முகப்பு

20 January 2018

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : முதல் திருவந்தாதி : பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதியை (2082-2181) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



வாய் அவனை அல்லது வாழ்த்தாது; கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா; - பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண், கேளா செவி. (2092)
என் வாயானது எம்பெருமானைத் தவிர வேறு யாரையும் புகழாது. என் கைகள் உலகங்களைத் தாவி அளந்த திருவிக்கிரமனை அல்லது வேறு ஒருவனைத் தொழமாட்டாது. பேயான பூதனையின் நஞ்சை உணவாக அமுது செய்த கண்ணபிரானுடைய திருமேனியையும் திருநாமத்தையும் அல்லது மற்றெதையும் என் கண்கள் காணா; காதுகள் கேட்கமாட்டா.

புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி,
அரி உருவும் ஆள் உருவும் ஆகி; - எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால், மாற்று
எண்ணத்தான் ஆமோ, இமை? (2112)
ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி மற்றொன்றில் திருவாழியை ஏந்தி நரசிங்க உருக்கொண்டு நெருப்பு உருவம் கொண்ட இரணியனின் மார்பை நகத்தால் பிளந்து போட்ட திருமாலினுடைய திருவடிகளைத் தவிர வேறொரு பொருளைக் கண நேரமெனும் நினைக்க முடியுமோ? (முடியாது.) 

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீ இ, -  கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள்
கைந் நாகம் காத்தான் கழல். (2128)
மதம் பிடித்த ஐந்து யானைகள்போன்ற ஐம்பொறிகளையும், ஐம்புலன் வழிச் செல்லாமல் இழுத்துப் பிடித்து, கண்ட இடங்களிலும் திரியவொட்டாமல் செம்மையாக நிலைநிறுத்தி, மிகவும் சூட்சுமமான உண்மையான ஞானத்தால் அவனை உள்ளபடி உணர வல்லவர்கள் முன்பொரு காலத்தில் கஜேந்திர ஆழ்வானைப் பாதுகாத்தவனான அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்.

நன்று பிணி மூப்புக் கையகற்றி, நான்கு ஊழி,
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும், என்றும்
விடல், ஆழி நெஞ்சமே! வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு. (2152)
எம்பெருமனிடத்தில் ஆழ்ந்திருக்கிற நெஞ்சே! நோயையும், கிழத்தனத்தையும் அடியோடு தொலையும்படி விட்டு கைவல்ய மோட்சத்தைப் பெற்றாலும் நான்கு யுகங்களிலும் நிலையாக இருந்து இவ்வுலகம் முழுவதையும் ஆண்டாலும், சக்கரப் படையை உடைய பெருமானிடத்தில் கொண்ட அன்பை விடாமலிரு. உன்னை வணங்குகிறேன் காண்.

வேங்கடமும், விண்ணகரும், வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள் கோவல் பொன் நகரும், - நான்கு
நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே
என்றால், கெடுமாம் இடர். (2158)
திருமலையும், வைகுந்த மாநகரும், திருவெஃகாவும், பூமாறாத நீர் நிலைகளை உடைய சிறந்த திருக்கோவலூர் என்கிற திருத்தலமும் ஆகிய நான்கு திருப்பதிகளிலும், (முறையாக எம்பெருமான்) நிற்பதும், வீற்றிருப்பதும், பள்ளிகொண்டிருப்பதும், நடப்பதுமாய் இருக்கிறான் என்று கூறித் துதித்தால் துன்பங்களெல்லாம் நம்மை விட்டு நீங்கும்.

நாடிலும் நின் அடியே நாடுவன்;  நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன்; சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு,
என் ஆகில் என்னே எனக்கு? (2169)
(மனத்தினால்) தேடும் போது உனது திருவடிகளையே தேடுவேன்; எப்போதும் வாய்விட்டு ஏதாவது சொல்லும் போதும் உனது புகழையே பாடுவேன். (ஏதாவதொன்றைத்) தலையில் அணிவதாயிருப்பினும், திருவாழியைத் தரித்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய அழகிய திருவடிகளையே சூடுகின்ற எனக்கு எது எப்படியானாலென்ன?

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,

14 comments:

  1. தமிழமுதம். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. தங்களின் வாசிப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  3. மிகவும் அருமை சார். ரசித்துப் படித்தேன் :)

    ReplyDelete
  4. தங்களது வாசிப்பு அனுபவம் எங்களுக்கும் பேறு. வாழ்க நலம்.

    ReplyDelete
  5. மிகவும் ரசித்தோம் ஐயா! அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. திருநாமத்தையும் அல்லது மற்றெதையும் என் கண்கள் காணா; - 'அல்லாது' என்று வரவேண்டும். இல்லைனா அர்த்தமே மாறிவிடுகிறது. அவரது புத்தகத்தில் எழுத்துப்பிழை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதை ஏற்கிறேன். அல்லாது என்றுதான் இருக்கவேண்டும். நூலில் அல்லது என்றே உள்ளது.

      Delete
  7. தமிழமுதத்தில் மூங்கிக் குளித்தேன். ரசிக்க வைத்த உங்களுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  8. முக்தி தரும் முதல் திருவந்தாதி
    பொய்கையாழ்வாரின் பக்தி பொய்கையில் மூழ்கி
    பரவசமானது நெஞ்சம்!
    பதிவினை சாற்றிய தங்களை நெஞ்சம் போற்றித் தொழுகின்றது!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. வாசித்து வருகிறேன்.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு ஐயா...
    அருமை.

    ReplyDelete
  11. நல்ல பதிவு. இந்தப் புத்தகம் நானும் 2002 ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன் ,இன்றும் அவ்வப் போது படிக்கிறேன்

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரரே

    நல்ல பகிர்வு. பாடல்களை பொருளுணர்ந்து படிக்கும் போது மனதுக்கு மகிழ்வாகவும் ரம்மியமாகவும் இருந்தது. பக்திப் பாமாலைகளை தொகுத்தளித்த தங்களின் சேவைக்கு நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் என்னும் சிவபுராண வரிக்கேற்ப பதிவை இட்டுள்ளீர்கள்.

    ReplyDelete