முகப்பு

06 April 2019

நாளிதழ்கள் : டேப்ளாய்ட் வடிவம்

ஐக்கிய நாடுகளில் 1821இல் மான்செஸ்டன் கார்டியன் என்ற பெயரில் வெளியாகிவரும் இதழ் 1959இல் கார்டியன் என்ற பெயரைப் பெற்றது. இவ்விதழ் 1821-2005இல் பிராட்ஷீட் வடிவிலும், 2005-2018இல் பெர்லினர் வடிவிலும் வெளியானது.  15 ஜனவரி 2018 முதல் கார்டியன் டேப்ளாய்ட் வடிவத்திற்கு மறுபடியும் மாறியபோது, 2005 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த நீல மற்றும் வெள்ளை நிற முகப்பு வேறு வண்ணத்தினைப் பெற்றது. மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டபோது கார்டியன் மற்றும் அப்சர்வர் இதழ்களுக்கான முதன்மை இதழாசிரியர் “பல மாதங்கள் மேற்கொண்ட சிந்தனை, படைப்பாற்றல், இலக்குகளின் அடிப்படையின் விளைவே இந்த புதிய வடிவம். இதழின் மூத்த ஆசிரியர்களும், வடிவமைப்பாளர்களும் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். தாம் விரும்புவதைப் போலவே வாசகர்களும் புதிய முகப்பினை விரும்புவர்" என்று கூறியிருந்தார்.

15 ஜனவரி 2018இல் வெளியான முதல் டேப்ளாய்ட் வடிவ
கார்டியன் இதழுடன் ஆசிரியர்

15 ஜனவரி 2018இல் கார்டியன் புதிய வடிவம் பெற்றது. சக ஊடகங்கள் என்ன நினைத்தன என் பார்ப்போமா?
"நாங்கள்தான் பிரிட்டனின் மிகப்பெரிய, சிறந்த தரமான நாளிதழ்" என்றது டெய்லி டெலிகிராப் (Daily Telegraph).
2003இல் டைம்ஸ் (Times) டேப்ளாய்ட் வடிவிற்கு மாறியது.
டெலிகிராப் (Telegraph) மற்றும் ஃப்னான்சியல் டைம்ஸ் (Financial Times) ஆகிய இதழ்கள் ப்ராட்ஷீட் வடிவில் கடைசியாக வெளியாகின்ற நாளிதழ்களாகும்.
மிர்ரர் (Mirror) இதழைவிடவும், கார்டியன் (The Guardian) இதழைவிட 1.50 பவுண்டு விலை குறைவு என்றும் சன் (Sun) கூறியது.
சில விமர்சனங்களை முன்வைத்த பிபிசி (BBC), "இந்த வடிவம் படிக்க மிகவும் எளிதானது" என்றது.
"டேப்ளாய்ட் இதழின் சில தவறான பழக்கங்களை இவ்விதழ் மேற்கொள்ள வாய்ப்புள்ளது" என்றது டெய்லி மிர்ரர் (Daily Mirror).
உலகளாவிய நிலையில் உற்றுநோக்கப்பட்ட இவ்வடிவம் பற்றி நியூயார்க் டைம்ஸ் (New York Times), "பிரிட்டனின் இடதுசாரி இதழ் சக்தி டேப்ளாய்ட் வடிவம் பெறுகிறது" என்றது.
லே மேண்டே (Le Monde, France) இதழும் இதனைப் பற்றி விவாதித்தது.
காட்சிப்பேழையில் டேப்ளாய்ட் வடிவ இதழ்கள்










இந்த செய்திகளைப் படித்தபோது நாளிதழ்களின் அளவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. நாளிதழ்கள் பல அளவுகளில் வெளியாகின்றன. இருந்தாலும் ப்ராட்ஷீட், பெர்லினர், டேப்ளாய்ட் மற்றும் கம்பாக்ட் என்பவை பொதுவாக காணப்படுபவையாகும்.
ப்ராட்ஷீட்
ப்ராட்ஷீட் 600 x 750 mm (23.5" x 29.5") என்ற அளவில் உள்ளதாகும். அரசியல் மற்றும் கதைப்பாடல்களை ஒற்றைத்தாளில் விற்கப்பட்டபோது பிரிட்டிஷார் பக்கங்களின் அடிப்படையில் 1712 வாக்கில் அவற்றிற்கு வரி விதித்தானர். அப்போதுதான் ப்ராட்ஷீட் என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அண்மைக்காலமாக ப்ராட்ஷீட் என்பதிலிருந்து பல நாளிதழ்கள் டேப்ளாய்ட் வடிவிற்கு மாற்றம் பெற ஆரம்பித்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் ப்ராட்ஷீட் என்பதானது ஏ1 அளவு தாளில் அச்சிடுவதைக் குறிக்கிறது. (594 x 841 mm - 23.4" x 33.1"). நாம் தமிழகத்தில் தற்பொழுது வாசிக்கின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வகையைச் சார்ந்ததாகும்.

பெர்லினர்
பெர்லினர் 315 x 470 mm (12.4" x 18.5") என்ற அளவில் உள்ளதாகும். மிடி என்றும் அழைக்கப்படும் இந்த வடிவமானது பொதுவாக ஐரோப்பாவில் காணப்படுகிறது. ‘பெர்லினர் ஜீட்டங்’  எனப்படும் இதழ் பெர்லினர் என்றே அழைக்கப்பட்டாலும் பெர்லினர் அளவில் அச்சடிக்கப்படுவதில்லை. பெர்லினர் வடிவம் என்பதானது டேப்ளாய்ட்/காம்பேட் வடிவினைவிட சற்றே நீளமாகமாகவும், சற்றே அகலமாகவும், அதே சமயம் ப்ராட்ஷீட்டைவிட சிறியதாகவும் இருக்கும். ப்ராட்ஷீட் வடிவத்திற்கு ஒரு மாற்றாக இருப்பதோடு, இதழியல் உலகில் பெர்லினர் வடிவம் ஒரு அரிய கண்டுபிடிப்பாக அமைவதாகக் கொள்ளலாம்.

டேப்ளாய்ட்
டேப்ளாய்ட்  280 x 430 mm (11.0" x 16.9") என்ற அளவில் உள்ளதாகும். இதனை ப்ராட்ஷீட்டின் பாதி என்பர். இருந்தாலும் இந்த வரன்முறையை முற்றிலும் உண்மை எனக் கூறிவிடமுடியாது. ஏனென்றால் ப்ராட்ஷீட்டின் அளவு 600 x 750 mm (23.5" x 29.5") ஆகும். ஏ3 அளவிற்கும் டேப்ளாய்ட் அளவிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஏ2 தாளில் டேப்ளாய்டை அச்சடிக்கும்போது நாளடைவில் பொருத்தமாகிவிடுகிறது. (நாளிதழ்களின் அளவு மடிக்கப்பட்ட பக்கங்களின் அளவினைக் கொண்டுள்ளதை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்)  நாளிதழ் அளவுகளைக் குறிக்க டேப்ளாய்ட் என்று கூறும்போது அது ‘டேப்ளாய்ட் இதழியலை’ குறிப்பிட ஆரம்பிக்கிறது எனலாம். டேப்ளாய்ட் இதழியல் என்பது சுருக்கமான, எளிதாகப் படிக்கக்கூடிய, அதே சமயம் மிகைப்படுத்தப்பட்ட வடிவில் செய்தியைத் தருவதாகும். 1880களில் காணப்பட்ட, எளிதாக விழுங்கக்கூடியதாகவுள்ள, தாராளமாகக் கிடைத்த ‘டேப்ளாய்ட் மாத்திரைகளைக்’ குறிக்கவே முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, சீனா, ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் டேப்ளாய்ட் வடிவ இதழ்கள் வெளிவருகின்றன. வாசகர்களிடையே பிரபல்யம் ஆகிவிட்ட நிலையில் அண்மைக்காலமாக புகழ்பெற்ற பல நாளிதழ்கள் ப்ராட்ஷீட் வடிவிலிருந்து டேப்ளாய்ட் வடிவிற்கு மாற்றம் பெற்றுள்ளன.
           Daily Mail (தினசரி), The Mail on Sunday (ஞாயிறு), Daily Express (தினசரி), Sunday Express (ஞாயிறு) ஆகியவை டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்றன. இவற்றில் Daily Mail 1971 வரையிலும், Daily Express 1977 வரையிலும், Sunday Express 1992 வரையிலும் ப்ராட்ஷீட் வடிவில் வெளிவந்தன.

காம்பேக்ட்
காம்பேக்ட் என்பது டேப்ளாய்ட் அளவினைப் போன்றதேயாகும். ‘தரம்’, ‘உயர்நிலை’ என்ற வகையில் தனித்து வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும்,  டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து சற்றே வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்காகவும், டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள விரும்புவதாலும் காம்பேக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் டேப்ளாய்ட்
இந்தியாவில் வெளிவருகின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வடிவில் வெளிவருகின்றன. 1941 முதல் வெளிவந்த பிளிட்ஸ் (Blitz) இந்தியாவிலிருந்து வெளிவந்த முதல் டேப்ளாய்ட் என்ற பெருமையினைப் பெற்றது. இவ்விதழின் ஆங்கிலப்பதிப்பை நான் படித்துள்ளேன். அதன் மொழி நடை அனைவரையும் ஈர்க்கும்வகையில் காணப்படும். ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் அது வெளிவந்தது.  1990களின் இடையில் இவ்விதழ் வருவது நின்றுவிட்டது. 
தி இந்து (The Hindu) 24 பிப்ரவரி 2019 முதல், மேகசைன் பிரிவான (Magazine) இணைப்பினை  40 பக்க டேப்ளாய்ட் வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல வருடங்களாக வெளிவந்த வெள்ளிக்கிழமை இணைப்பையும் (Friday Review) அவ்விதழ் டேப்ளாய்ட் வடிவில் கொணர்ந்துள்ளது.  இந்து தமிழ், தினமணி போன்ற இதழ்கள் சிறப்பு நிகழ்வுகளின்போது டேப்ளாய்ட் வடிவில் சிறப்பு இணைப்பினை  வெளியிடுகின்றன. ஆனந்த விகடன், சில ஆண்டுகளுக்கு முன் சகோதரப்பதிப்பாக ஜுனியர் போஸ்ட் என்ற இதழை டேப்ளாய்ட் வடிவில் கொணர்ந்தது. அதில் நான் எழுதிய வாசகர் கடிதங்கள் வெளியாயின.

எங்கள் இல்லத்தில் டேப்ளாய்ட் 
எங்கள் தாத்தா நவசக்தி நாளிதழ் மற்றும் போல்ஸ்டார் நாளிதழ்களின் வாசகர் ஆவார். அவர் இவ்விரண்டு இதழ்களையும் வாசிப்பார். அப்போது (1960களின் இறுதியில்) நாங்கள் அவ்விதழ்களைப் பார்த்துள்ளோம். அவற்றுள் போல்ஸ்டார் டேப்ளாய்ட் வடிவில் நாத்திகம் இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததாக நினைவு. மிகத்துணிச்சலாக தலைப்புச்செய்திகள் அதில் வெளியாகியிருக்கும்.  சிவாஜிகணேசன் நடித்து வெளியான சிவந்த மண் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் (1969), அப்படத்தின் ஒரு பாடலின் வரிகளைக் கொண்ட "ஒரு முறை நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள், சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்" என்ற தலைப்பில் அப்போதைய அரசியல் நிகழ்வினை அடிப்படையாகக்கொண்ட செய்தி வெளியானது இன்னும் என் நினைவில் உள்ளது. படித்து முடிந்ததும் எங்கள் தாத்தா அவற்றை கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியும், தெற்கு வீதியும் சந்திக்கின்ற இடத்தில் இருந்த, அப்போது காங்கிரஸ் கட்சிக்காரர்களால் நடத்தப்பெற்ற கமலா நேரு வாசகசாலையில் அந்த நாளிதழ்கள் வராத நாள்களில் அவற்றை வைத்துவிட்டு வரச்சொல்வார். அப்போது இல்லத்தில் நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்தன் பழக்கமே இன்னும் தொடர்கிறது. நவசக்தி இதழ் ப்ராட்ஷீட் வடிவில் இருக்கும். நவசக்தியில் ஒரு முறை "அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார்" என்று ஒரு குழந்தை பெருந்தலைவர் காமராஜரிடம் சொல்லி அழுத செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தி வந்த நவசக்தி நாளிதழ் தொடர்பான, ஒரு காட்சி சிவாஜிகணேசன் நடித்த எங்கள் தங்க ராஜா (1973) திரைப்படத்தில் இருக்கும். "பட்டாக்கத்தி பைரவன் விடுதலை" என்று செய்தி வாசிக்கப்படும்போது நாகேஷ் பயந்து கீழே குதிப்பார். அப்போது "அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார்" என்ற செய்தி தெரியும் நவசக்தியைக் காணலாம். 
உலகெங்கிலும் டேப்ளாய்ட் வடிவிற்கு நாளிதழ்கள் மாறிவரும் நிலையில் இந்தியாவிலும், டேப்ளாய்ட் வடிவத்திற்கு நாளிதழ்கள் விரைவில் மாறிவரும் வாய்ப்புகள் உள்ளன. இணையத்தில் இதழ் வாசிப்பு, அச்சுக்கட்டணம், அச்சு இதழ்களைப் படிப்போர் எண்ணிக்கை குறைவு போன்ற பல காரணிகளால்  தமிழ் இதழ்களும் அவ்வடிவத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

துணை நின்றவை
http://www.papersizes.org/newspaper-sizes.htm
https://en.wikipedia.org/wiki/Blitz_(newspaper)
http://suttonnick.tumblr.com/

15 comments:

  1. எத்தனை தகவல்கள்.... பிரமிப்பாக இருக்கிறது.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. கையாள சுலப வடிவம்!

    சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  3. வியப்பாக இருக்கிறது ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. Thanks for sharing very informative and interesting informations.

    ReplyDelete
  5. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
    மகிழ்ச்சி, நன்றி.

    ReplyDelete
  7. பல தகவல்களை அறிய முடிந்தது... நன்றி ஐயா...

    ReplyDelete
  8. சண்டே அப்சர்வர் என்று ஆங்கிலத்தில் இதழொன்று இருந்ததோ?..
    அச்சாபீஸ் விஷயங்கள் சுவையானவை. டேப்ளாய்ட் என்பது அளவு, வடிவத்திற்கு என்றிருந்தது இதழியலுக்கே பெயராகிப் போன வரலாறு சுவையானது.

    ReplyDelete
  9. வெளியீட்டாளர் என்ற வகையில்
    தங்கள் பதிவு எனக்கு நிறைவைத் தருகிறது.
    தங்களது தேடல் பயனுள்ள தகவலைப் பகிருகிறது.
    பாராட்டுகள்

    ReplyDelete
  10. உறுதியாக என்னால் சொல்ல முடியும். சர்வதேச பத்திரிக்கைகள் பற்றி தற்போது பணிபுரியும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்களையும் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் பத்து சதவிகிதம் கூட தெரியாது என்பார்கள்.

    ReplyDelete
  11. அரிதான தகவல்கள். அறிந்துகொள்ள உதவியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  12. அருமையான தகவல் . பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  13. இலங்கையில் கணிசமான ஏடுகள் இந்த வடிவத்தில் வருகின்றன. அவர்களின் நுட்பவசதிக்கு அவற்றின் அழகு சிறப்பு!

    ReplyDelete
  14. நல்லதொரு பயனுள்ள தகவல்கள் .

    ReplyDelete
  15. அன்றாடம் வார இதழ்கள் நாளிதழ்களைப் பார்த்தாலும் அவற்றின் அளவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அரிய தகவல்களை அறியப் பெற்றோம். நன்றி

    ReplyDelete