முகப்பு

24 November 2018

அயலக வாசிப்பு : அக்டோபர் 2018

அக்டோபர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட், அப்சர்வர் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.


ஆளில்லா வானூர்தி எடுத்த, வியப்பினையும் அழகினையும் வெளிப்படுத்தும் கண்ணைக்கவரும் படங்களில் இந்தோனேஷியாவில் கடலில் தன் சிறு படகில் நீந்தும் மீனவர், கோடைக்காலத்தில் உருகும் பனியைக் கடக்கும் போலார் கரடி, பார்சிலோனாவில் கடற்கரையில் சூரியக்குளியலில் இளைப்பாறுவோர், தனியாளாக ஆழமான நீர்ப்பகுதியில் குதிக்கத் தயாராகுபவர், இத்தாலியில் அசிசி என்னுமிடத்தில் மேகங்களுக்கு மேலேயிருந்து காணும் காட்சி. இலங்கையில் காட்டில் பெரிய மலைக்குன்றின்மீது கட்டப்பட்ட பழங்கால அரண்மனை, லண்டன் அருகே பிரைட்டன் என்ற இடத்தில் சூரிய அஸ்தமனம், உலகின் உயர்ந்த கட்டட அமைப்பாகக் கருதப்படுகின்ற துபாய் மெரினா, இத்தாலியில் சின்க் டெர்ரி என்னுமிடத்தில் மென்மையான சூரிய அஸ்தமனம், வட நார்வேயின் சூரிய உதயம் போன்ற சிலவற்றைப்பார்ப்போம்.



ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். தேர்வின்போது அது மிகவும் உதவுமாம். அது ஒரு வகையான எழுத்துரு. அதன் பெயர் Sans Forgetica என்பதாகும். வாசகர்கள் தகவல்களை மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ள புதிய உத்தியாக இதனைக் கொள்ளலாம். இந்த எழுத்துருவினைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாகக் காண்போம்.
 
பருவ நிலை மாற்றம் என்னும் பேரழினைக் கட்டுப்படுத்த இன்னும் 12 ஆண்டுகளே உள்ளன என்று எச்சரிக்கும் ஐ.நா. உரிய முயற்சி எடுக்காவிட்டால் பஞ்சம், வெள்ளம், அதிக வெப்பம், லட்சக்கணக்கானோர் வறுமைக்கு தள்ளப்படும் நிலை என்பனவற்றால் பாதிக்கப்படுவோம் என்கிறது.

பேங்க் ஆப் இங்கிலாந்து விரைவில் பிளாஸ்டிக்கில் £50 வங்கி பணத்தாள்களை (banknotes) வெளியிடவுள்ளது. £5 மற்றும் £10 போலவே இதுவும் அதே பாலிமரில் அச்சடிக்கப்படவுள்ளது. வழக்கமான பணத்தாள்களைவிட (paper notes) பாலிமர் பணத்தாள்கள் (Polymer notes) 2.5 மடங்கு காலத்திற்கு நீடிக்கும். (இந்தியாவில் ரூ.10 பணத்தாள்களை இவ்வாறு அச்சடிக்க 2014இல் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 2017இல் இந்தியாவில் ஐந்து நகரங்களில் இவ்வித பிளாஸ்டிக் பணத்தாள் வெளியிடப்படுவது தொடர்பாக பேசப்பட்டது. The Hindu 17 மார்ச் 2017)

வட மேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஏழு வயதாகும் கால்பந்தாட்ட குட்டி வீராங்கனை டார்சி புகழ் பெற்ற விதம் எப்படித் தெரியுமா? கால் பந்தாட்டம் முடிந்தபின்னர், சகதிகள் நிறைந்த செருப்புகளை கையில் எடுத்துக்கொண்டு பெருமையோடு வெற்றி பெற்றுவந்தபோது அவளோடு விளையாடிய பையன்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அவளோடு கைகுலுக்க மறுத்தார்களாம். அவளுடைய வெற்றியைப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. மற்ற குழுவினரும், பெற்றோரும் கொடூரமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்களாம். கால் பந்து விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்று கூறும் அவளுடைய தாயார் சாரா, பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டு விளையாடுகின்றபோதிலும் தன் மகளைப் பொறுத்தவரை அவளுக்கு உரிய அங்கீகாரம் அவளுடன் விளையாடுவோரால் தரப்படுவதில்லை என்கிறார். இளம் பையன்களைக் கொண்ட அந்த கால் பந்துக்குழுவில் அவள் மட்டுமே பெண். விளையாட்டுத் திறமையின் அடிப்படையில் அவள் இங்கிலாந்து மகளிர் கால் பந்தாட்டக்குழுவின் (England's Lionesses) சின்னமாக அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை மாறி, அவளுக்குப் பாராட்டுகள் குவிய ஆரம்பித்துவிட்டதாக அவளுடைய தாயார் பெருமையோடு கூறுகிறார்.

ஆங்கில அகராதிக்கு இந்த ஆண்டு Brextra (Brexit + extra) என்ற புதிய சொல் கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வர கூடுதல் நேரமாகலாம் என்ற செய்தியை கார்டியன் பின்வருமாறு கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை தெரசா மே 2021 இறுதி வரை தாமதப்படுத்தலாம் என்ற சூழல் இங்கிலாந்தில் பல நாளிதழ்களின் முகப்புப்பக்கங்களில் கோபத்தின் வெளிப்பாடாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. புருஸ்ஸேல்சில் அவர் மாற்றத்திற்கான காலம் நீட்டிக்கப்படலாம் என்று கருத்துரைத்திருந்தார். டெய்லி மெயில் (Another year in Brixit limbo), சன் (UK could be under control of EU for one more year Brextra time), இன்டிபென்டன்ட் (May open to Brexit extension in bid to save deal), டெய்லி டெலிகிராப் (May offers to extend transition by a year), கார்டியன் (சற்றே வித்தியாசமாக Brexit deadlock as May 'offers no ideas' at EU summit) என்ற வகையில் முகப்புச்செய்திகளை வெளியிட்டிருந்தன. டெய்லி எக்ஸ்பிரஸ், டெய்லி மிர்ரர், டைம்ஸ் பிற செய்திகளை முகப்புகளாகக் கொண்டிருந்தன.

முதல் உலகப்போரின் மறக்கப்பட்ட குரல் : முதல் உலகப்போரின்போது காலனியாதிக்க ஆணையின்பேரில் போரிட்டு, எவ்வித பலனுமின்றி பல இந்தியர்கள் தம் இன்னுயிர் ஈந்தனர். 1914 முதல் 1918 வரை நடைபெற்ற இப்போரில் அதிகமான இந்தியர்கள் போரிட்டனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளின் யுத்தக்களங்களில் 34,000க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் மாண்டனர். அவர்களின் பங்களிப்பானது வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது.

Cat walks the catwalk ரசனையான தலைப்பு. துருக்கியில் மாடல் அழகிகள் குறுகிய மேடையில் (Catwalk) வரிசையாக நடந்துகொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த ஒரு பூனை அவர்களின் குறுக்கே சென்று குறும்பு செய்தது. பார்வையாளர்கள் வியப்பாகப் பார்க்க, அழகிகள் தொடர்ந்து எவ்வித சலனமுமின்றி நடந்துவந்தார்கள். (catwalk பொருள் : a platform extending into an auditorium, along which models walk to display clothes in fashion shows, a narrow walkway or open bridge, especially in an industrial installation.)

மனித சமுதாயம் 1970 முதல் 60 விழுக்காடு விலங்கினத்தை அழித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

10 comments:

  1. //மனித சமுதாயம் 1970 முதல் 60 விழுக்காடு விலங்கினத்தை அழித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. //

    எவ்வளவு வனப்பகுதியை அழித்தான் என்றும் சொல்லி இருக்கலாம்!!

    ReplyDelete
  2. பயமுறுத்தும் பருவநிலை மாற்ற விளைவுகளை இப்போதே இந்தியா உட்பட எல்லா இடங்களிலும் பார்த்து வருகிறோம். ஐநா சொல்லும் அந்த 'உரிய முயற்சிகள்'தான் என்ன?

    ReplyDelete
  3. பொதுவாக சுவாரஸ்யமான தகவல்கள். நாங்களும் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  4. 12 ஆண்டுகளே... அதுவரையாவது பூமி தாங்குமா...? என்று தோன்றுகிறது...

    எழுத்துருவினைப் பற்றி மேலும் அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  5. அரிய செய்திகள் அவசரமாக உலக அழிவை நோக்கியே மனிதன் நகர்கின்றான் என்பது தெளிவாகிறது.

    ReplyDelete
  6. அரிய தகவல்கள்!

    ReplyDelete
  7. ஸ்வாரஸ்யமான தகவல்கள்....

    எழுத்துரு பற்றி அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. அறியாத அரிய தகவல்கள் ஐயா
    நன்றி
    ஆளில்லா வானூர்தி எடுத்தப் பல படங்களையும் வெளியிட்டிருக்கலாம் ஐயா
    பார்த்து மகிழ்ந்திருப்போம்

    ReplyDelete
  9. தமிழ்ப்புலத்துக்கு வெளியிலிருந்து பல அரிய செய்திகளை
    அறிந்து கொள்ளும் வாய்ப்பை உங்கள் அயலக வாசிப்புப் பகுதி தருவதில் மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. நீங்கள் எப்பவும் அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறீங்கள் நன்றி..

    ReplyDelete