முகப்பு

27 January 2018

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்

2017இன் சிறந்த சொல் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 7 ஜனவரி 2018இல் வெளியான என் கட்டுரையைப் படித்து பல நண்பர்கள் கடிதங்கள் எழுதியிருந்தனர். அவை பெரும்பாலும் அகராதிகள், மொழிபெயர்ப்பு, சொல் என்ற அடிப்படையில் அவ்வவற்றின் இன்றியமையா நிலையைப் பற்றி எடுத்துரைத்தன.

அக்கட்டுயைப் படித்த, திருவிடைமருதூரைச் சேர்ந்த திரு தி.சிவசுப்ரமணியன் (80) என்பவர் கட்டுரைக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு, தான் கண்டுபிடித்த புதிய ஆங்கிலச்சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதியில் (OED - Oxford English Dictionary) சேர்ப்பது தொடர்பாக வினா எழுப்பியிருந்தார். அழகான கையெழுத்தால் இருந்த அவருடைய கடிதம் அலுவலக முகவரியிலிருந்து திருப்பிவிடப்பட்டு என் இல்ல முகவரிக்கு 13 ஜனவரி 2018 அன்று வந்து சேர்ந்தது.

கடிதம் வந்த நாளன்றே அவரோடு தொலைபேசிவழி தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன்.  


தொடர்ந்து ஆக்ஸ்போர்டு அகராதியின் தளத்தில் (https://en.oxforddictionaries.com/) நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொல்லைத் சேர்ப்பது தொடர்பான நடைமுறையைத் தேடிக் கண்டுபிடித்தேன். அதனை அவருக்குத் தெரிவித்தேன். 

புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பான முறைகளை அத்தளத்தில் Oxford dictionaries FAQ  : New words FAQ என்ற பக்கத்தில் காணமுடிந்தது. அதில் வினா விடை உத்தியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கமாக மறுமொழி தந்துள்ளனர்.

  • ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிய சொற்கள் எவ்வாறு சேர்க்கப்படுகின்றன?
  • புதிய சொற்களையும், அதற்கான பொருளையும் எவ்வாறு காண முடியும்?
  • ஆங்கில மொழியில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய சொற்கள் இடம்பெறுகின்றன?
  • OED/Oxford Dictionaries.com தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய சொற்கள் இடம்பெறுகின்றன?
  • நான் ஒரு புதிய சொல்லைக் கண்டுபிடித்துள்ளேன். அதனை உங்களுடைய அகராதியில் சேர்த்துக்கொள்ள முடியுமா?
மேற்கண்டவற்றில் இறுதி கேள்விக்கு கீழ்க்கண்ட மறுமொழியைத் தந்துள்ளனர்.
பொதுமக்கள் எங்களுக்கு, தாம் கண்டுபிடித்த சொற்களை அடிக்கடி அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்களது அகராதிகளில் சேர்த்துக்கொள்ளமுடியுமா என்று கேட்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, இக்கேள்விக்கான எங்களின் மறுமொழி இல்லை என்பதேயாகும். ஏனென்றால் முறைப்படியாக அந்த மொழியில் நுழைந்ததாகக் கருதப்படுகின்ற சொல்லையே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். இதற்கு சான்றாதாரமாக நாங்கள் எங்களது தகவல் தரவுதளங்களை (database) நாடுகிறோம். அதனடிப்படையில் மதிப்பிடுகிறோம். இடைவெளியினை நிரப்பும் நிலை அல்லது புதிய ஒன்றை விளக்குதல் என்ற நிலையில் சில புதிய சொற்கள்  மொழியின் முக்கிய அங்கமாக மாறிவிடுகின்றன. உதாரணமாக இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்ட சொற்களாக quark, spoof மற்றும் hobbit போன்ற சொற்கள் உள்ளிட்டவற்றைக் கூறலாம்.

இதனடிப்படையில் நோக்கும்போது புதிதாக நம்மால் கண்டுபிடிக்கப்படுகின்ற சொற்கள் அகராதியில் இடம்பெறுவது சற்று சிரமமே என்று தோன்றுகிறது. இருந்தபோதிலும் அகராதியின் முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

மேற்கண்ட அனைத்து விவரங்களையும் தட்டச்சு செய்து, உரிய பக்கங்களை அச்செடுத்து அவர் படிக்க வசதியாக அவருக்கு உரிய முகப்புக்கடிதம் எழுதி மறுமொழியினை அன்றே அனுப்பினேன். இவர்களைப் போன்ற ஆர்வமுள்ள வாசகர்களின் எழுத்துக்கள் என்னை மென்மேலும் எழுதவைக்கின்றன என்பதைப் பெருமையாக நினைக்கிறேன். ஆங்கில அகராதியில் புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பாக சிந்திக்க வைத்த அவருக்கு நன்றி. 

18 comments:

  1. 80 வயதிலும் இருக்கும் அவரின் ஆர்வத்துக்கு நம் வணக்கங்கள். ஆக்ஸ்போர்ட் புதிய வார்த்தைகள் சேர்ப்பது பற்றிய நடைமுறை விவரங்களும் இதன்மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. தினமணியில் முன்பு இதுபோல இந்தத் தமிழ்ச்சொல்லுக்கான பொருத்தமான ஆங்கில வார்த்தை எது என்று கேட்டு ஞாயிறுகளில் நடுப்பக்கத்தில் ஒரு பகுதி வந்து கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரியவர்
    அறியாதச் செய்திகள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. வியப்புக்குறிய பெருமைமிகு தங்களது பணி பாராட்டுக்குறியது.

    ReplyDelete
  4. how many sons do you have? 5
    howmanyeth son is Ramesh? 4th

    how is it?

    ReplyDelete
  5. மிக சிறப்பான பணி....ஐயா

    தொடரட்டும் தங்கள் சேவை...


    ReplyDelete
  6. தொடரட்டும் தங்கள் சேவை...
    E Anban

    ReplyDelete
  7. 80 வயதில் ஆர்வத்டிற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

    எப்படிச் சேர்ப்பது என்பதையும் தெரிந்து கொண்டோம். மிகவும் பயனுள்ள பதிவு ஐயா.

    மிக்க நன்றி.

    கீதா: நல்ல அழகான புதிய சொல் ஐயா. சில ஐயங்கள் எழுகிறது. அதை இங்கு கேட்கலாமா. இங்கு eth ஈற்றில் வருவது சொல்லப்பட்டுள்ளது சரி. th ஈற்றில் வரும் Sixth, seventh, ninth, tenth, eleventh, twelfth, thirteenth, fourteenth, fifteenth, இப்படி th தானே ஈற்றில் முடிவது பெரும்பான்மை இல்லையா. அப்போது howth என்றே கேட்கலாமோ? அல்லது eth சேர்ப்பதற்கு இலக்கணம் இருக்கிறதா? தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. இலக்கணம் என்பதற்கு மாற்றாக பயன்பாடு என்ற நிலையில் உள்ளதையே ஏற்கலாம் என்பது என் கருத்து.

      Delete
  8. Mr Abdul Latheef (thro: kaviathippu@yahoo.co.in)
    அய்யா, வணக்கம்.
    சிந்தனையைத் தாங்கிநிற்கும் தகவல் தேடுதலில் தங்கள் ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது ஒன்றைத் தேட மற்ற பல செய்திகள் வந்து கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது. என்றாலும் அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் நிறைவளிக்கவில்லை. சேர்க்க முடியாது என்று தகுதி அடிப்படையில்தானே சொல்ல வேண்டும். அப்படியாயினும் அதற்கான காரணத்தைப் பொருந்தும் வண்ணம் கொடுப்பதுதானே முறை. இன்னும் பல சொற்களுடன் முட்டி மோதிப் பார்த்தால், மழைத்துளி விழுந்துகொண்டேயிருந்தால் பாறையில் பள்ளம் ஏற்படும் அல்லவா? நன்றி. அன்பன் நீரை. அத்திப்பூ

    ReplyDelete
  9. இதே கேள்வியைநான் என் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தேன் எனக்குத் தெரிந்து யாரும் சரியாக விடை அளிக்க வில்லை முடியாது என்பதே நான் அறிந்தது அதே கேள்விக்கு அகராதியில் விடை கொடுக்க முயல்வதும் மகிழ்ச்சியே ஆங்கில அகராதியில் நுழைவது எளிதல்ல என்பது தெரிகிறது

    ReplyDelete
  10. அருமையான பதிவு, இப்போ நேரம் போதவில்லை, மீண்டும் வந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று படித்து விபரம் அறிகிறேன்.

    ReplyDelete
  11. தேடல் என்பது தினப்படி யான
    தொழிலாய் அமையும் சிலபே ருக்கே.
    தேடலும் நாடலும் பதிவாய்ப் போடலும்
    தினம்செய் கின்றீர் திடமாய் வாழ்க!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரரே

    தங்கள் சிறப்பான பணியும் ஆங்கில புலமையும் வியக்க வைக்கிறது. பயனுள்ள தகவல்களை அனைவரும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. போற்றுதலுக்கு உரியவர்...
    ஐயா அவர்களைப் பாராட்டுவோம்... போற்றுவோம்.. வாழ்த்துவோம்.

    ReplyDelete
  14. 80 வயதில் அவருக்குள்ள ஆர்வமும் அதை சிரமேற்கொண்டு பதிலளித்த தங்களுக்கும் வணக்கங்கள் பல

    ReplyDelete
  15. மிக நல்ல முயற்சி. எந்த ஒரு வார்த்தையையும் அது எந்த மொழியினுடையதாக இருப்பினும் அதன் புழக்கமே அதன் நிலைத்தலைத் தீர்மானிக்கும்.

    ReplyDelete