முகப்பு

06 August 2016

பழையாறை சோமநாதர் கோயில்

பழையாறை சோமநாதர் கோயிலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியாகவும், நண்பர்களோடும் பல முறை சென்றுள்ளேன். ஆரம்பத்தில் இக்கோயிலைப் பார்த்தபோது இடிபாடுற்ற நிலையில் உள்ளே செல்வதே சிரமமாக இருந்தது. 29 ஜனவரி 2016இல் குடமுழுக்கு நாளன்று சென்றபோது புதிய உலகிற்குச் சென்றதைப் போல மிகவும் அருமையாகக் காட்சியளித்தது கோயில்.   

இக்கோயிலைப் பற்றி அறிய சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைப் பார்ப்போம். ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்ககௌல்லாம் பழையாறைக்குரிய பண்டைப்பெயர்களாகும் என்றும், உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்தது பழையாறையே என்றும், இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்ரேரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டுகள் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகராக விளங்கியதென்றும்,  ஈடு இணையற்ற அந்நகரம் பிற்காலத்தில் பழையார், பட்டீச்சரம், திருச்சத்திமுற்றம் அரிச்சத்நதிரபுறம், பாற்குளம், முழையூர், இராமநாதன் கோயில், சோழன் மாளிகை, தாராசுரம், திருமத்திடி, கோணப்பெருமாள்கோயில், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன் கோயில், உடையாளூர், இராசேந்திரன்பேட்டை எனப் பல சிறு கிராமங்களாகப் பிரிந்து கும்பகோணம் என்னும் நகரத்திற்கு வளம் சேர்த்து நிற்கின்றன என்றும், விஜயலாய சோழன் முதல் சோழப்பேரரசர்கள் இளமையிலிருந்து முதுமைக்காலம் வரை வாழ்ந்த மண் என்றும், கோவணக்கள்வனாக வந்த சிவபெருமானின் முன்பு தராசில் தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல சிவபதம் பெற்ற அமர்நீதி நாயனார் பிறந்து வாழ்ந்த இடம் என்றும் வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பழையாறைக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

பழையாறை நகரிலும் அப்பகுதியைச் சுற்றிலும் வரலாற்றுசிறப்புமிக்க கோயில்கள் காணப்படுகின்றன. பார்மகிழ வாழும் பழையாறை ஊர் மேவும் சோமகலா நாயகி சேர் சோமேசா என்று பழையாறையின் பெருமையை உமாபதி சிவாச்சாரியார் எடுத்துக்கூறுகின்றார். திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 24ஆவது தலம் என்னும் பெருமையையுடையது.  

இவ்வாறான பெருமைகளைக் கொண்ட பழையாறையில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. அக்கோபுரத்தினை உள்ளது உள்ளவாறே பாதுகாத்து அப்படியே வைத்துள்ளதைப் பார்க்கும்போது இன்னும் மன நிறைவு ஏற்பட்டது.
பழமை போற்றும் வாயில் கோபுரம்
வாயில் கோபுரத்தில் யாளி சிற்பங்கள்

பழமை போற்றும் வாயில் கோபுரம் வழி உள்ளே செல்லல்

அக்கோபுரத்தினை அடுத்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் காணப்படுகின்றன.
வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. 


அம்மன் சன்னதி

அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்கள்
அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்கள்
அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்கள்
பலிபீடம், நந்தியை அம்மன் சன்னதியைக் கடந்து உள்ளே சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. 

அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது. அச்சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. யானைகளும், குதிரைகளும் இழுத்துச்செல்லும் நிலையில் தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது. 
குடமுழுக்கு கண்ட மூலவர் சன்னதி
மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். 
குடமுழுக்கிற்கு முன் விமானம்
குடமுழுக்கு நாளில் விமானம்
யானையும் தேரும் இழுத்துச்செல்லும் தேர் வடிவில் அமைந்துள்ள மண்டபத்துடன் கூடிய மூலவர் சன்னதி


அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா காணப்படுகின்றனர்.  திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன. 
அனைத்து சன்னதிகளையும் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிலுள்ள சுமை குறைந்தது போல இருந்தது. பல்லாண்டுகளாக புதர் மண்டிக்கிடந்த, புல் பூண்டுகளுடன் காணப்பட்ட கோயில் வளாகம் அழகான நிலையில் காட்சியளித்ததைப் பார்க்கும்போது என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்ற நாவுக்கரசரின் பாடல் அடிகள் மனதில் ஒலிப்பதை உணரமுடிந்தது. கோயிலுக்குச் சென்றுவரும் அனைவரும் இவ்வாறே உணர்ந்திருப்பர்.

12 comments:

  1. தங்களோடு கடந்த ஆண்டு இக்கோயிலுக்குச் சென்றுவந்த நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. கங்கை கொண்ட சோழபுரம் செல்லும்போது தாண்டிச் சென்றோம். பார்க்க ஆவல் இருந்தும் நேரம் இல்லாமல் போனது.

    ReplyDelete
  3. ஒரு அருமையான கோவில் குறித்து பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா...
    அறியாத கோவிலை அறியத் தந்தீர்கள் ஐயா....

    வாழ்த்துக்கள்... நன்றி...
    மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. அறியாத பல அரிய விடயம் அளித்த முனைவருக்கு நன்றி
    த.ம. 3

    ReplyDelete
  5. வரலாற்றுச் செய்திகளுடனும் அழகான படங்களுடனும் நல்லதொரு பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. பழையாறை என்ற ஊரின் பெயர் முதன் முதல் மனதுக்கு அறிமுகம் ஆனது 60 ஆண்டுகளுக்கு முன் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வாசித்த போது தான்.

    ஒவ்வொரு முறையும் பழையாறை வாசிப்பில் எதிர்ப்படும் பொழுதெல்லாம் அந்த நேரத்து என்ன வாசிக்கிறோம் என்பது நினைவில் படியாமல் 'பொன்னியின் செல்வன்' பழையாறை நினைவுகளே நெஞ்சில் ஓடும். மன்னிக்கவும். இப்பொழுதும் அப்படித் தான்.

    பழையாறை அருள்மிகு சோமநாதர் கோயிலின் குடமுழுக்குப் பின்னான புதிய நிலையில் புகைப்படங்களுடன் காட்சிப்படுதியமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    பழையாறை பற்றிய சரித்திர விபரங்களுடன், அருள்மிகு சோமநாதர், அம்பாள் ஆகியோர் குடிகொண்டுள்ள புராதான கோவிலின் சிறப்பான படங்களையும் பார்த்து பரவசமடைந்தேன்.யானை குதிரை இழுத்து செல்லும் தேரமைப்புடைய மண்டபம் மிகவும் அழகாக இருந்தது.அனைத்தையும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாக்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. பழையாறை கோயிலை பார்க்கும் ஆவலை ஏற்படுத்திய பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  9. பலவருடங்கள் ஆகிவிட்டது பார்த்து, மீண்டும் உங்கள் பதிவில் கண்டு களித்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. பழையாறை கோவில் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. பழையாறை, பட்டீஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ஆவல் உண்டு. எப்போது வாய்க்குமோ?

    ReplyDelete
  11. நன்றாக எழுதியுள்ளீர்கள். சோழனின் core இடத்தில் இருக்கிறீர்கள். கோவில்களைப் பற்றிய அருமையான பதிவு. வாய்ப்பு இருந்து அங்கு வந்தால் உங்கள் பதிவைப் படித்தபின்பு கோவிலைப் பார்ப்பது உத்தமம். நன்றி.

    ReplyDelete
  12. பழையாறை பற்றிய சரித்திர விபரங்ககளை அறிந்து கொண்டேன் அய்யா........

    ReplyDelete