முகப்பு

21 August 2016

செவ்வியல் நூல்கள் 41 : பொன்மொழிகள் : முனைவர் இரெ.குமரன்

முனைவர் ரெ.குமரன் (களப்பாள் குமரன்) அவர்களின் செவ்வியல் நூல்கள் 41 : பொன்மொழிகள் அண்மையில் நான் படித்த சங்க இலக்கியம் தொடர்பான மற்றொரு நூல்.  41 செவ்வியல் நூல்களிலிருந்து குறிப்பிடத்தக்க சில வரிகளைத தெரிவு செய்து, சங்க இலக்கியங்களின் மேற்கோள் அடிகளுடன் பொருத்தமான தலைப்பிட்டுத் தந்துள்ளார் நூலாசிரியர். நன்னெறிக்கருத்துகள் தொடங்கி அகம் புறம் என அனைத்து நிலையிலான பொருண்மைகளும் அவற்றில் காணப் படுகின்றன. அவர் கூறும் 41 செல்வியல் நூல்களையும் அவற்றில் காணும் சில பொன்மொழிகளையும் காண்போம்.    

தொல்காப்பியம், எட்டுத்தொகை (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு), பத்துப்பாட்டு (திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்), பதினென்கீழ்க்கணக்கு (நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம் திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை), சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்  ஆகிய 41 நூல்களை செம்மொழி நூல்களாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அகம், அச்சம், அரசன், அன்புடைமை, ஊழ்வினை, கனவு, போற்றுதல், வீரம் என்பவை போன்ற 55 தலைப்புகளில் பொன்மொழிகளைத் தந்துள்ளார். ஒரே பொருளில் பல செய்திகளை எளிதாகப் புரியும் வகையில் உட்தலைப்பிட்டு  நூலாசிரியர் தந்துள்ள விதம் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நூலின் நிறைவுப்பகுதியில் (பக்.236-256) அருஞ்சொற்பொருள் அகர நிரல் தரப்பட்டுள்ளது. முக்கியமான பல சொற்களுக்கு பொருள் தரும் வகையில் சிறப்பான வகையில் இந்நிரல் காணப்படுகிறது. 

அகம் 
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் 
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் (தொல்.பொ.1: 54)
அகத்திணை மாந்தர்கள் :  மக்களின் ஒழுக்கலாறுகளைக் கூறுமி அகம் சார்ந்த ஐந்திணைப் பாடல்களில் இயற் பெயர் சுட்டி எவரும் குறிக்கப் பெறார். (ப.10)

அன்புடைமை 
யாதும் ஊரே யாவரும் கேளிர்  (கணியன் பூங்குன்றன், புறநா.192: 1)
எம் ஊரும் எம் மக்களும்;எவ்வூரும் எம் ஊரே, எல்லா மக்களும் எம் உறவினரே.  (ப.52)

இயற்கை 
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே  (சீத்தலைச்சாத்தனார், மணி.24.103, 104)
இவ்வுலகில் பிறந்தா தனைவரும் மூப்புற்றார், நோயுற்றார், இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பான நிகழ்வே.  (ப.71)

கனவு
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்ட மருட்டலும் உண்டே... (கபிலர், அக.158: 10,11)
நனவில் தோன்றும் உண்மை நிகழ்வுகள் போன்று, உறங்குவோர் கனவிலும் நிகழ்வுகள் உண்மையெனத் தோற்றி மயக்கவும் கூறும்.  (ப.110)

கொடுங்கோன்மை
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்  (இளங்கோவடிகள், சிலப்.பதி.55)
அரசியலில் தவறிழைத்தோர்க்கு அறமே கூற்றாக அமையும்.  (ப.131)

சுற்றம்

உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு

எக் கலத்தானும் இனிது  (சமண முனிவர்கள், நாலடி.21: 6: 3,4)

தன்னை உயிரைப் போல நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ் எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம்.  (ப.156)

நிலையாமை
வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து (......நற்.46: 1,2)
வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல் எப்படி மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.  (ப.175)

முப்பொருள் விளக்கம் : தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர்

தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர் 1911இல் எழுதிய முப்பொருள் விளக்கம் என்னும் நூலினை ரெ.குமரன் தற்போது மறுபதிப்பாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் பசு மகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை சிறப்பாக ஆராயப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு முன்புவெளியான இந்நூலைப் பதிப்பித்து ஓர் அரிய பணியை நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து களப்பாள் சேத்திர விளக்கம் மற்றும் சைவ சமயமும் தமிழ்ப்பாடையும் என்னும் இரு நூல்களை மறுபதிப்பாக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளார். நூல்கள் மறுபதிப்பாக்க முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விரும்புவோர் அவரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

41 செவ்வியல் நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை எளிமைப்படுத்தித் தந்துள்ள அவரைப் பாராட்டுவோம். அரிய நூல்களை மறுபதிப்பாக்கும் அவருடைய முயற்சிக்குக் கைகொடுப்போம். அதற்கு முன்பாக வாருங்கள், இந்நூல்களை வாசிப்போம். 

செவ்வியல் நூல்கள் - 41 பொன்மொழிகள்  
நூலாசிரியர் : முனைவர் இரெ.குமரன் (பேசி 9443340426)
மின்னஞ்சல் kalappiran@gmail.com
பதிப்பகம் : கவின் பதிப்பகம், 18/17 காத்தூன் நகர், மூன்றாம் தெரு,
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006 (பேசி 9962721280)
பதிப்பாண்டு  : 2016

இவரது பிற நூல்களை பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம் :
சங்க இலக்கியம் அறிவோம் மற்றும் அல்லித்தீவு   


14 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகம்..

    புதியன தெரிந்து கொண்டேன்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. அன்புடையீர் வணக்கம், தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திவரும் தங்களுக்கு என்றும் நன்றியுடையன். தமிழுக்கு இனிதாய நட்பு.. இணைந்து தமிழ் வளர்ப்போம் இணையத்தில்.... நன்றியுடன் ..குமரன்.

    ReplyDelete
  3. அருமையான அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  4. செம்மையான பகிர்வுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  5. அருமையானதொரு நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  6. #வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல் எப்படி மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.#
    ஆகா !இதுவரையிலும் நான் படித்திராத கருத்து ...இதைதான் இன்றைய என் பதிவிலும் ,சந்தோசம் வருவதும் ,போவதும் தெரியாதுன்னு எழுதியுள்ளதை நினைத்தால் மகிழ்ச்சி அளிக்கிறது :)

    ReplyDelete
  7. சுற்ற‌ம் பற்றி அந்தக்காலத்தில் எத்தனை அழகாய் எழுதியிருக்கிறார்கள்! அருமையான அறிமுகம்!

    ReplyDelete
  8. அருமையான அறிமுகம்
    பயனுள்ள நூல்கள்
    தொடருங்கள்
    தொடருவோம்

    ReplyDelete
  9. நூல் பற்றிய அறிமுகத் தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  10. நூல் பற்றிய அறிமுகத் தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா

    அருமையான நூல் பற்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. அருமையான நூல் அறிமுகம் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  13. அருமையான அறிமுகம். சிறப்பான பணி .வாழ்த்துகள். தொடர்க.

    ReplyDelete
  14. நல்லதொரு நூல் அறிமுகம் ஐயா...

    ReplyDelete