முகப்பு

11 November 2017

அயலக வாசிப்பு : அக்டோபர் 2017

அக்டோபர் 2017 வெளியான அயலக வாசிப்பில் ஆங் சாங் சூசியின் படம் நீக்கம் (டெலிகிராப்), தன்விவரக்குறிப்பு தயாரித்தல் (கார்டியன்), முகப்புக் கடிதம் எழுதுதல் (கார்டியன்), சே குவாரா 50ஆம் ஆண்டு நினைவு (கார்டியன், பிபிசி, அல் சசீரா), சொல்பிழை திருத்தம் (பிபிசி நியூஸ்), மடிக்கணினி நம் கையெழுத்தை ஒழித்துவிடுமா (கார்டியன்), 30 ஆண்டுக்கு முன் பாட்டிலில் அடைக்கப்பட்ட செய்தி கண்டுபிடிப்பு (இன்டிபென்டன்ட்), போலிச்செய்திகளை மாணவர்கள் எதிர்கொள்ளல் (நியூயார்க் டைம்ஸ்), தீபாவளி பற்றிய புகைப்படத்தொகுப்பு (கார்டியன்), தீபாவளி கொண்டாட்டம் (டான்), பருவ நிலை மாற்றத்திற்கான புதிய சொல், உத்தி (கார்டியன்) போன்ற செய்திகளாகும். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம். 
இவற்றில் பிபிசி தளத்தில் வந்த செய்தியில் பிழையை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி நான் எழுதிய கடிதத்தையும், அப்பிழை பின்னர் சரிசெய்யப்பட்டிருந்ததையும்  மறக்கமுடியாத அனுபவமாகக் கருதுகிறேன்.  

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தின் முதன்மை நுழைவாயிலின் அருகே1999 முதல் தொங்கிக்கொண்டிருந்த ஆங்சாங் சூகியின் (Ms Aung San Suu Kyi) படம் அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டது. ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினையை அவர் கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது படம் அகற்றப்பட்டுள்ளது. 1967இல் புனித ஹுக் (St Hugh's) கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் அக்கல்லூரி்யின் முன்னாள் மாணவியாவார். சூன் 2012இல் அவருக்கு வழங்கப்பட்ட மதிப்புறு முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்கவில்லை என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. (நன்றி  : டெலிகிராப்)



பணிக்கு விண்ணப்பிப்போர் கவனிக்க. உங்களுடைய தன்விவரக்குறிப்பு எளிமையாகப் படிக்கும் வகையிலும், சுருக்கமாகவும், எண் அடிப்படையில் புள்ளி விவரங்களைக் கொண்டதாக இருக்கட்டும். பணிக்கு உங்களை அமர்த்துவோர் உங்களுடைய தன்விவரக்குறிப்பினைக் கவர ஐந்து வழிகள் உள்ளன.  (நன்றி  : கார்டியன்)


பணிக்கு விண்ணப்பிப்போர் முகப்புக் கடிதத்திற்கு (cover letter) முக்கியத்தும் தர வேண்டும். அதில், உங்களை பணிக்கு அமர்த்தவுள்ள நிறுவனத்தின் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்யமுடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட வேண்டும். 'நான்' என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். சுருக்கமான, புரிதலுள்ள முகப்புக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்விவரக்குறிப்பே பணிக்கு அமர்த்துவோரின் கவனத்தை ஈர்க்கும்.  (நன்றி  : கார்டியன்)


நவம்பர் 1966, நடுத்தர வயதுடைய உருகுவே நாட்டைச்சேர்ந்த வணிகரான அடோல்போ மேனா கான்சாலெஸ் (Adolfo Mena González) பொலிவியாவிலுள்ள லா பாஸ் (La Paz, Bolivia) செல்கிறார். இல்லுமானி மலையில் ஒரு விடுதில் தங்குகிறார். தன்னைத்தானே புகைப்படம் - கூடுதல் எடையுள்ள உடம்பு, வழுக்கைத்தலை, வாயில் எரிந்துகொண்டிருக்கும் சுருட்டுடன் - எடுத்துக்கொள்கிறார். உண்மையில் அவர் அர்ஜன்டைனாவில் பிறந்த புரட்சிக்காரரான, சே குவாரேவே தவிர, வேறு யாருமல்ல. 11 மாதம் கழித்து. அவருடைய மற்றொரு உருவம் கொண்ட புகைப்படம் உலகமெங்கும் காணப்பட்டது. ஒரு படுக்கையில், உயிரற்ற அவரது உடல், தலை முடி கலைந்த நிலையில், கண்கள் முழுமையாகத் திறந்த நிலையில். அமெரிக்க உளவுத்துறை அவரது மரணத்தை அறிவிக்கிறது. அழுக்காகவும், ரத்தமாகவும் இருந்த அவரது உடலை சுத்தம் செய்ய உதவிய செவிலியரான சுசானா ஒசிநாகா (Susana Osinaga, 87) : “அவர்கள், அவரைப் பார்க்க இயேசுவைப் போல இருப்பதாகக் கூறினர்,” ”மக்கள் அவரை இன்னும் புனித எர்னெஸ்டோ என்று கருதி வழிபடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் அவர் இன்னும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று”. அடுத்த திங்கள்கிழமை, 9 அக்டோபர் 2017 அவர் மரணித்த 50ஆம் ஆண்டு.  (நன்றி  : கார்டியன்)


சேகுவாரா பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்ட 50 ஆம் ஆண்டு நினைவு நாளன்று கியூபாவிலுள் சான்டாகிளாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் கியூபாவின் அதிபரான ரால் காஸ்ட்ரோ. அவர் சேகுவாராவின் சமாதியில் வெள்ளை ரோஜாவை வைத்ததை பலர் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்தனர். "நாங்கள் அவரை மிகவும் நெருக்கமாக வைத்துள்ளோம். எங்களுக்கு அருகிலேயே அவரை வைத்துள்ளோம்.....அவருடைய உருவத்தை எங்களுடைய மார்பிலும் இதயத்திலும் வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகிறோம் " என்றார் ஒருவர். சேகுவாரா இறந்ததை பீடல் காஸ்ட்ரோ கியூப மக்களுக்கு 1967இல் அறிவித்தது தொடர்பான பேச்சிலிருந்து சில வரிகள் ஒலிபரப்பப்பட்டன. அதில் அவர் கியூப குழந்தைகளிடம் "சேகுவாராவைப் போலிருங்கள்", என்று சொன்ன வரிகளும் இருந்தன.  (நன்றி  : பிபிசி)


Cubans remember Che Guevara 50 years after his death (http://www.bbc.com/news/world-latin-america-41544497?SThisFB) என்ற தலைப்பில் BBC Newsஇல் நேற்று ஒரு செய்தி்க்கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ஒரு சொற்றொடரில் "An except of......" என்றிருந்தது. except என்ற சொல்லுக்குப் பதிலாக excerpt என்றிருக்கவேண்டும் என்று BBC Newsக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். தற்போது அ்ந்த திருத்தம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டேன். ஒரு வித்தியாசமான, மறக்கமுடியாத அனுபவம். 
Before correction: "An except of Fidel Castro's speech in 1967 announcing the death of Che Guevara to the Cuban people was played in which he famously urged Cuban children "to be like Che", a slogan that endures today." 
After correction: "An excerpt of Fidel Castro's speech in 1967 announcing the death of Che Guevara to the Cuban people was played in which he famously urged Cuban children "to be like Che", a slogan that endures today." 
 (நன்றி  : பிபிசி)

சே குவாரா கொல்லப்பட்டு 50 ஆண்டுகள்......பொலிவியர்கள் நினைவுகூர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். 

மடிக்கணினி தேவைதான், ஆனால் கையெழுத்துப் பழக்கத்தையே அது ஒழித்துவிடும் என்ற நிலை வரும்போது சற்றே யோசிக்கவேண்டும். இப்போதைய மாணவர்கள் பெரும்பாலும் மடிக்கணினியையே சார்ந்திருப்பதால் தொடர்ந்து அவர்கள் அதன்மூலமாகவே தேர்வு எழுதும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பின்னர் அவர்களுடைய கையெழுத்து என்னவாகும்?   (நன்றி  : கார்டியன்)


கிட்டத்தட்ட 30ஆண்டுகளுக்கு முன் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்ட செய்தி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 26 செப்டம்பர் 1988இல் மிராண்டா சவேஸ் என்ற எட்டு வயது பெண் குழந்தை ஒரு செய்தியை எழுதி பாட்டிலுக்குள் அடைத்து கடலில் எறிகிறாள். அந்த பாட்டில் அட்லாண்டிக் கடற்கரையில் தென் பகுதியில் 90 மைல்களைத் தாண்டி ஜார்ஜியாவிலுள்ள சாபேலோ தீவினை அடைகிறது. டேவிட் லிண்டா தம்பதியினர் அதனை 2017இல் கடற்கரையில் கண்டுபிடித்து எடுக்கின்றனர். அதில் எழுதப்பட்டுள்ள செய்தியைப் பார்க்கின்றனர். சவேஸ் தன் முகவரியை அந்தத் துண்டுக் காகிதத்தில் எழுதியிருந்தபோதிலும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து அந்த வீடு அம் முகவரியில் இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. கடற்கரையில் தாம் கண்டுபிடித்ததை முகநூலில் பகிர்ந்துகொள்கின்றனர். அச்செய்தி முகநூலில் பரவி லிண்டா சவேஸைக் கண்டுபிடிக்க உதவியது. 1989இல் அடித்த ஹுகோ சூறாவளியையும் சமாளித்து 28 ஆண்டுகள் அந்த பாட்டில் அப்படியே இருந்தது சவேசுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. சவேஸ், இந்நிகழ்வு தன் இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது என்றும், அக்கால பள்ளி நண்பர்கள் பலர் ஒன்றுசேர உதவியது என்றும், வாழ்க்கையின் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணத்தைத் தந்தது என்றும் கூறுகிறார். 
அவரைக் கண்டுபிடிப்பதற்காக லிண்டா தன் முகநூல் பக்கத்தில் இந்த பாட்டிலைப் பற்றியும் அதிலிருந்த செய்தியைப்பற்றியும் எழுதிய பதிவு இதோ : "இன்று காலை சாபொலோ தீவில் நாங்கள் கடற்கரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது என் கணவர் டேவிட் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்பினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 29 ஆண்டுகளுக்கு முன்பாக எடிஸ்டோ என்னுமிடத்தில் தூக்கியெறியப்பட்ட பாட்டிலை அவர் இங்கு கண்டார். நகரின் பெயர் இருந்தபோதிலும்கூட தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் இணைப்பினைப் பெறமுடியவில்லை. நா்ங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.கொலம்பியாவில் அவரது தொடர்பு எண்ணைப் பெறமுடிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்" 
 (நன்றி  : இன்டிபென்டன்ட்)

இத்தாலியில் உள்ள பள்ளிகளில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அவற்றில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போலிச் செய்திகளை (fake news) அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல உத்திகள் அடங்கும். (நன்றி  : நியூயார்க் டைம்ஸ்)

பருவ நிலை மாற்றத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு புதிய உத்தி CliFi – Climate fiction வாசிப்பதாகும்.  (நன்றி  : கார்டியன்)


தீபாவளி விழாவில் கொல்கத்தாவில் களத்தில் குத்துச்சண்டை வீரர்கள், நேபாளத்தில் காட்மண்டுவில் விழாவின்போது ஒரு பூசாரி பசுவிற்குக் கீழ் தவழ்ந்து செல்லல், அமிர்தரசில் வெடிக்கடையில் வெடி வாங்கும் சிறுவன், அமிர்தரஸ் தங்கக்கோயிலில் குழுமியிருக்கும் சீக்கியர், மின்னொளியில் தங்கக்கோயில், சண்டிகரில் அமைதியைக் குறிக்கும் வகையில் மின்னொளியில் உலகமும் புறாவும், ஹைதராபாத்தில் தன் வீட்டு நிலைப்படியில் விளக்கேற்றும் பெண்மணி, காஷ்மீரில் அக்னூரில் ராணுவ வீரர்கள் மத்தாப்பு கொளுத்துதல், அலகாபாத் மதன்மோகன் மாளவியா அரங்கத்தில் ஒரு சிறுவன் மெழுகுவர்த்தி ஏற்றல், எரியும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மதன்மோகன் மாளவியா அரங்கம், கின்னஸ் சாதனை படைப்பதற்காக தீபாவளியை முன்னிட்டு அயோத்யாவில் சரயு ஆற்றங்கரையில் ஒரே இடத்தில் அகல் விளக்குகளை மக்கள் ஏற்றுதல், சமய வழிபாட்டின்போது கொழும்புவில் ஒரு பெண் விளக்கேற்றல், தீபாவளியை முன்னிட்டு கோயிலில் மக்கள் வழிபாடு, கொழும்புவில் அழகாக ஏற்றிவைக்கப்பட்ட அகல் விளக்குகள், ஆஸ்திரேலியாவிலுள்ள மின்னொளியில் சிட்னி ஆபரா போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தீபாவளி நிகழ்வினைப் பகிர்கிறது கார்டியன்.


இந்துக்களும் சீக்கியர்களும் பூசை செலுத்துதல், இனிப்புகளைத் தயாரித்தல், பரிசுகளை பரிமாறிக்கொள்ளல், இல்லங்களை அலங்கரித்தல், புத்தாடை அணிதல், கோலமிடுதல், வெடி வெடித்தல் போன்ற பல நிலைகளில் தீபாவளியைக் கொண்டாடினர். பாகிஸ்தானில் தீபாவளி கொண்டாட்டம், படங்களுடன் (நன்றி : டான்)

17 comments:

  1. சுவாரஸ்யமான குறிப்புகள்.

    ReplyDelete
  2. 30 ஆண்டுகளுக்குப்பிறகு கிடைத்த செய்தி ஆச்சர்யமளிக்கிறது.

    பகிர்ந்த முனைவர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. அயலக வாசிப்பு.
    மிக அருமையான பகிர்வு ஐயா.

    ReplyDelete
  4. எல்லாமே படிக்க சுவாரசியமாக இருந்தன.

    ReplyDelete
  5. சுவாரஸ்யம்.....

    உங்கள் மூலம் பல அயலக தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி. நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  6. தகவல்களின் கதம்ப மாலை மணமாய் இருந்தது!!

    ReplyDelete
  7. தன் விவரக் குறிப்பு பற்றி எனக்குப் பிடித்தது.
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
  8. அயலகச் செய்திகளின் அணிவகுப்பு அருமை. கைகளால் எழுதும் வழக்கம் மெல்ல மறைந்து வருவது குறித்த செய்தி என்னுள் ஏதோ செய்கிறது.
    நானும் அந்தத் தவறைச் செய்பவன் என்ற குற்ற உணர்வாக இருக்கும் என நினைக்கிறேன்.
    வழக்கம்போல் பயனுள்ளப் பதிவு.

    ReplyDelete
  9. சுவாரஸ்யமான செய்திகள். நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  10. பயனுள்ள செய்திகள் பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. மிகவும் வித்தியாசமான செய்திகளை அயல்நாட்டு மீடியாவிடமிருந்து கொணர்ந்திருக்கிறீர்கள். குறிப்பாக லேப்-டாப் தேவைதான். ஆனால் அது கையினால் எழுதுவதையே அழித்துவிடுமென்றால்..என்ற செய்தி இந்தத் தலைமுறை கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று. இப்போதிருக்கும் ஆரம்பநிலை ஆசிரியர்களும் மாணவர்கள் நன்றாக எழுதுகிறார்களா, கையெழுத்து சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பெற்றோருக்கோ ஆயிரம் வேலை..யார்தான் கவனிக்கிறார்கள் சிறுவர்களை, சிறுமிகளை?

    ReplyDelete
  12. எல்லாமே சுவாரஸ்யமான செய்திகள்! திரு.ஏகாம்பரனின் கருத்துக்கள் அருமை!!

    ReplyDelete
  13. தீபாவளி சமயத்தில் இந்தியா எப்படி ஒளிர்கிறது என்று வானிலிருந்து எடுத்த படம் ஒன்றினைப் பகிர்ந்திருக்கிறேன் நிறைய செய்திகளின் தொகுப்பு பாராட்டுகள்

    ReplyDelete
  14. ஆங்சாங் சூகிக்கு அளித்த நோபல் பரிசை கூட திரும்ப பெறவேண்டும் என விரும்புகிறேன்

    ReplyDelete
  15. நிறைய ஸ்வாரஸ்யமான தகவல்கள் முக்கியமாக கையெழுத்து அழிந்துவிடும் நிலை...ஆம் இப்போதெல்லாம் கணினியில் தட்டிக் கொண்டிருப்பதால் எழுதும் பழக்கம் குறைந்துதான் வருகிறது.
    துளசி: ஆசிரியர் என்பதாலோ என்னவோ இன்னமும் கையால்தான் எழுதுகிறேன். பதிவுகள் கூட கையால்எழுதுவதுதான் வழக்கம்.
    கீதா: கணினியில்தான் பதிவுகள் கூடத் தட்டுகிறேன் பேப்பரில் எழுதி பின் தட்டுவது நேரம் ஆவதால் நேரடியாக கணினியில்...கையால் எழுதுவது சிரமமாகுவதும் தெரிகிறது.

    போலி செய்திகளை அடையாளப்படுத்துவது பள்ளியில் அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம்.

    கீதா: சுயவிவரம் எழுதுவது குறித்தான குறிப்பாக நான் அதிகம் பயன்படுத்தக் கூடாது என்பது மகன் தன் இன்டெர்ன்ஷிப்பிற்கு அப்ளை செய்த போது தெரிந்து கொண்டது. மீண்டும் இங்கு அறிந்து கொண்டேன்.

    அனைத்தும் அருமை

    ReplyDelete
  16. அயலக வாசிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதிலும் ஆண்டுகள்பல கடந்து ஒரு பொருள் கிடைக்கப்படுகிறது என்றால் வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete