முகப்பு

24 December 2016

தேவகோட்டை தேவதை தேவகி : கில்லர்ஜி

நண்பர் திரு தேவகோட்டை கில்லர்ஜி நூலுக்கான 
என் முகவுரை

புதுக்கோட்டை கணினி பயிற்சி முகாமில், வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக திரு கில்லர்ஜியுடன்
(புகைப்படம் நன்றி : திரு தமிழ் இளங்கோ)

வாசகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி எழுத்துக்கு உண்டு. சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், இயற்கை, ஆன்மீகம், அறிவியல் என்ற ஒவ்வொரு நிலையிலும் பலவிதமான மாற்றங்களை எழுத்து உண்டாக்கிவிடுகிறது.  உணர்வுகள் எழுத்துக்களாக உருப்பெறும்போது அதில் எழுதுபவரின் அனுபவமோ, கற்பனையோ காணப்படுவது இயற்கையே. அதிகமான வாசிப்போர் எழுதும் எழுத்துகளில் அதிகமான நிகழ்வுகளைக் காணலாம். தொடர்ந்து எழுதும் நிலையிலும்,  களங்கள் மாறுபடும் நிலையிலும் எழுதுபவர்கள் பக்குவம் பெறுகின்றார்கள். அவ்வாறான ஒரு பக்குவத்தை தம் எழுத்துகளின் மூலம் கொணர்ந்துள்ளார் நண்பர் திரு. தேவக்கோட்டை கில்லர்ஜி.

 எழுத்துகள் மூலமாக அனைத்து தரப்பினரையும் தன்னை நோக்கி இழுக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவருடைய பதிவுகளைப் படித்தவர் நன்கு அறிவர். வலைப்பூவில் தொடர்ந்து எழுதி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தைக் கொண்ட அவர் தற்போது நூல் வடிவில் அவற்றை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கவேண்டிய முயற்சியாகும். சுமார் 60 தொகுப்புகளைக் கொண்டுள்ள இந்நூலில் சிறுகதை, கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், நகைச்சுவை, துணுக்குகள் என்ற பல வகையிலான பதிவுகள் காணப்படுகின்றன.  

பதிவுகளுக்கு அவர் தலைப்பு வைக்கும் விதம் அலாதியானது. அவரது பதிவுகளின் தலைப்புகள் வித்தியாசமாகவும், படிப்பவர் மனதில் எளிதில் பதியும் வகையிலும்,  விரைவில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும்.  அவ்வாறான தலைப்புகளில் பெரும்பாலும் ஊரின் பெயர் முதன்மையாக காணப்படும். படிக்கப்படிக்க ஆவலோடு காணப்படும் அவரது பதிவுகளில்  சமூகப் பிரக்ஞைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். 

சில நிகழ்வுகள் கற்பனையாகவும், சில அவர் பெற்ற அனுபவம் போல இருப்பதை இப்பதிவுகள் உணர்த்துகின்றன. தான் எதிர்கொண்ட அனுபவங்களைப் பதியும்போது பிறருக்கு அவைப் பாடங்களாக அமையவேண்டும் என்ற நன்னோக்கினை மிகவும் நுட்பமாகவும், ஆழமாகவும் அவர் வெளிப்படுத்துகிறார்.   ஒவ்வொரு பதிவிலும் சமூகத்திற்குப் பயனுள்ள செய்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தரும் நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். பல நிகழ்வுகளில் ஒப்புமைகளைக் காட்டும்போது அடுக்குத்தொடராகச் சொற்களை அவர் பயன்படுத்தியுள்ள விதம் வாசகர்களை அதிகம் கவர்ந்துவிடும்.

ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவாதிக்கும் நிலை (தேவகோட்டை, தேவதை தேவகி), பகல் கனவில் வாழ்வினை நடத்தும் சுகம் (பெரியகுளம் பெரியவர் பெரியசாமி), பேச்சாற்றலால் அமையும் நல்ல வாழ்க்கை (சென்னை செம்மொழி செண்பகவள்ளி), நிருபரிடம் அளிக்கும் பேட்டிக்கு இயல்பான மறுமொழிகளைத் தரல் (எமமேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்), நடிகை எதிர்கொள்ளும் வாழ்க்கை (கண்ணூர் கண்ணகி கருப்பாயி), வேலைக்கு சிபாரிசு செய்வதால் எழும் சிக்கல்  (அரக்கோணம் அரைக்கேனம் மரைகானம்), குழப்பம் தரும் நபரிடம் சிக்கிக்கொள்ளும் மருத்துவர் (சங்ககிரி சகுனி சடையாண்டி), வித்தியாசமாக செருப்பு தயாரித்து அனாவசிய மருத்துவச்செலவில் மாட்டிக்கொள்ளல்  (செங்கல்பட்டு செங்கல்சூளை செங்கல்வராயன்), நண்பனுக்கு அறையில் இடம் கொடுத்து புதிய பிரச்னையை உண்டாக்கிக்கொள்ளல் (மாதவனூர் மாவுடியான் மாதவன்), மனைவி காட்டும் அதீத அன்பினால் நெகிழும் கணவன் (வெள்ளையபுரம் வெள்ளந்தி வெள்ளையம்மாள்) என்ற நிலையில் ஒவ்வொரு கதையையும் வித்தியாசமான கோணத்தில் அமைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.   

கதாபாத்திரங்களுக்கு அவர் வைத்துள்ள பெயர்கள் வித்தியாசமானவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஆனால் அதே சமயத்தில் ஏதோ ஒரு நிலையில் ஒருவகையான பொருத்தம் அமைந்திருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தலைப்பைத் தெரிவு செய்யும் விதத்தில் அவர் கவனமாக இருந்துள்ளார்.

கதை மட்டுமல்ல. நகைச்சுவைகள், கவிதைகள், துணுக்குகள், நாட்டுப்புறப்பாடல்கள் என்ற நிலையில் பல நிலைகளிலும்கூட  தன்னால் பரிணமிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் பெருமுயற்சி எடுத்த அதில்  வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.  

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை எடுத்துரைக்கும்போது அவரது இரண்டாவது மனைவி கைதட்டுதல் (குரும்பூர், குட்டிக்கதை குருசாமி), பிச்சைக்காரனுக்கு நினைத்த இடமெல்லாம் தூக்கம் வரும், பணக்காரனுக்கு நினைத்தாலும் தூக்கம் வராது (கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு) என்ற நிலையில் நகைச்சுவை ததும்பும் வரிகளை அவர் தரும் விதம் அருமையானது. பெரும்பாலான நகைச்சுவைகளில் சமூக உணர்வினை அவர் வெளிப்படுத்துகின்றார்.

வந்துவிடு வசந்தக்காற்றே நாம் வளமுடனே வாழ்ந்திடவே (துபாய், துணைவன் துரைச்சாமி), கண் (இமைக்குள் வசப்படும்போது) /நிலவு (மேகத்துக்குள் வசப்படும்போது) /கண்ணே நீ ஏன் என் வசப்படக்கூடாது? (ராயப்பேட்டை ராப்காடு ராதிகா), கண்ணடித்து நகைக்க வேணுமடி/கண்ணாலம்தான் கட்டிக்குவோமடி (கல்லல், கலக்கல் கண்ணன்), என் மனதில் வீற்றிருக்கும் கலைவாணி/உன் மனதை விரைந்து தந்திடு மகராணி  (பவானியில் பவனி வரும் பவானி) என்ற நிலைகளில் தன் கவிதைகளில் கற்பனைத் திறத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

வலைப்பதிவுகளின் மூலமாக அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ள திரு தேவக்கோட்டை கில்லர்ஜி, தன் எழுத்துகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நூலாக்க முயற்சியில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.  இந்நூல் மூலமாக அவர் இன்னும் பல புதிய வாசகர்களைப் பெறுவார்.  அவருடைய எழுத்துப்பணி மென்மேலும் தொடரவும் அவர் இன்னும் பல நூல்களை எழுதவும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

புதுக்கோட்டை கணினி பயிற்சி முகாமில், வலைப்பூ அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் திரு கில்லர்ஜி.
உடன் திரு திண்டுக்கல் தனபாலன், கவிஞர் திரு முத்துநிலவன்
(புகைப்படம் நன்றி : தேவதா தமிழ் வலைப்பூ)

நூல்  : தேவகோட்டை தேவதை தேவகி
ஆண்டு  : 2016
ஆசிரியர் முகவரி : திரு கில்லர்ஜி (8220750853) 
சாஸ்தா இல்லம், ஸ்ரீசக்தி திருமண மண்டபம் 
அருகில், 3, தேனம்மை ஊரணி வீதி, வேகோட்டை 630 302
மின்னஞ்சல் : sivappukanneer@gmail.com
நூல் பெற தொடர்புக்கு : திரு கே.விவேக் (9600688726)

27 டிசம்பர் 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

19 comments:

  1. விரைவாகப் படித்து சிறந்த விமர்சனமும் வழங்கி விட்டீர்கள். வாழ்த்துகள் கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களுக்கு நூலுக்கு முன்னுரை எழுதியவர் முனைவர் அவர்களே...

      Delete
  2. அட்டகாசமான விமர்சனம்... நன்றி அய்யா...

    இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. முகவுரை தந்த தங்களுக்கும் நூலை எழுதிய நண்பர் கில்லர்ஜிக்கும் வாழ்த்துக்கள் பல.
    த ம 1

    ReplyDelete
  4. அசத்தல் அறிமுகம் !எழுத்தாளாராக பிரமோஷன் ஆகியுள்ள கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு. நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும் மன நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நூலைக் கையில் எடுத்ததும் உங்களுடைய முகவுரை மற்றும் மற்ற வலைப்பதிவு நண்பர்கள் அளித்த உரைகளையும் படித்து விட்டேன். இனிமேல்தான் கில்லர்ஜியின் நூலை முழுமையாகப் படிக்க வேண்டும். உங்களது முகவுரை, நூலுக்கு ஒரு தெளிவான அறிமுகம். உங்கள் பதிவைப் படித்ததும் கில்லர்ஜியின் நூலைப் பற்றி நாமும் ஒரு பதிவை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் தூண்டியது.

    ReplyDelete
  7. முனைவரர் அவர்களுக்கு...
    என்னுரையில் சொன்னதையே சொல்கிறேன் நன்றி வேண்டாமே...

    செல்பேசி 8220750853 யிலும், மின்னஞ்சல் SIVAPPUKANNEER@gmail.com மிலும் திருத்தம் செய்யவும் - கில்லர்ஜி

    ReplyDelete
  8. தேவகோட்டை ஜி அவர்களின் நூல் விமர்சனம் மிக அருமை.தேவகோட்டை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நூல் மதிப்புரை அருமை அய்யா...

    ReplyDelete
  10. அருமையான நூல் விமர்சனம் ஐயா
    நன்றி

    ReplyDelete
  11. விரிவான விமரிசனம். பாராட்டுகள். படைத்தவனின் இதயம் குளிரும்.

    ReplyDelete
  12. தங்கள் முகவுரை மிகச் சிறப்பாக உள்ளது ஐயா! அவரது நூலிலேயே வாசித்தும் விட்டோம். வாழ்த்துக்கள் தங்களுக்கும் நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும்!

    ReplyDelete
  13. கில்லர்ஜியின் எழுத்துகளைத் தொடர்ந்து படிப்பவன் நான் இந்த நூலில் உள்ளவை வலைப்பதிவில் வந்தவை போல் இருக்கிறது அவரது அடுக்குமொழி வாக்கியங்களும் அவரது தார்மீக கோபமும் எழுத்துகளில் தெரியும் சந்தர்ப்பம் கிடைத்தால் நூலை வாங்கிப் படிப்பேன் உங்களது விரிவான விமர்சனம் நன்று

    ReplyDelete
  14. ஆஹா! நல்ல விமர்சனம் ஐயா. கில்லர்ஜி சகோவிற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    பகிர்விற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  15. தேவகோட்டை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தமழ் மணம் 6
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
  16. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சகோ,, விமர்சனம் அருமை ஐயா,,

    ReplyDelete