முகப்பு

24 December 2017

இந்தியாவின் மகள் (பாகம் 2) : இரா. சரவணன்

நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள், திரு இரா சரணவன் அவர்கள் (9820439010) எழுதியுள்ள இந்தியாவின் மகள் (பாகம் 2) என்னும் புதினத்தின் வெளியீட்டு விழாவிற்காக அழைப்பதற்காக அவருடன் எங்கள் இல்லத்திற்கு 22 டிசம்பர் 2017 அன்று வந்திருந்தார். தன்னை அறிமுகப்படுத்திப் பேசியபோதே சமூகத்தின்மீதான அவருடைய ஈடுபாட்டை அறிய முடிந்தது. இப்புதினத்தின் ஆசிரியர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பணிநிமித்தம் மும்பையில் உள்ள இவர் இந்தியாவில் பல மாநிலங்களுக்குச் சென்று வந்தவர். பணியாற்றும் இடத்திலும், சென்ற இடங்களிலும் இவர் பார்த்த அனுபவங்களை முன்வைத்து, அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்த புதினத்தை எழுதியுள்ளதாகக் கூறினார். 

இன்று (24 டிசம்பர் 2017) மாலை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அந்நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் நூலைப் பற்றி அவருடைய நண்பர்களும், அவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களும், அறிஞர்களும் பேசிய உரைகளை கேட்டேன். 

அவருடைய இந்த புதினம் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும், பிற பெருமக்களும் அருமையாக நூலை மதிப்பிட்டுள்ளனர்.  





217 பக்கங்களைக் கொண்ட அப்புதினம் 55 அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது. சமூக அவலங்களுக்குத் தீர்வு என்ற கருவினைப் பின்புலமாகக் கொண்டு அவர் இப்புதினத்தைப் படைத்துள்ளார். மோனிகா, ஜெயகாந்தன், பிரபு, கார்த்தி, சுதிர், ரோஹிணி, சோனம், ராமுலு, நஞ்சப்பா, அர்ஜுன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், அறிமுகச்சூழல், கதாசிரியர்களின் குணாபாத்திரங்கள், புதினம் செல்லும் போக்கு, ஆற்றொழுக்கமான நடை, என்ற பல நிலைகளில் செறிவாகப் பதிந்துள்ள விதமாக அமைந்துள்ளது. வட மாநிலத்தில் பிறந்த மோனிகா தென் மாநிலமான தமிழகத்தின் முன்னேற்றத்தில் தன் ஈடுபாட்டைக் காட்டி வெளிப்படுத்தும் நிலையில் புதினத்திற்கு இந்தியாவின் மகள் என்று பெயரிட்டுள்ளார்.

ஒழுங்கமைவு
நடிகை மோனிகா தன் வாழ்நாளின் திட்டங்களைக் கூறும்போது அவர் தினமும் காலையில் யோகா செய்வதையும், பின்னர் ஒரு மணி நேரம் தமிழ் கற்பதையும் கூறுகிறார். ஒவ்வொரு பாத்திரத்தின் அமைப்பிலும் இவ்வாறான குணாதிசயங்களைக் கூறுகிறார். வட இந்தியாவைச் சேர்ந்த அந்த நடிகை தமிழக மக்களின் மனதை வென்றதற்கான காரணத்தை அவர் தமிழகத்திற்கு தந்த காற்றாலை சூரிய ஒளி மூலம் மின்சாரத் திட்டத்தினைக் கூறுகிறார். இவரை அடியொற்றி நடிகர் ஜெயகாந்தனும் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்த முனைந்து, அரசின் துணையுடன் நிறைவேற்றுகிறார். 

கணபதி விழா
மும்பையில் நடக்கின்ற விநாயகர் சதுர்த்தி கணபதி விழாவினையும் அங்கு அனைவரும் ஆர்வமாகக் கூடுவதையும் கூறும் அவர், 30 அடி வரையிலான கணபதி காணப்படுவதையும், விழாவின்போது ஐந்து தினங்கள் பூசை நடப்பதையும் கூறுகிறார். புதினத்தில் வரும் கதாபாத்திரம் பூசைக்காக இரண்டு சிலைகளை வாங்கும்போது அங்கு தமிழர் கைவண்ணத்தில் உருவான மாலையைப் பற்றி மண்ணின் மணத்தோடு பேசுகிறார். லால் பாக்சா ராஜாவில் உள்ள பெரிய கணபதியைக் காண நம்மை அழைத்துச் செல்கிறார். மும்பையில் திருப்பதி என்றழைக்கப்படுகின்ற பாலாஜி கோயிலுக்கும் அவரது பயணம் தொடர்கிறது, கதாபாத்திரங்கள் மூலமாக.
        
தஞ்சாவூர் படப்பிடிப்பு
படப்பிடிப்பின் குழுவினரோடு நாம் பயணிப்பதைப் போன்ற உணர்வை அப்படியே கொண்டுவந்துவிடுகிறார். தமிழ்ப்பெண் பாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகையுடன் அக்குழு தஞ்சாவூர், கரந்தை, வடவாறு வழியாகச் செல்லும்போது கரையோரமாக வகுப்பறைகளை நோக்குதல். தொடர்ந்து பல பேரறிஞர்களை உருவாக்கிய 100 ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்கக்கல்லூரியைக் காணல், தஞ்சாவூரில் 3 கல்லூரி இருந்த இடத்தில் 30 கல்லூரி இருந்தாலும் அப்போது இருந்த சுத்தம், இப்போது இல்லையே குப்பை கூளம்தானே என்று ஏங்கல். தஞ்சாவூர் ராஜ வீதி கிருஷ்ணன் கோயிலைக் கடந்து செல்லும்போது, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அடுத்த இடமாக திருவையாறு தியாகராஜர் நினைவிடம், அரசர் கல்லூரி, திருவையாறு அருகே மகாபெரியவரின் தாயாரும், மகாபெரியவரும் பிறந்த இடமான ஈச்சங்குடிக்குச் செல்லல். படப்பிடிப்பு முடிந்து…வடவாறு பாலம் வழியாகப் பயணிக்கும்போது சடுகாட்டின் நிலையை அப்போது இறுதி யாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையோடு ஒப்பிடல். எங்கு பார்த்தாலும் கருவேல மரங்கள் தற்போது நிறைந்துள்ள நிலையினை வருத்தத்தோடு கூறுதல் என்ற நிலையில் மண்ணின் ஏற்ற இறக்கங்களை முன்வைக்கிறார். 

ரசனை
நடிகை மோனிகா வீட்டில் சுவரில் காந்தியின் படம், மும்பையில் காமராஜர் நினைவுப்பள்ளி, மும்பை ரயிலில் 50 வயது பெரியவர் ஒரு காலம் தெரியும்படி நாளிதழ் படித்தல் அனுபவம், மாஸ்டர் டீ அடிக்கும் அழகு, மும்பையில் பயணிக்கும்போது தமிழ்நாட்டிலிருந்துவரும் போனை எதிர்கொள்பவரின் மன நிலை, கடற்கரையில் கரும்புச்சாறை குடிக்கும்போது கதாபாத்திரக்ளின் மன நிறைவு போன்றவற்றில் தன் ரசனைத் தன்மையை வெளிப்படுத்துகிறார்.

பண்பாடு
பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெறல், சாப்பிடுகின்ற நேரத்தில் அலுவலகத்தை நினைக்க வேண்டாம் என்று கூறல், சமையலைப் பற்றிக்கூறும்போது தமிழ்நாட்டுக் கைவண்ணம் சூப்பராக இருக்கு என்று பாராட்டல் போன்ற இடங்களில் பண்பாட்டு மரபுகளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்.

வாசகரை ஈடுபடுத்துதல்
கணவன் மனைவிக்கிடையே மூக்கை நாம் நுழைப்பானேன்? என்று கூறி பாத்திரங்களுக்கிடையேயான உரையாடலின்போது நம்மையும் ஈடுபடுத்திவிடுகின்றார்.

ஆதங்கம்
தமிழர்கள் அதிகம் காணப்படுகின்ற தாராவியில் தமிழகக் கட்சிக்கொடிகளும், கட் அவுட்களும் அதிகமாக இருப்பதைக் காணும்போதும், காலையில் சிலர் நெற்றியில் திருநீறு வைத்தால் மாலை வரை அவர்களின் நெற்றியில் காணமுடிகிறது, தன்னால் முடியவில்லை என மோனிகா ஏங்கும்போதும், டாஸ்மாக்கில் மக்கள் கூட்டம் மோதுவதை ஒரு கதாபாத்திரம் வேதனையோடு காணும்போதும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

உணவு
தமிழகத்தில் இரவு 12 மணி வரை உணவகங்கள் இயங்குவதை ஒரு நோக்கில் ஆச்சர்யத்துடனும் அதே சமயத்தில் அவர்களுக்கு வீடில்லையா, இல்லை சோம்பேறித்தனமா என்று கேட்டு வினாவினை முன்வைக்கிறார். ஒரு புறம் மதராசிகளின் விரும்பிச் சாப்பிடுகின்ற இட்லி, தோசை, வடை பொங்கல், உப்புமா, அப்பம், ஆப்பம் உணவையும் மறுபுறம் மராத்தியர்களின் சப்பாத்தி,பொகா, சிக்கடியுடன் பருப்பு, கொண்டைக்கடலை, மொச்சைப்பயறு, பயத்தம்பருப்பின் உணவையும் மாற்றி மாற்றி ஒப்புநோக்கிவிட்டு, கதாபாத்திரக்ள் தமக்குள் மதராசிகளுக்கு அரிசி சாதத்தினால்  சுகர் வருவதாகவும் வட இந்தியர்களுக்கு அவ்வாறு வர வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்.

தஞ்சையிலிருந்து மும்பை சென்று அங்கு வாழ்கின்ற நிலையில் அங்கு காணப்படுகின்ற ரயில் பயணப்பிரச்னையை முன்வைத்து அதற்கான தீர்வினை தன்னுடைய இந்த புதினத்தில் தந்துள்ளார். இவ்வாறாக அவர் பல சிக்கல்களுக்கு விடையளித்துள்ளார். கலைகளைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறும் அவர் அதற்கான உத்தியைத் தரும் விதம் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.

பிரச்னைகள், தீர்வு
1) மும்பை உள்ளூர் ரயிலில் வருடத்திற்கு 2000க்கு மேல் பயணிக்கின்றார்கள். நாளைக்கு ஆறு பேர் மரணக்கின்றார்கள் என்று வேதனைப்படும் அவர் மும்பை ரயில் பயணத்தில் தினமும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்கிறார். தினமும் பம்பாயிலிருந்து பூனாவிற்கு வந்துசெல்வோரைப் பற்றியும்கூட விவாதிக்கிறார். அவர்கள் தம் பயணத்தின்போது காய்கறி நறுக்கல், கீரை ஆய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதாகவும், வாழ்க்கையின் பல மணி நேரங்கள் ரயில் பயணத்திலேயே செல்வதாகவும் கூறுகிறார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மேம்பாடாக தரை வழியாகவும், கடல்வழியாகவும் பாதை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

2) தமிழகத்தில் நீருக்காக மக்கள் அவதிப்படுவதைக் கண்டு வேதனைப்படுகின்ற அவர் வரிசையாக தண்ணீர் பிடிக்க பிளாஸ்டிக் குடங்களில் மக்கள் நிற்பதை தன் கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்துகிறார். ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளைச் செப்பனிடலை தீர்வாகக் காண்கிறார். சூரிய ஒளி மின்சாரத்தின் முக்கியத்துவத்தினை நுணுக்கமாகக் கூறுகிறார்.

3) வெளிநாட்டில் நம் மக்கள் பணிக்குச் சென்று படும் அவதியை எடுத்துக்கூறும்போது அதிக வட்டிக்குக் கடன் வாங்கி நம்மவர் படும் பாட்டினை மற்றொரு கதாபாத்திரம் மூலமாக எடுத்துக் கூறுகிறார்.  அவ்வாறான ஒரு கதாபாத்திரத்தின் பெயர் நஞ்சப்பா என்று உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல அவருடைய குணமும் அமைந்துள்ளதைக் கூறுகிறார். இவர்களைக் போன்றவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைக்க மாற்று ஏற்பாடு, வழிகள் செய்யப்படுவேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கிறார். 

இவ்வாறாக தஞ்சை மண்ணின் கலைகளைப் பாதுகாக்கவும் செயல்படுத்தவும் முன்வைக்கும் திட்டங்களை அறியவும், புதினம் என்பதற்கு அப்பால் அவர் சமூகத்தின்மீது கொண்ட ஆர்வத்தையும், சமூக அவலங்களை தீர்க்க அவர் தரும் விடைகளையும், யுத்திகளையும் அறிந்துகொள்ள வாருங்கள். அவருடைய இந்நூலை வாசிப்போம். இதுபோன்ற மேலும் பல நூல்களை அவர் எழுத வாழ்த்துவோம்.

நூல் : இந்தியாவின் மகள் பாகம் 2
ஆசிரியர் : இரா. சரவணன் (மும்பை சரவணன்)
பதிப்பாண்டு : 2017
விலை : ரூ.260
மின்னஞ்சல் : rsaravananmum@gmail.com

11 comments:

  1. நூலை முழுமையாக அலசி அதை எங்களுக்கும் ஆவல் கொள்ளும் விதமாய் விமர்சனம் செய்த முனைவர் அவர்களுக்கும், நூலாசிரியர் திரு.மும்பை சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தமிழா! நீ பேசுவது தமிழா?
    என்ற கவிதை அருமை
    தமிழின் தனித்துவம் பேணுவோம்!

    ReplyDelete
  3. மண்ணின் மணத்துடன் கூடிய நாவல் என்று தெரிகிறது. வாழ்த்துகள். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. உங்கள் நூல் நய விவரிப்பு, அந்த நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. நன்றி. நூலை பரவலாக நூல் நிலையங்கள் போன்றவற்றில் வாசிக்க நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது.

    ReplyDelete
  5. நூலைப் பற்றிய விவரங்களுக்கு நன்றி. இந்தியாவின் மகள் என்றதும், அன்னை இந்திரா காந்தியின் வரலாறாக இருக்கும் என்று முதலில் எண்ணினேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் நினைத்தேன்.

      Delete
  6. அறிமுகப்படலத்துடன் நூலின் விமர்சனமும் மிக அழகு படிக்கச் தூண்டும் விமர்சனம் நன்றி

    ReplyDelete
  7. நூலினை அருமையாக முழுமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் ஐயா
    தங்களைப் போன்றோரின் பாராட்டுதல்களும், நெறிப்படுத்துதலும், நண்பர் சரவணனன் அவர்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  8. நல்ல அறிமுகம் ஐயா! விவரங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. ஆஹங்கப்படுவதற்கா விஷயங்கள் இல்லை?அதுவுமொரு சமூகநலப்போக்கு கொண்ட்வருக்கு கதையில் கொண்டு வர சொல்லியா கொடுக்கவேண்டும் வாசிக்கத்தூண்டும் மதிப்பீடு

    ReplyDelete
  10. நூலாசிரியர் சரவணன் மின்னஞ்சல் வழியாக (editorsaravananr@gmail.com)
    தமிழ் நலம் போற்றும் தகவுடைச்சான்றீர்
    பணிவான வணக்கம், முனைவர் ஐயா நான் பயணத்தில் இருந்ததால் உடன் தங்களின் வலைத்தளத்தைக் காண இயலவில்லை. நான் மும்பை வந்து விட்டேன். உடனே பார்த்தேன். இந்தியாவின் மகள் பாகம் இரண்டின் விமர்சனம் அருமை ஒவ்வொரு கோணத்திலும் பார்த்து, ஆய்ந்து விவரித்துள்ளீர்கள். உங்கள்வாழ்த்து என்னை நலம் பெறச் செய்யும். நன்றி.
    பணிவுடன்,-மும்பை இரா. சரவணன்

    ReplyDelete