28 April 2018

கோயில் உலா : 17 மார்ச் 2018

முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் குழுவினரோடு 17 மார்ச் 2018 அன்று நல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். மாடக்கோயில்கள், கஜபிருஷ்ட அமைப்பிலான கருவறை கொண்ட கோயில் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். 

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்
கல்யாணசுந்தரேஸ்வரர்-கல்யாணசுந்தரி (ஞானசம்பந்தர், அப்பர்) (தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம்).  எங்கள் உலாவின் முதல் கோயில். சிவ புராணம் பாடி, உலா தொடங்கியது. அழகிய மாடக்கோயில். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். சற்றொப்ப இதைப் போன்ற, மூலவருக்குப் பின்னர் இறைவனும் இறைவியும் உள்ள கோலத்தை திருவீழிமிழலையிலும், வேதாரண்யத்திலும் பார்த்துள்ளோம். 



திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் 
(குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்) திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவரைப் பார்த்தபோது உப்பிலியப்பன் கோயில் மூலவர் நினைவிற்கு வந்தார். கம்பீரமான, உயர்ந்த அழகான மூலவரைக் கண்டோம்.  



நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
மதுவனேஸ்வரர்-மதுவனநாயகி (சுந்தரர்) (மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவ மனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்).  
மற்றொரு அருமையான மாடக்கோயில். 



திருக்கொண்டீச்சரம் பசுபதீஸ்வரர் கோயில் 
பசுபதிநாதர்-சாந்தநாயகி (அப்பர்) (நாகப்பட்டினம்-நன்னிலம்; மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி-வழி நன்னிலம்; நாகப்பட்டினம்-கும்பகோணம்-வழி நன்னிலம் முதலிய பாதைகளில் வருவோர் நன்னிலத்துக்குள் நுழைவதற்கு முன்னாள் தூத்துக்குடி நிறுத்தம் என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் அருகில் உள்ள கோயிலை அடையலாம்).

பனையூர் சௌந்தரேஸ்வரர் கோயில் 
சௌந்தரேஸ்வரர்-பெரியநாயகி (ஞானசம்பந்தர், சுந்தரர்) (பேரளம்-திருவாரூர் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து, மேலும் சென்றால் பனையூர் கைகாட்டி உள்ளது. அக்கிளைப் பாதையில் 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். அல்லது இதே சாலையில் மேலும் சென்று, ஆண்டிப்பந்தல் என்னும் ஊரை அடைந்து, திருமருகல், நாகூர் செல்லும் பாதையில் திரும்பி கோணமது என்னுமிடத்தில் இடது புறமாகத் திரும்பிச் செல்லும் குறுகலான கிளைப்பாதையில் 1 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம்). பனை மரம் இத்தலத்தில் உள்ளது. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட, பஞ்ச தலங்களில் இதுவும் ஒன்று  பனை மரத்தைத் தலமாகக் கொண்ட கோயில்கள் : வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர். இவை பஞ்ச தல சேத்திரங்கள் எனப்படுகின்றன)


திருவிற்குடி வீரட்டானேஸ்வரர கோயில்
வீரட்டானேசுவரர்-பரிமளநாயகி (ஞானசம்பந்தர்) (பேரளம்-திருவாரூர் சாலையில், ரிமளநாயகி (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்-நாகப்பட்டினம் சாலையில் சென்று விற்குடி புகை வண்டி நிலையத்தைத் தாண்டி (ரயில்வே கேட்) விற்குடி அடையலாம்). சிவனின் அட்டவீரட்டத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். அட்டவீட்டத்தமூலவர் சன்னதிக்கு வலது புறம் ஜலந்தரவதமூர்த்தி உள்ளார்.

கூத்தனூர் சரஸ்வதி கோயில்
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகேயுள்ளது. தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சென்றபோது சரஸ்வதியை அமைதியாக நின்று வழிபட்டு வந்த அந்த நாள் நினைவிற்கு வந்தது. இப்போது கோயிலுக்குச் செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் கடைகளைக் கண்டோம்.

திலதைப்பதி முத்தீஸ்வரர் கோயில் 
முத்தீஸ்வரர்-பொற்கொடிநாயகி (ஞானசம்பந்தர்) திலதர்ப்பணபுரி, திலதைப்பதி, செதலப்பதி, சிதலைப்பதி என்று அழைக்கப்படுகின்ற ஊர். (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் வந்து, அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம்-நாச்சியார் கோயில் சாலையில் சென்று கூத்தனூரை அடைந்து அங்கிருந்து செல்லலாம்). 



ஆதிவிநாயகர் கோயில்
முத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகே ஆதிவிநாயகர் கோயில் உள்ளது. அங்குள்ள சிற்பம்  தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த  அபய கரமாக காணப்படுகிறது. இவரைப் பார்ப்பதற்கு அய்யனார் உள்ளார். ஆனால் ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
 அம்பர் மாகாளம் 
மாகாளேஸ்வரர்-பட்சநாயகி (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் தாண்டி, பூந்தோட்டம் சென்று அங்கு கடைவீதியில் காரைக்கால் என்று வழிகாட்டியுள்ள இடத்தில் இடப்புறமாகச் சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி நேரே அச்ச்லையில் சுமார் 4 கிமீ சென்றால் கோயிலையடையலாம்).
அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
பிரம்மபுரீஸ்வரர்-பூங்குழலம்மை (ஞானசம்பந்தர்) மற்றொரு மாடக்கோயில். (அம்பர் பெருந்திருக்கோயில் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில் அம்பர் மாகாளத்திலிருந்து அதே சாலையில் மேலும் 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது).



மீயச்சூர்  மேகநாதர் கோயில்
மேகநாதர்-லலிதாம்பாள் (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாகப் பிரிவும் காரைக்கால் பாதையில் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும் திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிது தூரம் சென்றதும், கடை வீதியில், கடைவீதிக்கு இணையாகப் பின்புறம் பிரிந்து செல்லும் கம்பூர் பாதையில் சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி சுமார் 2 கிமீ சென்றால் மீயச்சூரை அடையலாம்).  இக்கோயிலிலுள்ள சேத்திரபுராணேஸ்வரரைப் பார்க்க பல வருடங்களாக ஆசைப்பட்டேன். அந்த ஆசை இந்த பயணத்தின்போது பூர்த்தியானது. 



மீயச்சூர் இளங்கோயில்
சகலபுவனேஸ்வரர்-மேகலாம்பிகை (அப்பர்) மீயச்சூர் மேகநாதர் கோயிலின் வடக்குப் புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.  கோயிலுக்குள் கோயிலாக உள்ள இக்கோயில் எங்கள் பயணத்தின் நிறைவாக அமைந்தது.

கோயில் உலாவின் நிறைவாக, பயணத்தில் சென்ற கோயில்களைப் பற்றிய பெருமைகளை முனைவர் வீ.ஜெயபால் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். வழக்கம்போல ஒரு மறக்கமுடியாத அனுபவம்.


நன்றி
எங்களை உலா அழைத்துச்சென்ற சித்தாந்த வித்தகர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்தோருக்கும் நன்றி. முனைவர் வீ.ஜெயபால் தலைமையில் கலந்துகொண்டோர் திரு வேதாராமன், திரு வர்ணம் சுகுமார், நெய்வேலி திரு வெங்கடேசன், நெய்வேலி திரு செல்வம், பிஎஸ்என்எல் திரு சச்சிதானந்தம், பிஎஸ்என்எல் திரு மணிவாசகம், திருமதி செல்வராசன், முனைவர் ஜம்புலிங்கம், திரு கே.ஜே. அசோக்குமார், திருமதி மனோரஞ்சிதம், திருமதி கௌரி 



துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 

17 comments:

  1. அதிகாலையில் கோவில்கள் தரிசனம். நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    காலை எழுந்தவுடன் கோவில்களின் வரலாறு குறித்த பதிவு கண்டு மகிழ்ச்சி. கோவில் தரிசனங்கள் மனதிற்கு மிகவும் நிம்மதியை தந்தது. தங்களுடன் நாங்களும் தரிசிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. சிறப்பான கோவில் தரிசனம். உங்கள் மூலம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு. நேரில் இக்கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ ஆண்டவனுக்கே வெளிச்சம். மே மாத உலா எந்த தேதியில் என்று தெரிவிக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் மூன்றாம் சனிக்கிழமை செல்கிறோம். இம்மாதம் தவிர்க்க இயலா சூழல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.

      Delete
  4. சரஸ்வதி கோவில் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

    விவரங்களும், புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete
  5. கோவில் உலா மிக அருமை. நீங்கள் பேருந்தில் எல்லோரும் சேர்ந்து சென்றுவந்தீர்களா? எனக்கும் அதில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் வந்தது. உணவுக்கு எந்த விதமான அரேஞ்மெண்ட் செய்கிறீர்கள்? முனைவர் ஜெயபால் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வேனில், காலை சுமார் 6.00 மணிவாக்கில் புறப்பட்டு, இரவு 9.00 மணி வாக்கில் திரும்புகிறோம். காலை உணவு மதிய உணவு ஏற்பாடு செய்து வேனில் எடுத்துச்செல்கிறோம். ஆங்காங்கே தேநீர். மதியம் கோயில் நடை சாத்தியிருக்கும் நேரத்தில் ஓய்வெடுப்போம். தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  6. அருமையான கோவில்கள் மயிலாடுதுறையில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில்கள்.
    உறவினர்கள் வீட்டுக்கு வரும் போது அவர்களுடன் செல்வோம்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  7. நல்ல தகவல்களுடன் படங்களுடன் கோயில் உலா அருமை ஐயா.

    --இருவரின் கருத்தும்

    ReplyDelete
  8. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil Us

    ReplyDelete
  9. பயணங்கள் தொடரட்டும் ஐயா
    நன்றி

    ReplyDelete
  10. நல்ல நண்பர்கள். நல்ல சூழ்நிலை. நல்ல சிந்தனைகள்.

    வாழ்த்துக்கள், ஐயா.

    ReplyDelete
  11. 'பளிச்' படங்கள். மனதுக்கு இதம் தரும் பயண அனுபவப் பதிவு.

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. நல்ல பயண அனுபவங்கள்.
    நேரில் பார்க்கத் தஞ்சை மண்ணில்தான் எத்தனை
    கோயில்கள்!

    ReplyDelete
  13. பலகோவில்களுக்குச் சென்றதில்லை கூத்தனூர் சரஸ்வதி கோவில் திரு மீயச்சூர் லலிதாம்பிகா கோவில் சென்றி ருக்கிறோம்

    ReplyDelete
  14. கோவில் கோபுரங்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை வேலைப்பாடு! எத்தனை பேர் சிரமங்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன!

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.
    புதிய விடயங்கள் அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள்.....

    ReplyDelete