முகப்பு

04 November 2017

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியை அண்மையில் நிறைவு செய்தேன். ஆழ்வார்களில் அதிகமாக பாசுரங்கள் பாடியவர்களில் திருமங்கையாழ்வார் முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். பெரிய திருமொழியில் அவர் பாடியுள்ள 1084 பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் காண்போம். 

முற்ற மூத்துக், கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்றகால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பரு முலை ஊடு, உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே. (968)
முழுவதும் மூப்படைந்து ஊன்றுகோலை உதவியாகக் கொண்டு முன்னே வைக்க வேண்டும் அடியைத் தலைகவிழ்ந்து பார்த்து, முறிந்த கால் போலத் தடுமாறி, ஓர் இடத்தில மெதுவாக முயன்று அமர்ந்து இளைப்பு வந்து மேலிடும் காலம் வருவதற்கு முன்பே பெற்ற தாயின் வடிவு கொண்டு வந்து பூதனை என்னும் பேய்ச்சியினது பெரிய முலை வழியே அவள் உயிரை வறண்டு போகுமாறு உறிஞ்சிக் குடித்த வாயையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவதரியை வணங்குவோம்.

உலவுத் திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ! புண்ணியனே! புகுந்தாயைப் போகலொட்டேன்
நிலவு மலர்ப் புன்னை, நாழல் நீழல், தண் தாமரை மலரின்மிசை, மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே! (1194)
எப்போதுமுள்ள மலர்களை உடைய புன்னை மரங்கள் ஞாழல் மரங்கள் ஆகியவற்றினுடைய நிழலில் தாமரைப் பூவின் மேல் ஆண் நண்டுகள் படுத்துக் கொண்டிருக்கும் வளம் உடைய அணியாலி அம்மானே! அலை வீசும் திருப்பாற் கடலில் சயனித்திருந்து (சமயம் பார்த்து இருந்து) அங்கிருந்தும் ஓடிவந்த உனது அடியவனான  என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட அறிஞனே! என்னுடைய புண்ணிய வடிவானவனே! என்னிடம் வந்து சேர்ந்த உன்னை, இனி வேறிடம் போக விடமாட்டேன்.

 துவரித்த உடையவர்க்கும், தூய்மை இல்லாச் சமணர்க்கும்,
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை,  தன் அடைந்த
எமர்கட்கும், அடியேற்கும், எம்மாற்கும், எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது – தென் அரங்கத்தே. (1405)
காவித்துணியை உடுத்துத் திரியும் பௌத்தர்களும் தூய்மையற்ற சமணர்களுமான அவைதிகர்கள் விஷயத்தில் அருள் செய்யாதவனும், வைதிகர்களுக்கு அருள் செய்பவனும், தன்னையே அடைந்த என்னைச் சேர்ந்தவர்களுக்கும், அடியேனுக்கும், என் தகப்பனாருக்கும், என் தாய்க்கும், நித்திய சூரிகளுக்கும் சுவாமியாய் இருப்பவனுமான பெருமானைத் தென்னரங்கத்தே கண்டேன்.

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள், ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்,
வேள்வும் விழவும் வீதியிலி என்றும் அறாத ஊர்,
நாளும் நறையூர் – நாம் தொழுதும், எழு நெஞ்சமே! (1485)
வாள் போன்று அழகிய கண்களை உடைய பெண்கள் தாங்களே ‘இவன் மன்மதனே’ என்று முன்பு கொண்டாடிச் சொன்னவர்களைக் குறித்து ‘கோழையோடு கூடித் தளர்ந்திருக்கின்ற இந்தக் கிழவன் வந்த காரியம் என்னவென்று கேளுங்கள்’ என்று இகழ்ந்து சொல்வதற்கு முன்னே திருவீதிகளில் யாகங்களும் விழாக்களும் ஒருநாளும் விட்டு நீங்காத ஊராகிய திருநறையூரை நாள்தோறும் நாம் வணங்க நெஞ்சமே எழுவாயாக!

வந்தாய், என் மனத்தே; வந்து நீ புகுந்த பின்னை,
எந்தாய்! ­­­ போய் அறியாய் இதுவே அமையாதோ?
கொந்து ஆர் பைம்பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா! உன்னை என்றும் மறவாமைப் பெற்றேனே. (1732)
எம் பெருமானே! என் நெஞ்சினுள்ளே நீ வந்து புகுந்தாய். அங்ஙனம் வந்து சேர்ந்த பிறகு திரும்பிப் போவதை அடியோடு மறந்துவிட்டாய். இந்தப் பேறுதானே போதாதோ?  பூங்கொத்துகள் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்குடந்தையிலே சாய்ந்தருளி திருவுள்ளம் உவந்த அழகனே!  உன்னை என்றைக்கும் மறவாமல் இருக்கப் பெற்றேன்.

சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு, என்
உடலையுள் புகுந்து, உள்ளம் உருக்கி, உண்
விடலையைச் சென்று காண்டும் - மெய்யத்துள்ளே. (1852)
சுடுகாட்டில் சுட்ட சாம்பலைப் பூசுபவனான சிவனுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி அருளினவனும், எனது உடலினுள்ளே புகுந்து நெஞ்சை உருக்கி உண்கின்ற இளைஞனான சர்வேசுவரனை திருநறையூரிலே வணங்கி திருமெய்யத்திலே சென்று சேவிப்போம். 

தொடர்ந்து இவருடைய திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கையை வாசிப்போம்.  

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி :  திருமங்கையாழ்வார்
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

5 நவம்பர் 2017 அன்று மேம்படுத்தப்பட்டது.

39 comments:

  1. ஆழ்வார் பாசுரங்களும், அதன் தமிழாக்கமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தமிழ்த்தேனை சுவைத்தேன்.

    ReplyDelete
  3. மிக எளிய விளக்கம்...

    பெருமானை சேவித்தேன்...

    ReplyDelete
  4. அருமை ஐயா....
    பாடலும் விளக்கமும்...

    ReplyDelete
  5. ஒவ்வொரு விளக்கமும் மிக அருமை...

    ReplyDelete
  6. சமீபத்தில் திருமூலரின் சில பாசுரங்களைப் படித்தேன். நேற்று ஒரு சிந்தனை. அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த மனதை தினமும் சற்றே நிறுத்தி, ஓரிரு ஆழ்வார் பாசுரங்கள், திருமூலர் / சித்தர் பாடல்கள் எனக் கொஞ்சம் அருந்தவைக்கலாமா என.

    இன்று உங்கள் பக்கத்திற்கு வந்தால் திருமங்கை ஆழ்வார் ஸ்வாமிகள்!

    ஆழ்வார்களின் அமுதத்தை நீங்களும் பருகுங்கள். எமக்கும் பருகக்கொடுங்கள். புண்ணியம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆழ்வார்கள் எழுதியவைகளையே பாசுரங்கள் எனவழைக்கும் முறை உண்டு. வைணவர்கள் அருளிச்செயல்கள் என்ப. திருமூலர் எழுதியவைகளுக்கு வேறு பெயர் இருக்கும். நாயன்மார் எழுதியவைகள் பதிகங்கள் என்ப.

      மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் ஆழ்வார்களின் அருளிச்செயல்களை இலக்கிய இரசனையோடு ''அருந்தன்று''. அவர்களும் அந்நோக்கத்தில் - அதாவது, தாம் இலக்கியம் படைக்கிறோமென்று நினைத்து எழுதவில்லை. தங்கள் இறைபக்தியின் வெளிப்பாடுகளாகவா அருளிச்செயல்கள் புரிந்தார்கள். தாம் பெற்ற இறையருளைப் பிறரும் பெறுக என்றதே நோக்கம்.

      இலக்கிய இரசனையாகவும் எடுத்து வாசிக்கலாம். முனைவர் ஜம்புலிங்கம் அதைத்தான் செய்கிறார் இங்கே. ஆனால் அஃது ஆழ்வார்கள் நோக்கத்தை எடுக்காமலிட்டதாகும்.

      இவண்

      ப.விநாயகம்
      https://wordpress.com/posts/throughalookingglassalaymanreflects.wordpress.com

      Delete
  7. அருமை ஐயா! சுவைத்தோம் தமிழினையும், அதன் சுவையையும்! உங்கள் விளக்கத்தையும்

    கீதா

    ReplyDelete
  8. தமிழ் வாழ தங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  9. //பெற்ற தாயின் வடிவு கொண்டு வந்து பூதனை என்னும் பேய்ச்சியினது பெரிய முலை வழியே அவள் உயிரை வறண்டு போகுமாறு உறிஞ்சிக் குடித்த வாயையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவதரியை வணங்குவோம்.//

    திருவதரி என்பது பத்ரிநாத். உத்ராகண்ட மாநிலத்தில் இமயமலையடிவாரப் பெருமாள் கோயில். போனமாதம் மோடி சென்றுவந்தார்.

    மேலேயுள்ள பொழிப்புரையில் தாயின் வடிவு கொண்டு வந்த பூதனை என்றிருப்பது, பூதம் தாய் வடிவில் வந்தததா? பெருமாள் வந்தாரா என்ற குழப்பம் விளைகிறது. கிருஸ்ணரின் தாய் வடிவில் வந்ததது பூதமே. ஆழ்வார் சுட்டுவது அவளைத்தான்.


    ப.விநாயகம்
    https://wordpress.com/posts/throughalookingglassalaymanreflects.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துகளுக்கு நன்றி. நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நன்னோக்கில் இப்பதிவு. கீழ்க்கண்ட நூலில் பக்கம் 572இல் பாடலும், அதற்கெதிரே பக்கம் 573இல் உரையும் உள்ளது. அதனை அப்படியே தந்துள்ளேன்.

      Delete
    2. விநாயகம் - 'பெற்ற தாயின் வடிவில் வந்த (எழுத்துப்பிழையால் 'வந்து' என்று காணப்படுகிறது). பூதனை என்ற அரக்கி, தாய் வடிவில் வந்தாள் என்பது கருத்து.

      Delete
    3. அது எனக்குத் தெரியும். ஒரு புதிய வாசகர் எப்படி புரிந்துள்ளார் என்பதை பார்க்கவே இங்கு வந்து படித்தேன்.

      Delete
    4. //...என்ற நன்னோக்கில் இப்பதிவு. கீழ்க்கண்ட நூலில் பக்கம் 572இல் பாடலும், அதற்கெதிரே பக்கம் 573இல் உரையும் உள்ளது. அதனை அப்படியே தந்துள்ளேன்.//

      There you go again.

      உங்களது நோக்கத்தில் குறை காணவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில்தான் குறை. திருக்குறள் உங்களுக்கு நன்கு தெரியும். அதில் ஒரு குறளுக்குப் பொருளை ஒருவர் ஏடா-கூடாமாக விளக்கி நூல் போட்டால், அப்படியே எடுத்துப்போட மனம் வருமா? அப்படியே போட்டாலும் - இவர் எப்படி உட்டான்ஸ் விடுகிறார் பாருங்கள் என்றுதானே சொல்வீர்கள்? உங்களுக்கு இப்போதுதான் பெரிய திருமொழி பாசுரங்கள் தெரிய வர, கண்ணில் பட்ட நூலையெடுத்து வாசித்து - வியந்து விட்டீர்கள். If blind leas the blind, both shall into the pitch என்று விவிலியம் சொல்லும். சரிதான்.

      ப.விநாயகம்
      https://wordpress.com/posts/throughalookingglassalaymanreflects.wordpress.com

      Delete
  10. //...அவைதிகர்கள் விஷயத்தில் அருள் செய்யாதவனும், வைதிகர்களுக்கு அருள் செய்பவனும், ..//

    1485 பாடலில் இதில்லையே? ஆழ்வார் இறைவன் முன் அனைவரும் சமம் என்று நினைத்து வாழ்ந்தவர். இப்பொழிப்புரை அவரின் புகழுக்குப் பங்கம் விளைவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. விளக்கினால் நன்று.

    ப.விநாயகம்
    https://wordpress.com/posts/throughalookingglassalaymanreflects.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. இப்பாடலின் எண்.1405 ஆகும். அதைத்தான் அப்படியே நான் குறிப்பிட்டுள்ளேன். கீழ்க்கண்ட நூலில் பக்கம் 766இல் பாடலும், அதற்கெதிரே பக்கம் 767இல் உரையும் உள்ளது. அதனை அப்படியே தந்துள்ளேன்.(நீங்கள் கூறும் 1485 இதுவல்ல)

      Delete
    2. @விநாயகம்- "ஆழ்வார் இறைவன் முன் அனைவரும் சமம் என்று நினைத்து வாழ்ந்தவர். இப்பொழிப்புரை அவரின் புகழுக்குப் பங்கம் விளைவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. "

      ஆழ்வார், திருமாலின் இயல்புகளைப் பாடுவது. இறைவன் (திருமால்), வைணவர்களிடம், அதாவது 'திருமால் அடியார்'களிடம் அன்பு பூண்டவனே அல்லாது, அந்த வழிமுறை இல்லாது பிற தெய்வங்களை வணங்குகின்ற, 'அவைதிகர்கள்'-அதாவது பௌத்த சமண சமயத்தவர்களின் மீது அன்பு இல்லாதவன் என்று சொல்கிறார். ஆழ்வாரின் சமயக் கொள்கைக்கேற்ப இந்தப் பாடல் அமைந்துள்ளது.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வைதிக என்ற சொல்லே அங்கில்லை. எப்படி வந்தார்கள் வைதிகர்களும் அவைதிகர்களும் கமலக்கண்ணன் பார்வையில்?

      Pa Vinayagam
      https://throughalookingglassalaymanreflects.wordpress.com/

      Delete
    5. அன்புள்ள விநாயகம் - முனைவர் கமலக்கண்ணன் அவர்கள் நோக்கத்தில் நான் தவறு எதையும் காணவில்லை. இந்தத் தொகுதிகளும், ஜெகத்ரட்சகன் அவர்கள் பதிப்பித்த தொகுதிகளும் (அர்த்தத்துடன்) இது போன்ற பலவும் என்னிடம் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில், ஒரு பக்கத்தில் இடது புறம் பாடலும், வலது புறம் அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளன. 'பிரதிவாதி பயங்கரம்' அவர்கள் எழுதியதுபோன்று தீபமாக, முழு விளக்கங்கள் இந்தப் புத்தகங்களில் தரப்படவில்லை, அதற்கு சாத்தியமும் இல்லை. அதனால் கிடைத்த சிறு பகுதியில் அர்த்தத்தைச் சொல்ல, 'வைதிகர்கள்/அவைதிகர்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். நினைவிருக்கட்டும், கமலக்கண்ணன் அவர்கள் முனைவர் மட்டுமல்ல, ஆழ்ந்துபட்ட பரந்த அறிவுமிக்கவர். ஜெகத்ரட்சகன் அவர்கள் வெளியிட்ட நூலில், திருமழிசை ஆழ்வாரின் பாடல்களை, இத்தகைய சிறு பகுதியில் விளக்கமுடியாது என்பதால், பல பாடல்களுக்கு, 'அர்த்தம் தெரிந்த பெரியோர்களிடம் கேட்டுக்கொள்ளவும்' என்றே போட்டிருப்பார்கள். இத்தகைய செயல்கள் புரிந்துகொள்ளக்கூடியன, ஆனால் நோக்கம் பழுதற்றது. நன்றி

      Delete
    6. "பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
      தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
      மீநிலாயது ஒன்றும் ஆகி வேறுவேறு தன்மையாய்
      நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே?"

      இது திருச்சந்த விருத்தத்தின் முதல் பாடல். இதனை 6 வரிகளுக்குள் அர்த்தம் எழுதவும் என்று சொன்னால் எப்படி எழுதுவது? அப்போது புரிந்துகொள்ளத்தக்க விளக்கங்களை அளிக்க இயலாது போகும்.

      உங்களுக்காக இதனைத் தேடியபோது, மாணிக்கவாசகனாரின் similar பாடல் கண்ணில் பட்டது.

      "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
      நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி!
      தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
      வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
      வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி"

      உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். திருமழிசை ஆழ்வாரின் பாடல்கள் சில, அப்படியே சிவவாக்கியரின் பாடல்கள் போலிருக்கும் (அனேகமாக அதேதான்). அதற்கு ஆழ்வாரின் முன் ஜென்மம் சிவவாக்கியர் என்று சொல்வர்.

      Delete
    7. என் கட்சி வேறே. ஒருவர் யார் எனபது நமக்கு தேவையேயில்லை. அவர் நூல் என்ன சொல்கிறதென்பது மட்டுமே கவனத்துக்குள்ளாக்கப்படுகிறது. விளக்கம் முடியாதென்பது தெரியும். ''உயர்வற ...என்று தொடங்கும் திருவாய்மொழி முதல் பாசுரத்துக்கு கோனார் நோட்ஸ் நான்கே வரிகளில் பொழிப்புரை சொல்கிறது. ஆனால் அப்பாசுரத்துக்கு விளக்கம் பக்கம்பக்கங்களாக வியாக்யான சக்ரவர்த்திகள் எழுதியிருக்கிறார்கள். அவ்வுட்பொருளைக் கேட்டு கூரேசாழ்வார் மூர்ச்சையாய் விழந்த வரலாறு உங்களுக்குத் தெரியும். அவ்வளவு காம்பிளிகேட் ஆன பாடலது. விளக்கம் சொல்லவியலா நிலையெனபதால் விபரீதமாக சொல்லக்கூடாது. வைணவர்களை வைதீகர்கள்-வைதீகர்கள் எனப்பிரித்து ஒருவரைத்தான் பெருமாள் விரும்புவார் என்பது அவர்க‌ளுக்கிடையே சிண்டுமுடியும் வேலை. குற்றம் குற்றமே. முனைவர் செய்தாலென்ன? அவரின் மாணாக்கர் செய்தாலென்ன? இத்துடன் என் வாதம் நிறைவுற்றது.

      Delete
    8. வைதீகர்கள்-அவைதீகர்கள் என்று வாசிக்கவும்

      Delete
    9. படித்துவிட்டேன் விநாயகம். உங்கள் ஸ்டான்ட் புரிந்தது. வைணவர்களை வைதீகர்கள் என்றும், வைணவ சமயம் சாராதவர்களை அவைதீகர்கள் என்றும் சொல்லுவதாகத்தான் நான் புரிந்துகொள்கிறேன்.

      உங்கள் கருத்துக்களில் MERIT இருந்ததனால்தான் நான் பதிலெழுதத் துணிந்தேன். தவறாக எண்ணல் வேண்டா.

      Delete
  11. 1852-ம் பாசுரத்திற்கான தங்கள் விளக்கம் மனதை நெகிழ்வித்தது..

    ReplyDelete
  12. சுவையான பாசுரங்கள். விளக்கமும் கொடுத்திருந்தது நன்று. ரசித்தேன்.

    ReplyDelete
  13. அவருடைய 2031 பாசுரங்களில் சிலவற்றைப் பொருளுடன் காண்போம். - இல்லையே... அவர் சுமார் 1100 பாடல்கள்தானே இயற்றியிருக்கிறார் (திவ்யப்ப்ரபந்தத்தில் பெரிய திருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20, திருனெடுந்தாண்டகம் 30 தானே.

    ReplyDelete
    Replies
    1. 2ஆம் தொகுதியில் நான் மேற்கோளாகக் காட்டியுள்ள நூலில் வந்துள்ள பாசுரங்கள் 948 தொடங்கி 2031இல் முடிவடைகிறது. இறுதி எண்ணை வைத்து அவ்வாறு குறிப்பிட்டுவிட்டேன். எண் வேறுபாட்டை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நீங்கள் கூறிய அடிப்படையில் தற்போது பதிவில் திருத்திவிட்டேன்.

      Delete
  14. அருமையான நூலறிமுகம்
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  15. மிக அருமை சார். என்னவோ இதைப் படிக்கும்போது எனக்கு மார்கழியும் ஆண்டாளும் ஞாபகம் வந்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பன்னிரு ஆழ்வார்களும் தனிதனி வழி. அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட்டார்கள். ஆயினும் வேறுபாடாகவே சிந்தித்தார்கள். ஓரே வீட்டில் தகப்பனும் மகளுமாக வாழ்ந்த பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் சிந்தனை வெவ்வேறு. ஒருவர் திருமாலைக் குழந்தையாக பார்த்து ஒரு தகப்பனின் வாஞ்சையில் வாழ்ந்தார். இன்னொருவர் திருமாலை காதலனாகவும் கணவனாகவும் பார்த்தார். ஓர் ஆழ்வாரை வாசிக்கும்போது இன்னொருவர் நினைவுக்கு வந்தால், இருவரையுமே நாம் இழக்கிறோம். பெரிய திருமொழியின் வாசிப்பு உணர்வு தனியாகவே நிலைக்க வேண்டும். அப்பொழுதே சிறப்பு. இங்கே போடப்பட்வை பெரிய திருமொழி பாசுரங்கள். இதன் படிப்பு பெரிய திருமொழி முழுவதையும் வாசிக்கத்தூண்ட வேண்டும். இலக்கிய வழியின் பேசினால் - அப்படி பேசுவது வைணவருக்கு ஆகாது ! - பெரிய திருமொழி பாசுரங்களில்தான் இயற்கை வருணணை நிரம்ப. ஆழ்வாரின் தமிழ் இலக்கிய இன்பம் வெகுவாக நல்கும். எளிய தமிழ்தான். பகுத்தறிவுப் பார்வையில் பேசினால், திருமங்கை ஆழ்வார் புரட்சிக்கருத்துக்கள் கொண்டவர். புதிய சிந்தனை கொண்டவர். நிலத்தில் எவருக்குமஞ்சா நெறிமுறைகள் கொண்டு வாழ்ந்தவர். பெரிய திருமொழி முழுவதையும் வாசித்தறியுங்கள். இப்படி ஓவ்வொரு ஆழ்வாரும் பலபல முறைகளில் வெவ்வேறு விதமாக பேசினார்கள். எப்படி இவரை வாசிக்கும்போது அவர் வருவார் நினைவில்?

      Pa Vinayagam
      https://throughalookingglassalaymanreflects.wordpress.com/

      Delete
  16. திருமங்கையாழ்வாரின் சமயக்கொள்கை என்ன? அது 1405ல் சொல்லப்பட்டிருக்கிறதா? எவ்வாறு? துவர் உடை- காவி உடை. துவரித்த உடையார் - பவுத்தர்கள். தூய்மையில்லா சமணர்கள் - புவுத்தருக்கு நேர்மாறாக ஆடையில்லாமல் செல்வர். வழிதோறும் சிற்றுயிர்கள் மேல் தம் கால்கள் பட்டு ஹிம்சை ஆகிவிடக்கூடாதென்பதற்காக தூத்துக்கொண்டே செல்வர். உடலின் அழுக்கில் உறையும் பிறயுயிர்கள் கொல்லப்பட்டுவிடுமோவென பயந்து குளிக்க மாட்டார்கள். இதனால் அவர்கள் உடம்பிலிருந்து துர்நாற்றம் வரும். ஆகையினால், தூய்மையில்லாச்சமணர்கள் என்றார். அவர்களுக்கருளமாட்டான் இரங்கன் என்பது அபத்தம். வெறும் உடையின் நிறத்துக்காகவும், உயிர்ப்பலி ஆகிவிடக்கூடாதே என்ற பயத்தில் குளிக்காதவரையும் இரங்கன் வெறுத்தான் என்று சொன்னால் ஏற்கமுடியுமா? ஆனால் அப்படித்தான் சொல்கிறார். பின்னர் அருளாளனை என்கிறார். ஆக, இரங்கன் ஓர் அருளாளன். சமணரும் பவுத்தரும் கடவுட்கொள்கையை மறுத்தோர். வேதங்களை நிராகரித்தோர். வைணவத்தில் வேதங்கள் திருமாலையே தெய்வமாகப் போற்றுவதற்காக தோன்றியவை (சைவர் சிவனையே என்று மாற்றிச் சொல்வர்) அவ்வேதங்களில் வழி பூஜைகள். அவை திருமாலுக்கே. வேதங்கள் திருமாலுக்காகவே எழுந்தவை. ஆக,, வேதங்களை மறுத்தல் திருமாலை மறுத்தலே. தன்னையே விரும்பாதவரிடம் - அதாவது தன் தேவையே வேண்டாதவர்களை- வலியப்போய் அருள் செய்யலாம்தான். அருளாளன் அல்லவா? ஆனால் அவர்கள் - போயா போ! உங்கிட்ட வந்து நாங்க கேட்டோமா?'' என்று கேட்டால்? எனவே அவர்களுக்கு அருள் செய்தல் ஒரு இமபாசிபிலிட்டி. எனபதையே அவர்களுக்கு அருள் செய்ய மாட்டான் இரங்கன் என்று பொருள். (தொடர்கிற்து)

    ReplyDelete
  17. அடுத்து வைதீகர்களுக்கு அருள் செய்வான் என்றால், வைதீக வழி நின்று அருள் கேட்டோருக்கு என்று பொருள். எவ்வழியிலும் நின்றும் கேட்கலாம். வழியே தெரியாமல் வெறுமனவே கூப்பிட்டும் கேட்கலாம். கேட்கவே மாட்டேனென்ற, வைதீக‌ வழியை மறுத்த சமணரையும் பவுத்தரையும் பற்றி முன்பு பேசினபடியாலே, வைதீக வழி பற்றியும் பேசவேண்டியதாயிற்று. இந்துக்களில் வைதீக வழியைத் தெரியாதோர் எண்ணிலடங்கா. சாஸ்திர ஞானம் இருப்போருக்குத்தான் வைதீக வழியே சாத்தியமாகும்போது, தெரியாதோரை எப்படி இரங்கன் வெளித்தள்ள் முடியும்? இவரே அப்படிப்பட்ட ஓராள் தான் என்று பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே சொல்லிவைத்தார். (கற்றிலேன் கலைகள்; ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை; பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை; பெருநிலத்து ஆருயிர்க்கெல்லாம் செற்றமே வேண்டித் திரிதருவேன்) அ-வைதீகர்கள் எனச்சுட்டியது, பிறம்தத்தவரைதான்; அவர்களிலும் திருமாலே எமக்கு வேண்டாமென்றவரைத்தான். மற்ற இந்துக்கள் இல்லை. அதே சமயம் தெரியாவிட்டாலும் வைதீக வழியும் ஒரு நல்வழியே என்று ஒப்பி, முடிந்தால் அங்கும் சென்று வழிபடுவதும் - சரியெனக் கொள்வோர். சரியெனக்கொள்ளாரை ஆழ்வார் இரங்கனின் அருளிலிருந்து விலக்கப்பட்டவர் என்றே கொள்வார் (அவரின் சமயக்கொள்கை இதுவே). --cont'd

    ReplyDelete
  18. மூன்றாம் வரிதான் சிறப்பு, தன்னடைந்த எமர்க்கும் = என்னைப்போன்ற இரங்கனிடம் வந்த எளியோர் என்று பொருள்; அடியேற்கும் = எனக்கும்; எம்மாற்கும் == எம்மான்= தகப்பன ; அனை = தாய். ஆக என தாய்-தந்தை என்றது என் சுற்றம்; சுருக்கமாக, நானும் நானறிந்த அனைவருக்கும், இது போக, எப்போதுமே பெருமாளின் பக்கத்தில் திருப்பாற்கடலில் சூழ்ந்திருக்கும் செலஸ்டியல்ஸ் (நித்திய சூரிகள்) அவர்களுக்கு என்ன பொது தமிழ்ப்பெயர்? இவர்களுக்கும் அருள் புரிவோன் இரங்கன். இவர் இவ்வளவு கஷ்டப்பட்டு சொன்னதன் அடிக்கருத்து: எல்லாருக்குமே இரங்கன். அதே சமயம் இரங்கனிடமே வராதவர்களுக்கு இரங்கன் அருள் இல்லை. A clear circumstantial impossibility. All are eligible for Rangan's grace except those who refused his grace. என்னால் இயன்றவரை திருமங்கையாழ்வாரின் புகழை நிறுத்திவிட்டேன. இல்லாவிட்டால் இங்கு போடப்பட்ட பொழிப்புரையைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். (Finis)

    ReplyDelete
  19. தமிழ் வாழ தங்கள் பணி தொடரட்டும்
    பாட்டும் விளக்கமும் இரசித்தேன்.
    tamil manam - 8
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete