முகப்பு

28 July 2018

கோயில் உலா : 21 ஜுலை 2018

21 ஜுலை 2018 அன்று குடும்பத்தாருடன் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும் கோயில் உலா சென்றேன். இவற்றில் திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் (24.12.2016)திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் (17.3.2018), ஆகிய கோயில்களுக்கு முந்தைய கோயில் உலாக்களின்போதும், பிற கோயில்களுக்கு பிற பயணத்தின்போதும் சென்றுள்ளேன். அகஸ்தீஸ்வரர் கோயிலும், தூவாத நாயனார் கோயிலும் இப்பயணத்தில் நான் முதன்முதலாக பார்த்த கோயில்களாகும்.

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் 
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் 
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
அகஸ்தீஸ்வரர் கோயில்
திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோயில்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் கோயில்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
திருவாரூர் தியாகராசர் கோயில்
திருவாரூர் தூவாத நாயனார் கோயில்

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் 
(தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம்)
மூலவர் நீலகண்டேஸ்வரர், இறைவி அழகாம்பிகை. நாவுக்கரசர் பாடல் பெற்ற இத்தலம் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி பெற்ற தலமென்று கூறுகின்றனர். பழைய ஆகம விதிப்படி நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாக் கிரகங்களும் தங்களுக்கான சக்தியை சூரியனிடமிருந்து பெறுவதாகவும் கூறுகின்றனர். அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கி அமைந்துள்ளன. திருவையாறு சப்தஸ்தானம் கேள்விப்பட்டுள்ளோம். அதைப்போல இங்கும் சப்தஸ்தானப் பல்லக்கு விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது.

கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் 
(கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்)
மூலவர் உமாமகேஸ்வரர், இறைவி அங்கவளநாயகி. ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற இக்கோயில் திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலின் உபகோயிலாகும். திருநல்லம் என்னும் பெயர் பெற்ற இக்கோயில் உயர்ந்த நடராஜர் சிலைக்குப் புகழ் பெற்றது. மூலவர் உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும்,  அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் உள்ளனர்.

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் 
(திருவாரூர் மாவட்டம்)
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இக்கோயிலின் மூலவராக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு மேல் சட்டநாதர் உள்ளார். சில சிவன் கோயில்களில் சட்டநாதரைக் காணமுடியும். மூலவர் சன்னதியிலிருந்து வெளியே வந்தபின் மூலவர் சன்னதிக்கு வலப்புறம் மலையீஸ்வரர் சன்னதி உள்ளது.

அகஸ்தீஸ்வரர் கோயில் 
(கொடியலூர், நன்னிலம் வட்டம்,  திருவாரூர் மாவட்டம்)
பயணத்தின்போது திருமீயச்சூருக்கு முன்பாக ஒரு கோயிலைக் கண்டோம். பாடல் பெற்ற கோயிலாகவோ, வைப்புத்தலமாகவோ இருக்கும் என்று நினைத்தோம். இருக்கும் என நினைத்தோம். ஆனால் அவ்வாறில்லை. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலது புறம் எமதர்மராஜனும், இடது புறம் சனீஸ்வர பகவானும் உள்ளனர். மூலவராக அகஸ்தீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு இடது புறம் ஆனந்தவல்லி சன்னதி உள்ளது. சனீஸ்வர பகவானும், எமதர்மராஜாவும் பிறந்த தலமென்று குறிப்புகள் வைத்துள்ளனர்.

திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில் கோயில் 
ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இக்கோயிலின் மூலவர் மேகநாதசுவாமி ஆவார். இங்குள்ள சேத்திரபுராணேஸ்வரர் சிற்பம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். உள்ளூரில் இறைவியின் பெயரில் லலிதாம்பிகை கோயில் என்றழைக்கின்றனர். 

இக்கோயிலின் மூலவர் சன்னதியின் இடது புறம் திருமீயச்சூர் இளங்கோயில் எனப்படுகின்ற கோயில் உள்ளது. மூலவர் சகலபுவனேஸ்வரர் ஆவார். திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகையில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மூலவர் சன்னதிக்கு இடது  புறம் மின்னும் மேகலையாள் உள்ளார். ஒரு கோயில் வளாகத்தில் இரு கோயில்களைக் காண்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

கூத்தனூர் சரஸ்வதி கோயில் 
(திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகேயுள்ளது)

குடமுழுக்கு நிறைவுற்றபின் சரஸ்வதியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சுற்றில் பெற்றோர், தம் குழந்தைகளை அழைத்துவந்து எழுதப் பழக்கப்படுவதைக் காண முடிந்தது.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் கோயில் 
(நாகப்பட்டினம் மாவட்டம்)

திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலின் எதிரே குளம் உள்ளது. குளத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஆழ்வார் ஆச்சாரியார் சன்னதி, உபரி சரவசு சன்னதி, விபீஷணாள்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கண்ணபுர நாயகி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோயிலைப் பார்த்தபோது திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் நினைவிற்கு வந்தது. உடன் அக்கோயிலுக்கு அங்கிருந்து கிளம்பினோம்.

திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் 
(குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்)

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவர் உப்பிலியப்பன் கோயில் மூலவரைவிட சற்று உயரமாக இருப்பதைக் காணமுடிந்தது. இக்கோயிலின் குளம் தொடங்கி கோயில் அமைப்பு முழுவதும் திருக்கண்ணபுரத்தைப் போலிருந்தன. 

திருவாரூர் வன்மீகநாதர் கோயில்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள, நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த அளவிற்கு தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்பதுபோலத் தோன்றுகிறது. மூலவர் வன்மீகநாதர். இறைவி கமலாம்பிகை. சப்தவிடங்கத்தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்களும், 80 விமானங்களும், 12 பெரிய மதில்களும், 13 மிகப்பெரிய மண்டபங்களும், 15 தீர்த்தக்கிணறுகளும், மூன்று நந்தவனங்களும், மூன்று பெரிய பிரகாரங்களும், 365 லிங்கங்களும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட சன்னதிகளையும், 86 விநாயகர் சிலைகளையும், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்களையும் இக்கோயில் பெற்றுள்ளது. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும். (நன்றி விக்கிபீடியா) 
மூலவர் சன்னதியின் இடது புறம் ஆரூ அறநெறி என அழைக்கப்படுகின்ற அசலேஸ்வரர் சன்னதி உள்ளது. இறைவி வண்டார்குழலி. இது அப்பர் பாடல் பெற்றதாகும். ஒரே கோயிலுக்குள் இரு கோயில்கள் என்ற நிலையில் இக்கோயில் உள்ளது. 
திருவாரூர் தூவாத நாயனார் கோயில்
பரவையுண்மண்டளி என்றழைக்கப்படுகின்ற தூவாத நாயனார் கோயில் திருவாரூர் கீழ வீதியில் உள்ளது. மூலவர் தூவாய்நாதர் ஆவார். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை ஆவார். இது சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.
  
துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிபீடியா

நன்றி
உடன் வந்து புகைப்படங்கள் எடுக்கவும், செய்திகள் திரட்டவும் உதவி செய்த என் மனைவி திருமதி பாக்கியவதி, என் மகன் திரு சிவகுரு. சென்ற நினைவாக எங்களின் சில புகைப்படங்கள்.


கோனேரிராஜபுரம் கோயிலில்

திருக்கண்ணபுரம் கோயிலில்

திருமீயச்சூர் கோயிலில்

21 July 2018

தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு

தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சாவூரில் உள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய புதிய செய்திகளையும், புகைப்படங்களையும் கொண்ட அந்நூலை வாசிக்க அழைக்கிறேன். 


நாயக்கர் காலம், மராட்டியர் காலம், அண்மைக்காலம் என்ற வகையில் தஞ்சாவூரில் காணப்படுகின்ற அனுமார் கோயில்களுக்கு நேரில் சென்று விவரங்களைத் திரட்டி, ஆங்காங்கே புகைப்படங்களையும் தந்துள்ளார் நூலாசிரியர். 

நாயக்கர் காலக் கோயில்களாக கோட்டை சஞ்சீவிராயன் கோயில், ஒப்பல் நாயக்கர் பஃக் ஆஞ்சநேயர் கோயில், குருகுல ஆஞ்சநேயர் கோயில், வேட்டை மார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், வல்லம் சஞ்சீவிராயர் கோயில்களையும், மராட்டியர் காலக் கோயில்களாக வீர பிரதாப ஆஞ்சநேயர் கோயில் (மூலை ஆஞ்சநேயர்), நாலு கால மண்டப ஆஞ்சநேயர் கோயில், சூடாம ஆஞ்சநேயர் கோயில் (நாணயக்கார செட்டித்தெரு) உள்ளிட்ட கோயில்களையும்,  மராட்டியர் காலத்திற்குப் பின் வந்த கோயில்களாக வடவாற்றங்கரை அனுமார் கோயில், கொண்டிராஜபாளையம் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களையும் பற்றி விவாதிக்கிறார்.

திரு ஜே.எம்.சோமசுந்தரம் பிள்ளை எழுதிய தஞ்சையிலுள்ள பெரிய கோயில் ஆங்கில நூலில் சுட்டப்பட்டுள்ள 64 கோயில்களில் ஏழு அனுமார் கோயில்கள் உள்ளதையும், அரண்மனை தேவஸ்தானம் தந்துள்ள 88 கோயில்கள் பட்டியலில் ஒன்பது அனுமார் கோயில்கள் உள்ளதையும் குறிப்பிடுகிறார். 

காலப்போக்கில் இடம் பெயர்ந்த அனுமார் பற்றியும், சில இடங்களில் திருப்பணி நடைபெறுவதால் எழுத இயலா நிலை பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஊக அடிப்படையில் தன் கருத்துகளை ஆங்காங்கே பதிந்துள்ளார். 

தஞ்சாவூரிலுள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது. நூலை கையில் வைத்துக்கொண்டு அந்தந்த கோயிலுக்குச் செல்லுமளவிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. 

அனுமாருக்கென தனிக்கோயில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தாலும் தஞ்சாவூரில் சற்று அதிகமெனில் மிகையாகாது என்றும், அவை பழமை வாய்ந்ததாகவும் உள்ளதால் முக்கியத்துவம் அடைவதாகவும், அதனால் தஞ்சாவூரிலுள்ள அனுமன் தனிக்கோயில்களைத் தொகுத்து அளிக்க முன்வந்ததாக முன்னுரையில் கூறுகிறார். 

தஞ்சாவூரிலுள்ள தனியாக உள்ள அனுமார் கோயில்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு சிறந்த ஆவணமாக உள்ள இந்நூலை வாசிப்போம். 

நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலைப் பற்றி பேசும் அரிய வாய்ப்பினை நூலாசிரியர் தந்ததற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விழா நிகழ்வுப் படங்களை அவர் அண்மையில் அனுப்பியிருந்தார். அவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இந்நூலைப் பற்றி, நூல் வெளியான நாளில் விக்கிபீடியாவில் தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் (நூல்) என்ற தலைப்பில் பதிந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழா 







நூல் : தஞ்சாவூர் அனுமார் கோயில்கள்
ஆசிரியர்: ஆவணம் கோபாலன் (திரு கோபாலகிருஷ்ணன் 9958727846)
வெளியீடு : வாயுசுதா பப்ளிகேஷன், தில்லி 110 092
மின்னஞ்சல் : vaayusutha.publications@gmail.com
இணையதளம் : http://publications.vayusutha.in

நன்றி : விழா நிகழ்வு புகைப்படங்களைப் பெற உதவிய தஞ்சாவூர் திரு ராமச்சந்திரன் கோஸ்வாமி 

14 July 2018

அயலக வாசிப்பு : ஜுன் 2018

ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் இந்தியா தொடர்பானவையாகும். கார்டியனில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றியும், டெய்லி மெயிலில் இதழில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள உயரமான நபரைப் பற்றியும் விவாதிக்கிறது. 

நவீனத் தொழில்நுட்பம் குழந்தைகளைப் பாதிப்பதை முன்வைக்கிறது டெய்லிமெயில். குழந்தைகள் இரவில் படுக்கச் செல்வதற்கு முன் பெற்றோர்கள், அவர்களிடமிருந்து போனை வாங்கி வைத்துவிடவேண்டும். அதற்குப் பதிலாக சிறிய அலார்ம் கெடிகாரத்தை வாங்கி வைத்துவிடவேண்டும். இரவு நேரங்களில் தாமதித்துத் தூங்குவதால் உள்ள அசதியை குழந்தைகள் உணர மாட்டார்கள். ஸ்மார்ட்போன் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகின்றன.எதிர்காலத்தில் குழந்தைகளின் அறிவுத்தன்மைகூட இதனால் மழுங்கடிக்கப்பட்டுவிடும். நவீனத் தொழில்நுட்பம் என்பதானது மக்களின் மூளையை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

ஸ்பெயின் நாட்டு நாளிதழான El País தன் 42 வருட வரலாற்றில் முதன்முதலாக ஒரு பெண்மணியை அவ்விதழின் ஆசிரியராக நியமித்துள்ளது. அண்மையில் இந்நாட்டில் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது அதில் அதிகமான பெண்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 67 வயதாகும் சோல்டாட் காலேகோ டயாஸ் (Soledad Gallego-Díaz), 1976இல் அவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளார். புருஸ்ஸேல்ஸ், லண்டன், பாரிஸ், புவனஸ் அயர்ஸ் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களின் அவ்விதழின் நிருபராக இருந்ததோடு, துணை ஆசிரியராகவும் ஆம்பட்ஸ்மேனாகவும் பணியாற்றியுள்ளார்.
உலகின் மிகவும் உயரமான, 7 அடி 6 அங்குலம் உயரமுள்ள, போலீஸ் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளார். தினசரி வாழ்வில் ஜகதீப்சிங் எதிர்கொள்ளும் அனுபவங்களைக் காண்போம். 190 கிலோ எடையுள்ள அவர், தன்னுடைய யூனிபார்மை தனியாக ஒரு டெய்லரிடம் தைக்கவேண்டியுள்ளதாகவும், அவருடைய அளவு ஷுவினை (19) வெளிநாட்டிலிருந்து வரவழைப்பதாகவும் கூறுகிறார். உள்ளூரில் அவரைத் தெரியாதவர்கள் யாருமே கிடையாதாம். அவருடன் பலர் விரும்பி செல்பி எடுத்துக்கொள்கிறார்களாம். இதற்கு முன்பு உயரமான போலீஸ்காரராக கருதப்பட்டவர் இந்தியாவில் ஹரியானா மாவட்டத்தினைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவராவார். அவர் இவரை விட இரண்டு அங்குலம் சிறியவர்.   

நாத்திகர்களைவிட சமய நம்பிக்கை உள்ளவர்கள் நீண்ட நாள்கள் வாழ்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. நாத்திகர்களோடு ஒத்துநோக்கும்போது சராசரியாக நான்கு ஆண்டுகள் அதிகமாகவே அவர்கள் வாழ்கின்றார்களாம். சமூக அரவணைப்பு, அழுத்தத்தை விடுவிக்கும் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வழக்கங்களைக் கடைபிடிக்காமையே அதற்குக் காரணங்களாக அமைகின்றனவாம்.
 
இந்தியாவின் தண்ணீர் பிரச்னையை அலசுகின்ற இக்கட்டுரை 2030 வாக்கில் இந்தியாவின் தேவையில் பாதியளவிற்கான தண்ணீர்தான் கிடைக்கும் என்றும் தற்போது சிம்லாவில் இந்த பிரச்னை ஆரம்பித்துவிட்டது என்று கூறுகிறது. மே, ஜுன் மாதங்களில் 15 நாள்கள் கிட்டத்தட்ட குடிதண்ணீர்க் குழாய்களில் தண்ணீர் வரவில்லையாம். வரலாற்றிலேயே இந்தியா மிக மோசமான அளவிலான தண்ணீர்ப்பிரச்னையை தற்போது எதிர்கொள்கிறது என்றும், சுத்தமான நீர் கிடைக்காத நிலையில் 600 மில்லியன் இந்தியர்கள் தண்ணீர் பிரச்னை தொடர்பான அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்றும், ஒவ்வோராண்டும் சுமார் 2,00,000 பேர் மரணமடைவார்கள் என்றும் அக்கட்டுரை எச்சரிக்கிறது. 
இரு வயது குழந்தை பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டவள் அல்ல என்று டைம்ஸ் இதழ் திருத்தம் வெளியிட்டதைக் கூறுகிறது என்பிசி நியூஸ். ஹோண்டுராவைச் சேர்ந்த அழுகின்ற, இரண்டு வயதுக் குழந்தையின் புகைப்படம், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதாகச் செய்தியுடன் அவ்விதழில் வெளியானது.  


டைம்ஸ் இதழின் அட்டையில் டிரம்பைப் பார்த்து அழுவது போல அக்குழந்தையின் புகைப்படம் இருந்தது. டிரம்பின் கொள்கையை எதிர்க்கும் அளவினை உணர்த்த இப்படம் வெளியிடப்பட்டிருந்தது.  வலிந்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பதைக் கொண்டிருந்த டிரம்ப் தன் கொள்கையை மாற்றிக்கொள்வதற்கு முன்பாக அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை தாயைவிட்டுப் பிரிக்கப்பட்ட குழந்தை இல்லை என்பது பின்னர்தான் தெரிந்ததாம்இவ்வாறாக பாதிக்கப்பட்ட 2,300 குழந்தைகளைப் பற்றி அக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதழில் வெளியானதைப் பார்த்த, அந்தக் குழந்தையின் புகைப்படத்தை எடுத்த, கெட்டி இமேஜசைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் ஜான் மூர் டைம் இதழுடன் தொடர்பு கொண்டு உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளார். அக்குழந்தையின் தந்தை டெய்லி மெயில் இதழிடம் அக்குழந்தை தன் தாயாரிடமிருந்து பிரிக்கப்படவில்லை என்றும், இருவரும் ஒரே இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். "என் குழந்தையின் புகைப்படத்தை அவ்வாறு நான் பார்த்தபோது என் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என நினைத்துப்பாருங்கள். என் இதயமே சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. ஒரு தந்தையாக அதனைப் பார்ப்பது மிகவும் சிரமமே. ஆனால் நான் அவள் அபாயகட்டத்தில் இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதோடு எல்லையை நோக்கி பத்திரமாக தம் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்என்றார் அவருடைய தந்தை.

07 July 2018

டாலர் நகரம் : ஜோதிஜி

அண்மையில் நான் படித்து நிறைவு செய்த நூல் நண்பர் ஜோதிஜியின் டாலர் நகரமாகும். பல மாதங்களுக்கு முன்னரே அவர் அனுப்பியிருந்த போதிலும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அதனைப் படித்து நிறைவு செய்ய சற்றுத் தாமதமானது. படித்து முடிந்தபின்னர்தான் ஒரு நல்ல நூலை மிகவும் தாமதமாக, நாள் கடந்து படித்தோமே என்று எண்ணத் தோன்றியது. அவர் எழுதிவருகின்ற தேவியர் இல்லம் என்ற வலைப்பூவின் மூலமாக அறிமுகமானவர் அவர். பரந்த மனம் கொண்டவர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஈடுபாட்டாளர், சிறந்த வாசிப்பாளர், மனிதாபிமானி, முன்னுதாரண உழைப்பாளி, குடும்பத்தையும் நண்பர்களையும் நேசிப்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறலாம். இந்நூலை அவர் மிகுந்த அசாத்திய துணிச்சலோடு எழுதியிருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். பணியில் ஆரம்ப காலத்தில் இவர் எதிர்கொண்ட பல நிகழ்வுகளை நான் என் பணிக்காலத்தில் எதிர்கொண்டதால் அவருடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் என்னால் நன்கு உணர முடிந்தது. நேர்மையாக இருந்து அவர் எதிர்கொண்ட சிரமங்களை உணர்வுபூர்வமாக எழுதியுள்ள விதம் நம் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
நூற்பாலைகளின் நிலை, முதலாளிகளின் ஆதிக்க உணர்வு, வெளிநாட்டு நிறுவனங்களின் அதீத நுழைவு, அரசியல்வாதிகளின் மெத்தனம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பாராமுகம், சுற்றுச்சூழல் பாதிப்பு என்பன போன்றவற்றை உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார். இந்நூலைப் படித்தபின் திருப்பூருக்குப் போனால் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஒரு புறமும், திருப்பூர் பக்கம் போகவே கூடாது என்ற எண்ணமும் ஒருசேர ஏற்படும். 1992இல் திருப்பூருக்குள் அடியெடுத்து வைத்த அவர் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளை இந்நூலில்  பகிர்ந்துள்ளார். "கையில் நயாபைசா இல்லாமல் அசாத்தியமான நம்பிக்கை என்னை நகர்த்திக் கொண்டிருந்தது." (ப.63)  என்று கூறும் ஆசிரியர் திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வருகின்ற சாமான்யர்களின் அனுபவத்தை உள்ளது உள்ளபடி ஒளிவுமறைவின்றி, பதிந்துள்ளார். ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு பத்தியும் உணர்வுகளின் வெளிப்பாடாக உள்ள நிலையில் எதை மேற்கோளாகக் காட்டுவது என்ற யோசனை எழுந்தது. அனைத்துமே சிறப்பாக இருந்தாலும் சிலவற்றைப் பகிர்கிறேன்.  
தொழிலாளியின் நிலை
நாம் மற்றவர்களுக்காக உழைக்கவேண்டும்.  நாம் உழைக்கும் உழைப்புக்குரிய அங்கீகாரமும் கிடைக்காது.(ப.98) ...ஒவ்வொரு நாளும் உயிர் போய் திரும்பி வரும் வாழ்க்கையைத்தான் ஏற்றுமதி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.  நாம் பார்க்கும் வேலைக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. சிங்கம், புலிகளுடன் வாழும் மற்ற மிருகங்களின் வாழ்க்கை போலத்தான் வாழ வேண்டும். (ப.99)
ஒரே இடத்தில் 20 இயந்திரங்கள் நெருக்கியடித்து மாட்டப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் முறையான, மின் பாதுகாப்பு சாதனங்களோ, அவசர கால வழிகளோ இல்லை.  (ப156)

இடையிலுள்ளோர்
திருப்பூர் நிறுவனங்களில் நல்ல தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை மேய்க்கும் மேய்ப்பன் சுத்த சுரண்டலாகத்தான் இருப்பான். வேலை நடந்தால்போதும் என்று நிர்வாகமும் கண்டும் காணாமல் இருக்கும். (ப.70)

முதலாளியின் நிலை
தொழில் தெரிந்த முதலாளியிடம் கருணை இரக்காது. கண்ணியத்துடன் தொழிலை நடத்திக்கொண்டிருப்பவர்களிடம் நல்ல இறக்குமதியாளர்கள் இருக்க மாட்டார்கள். (ப.993)  

ஆட்சியாளர்கள்
உழைப்பாளர்களின் உலகமான திருப்பூர் இன்று ஒப்பாரி வைத்தாலும் கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களை மனதில் திட்டிக்கொண்டிருக்கிறது. (ப.241)
நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக என்று சொல்லி புதிதாக எந்த திட்டங்களையும் இங்கு கொண்டுவரத் தேவையில்லை. இந்தியாவின் உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுய லாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. (ப.150)

அயல்நாட்டுத் தொழில்நுட்பங்களை உள்ளே கொண்டு வர விரும்பிய நம் அரசாங்கம், உள்ளூர் தொழிலை வளர்க்க விரும்பவில்லை. (ப.229)

எப்படியும் பிழைக்கலாம்
பல கோடி ரூபாய் முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள் முதல் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் காமதேனு போல, அவரவர் உழைப்புக்கேற்றவாறு வசதிகளை இந்த பனியன் ஏற்றுமதித் தொழில் உருவாக்கித் தருகின்றது. (ப.236)

உலகப்பிரச்னை உள்ளூர் பாதிப்பு
உலகில் எந்த மூலையில் என்ன பிரச்சனை நடந்தாலும், அது உடனடியாக ஏற்றுமதி தொழிலில் பிரதிபலிக்கும். நிலையில்லாத டாலரின் மதிப்பு, வங்கிகளின் கெடுபிடித்தனம், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்... (ப.236)
அந்நியத் தொழில்நுட்பம் திருப்பூருக்குத் தேவை. அந்நிய நிர்வாகத் திறன் தேவை. ஆனால், அந்நிய முதலீடு தவைதானா?  (ப.230)

தடையற்ற பொருளாதாரம்
தடையற்ற பொருளாதாரக் கொள்கை யாருக்குப் பயன்பட்டதோ இல்லையோ, திருப்பூர் தொழில் துறையினருக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் இருந்தது. (ப.228)

இயற்கைச்சீரழிவு

பவானி ஆற்றில் இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு பூமியிலி உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது. பவானி ஆற்றை நம்பி, விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள். (ப.199)

நம் குறைகள்
நம்மிடமும் பிரச்னைகள் இருக்கின்றன. ஆய்வு மனப்பான்மை என்பதே இல்லால் போய்விட்டது. எநதவொரு தொழிலையும் குடும்பத்தொழிலாகவும், குறுந்தொழிலாகவும் மட்டுமே பார்க்கப் பழகியிருக்கிறோம். பணியில் இருப்பவர்களை அடிமைகளைப் போல நடத்துகிறோம். புதிய விஷயங்களை ஏற்பதில்லை. தொழில் நுட்ப வளர்ச்சி வெள்ளமாக மாறி நம்மை அடித்துக்கொண்டு செல்லும்போது கடைசி நேரத்தில் விழித்துக்கொள்கிறோம். அதற்குள் நம் தொழிலை இழந்துவிடுகிறோம். (பக்.229-30)


சாதாரண நிலையில் பணியில் நுழைந்து அசாத்தியத் திறமையின் காரணமாக முன்னுக்கு வந்த நூலாசிரியரின் மன உறுதியும், தைரியமும் போற்றத்தக்கது.  திருப்பூருக்கு பிழைப்பு தேடி செல்பவர்களுக்கு இந்நூல் ஒரு பாடமாக அமைவதோடு, பல பாடங்களை அவர்களுக்கு கற்பிக்கும் என்பதில் ஐயமில்லை.  இத்துறையில் உள்ள நெழிவு சுழிவுகளை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் துணை புரியும். தொழிலாளியாக இருந்து முதலாளியாக வருபவர்களுக்குத்தான் அனைத்து சிரமங்களும் உண்மையாகப் புரியும் என்பதை நூலாசிரியரின் எழுத்துகள் நமக்கு உணர்த்துகின்றன. நூலாசிரியரின் துணிச்சலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து, நூலை வாசிக்க வாருங்கள்.

நூல் : டாலர் நகரம்
ஆசிரியர் : ஜோதிஜி
பதிப்பகம் : 4TamilMedia.com
நூல் கிடைக்குமிடம் : Maheswari Book Stall, Tirupur தொலைபேசி : 944-200-4254
ஆண்டு : 2016
விலை : ரூ.200

7 ஜலை 2018அன்று மேம்படுத்தப்பட்டது.