்குக் கிளம்பினோம். நன்றாக நெறிப்படுத்தப்பட்டு கூட்டம் செல்லும் வகையில் அமைப்புகள் காணப்பட்டன. மொட்டை கோபுரம் அருகிலிருந்து கிளம்பி பொற்றாமரைக்குளம், சோமேஸ்வரர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் வழியாக மகாமகக்குளத்திற்குச் சென்றோம். 1992இல் நடந்த விபத்தானது நல்ல படிப்பினையைத் தந்ததை உணர்ந்த நிலையில் அதிக பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைக் காணமுடிந்தது. நகரம் முழுவதும் மக்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி குளத்தை நோக்கி அனுப்பியவிதம் அருமையாக இருந்தது. போவதற்கு ஒரு வழி, வருவதற்கு ஒரு வழி என்ற நிலையில் கூட்டம் கட்டுப்பாட்டோடு இருந்தது. குளத்திலும் அவ்வாறான கட்டுப்பாடு காணப்பட்டது.குளக்கரையில் எங்கும் மக்கள் மயம். மகாமகத்தில் நீராடிவிட்டு 9.30 மணியளவில் திரும்பினோம். திரும்பிவந்தபின் கும்பகோணத்தின் அழகையும் பார்க்க இன்னும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே, மறுபடியும் பார்க்கலாமா என்ற உணர்வு வரவே நான் மட்டும் மறுபடியும் மகாமகக்குளத்தைப் பார்க்கக் குளத்திற்குக் கிளம்பிச் சென்று, திரும்பினேன். ஒரே நாளில் இரு முறை மகாமகக்குளத்திற்கு சென்றதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.  

இம்மகாமகத்தின்போது தமிழக அரசு வெளியிட்ட மகாமகம் சிறப்பு மலரில் மலர் பதிப்புக்குழுவில் உறுப்பினராகப் பங்காற்றும் வாய்ப்பையும், அதே மலரில் சப்தஸ்தானத் தலங்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதையும் மறக்கமுடியாது. மலர் தயாரிப்பின்போது பேரறிஞர்களுடன் பழகும் வாய்ப்பு, அரிய புகைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு, அதுவரை அறிந்திராத  நமது கலை, பண்பாடு பற்றிய அரிய செய்திகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. பார்க்காதனவற்றைப் பார்க்கவேண்டும் என்ற அவாவும் என்னுள் அப்போது எழுந்தது.

2016 மகாமகம்
2004 மகாமக மலர் பதிப்புக்குழு உறுப்பினர் என்ற நிலை, கடந்த மகாமகத்தின்போது அனைத்து தீர்த்தவாரிக்கோயில்களையும் பார்த்தமை எனக்கு நல்ல அனுபவங்களைத் தந்தது. 2016 மகாமகத்திற்கு முன்பாக குடமுழுக்கு காணும் அனைத்துக் கோயில்களையும் பார்க்க முடிவெடுத்து அனைத்துக் கோயில்களுக்கும் குடமுழுக்கு நாளிலோ அதற்குப் பின்னரோ சென்றோம். இவ்வகையில் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தவாரி காணுகின்ற 10 சைவக்கோயில்களுக்கும், ஐந்து வைணவக்கோயில்களுக்கும், கும்பகோணம் அருகே சாக்கோட்டை மற்றும் கொட்டையூரிலுள்ள இரு சைவக்கோயில்களுக்கும் சென்றோம். கோயில்களுக்குச் சென்றுவந்து அனைத்தையும் கட்டுரையாக எழுதினோம். விக்கிபீடியாவில் கும்பகோணத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றி புதிதாகக் கட்டுரைகள் தொடங்கும் வாய்ப்பினைத் தந்தது கோயில்களில் உள்ள ஆர்வமே. தொழில்நுட்பம் வளர வளர அழைப்பு விடுப்பு என்பதானது தொலைபேசியிலும், அலைபேசியிலும், முகநூலிலும், வலைப்பூவிலும் என்றாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் எழுதி வரும் வலைப்பூவில் மகாமகத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.


13.2.2016
ஒவ்வொரு மகாமகத்திற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இந்த மகாமகத்திற்காக நடைபெறும் ஏற்பாடுகளைப் பார்க்க மகாமகத்திற்கு முன்பாக பல முறை கும்பகோணம் சென்றுவந்துவிட்டேன். மகாமகத்தின் முதல் நாள் 13 பிப்ரவரி 2016 அன்று குடும்பத்தாரோடு கும்பகோணம் சென்றேன். தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களில் கொடியேற்றம் காண சிலகோயில்களுக்குச் சென்றுவிட்டு, குளத்திற்குச் சென்றோம். பேருந்துகள் ஊருக்குள் சென்றன.  கும்பேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்திற்கான ஏற்பாடு அப்போதுதான் தொடங்கியது. ஏற்பாடுகளை கவனித்துவிட்டு, ஓடத் தயாராகும் ஐந்து தேர்களைப் பார்த்தோம்.

அவ்வாறே சோமேஸ்வரன் கோயிலில் கொடியேற்றத்திற்கான ஏற்பாடு, நாகேஸ்வரன் கோயிலில் கொடியேற்றம், காசி விஸ்வநாதர் கோயிலில் கொடியேற்ற நிகழ்வு ஆகியவற்றைப் பார்த்த நிறைவோடு மகாமகக்குளத்திற்குச் சென்றோம். இரண்டாம் நாளில் மகாமகக்குளத்தில் கூட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததைக் காணமுடிந்தது. உள்ளே அனைத்துக் கிணற்றிலும் குளித்துவருவதற்கு வசதியாக கயிறு கட்டி வைத்திருந்தனர். பல இடங்களில் படிகளில் இறங்கி பலர் நீரை தலையில் தெளித்துக்கொண்டனர். நாங்கள் சிறிது நேரம் படியில் அமர்ந்து குளத்தினை அழகை ரசித்துவிட்டுக் கிளம்பினோம். 






14.2.2016 
கொடியேற்றம் கண்ட வராகப்பெருமாள் கோயில், சக்கரபாணிகோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ராமசுவாமி கோயில், சார்ங்கபாணி கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் சென்றேன். நேற்றைவிட இன்று கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டேன். மகாமகக்குளத்தில் புனித நீராடிவிட்டு, பொற்றாமரைக்குளம் வந்து பின்னர் காவிரியாற்றுக்கு புனித நீராடச் செல்லும் கூட்டம் அதிகமாக இருந்தது. மறுபடியும் குளத்தைப் பார்க்க ஆசை வரவே மகாமகக்குளம் சென்று திரும்பினேன்.





22 பிப்ரவரி 2016
தீர்த்தவாரியன்று தஞ்சாவூரிலிருந்து விடியற்காலை புகைவண்டி மூலமாகப் புறப்பட்டு குடும்பசகிதமாக கும்பகோணம் சென்றோம். காலை 6.30 மணிவாக்கில் கும்பகோணம் சென்றடைந்தோம். மகாமக முதல் நாளில் சென்ற நாங்கள் மறுபடியும் நிறைவு நாளில் செல்வது மகிழ்ச்சியாக இருந்தது. குளத்தில் இறங்கும்போது சூரிய உதயம் மிகவும் அழகாக இருந்ததைக் கண்டோம். சூரியோதயத்தில் குளத்தை அழகாக ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு புனித நீராட ஆயத்தமானோம்.











 

 
குளத்தில் இறங்குவதற்கு முன்பாக அபிமுகேஸ்வரர்கோயிலையும் அங்கு அழகாக நின்ற தேரையும் பார்த்தோம். குளத்தில் நீராடிய பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலைப் பார்த்தோம்.  பின்னர் அங்கு வந்த தீர்த்தவாரிக்குச் சென்றுகொண்டிருந்த கொட்டையூர் கோடீஸ்வரரைப் பல்லக்கில் பார்த்தோம். அங்கிருந்து நாகேஸ்வரர் தேரையும் கோயிலையும் பார்த்தோம். அதுவரை கூட்டம் அதிகமாகவில்லை. தொடர்ந்து கூட்டம் அதிகமானது. ஆங்காங்கு குளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமானது.  


 
  



நாகேஸ்வரன் கோயிலிலிருந்து செல்லும்போது சோமேஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். கோபுரத்தின் முன்பாக தேர் அழகாக நின்றுகொண்டிருந்தது. அதனைப் பார்த்துவிட்டு சார்ங்கபாணி கோயில் சென்றோம். அங்கும் கோபுரத்திற்கு சற்று முன்பாக தேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். அங்கிருந்து பெரிய தெரு வழியாகச் சென்றபோது சோமேஸ்வரர் தீர்த்தவாரிக்காக பல்லக்கில் வருவதைக் கண்டோம்.  பின்னர் பெரிய தெரு வழியாக பொற்றாமரைக் குளம் நோக்கிச் சென்றோம். அப்போது வழியில் சார்ங்கபாணியும், ராமசாமியும் தீர்த்தவாரிக்காக செல்வதைக் கண்டோம்.  அங்கிருந்து சரநாராயணப்பெருமாள் கோயில் வழியாக பொற்றாமரைக் குளம் செல்ல முயற்சித்தபோது அங்கு தடுப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். அங்கு தீர்த்தவாரிக்காக கும்பேஸ்வரர் பல்லக்கில் கிளம்பி கோயிலிலிருந்து வெளியே வருவதைக் கண்டோம். பல்லக்கு, கும்பேஸ்வரர் கோயிலின் ஐந்து தேர்களுக்கு நடுவில் வந்தபோது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.




 



 
நேராக ராமசாமி கோயிலுக்குச் சென்றோம். ராமசாமி கோயிலின் முன்பாக தேர் நின்ற அழகினை ரசித்துவிட்டு, பொற்றாமரைக் குளத்திற்குச் செல்வதற்கான வழியைத் தேடிச் சென்றோம். சார்ங்கபாணி கோயில் தெற்கு வீதியில் (ராமசுவாமி கோயிலின் வலப்புறம் செல்லும் பாதை) கூட்டம் கூட்டம் பக்தர்கள் சென்றுகொண்டிருப்பதைக் கண்டோம். அக்கூட்டம் பொற்றாமரைக்குளத்திற்கு போவதை அறிந்தோம். அவர்களுடன் இணைந்தோம்.  உச்சிப்பிள்ளையார் கோயில், சோமேஸ்வரன் கோயில் வழியாக கூட்டம் பொற்றாமரைக்குளத்தை நோக்கி நகர்ந்தது. ஆங்காங்கு தடுப்பு அமைத்து இருந்தனர். பொற்றாமரைக்குளத்தில் இறங்கி புனித நீராடிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 




பெரிய கடைத்தெரு வழியாக ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து சக்கரபாணி கோயிலுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். கோயிலின் வெளியே நின்ற தேரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து காவேரியாற்றுக்குக் கிளம்பினோம். அங்கு படித்துறைக்குச் சென்று புனித நீராடிவிட்டுக் கிளம்பினோம். பல கோயில்களையும் தீர்த்தங்களையும் பார்த்த மன நிறைவில் வராகப் பெருமாள் கோயிலாக திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கே வராகப்பெருமாள் பல்லக்கில் தீர்த்தவாரி முடிந்து பல்லக்கில் வருவதைக் கண்டோம். அவருடனேயே வராகப்பெருமாள் கோயிலுக்குச் சென்று எங்களது பயணத்தை நிறைவு செய்தோம்.  











சிற்றுந்து நிற்கும் என்று கூறப்பட்ட இடங்களில் அவற்றைக் காணமுடியவில்லை. மொட்டை கோபுரம் தொடங்கி எங்கு பார்த்தாலும் பக்தர்கள் பேருந்துக்காக நின்றனர். அவ்வப்போது சில ஆட்டோக்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன. காத்திருந்து பார்த்தோம். சிலர் மௌனசாமி மடத்தருகே தனியார் பேருந்துகள் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் அழைத்துச் சென்றுவிடுவதாகக் கூறினர். அங்கு போய்க் காத்திருந்தோம். பயனில்லை. அதிர்ஷடவசமாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி தற்காலிகப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறி, சுகமாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். 

இவ்விழா சிறப்புற அமைய உழைத்த வகையில் அனைத்து துறையினரும் போற்றுதலுக்குரியவராகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக காவலர்கள் மிகவும் பொறுமையோடு நடந்தகொண்டவிதம் எங்களை அதிகம் ஈர்த்தது. அனைத்து நிலையிலும் நிறையே கண்டோம். 2004 மகாமகத்தின்போது சிறப்பாக வழித்தடம் அமைத்திருந்ததைக் கண்டோம். அதைவிட சிறப்பாக இம்முறை பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த முறை காணப்பட்டது போல அதிக எண்ணிக்கையில் அன்னதானம், மோர் வழங்கல் என்பது காணப்படவில்லை. ஊர் முழுக்க பெரும்பாலும் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. தெருக்கடைகள், சாலையின் ஓரத்தில் இருக்கும் கடைகளும் குறைவாகவே காணப்பட்டன. பக்தர்கள் தம் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வதற்காக அதிக தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களில் சில குறைகள் இருப்பது தவிர்க்கமுடியாததே. குறையை விடுத்து நிறைவை எண்ணி உழைத்த அனைவருக்கும் மறுபடியும் நன்றி கூறுவோம். 

நாம் இந்த மகாமகத்தில் பார்த்த கோயில்களும் அவற்றின் கலையழகும் தொடர்ந்து வரும் மகாமகங்களில் நெஞ்சில் நிறைந்திருக்கும். அந்த இனிய எண்ணங்களை நம் வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச்சென்று நம் பண்பாட்டின் பெருமையை உணர்த்துவோம். 

என்னால் ஆரம்பிக்கப்பட்ட கும்பகோணம் கோயில்கள் வார்ப்புருவை விக்கிபீடியாவில்
காணலாம்.

18 comments:

  1. அருமையான ஐந்து மகாமகங்கள்!

    நாங்க ஃபிப்ரவரி 2 & 3 தேதிகளில் கும்பகோணத்தில் இருந்தோம். தங்குமிடம் குளத்துக்கு எதிரில் உள்ள ஹொட்டேல் ராயாஸ் என்பதால் குளத்தைச் சுத்தம் செய்து நீர் நிரப்பும் வேலைகளையெல்லாம் பார்க்க முடிஞ்சது.

    மற்றபடி மாகமகத்தின் தேர்களையும் ஊற்சவர்களின் திரு உலாக்களையும் உங்கள் படங்களின் மூலமாகவே பார்த்தேன்.

    மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. நிறைவான பதிவு.. அழகான தொகுப்பு..
    என்றும் மனதில் நிற்கும்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. ஐந்து மகாமகம் பார்த்த உங்கள் மூலம் நாங்களும் சில காட்சிகளைக் கண்டோம். நன்றி ஐயா.

    ReplyDelete
  4. இன்னும் பல மகாமகங்கள் நீங்கள் காண வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. ஐந்து மகாமகங்களில் கலந்துகொண்டீர்களா! ப்ரமாதம்.

    நான் ஒரு மகாமகமும் இதுவரை பார்த்ததில்லை. பெரும்பாலும் வடக்கே, வெளிநாட்டில் என வாழ்ந்ததுதான் காரணம்.

    உங்கள் கட்டுரை நீண்டிருந்தாலும் படிக்க கோர்வையாக, சுவையாக இருந்தது. படங்கள் கும்பகோணக் கோவில் காட்சிகளை நேரே நிறுத்துகின்றன. மகாமக மலர்களிலும் நீங்கள் கட்டுரைகள் எழுதியிருப்பது சிறப்பானது.

    ReplyDelete
  6. 5 மகாமகம் கண்ட முனைவர் அதிஷ்டசாலிதான் பிரமிப்பான தகவல்களும், பிரமாண்டமான படங்களும் நன்று
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  7. அருமையான தொகுப்பு
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  8. 5 மகாமகத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் காட்சிப்படுத்தித் தந்தமையால் தங்கள் மூலம் அறிய முடிந்தது. தங்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டத் தண்டனைகள் எல்லாம் மிகவும் பயமுறுத்துவதாக இருக்கிறது. 5 மகாமகத்தைத் தாங்கள் கண்டது சிறப்புதான். படங்கள் அனைத்தும் அருமை. அழகான விவரணம்.

    ReplyDelete
  9. மகாமகம் கொடியேற்றம் முடிந்த மூன்றாம்நாள் நானும் என் மனைவியும் என் தங்கையும் சேர்ந்து சென்று குளத்தில் தீர்த்தமாடி கும்பேஸ்வரர் ஆலயத்தில் மூலவரையும் அமபாளையும் தரிசித்து முடித்து வெளியே வரும்போது சன்னதிலேயே அறுபத்து மூவருடன் சுவாமியும் அம்பாளும் இணைந்து ஊரவலம் புறப்பட்ட கண்கொள்ளா காட்சியை அருகில் நின்று கண்டதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட காட்சியை இனியும் காணமுடியுமோ என்னவோ... காரணம் எனக்கு இப்போ வயது 74. என் வாழ்நாளில் மகாமகத்தில் தீர்த்தமாடியது இதுவே முதல்முறையாகும்.

    ReplyDelete
  10. 5 மகாமகங்கள் கண்டு அதனை அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. மகாமகம் காண்பது மகிழ்ச்சி. பல மகாமகங்கள் பார்த்தவர் சொல்லக் கேட்பது பெருமகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
  11. Mr Dharumi (thro'email: dharumi2@gmail.com)
    நான் 68ல் நேரில் கண்டு களித்தேன்.......

    ReplyDelete
  12. beautifully depicted. thank you
    m.gauthaman

    ReplyDelete
  13. வரிசை வரிசையாய் அணிவகுக்கும் படங்களும்
    படங்களுக்கு இணையாய் வற்றாத நதியாய் பெருக்கெடுத்தோடும் செய்திகளும் அருமை ஐயா
    தங்களால் மட்டும்தான் இதுபோன்று பதிவிட இயலும்
    நன்றி ஐயா
    தங்களின் பெயரனைக் கண்டு மகிழ்தேன்

    ReplyDelete
  14. excellent write up and superb photos Jambulingam sir.It is a gift for all those who could not go physically and for those who aspires to go at least in future.welldone.

    ReplyDelete
  15. தங்களுக்கு நல்ல கொடுப்பினை ஐயா. எங்களுக்கும் தான். தங்கள் மூலமாக 5 மகாமத்தினையும் கண்ட உணர்வு வருகிறது.நன்றி

    ReplyDelete
  16. migavum payanulla malarum ninaivugal... melum neegal palveru mahamaham kana vaztha vayathilai.... nazvalthugal.

    ReplyDelete
  17. உங்கள் நினைவாற்றலையா, அழகான எழுத்து நடையையா, சேர்த்த படங்களையா, உங்கள் கொடுப்பினையையா.... எதைப் பாராட்டுவேன்??
    நமஸ்காரம்11

    ReplyDelete
  18. வணக்கம்
    ஐயா
    படித்த போது நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete