முகப்பு

04 February 2017

ராஜ தந்திரம்

டிப்ளமசி என்ற ஆங்கிலச்சொல்லுக்கு 'அரசியல் செயலாட்சி நயம், நாடுகளிடைப்பட்ட இயைபிணக்க நயத்திறம், அரசியல்களிடைப்பட்ட செயலாண்மைத்திறம், சூழ்ச்சித் திறநயம், முறைநயம், செயல்நயம்' என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப்பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம். சொல்லுக்கான பொருளிலேயே ராஜதந்திரம் பொதிந்துள்ளதைப் போன்று மிக அருமையான அதன் பயன்பாட்டு உத்திகள் தரப்பட்டுள்ளதைப் நோக்கும்போது சற்றே வியப்பாக உள்ளது. பல நிலைகளில் ராஜதந்திரம் என்பதானது கடைபிடிக்கப்பட்டுவருகிறது. நாடுகளிடையே காணலாகும் உறவை மேம்படுத்தவும், சரிசெய்துகொள்ளவும் இந்த ராஜதந்திரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது காலங்காலமாக பலவித பொருண்மைகளில் அமைந்து வருவதை வரலாறு நமக்குக் கூறுகிறது.  பிற நாடுகளும் இந்தியாவும் கடைபிடித்துவரும் சில ராஜ தந்திர முறைகள் வியப்பினை உண்டாக்கும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற சில ராஜ தந்திரங்களைக் காண்போம்.

பிங்பாங் ராஜதந்திரம்/1970 (Ping-pong diplomacy): 
1970களின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மேசை டென்னிஸ் விளையாட்டு வீரர்களை பரிமாறிக்கொள்ளும் பிங்பாங் ராஜதந்திரம் ஆரம்பமானது. இதன் விளைவு சீன-அமெரிக்க உறவில் உள்ள விரிசலைச் சரி செய்து அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பீகிங் செல்ல காரணமானது.
மாம்பழ ராஜதந்திரம்/1980 (Mango diplomacy):
இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ராணுவத்தலைவர் ஜியா உல்ஹக்கிற்கு மாம்பழங்கள் அனுப்பிய வகையில் மாம்பழ ராஜதந்திரத்தின் துவக்கம் (1980), இந்தியப்பிரதமர் வாஜ்பாயிக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மாம்பழங்களை அனுப்பியது (2001), இந்தியாவிலிருந்து மாம்பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து அதற்கு ஈடாக அமெரிக்காவிலிருந்து மோட்டார் சைக்கிள்கள் இந்தியச் சந்தையில் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்தது (2007), இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவில் காணப்படும் இறுக்கத்தைக் குறைப்பதற்காக இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு மாம்பழங்கள் அனுப்பியது, பாகிஸ்தானில் வெளியுறவுத்துறைச் செயலாளர்கள் நிலையிலான சந்திப்பும் மூன்றாவது சார்க் மாநாட்டின் உள்துறை அமைச்சர்கள் சந்திப்பும் நடைபெற்றபோது இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் அனுப்பியது,  அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளைக் குறைப்பதற்காக அமெரிக்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொண்டது (2010), ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் மாம்பழங்கள் மீதான தடையை நீக்க முயற்சி மேற்கொண்டது (2011), நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முன்பாக இந்திய பாகிஸ்தான் உறவை புதுப்பித்துக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவின் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு மாம்பழங்களை அனுப்பியது (2014) ரம்ஜான் பண்டிகையையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கும் மாம்பழங்கள் அனுப்பியது (2015) என்ற நிலைகளில் அதிகமான முறையில் பயன்படுத்தப்பட்டது மாம்பழ ராஜதந்திரம்.
Independent. 5 September 2014 
கிரிக்கெட் ராஜதந்திரம்/1987 (Cricket diplomacy):
ஆப்கானிஸ்தானை சோவியத் 1987இல் கைப்பற்றிய காலகட்டத்தில் சோவியத் யூனியனால் இந்தியா எதிர்கொண்ட தாக்கத்தைக் குறைக்க அந்நாளைய பாகிஸ்தான் அதிபரான ஜியா உல்ஹக் ஜெய்ப்பூரில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டார். இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைக் காண பெர்வேஸ் முஷாரப் இந்தியா வருகை (2005), 2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதலின் இறுக்கத்தினைக் குறைக்க இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே மொஹாலியில் கிரிக்கெட் போட்டியின்போது மன்மோகன்சிங் சர்தாரியையும் கிலானியையும் அழைத்தமை (2011), ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இந்திய அரசிடம் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அந்த ஆட்டத்தை ஆடுவதற்காக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கக் கேட்டுக்கொண்டமை (2015) என்ற நிலையில் இந்த ராஜதந்திரம் தொடர்கிறது.
Dawn, 15 November 2015
ராக்கெட் ராஜதந்திரம்/1995 (Rocket diplomacy):
ஒரு காலத்தில் விரோதிகளாக இருந்த நாடுகளான ரஷியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராக்கெட் மூலமாக உறவு உண்டாகக் காரணமாக இருந்தது ராக்கட் ராஜதந்திரம். தன்னுடைய ஒரு ராக்கெட்டில் இஸ்ரேலிய விண்கலத்தை ரஷ்யா அனுப்ப மேற்கொண்ட முயற்சியே அது. 

பேருந்து ராஜதந்திரம்/1999 (Bus diplomacy): இந்தியப்பிரதமர் வாஜ்பாயி பயணித்துச்செல்ல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரை வரவேற்க இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதன்முதலாக தில்லி லாகூர் பேருந்து செயல்பாட்டுக்குவந்தபோது அறிமுகமானது பேருந்து ராஜதந்திரம். 
BBC, 20 February 1999
ரயில் ராஜதந்திரம்/2008 (Rail diplomacy):
டாக்காவிற்கும் கொல்கத்தாவிற்குமிடையே நட்பு ரயில் என்ற பெயரில் ரயில் போக்குவரத்து தொடங்கியபோது ரயில் ராஜதந்திரம் அறிமுகமானது. முதல் ரயில் பெங்காளி புத்தாண்டு தினமான ஏப்ரல் 14, 2008 அன்று இயங்க ஆரம்பித்தது. அண்டை நாடுகளுடனான நட்பினை மேம்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டும் சூழலில் மத்திய அரசு பங்களாதேஷ் நாட்டுடனான உறவை மேம்படுத்த ரயில் ராஜதந்திர உத்தியை மே 2016இல் கடைபிடிக்க ஆரம்பித்தது.

ஊஞ்சல் ராஜதந்திரம்/2014 (Swing diplomacy):
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் எவரும் ஏற்காத வகையில் இந்தியாவில் சீன அதிபர் சீசின்பிங்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து உரையாடியபோது கடைபிடித்தது ஊஞ்சல் ராஜதந்திரம். 

தேநீர் ராஜதந்திரம்/2014 (Tea diplomacy):
மோடி, அமெரிக்காவின் 11 முதன்மை நிர்வாக அலுவலர்களுக்கு டார்ஜிலிங், அஸ்ஸாம், நீலகிரி தேநீரை அன்பளிப்பாக வழங்கிய நிலையில் தேநீர் ராஜதந்திரத்தை கடைபிடித்தார். (2014) சேவை வரிகள் மற்றும் ஜி.எஸ்.டி.மசோதா தொடர்பாக நடுநிலையான தீர்வைக் காணும் எண்ணத்தில் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தேநீர் விருந்தளித்து இம்முறையைப் பயன்படுத்தினார். 

விந்து ராஜதந்திரம்/2014 (Semen diplomacy):
கலிபோர்னியச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த கியூப உளவு அமைப்பின் தலைவர் 2245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்க உத்தியான விந்து ராஜதந்திரம் (மார்க் ட்ரான், அமெரிக்கா-கியூபா உறவு : இப்படியும் ஓர் ராஜதந்திரம், தி இந்து, 5 ஜனவரி 2015)
Guardian. 22 December 2014
ஆடை ராஜதந்திரம்/2015 (Dress diplomacy):
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும், அரசு அலுவலாக வெளிநாடுகளில் பயணிக்கும்போதும் பிரதமர் மோடி அதற்கேற்ற வகையில் முறையான ஆடையை அணிகின்றாரா என்ற ஒரு விவாதம் ஏப்ரல் 2015இல் நடந்தது. ஆடையில் அவர் கவனமாக இருக்கவேண்டும் என்ற நிலையில் ஆடை ராஜ தந்திரம் என்பது குறித்து அப்போது பேசப்பட்டது.  அக்டோபர் 2015இல் நடைபெற்ற மூன்றாவது இந்தோ -ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்துகொள்ளும் 54 ஆப்பிரிக்கத்தலைவர்களும் மாநாட்டிற்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது மோடி அணியும் வழக்கமான கையில்லாத சட்டை, நேரு பாணியிலான கோட் மற்றும்  பைஜாமாவை அணிய இந்திய வெளியுறவுத்துறை அலுவலகம் கேட்டுக்கொண்டது. இதன் முதல் மாநாடு 2008இல் இந்தியாவிலும், இரண்டாவது மாநாடு 2011இல் அடிஸ் அபாபாவிலும் நடைபெற்றது.  

செல்பி ராஜதந்திரம்/2015 (Selfie diplomacy):
ட்விட்டர் மற்றும் முகநூல் மூலமாக தன் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளை எடுத்துச்செல்லும் செல்பி ராஜதந்திரம் என்ற நிலையில் மோடி முன்னிலையில் இருக்கிறார்.  ட்விட்டரில் ஒபாமாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மோடி, தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இந்த உத்தியைக் கடைபிடிக்கிறார். அவரது இந்த ராஜதந்திர உத்தி நட்புப்பாலம் கட்டவும் வழக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் வெளிநாடுகளுடன் உறவை வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
Telegraph, 12 November 2015
பேஸ்பால் ராஜதந்திரம்/2016 (Baseball diplomacy):
அமெரிக்க அதிபர் ஒபாமா மார்ச் 2016இல் கியூபா சென்றபோது கடைபிடித்தது பேஸ்பால் ராஜதந்திரம்.  வரலாற்றுச் சிறப்புமிக்க தன்னுடைய கியூபப் பயணத்தின்போது கியூபாவில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியை தன் குடும்பத்தினருடனும், ரால் காஸ்ட்ரோவுடனும் கண்டுகளித்தார் ஒபாமா. 
Washington Post
அமைதி ராஜதந்திரம்/2016 (Quiet diplomacy):
தென்சீனக் கடல் தொடர்பாக உலக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்காமல் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனாவினை அமைதிப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அமைதி நிலையிலான ராஜதந்திரத்தை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பிற ஆசிய நாடுகளை இப்பிரச்சினை உணர்வுபூர்வமாக அன்றி பகுத்தறிவு நிலையில் அமைதியாகக் கையாளப்படவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
Reuters, 14 July 2016
நாய்க்குட்டி ராஜதந்திரம்/2016 (Dog diplomacy):
2012 பூகம்பம் மற்றும் சுனாமியின்போது உதவியமைக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் ஜப்பான் ரஷ்யாவிற்கு ஒரு ஆண் நாய்க்குட்டியை அன்பளிப்பாகத் தந்தது. ஜப்பான்-ரஷ்யா உச்சி மாநாட்டின்போது ஜப்பான் பிரதம மந்திரி ரஷ்ய அதிபருக்கு அதே வகை இனத்தைச் சேர்ந்த பெண் நாயை அன்பளிப்பாகத் தந்து நாய் ராஜதந்திரத்தை கடைபிடிக்க விரும்பியது. ஜப்பானின் செயலுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துவிட்டது.

சுட்டுரை ராஜதந்திரம்/2016 (Twitter diplomacy):
நவாஸ் செரீப் பிறந்த நாள் தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு செரீப்பின் மகள் டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.
The Hindu, 27 December 2016
உள்நாட்டு நிலையில் என்பதைவிடவும் வெளிநாட்டு நிலையில் குறிப்பாக வெளிநாட்டு உறவினை மேம்படுத்திக்கொள்ள ராஜதந்திர உத்தி பல நிலைகளில் அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் நேரடியாகவோ ராஜதந்திர முறையிலோ பயனைத் தருகின்றது. சில நிலைகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதும் உண்டு. இருந்தாலும் அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் நாட்டினை காலங்காலமாக பல்வேறு வடிவங்களில் முன்வைத்துக் கொண்டு வருவதை இந்த ராஜதந்திரங்கள் காட்டுகின்றன. 

அண்மையில் நான் பார்த்த மற்றொரு டிப்ளமசி :
Gunboat diplomacy: A way of making another country accept your demands by using the threat of force (Oxford Advanced Learner's Dictionary, New 8th Edition, 2010)

துணை நின்றவை  
விக்கிபீடியா, Wikipedia, தொடர்புடைய தளங்கள்

8/2/2017இல் மேம்படுத்தப்பட்டது.

17 comments:

  1. நல்ல அலசல். பண்டமாற்று ராஜதந்திரம்!

    ReplyDelete
  2. எத்தனைவிதமான ராஜதந்திரங்கள்... அசர வைக்கும் தொகுப்பு மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  3. ராஜதந்திரத்தில் இன்னும் எத்தனை எத்தனை உத்திகளோ?

    ReplyDelete
  4. எத்தனை தந்திரங்கள் அய்யா
    .நல்ல
    தொகுப்பு.

    ReplyDelete
  5. அடேங்கப்பா ,ராஜதந்திரத்திலும் இத்தனை வகையா ?இருந்தாலும் 'பழம்' கொடுப்பதுதான் நம்பர் ஒன் போலிருக்கே :)

    ReplyDelete
  6. மிக மிக அருமையான தொகுப்பு! நல்ல தகவல்களும் கூட! உங்கள் உழைப்பும் பளிச்சிடுகிறது. வித்தியாசமான ஒரு பதிவு எனலாம்!! மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  7. மாணவர்களுக்கும் பொதுவாசகர்களுக்கும் பயனுள்ள கட்டுரை -இராயசெல்லப்பா

    ReplyDelete
  8. ராஜதந்திரம் பற்றி நன்றாக அலசி உள்ளீர்கள்
    தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  9. அடேங்கப்பா
    இராஜதந்திரத்தில் இத்தனை வகைகளா

    ReplyDelete
  10. நல்ல தகவல்கள். இப்படியாகப்பட்ட ஒரு தேனீர் ராஜதந்திரத்தினால்தானே வாஜ்பாய் ஆட்சி கவிழ சு.சுவாமி உதவினார்.

    ReplyDelete
  11. அடேயப்பா! அரசியலில் சாதாரண விஷயங்கள் கூட எப்படிப்பட்ட முக்கியத்துவம் பெற்று விடுகின்றன! வெகு சுவாரஸ்யமான பதிவு!

    ReplyDelete
  12. பிரமிப்பான வியங்களை தந்த முனைவருக்கு நன்றி
    த.ம.5

    ReplyDelete
  13. முதலில் கருத்துரை இட்டேனே... செல்லில் இட்டதால் பிரச்சனையோ...

    ReplyDelete
  14. ஐயா அவர்களுக்கு நமஸ்காரங்கள்.

    இத்தனை விதமான ராஜ தந்திரங்களை வாசித்து ஆச்சரியப்பட்ட அதே நேரத்தில் தங்களின் ஆராய்ச்சிகளின் தொகுப்பினை கண்டு வியந்தும் போகிறேன்.

    அருமையான பதிவு.

    கோ

    ReplyDelete
  15. மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete