முகப்பு

09 April 2019

2018இன் சிறந்த சொல்

2017இன் சிறந்த சொற்களாக யூத்க்வேக் (ஆக்ஸ்போர்டு), ஃபேக் நியூஸ் (காலின்ஸ்),  ஃபெமினிசம் (மெரியம் வெப்ஸ்டர்) ஆகிய சொற்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன.  2017இல் முதன் முதலாக ஆக்ஸ்போர்டு சிறந்த இந்தி சொல்லைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது. 
2018க்கான சிறந்த ஆங்கிலச் சொல்லாக Toxic (ஆக்ஸ்போர்டு),  No mobile phone phobia என்பதன் சுருக்கமான Nomophobia (கேம்பிரிட்ஜ்), Justice (மெரியம் வெப்ஸ்டர்), Single use (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும், Misinformation என்ற சொல்லை டிஸ்னரி இணைய தளமும் தெரிவு செய்துள்ளன.  Plastic (நெகிழி)  என்ற சொல்லையும் (2018இன் குழந்தைகள் தெரிவு செய்த சிறந்த சொல்), நாரிசக்தி என்ற சொல்லையும் (2018இன் சிறந்த இந்தி சொல்) ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. 2018க்கான சிறந்த சொற்கள் தெரிவு செய்ததற்கான பின்புலத்தினைக் காண்போம்.  

ஆக்ஸ்போர்டு அகராதி
ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் டாக்சிக் என்பதாகும். டாக்சிக், டாக்சிகலி என்பதற்கு நஞ்சு சார்ந்த, நச்சியலான என்ற பொருளாக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கூறுகிறது. லத்தீன் மொழியில் டோக்ஸியஸ் என்ற சொல்லுக்கு விஷப்படுத்தப்பட்ட, விஷத்துடனான என்ற பொருள்களுண்டு. இச்சொல் 17ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பயன்பாட்டிற்கு வந்தது.  தொடர்புடைய லத்தீன் சொல்லான டாக்சிகம் என்பதற்கு விஷம் என்று பொருளாகும். இதற்கான முன்னோடி கிரேக்கச் சொல்லான டாக்சிகான் பார்மகான் என்பதாகும். பண்டைய கிரேக்கர்களால் அம்புகளின் முனைகளில் தடவுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கொடிய விஷத்தை அது குறிக்கும். இதிலும் சிறப்பு என்னவெனில் பார்மகான் என்பது விஷத்தைக் குறிக்கவில்லை. மாறாக கிரேக்கத்திலிருந்து வந்த, வில்லைக் குறிக்கின்ற சொல்லான டாக்சான் என்பதிலிருந்து வந்த டாக்சிகான் என்ற சொல்லே விஷம் என்ற பொருளைத் தருகிறது. 
மீடூ இயக்கத்தில், விஷத்தன்மையுள்ள ஆளுமை (டாக்சிக் மஸ்கியூலினிட்டி) என்று குறிப்பிட்டு மகளிர் தம் மீதான பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்தியதற்காக அவ்வியக்கத்திற்கு ஆக்ஸ்போர்ட் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

கேம்பிரிட்ஜ் அகராதி
கேம்பிரிட்ஜ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் நோமோபோபியா என்பதாகும். அலைபேசி இல்லாத அல்லது அதனைப் பயன்படுத்த முடியாத சூழலால் எழும் பயம் அல்லது வருத்தம் என்பது இதன் பொருளாகும்.  கேம்பிரிட்ஜ் அகராதியின் இணையதள இவ்வாண்டு புதியதாக வந்த சொற்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட, 2018க்குப் பொருத்தமான சொல்லைப் பற்றிக் கூறும்படி வாசகர்களிடமும், கேம்பிரிட்ஜ் இணைய தள வாசகர்களிடமும், சமூக வலைத்தளங்களைத் தொடர்வோர்களிடமும் கேட்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் எண்ணப்பட்டு இந்த சொல் அதிக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இவ்வகராதி கூறுகிறது. அவ்வகையில் 2018இன் மக்களின் சொல்லாக இச்சொல்லைத் தெரிவு செய்துள்ளது. அறிவியல் சார்பற்ற முதன்முதலில் இச்சொல் 2008இல் பயன்படுத்தப்பட்டதாக யுனைடெட் கிங்டம் அஞ்சலக அலுவலகத்தால் அமைக்கப்பட்ட யூகவ் ஆய்வாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐக்கிய ராஜ்யத்தின் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட இச்சொல், இவ்வாண்டின் ஆரம்பத்தில் அகராதியின் இணையதளத்தில் இடம்பெற்றது.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி
மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த சொல் ஜஸ்டிஸ் என்பதாகும். 2018இல் பெரும்பாலும் தினமும் இச்சொல் நாளிதழ்களில் நீதித்துறை, நீதிக்கான தடை, உயர்நீதிமன்ற நீதிகள், சமூக நீதி உள்ளிட்ட பல நிலைகளில் வெளியானதாகவும் பல காரணங்களின் அடிப்படையிலும், பல பொருள்களின் அடிப்படையிலும் மக்களின் மனதில் இச்சொல் இருந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவ்வகராதி கூறுகிறது.  2017ஐக் காட்டிலும் 2018இல் 74 விழுக்காட்டினர் இச்சொல்லை அதிகமாகத் தேடியுள்ளனர் என்றும், 2018இல் நீதி தொடர்பான பொருண்மை தேசிய விவாதங்களின் முதன்மையான இடத்தைப் பெற்றதாகவும் கூறுகிறது. இச்சொல் பொதுவாகப் பேசப்படுவது என்று கூறப்பட்டாலும், பிரபலமான சொற்களோடு தொடர்புடைய, குறிப்பிடத்தக்க, தொழில்நுட்பம் சார்ந்த, சட்டரீதியான சொல் என்ற நிலையில் இதற்கான தேடல் அதிகமாகியுள்ளது.   

காலின்ஸ் அகராதி
காலின்ஸ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் சிங்கிள் யூஸ் என்பதாகும். அதற்கு ஒருமுறைப் பயன்பாடு என்ற பொருளாகும். இச்சொல் ஒரே ஒரு முறை பயன்படுத்துவதற்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்ற, பெரும்பாலும் நெகிழியையே குறிக்கின்றது. இது சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு, உணவுப்பொருள் தயாரிப்பு தொடங்கி அதன் விற்பனை வரை பல நிலைகளில் பெரிய தாக்கத்தினை உண்டாக்குகிறது. நெகிழியிடம் நாம் அடிமையானதையும், சிறிய பை தொடங்கி தேக்கரண்டி வரை நெகிழி உலகை ஆக்கிரமித்துள்ளதையும்கூட உணர்த்துகிறது. பெருங்கடல்களில் ஸ்ட்ரா, பாட்டில் மற்றும் பை போன்ற பல வடிவங்களில் நெகிழி காணப்பட்டதைக் கண்டு, அதனை எதிர்த்து அதன் பயன்பாட்டைக் குறைக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
2013 முதல் இச்சொல்லின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. பிபிசி ஊடக அமைப்பில் இயற்கை வரலாற்றுப் பிரிவு சார்பாக 2017இல் எடுக்கப்பட்ட, கடல் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படத் தொடரான  ப்ளூ ப்ளானட்-2 தொடரில் வெளியாகின்ற செய்திகளையும், படங்களையும், காட்சிகளையும் பொதுமக்கள் பார்க்க ஆரம்பித்ததும் இச்சொல்லின் பயன்பாடானது நான்கு மடங்கு பெருகிவிட்டது. அது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே பெருக ஆரம்பித்துவிட்டது. 
இந்த சொல் 1959இல் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் முதன் முதலாக இடம் பெற்றது. அப்போது பிரிட்டிஷ் தர நிறுவனம் உலோகப் பெட்டிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் டியூப் பற்றி குறிப்பிடுகையில் இச்சொல்லைப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனை மறுபடியும் பயன்படுத்தவோ, மறுபடியும் மறுமுத்திரை வைக்கவோ  முடியாது. தட்டச்சுப்பொறிக்கான ரிப்பனுக்கும், தொடர்ந்து 1980களில் தெர்மாமீட்டர், ஊசி உள்ளிட்டவற்றிற்கும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, பெரும்பாலும் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் நிலையில் இந்த ஒரு முறை பயன்பாடு இருந்தாலும், பெரும்பாலும் உணவுத்தயாரிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் ஒரு முறைப்பயன்பாடு நிலையில் நெகிழியே பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் எதிர் விளைவுகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.      

டிஸ்னரி இணையதளம்
டிஸ்னரி இணையதளம் தேர்ந்தெடுத்த சொல் மிஸ்இன்பமேஷன் என்பதாகும். மிஸ்இன்பாம் என்பதற்கு தவறான செய்தி, மெய்ம்மை பிழை பட உரை, தகவல் திரித்துக்கூறு, தப்புவழிகாட்டு  என்ற பொருள்களை ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கூறுகிறது. டிஸ்இன்பமேஷன் என்பதற்கு பதிலாக இச்சொல் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், போலிச்செய்திகளை எதிர்த்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக இச்சொல் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. எங்களின் இந்த ஆண்டு சிறந்த சொல் மிஸ்இன்பமேஷன் என்று கூறும் அகராதியின் தளம், இது ஒரு சொல் மட்டுமல்ல என்றும், நடவடிக்கைக்கான ஓர் அறைகூவல் என்றும் கூறுகிறது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்காக பகிரப்படுகிறதா என்பதைப் பற்றி சிந்திப்பதற்கான அவசியம் எழவில்லை என்றாலும் இச்சொல்லுக்கு தவறாகப் பரப்பப்படும் செய்தி என்று பொருளாகும்.
1500களிலிருந்தே இச்சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இணையதளத்தில் அதிகமான தவறான செய்திகள் பயன்பாட்டில் வந்துவிடவே இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகியுள்ளது. மக்கள் தாம் பகிர்வது என்னவென்று தெரிந்து பரப்புவது மிஸ்இன்பமேஷன் ஆகும். மாறாக டிஸ்இன்பமேஷன் என்பதற்கு மற்றவரை தவறான அல்லது மாற்றுக்கண்ணோட்டத்தில் இட்டுச்செல்லும் செய்தி என்பது பொருளாகும். இதில் மேலும் குழப்பம் தரும் நுட்பம் என்னவெனில் டிஸ்இன்பமேஷன் என்பதில் ஒரு கூறு மட்டுமேகூட மிஸ்இன்பமேஷன் ஆகிவிட வாய்ப்புண்டு. அதனை பகிர்ந்துகொள்வோரைப் பொறுத்தே பொருள் நிலையில் முக்கியம் பெறுகிறது எனலாம். உதாரணமாக ஒரு அரசியல் பிரமுகர் தவறு என்று தெரிந்து, திட்டமிட்டே ஒரு செய்தியை கட்டுரை, புகைப்படம், மீம்ஸ் வடிவில் பரப்புவது டிஸ்இன்பமேஷன் ஆகும். பொதுமக்கள் அதனை நம்பிப் பகிரும்போது அது மிஷ்இன்பமேஷன் ஆகிவிடுகிறது.    
அகராதிகளும், இணைய தளங்களும் இவ்வாண்டிற்கான சிறந்த ஆங்கிலச்சொல்லையும், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்த இந்திச் சொல்லையும் அறிவித்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு குழந்தைகளுக்கான அகராதி ப்ளாஸ்டிக் என்ற சொல்லை 2018இன் சிறந்த சொல்லாகத் தெரிவு செய்துள்ளது.

குழந்தைகள் அதிகம் பயன்படுத்திய சொல்
ஆக்ஸ்போர்டு குழந்தைகள் அகராதியும், பிபிசி ரேடியோ 2உம் இணைந்து இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 500 சொல் கட்டுரைக்கான தேசிய அளவிலான போட்டியை நடத்தினர். இதில் 1,34,000 குழந்தைகள் கலந்துகொண்டனர். அப்போது குழந்தைகள் அக்கட்டுரைகளில் அதிகமாகப் பயன்படுத்திய சொல் நெகிழி (பிளாஸ்டிக்) ஆகும். 2017ஐவிட 2018இல் இச்சொல் 100 விழுக்காடு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதன் அதனடிப்படையில் இச்சொல் தெரிவு செய்யப்பட்டது. முதல் முதலாக உணர்வுபூர்வமாக சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற அடிப்படையில் கட்டுரைகளில் குழந்தைகள் இச்சொல்லை பயன்படுத்தியிருந்தது பாராட்டத்தக்க வகையில் அமைந்தது.

2018இன் சிறந்த இந்தி சொல்
2018இன் சிறந்த இந்தி சொல்லாக, பல துறைகளில் பெண்களின் ஈடுபாட்டை எடுத்துச்செல்கின்ற நாரிசக்தி (இந்தியில் நாரி என்றால் பெண்கள்) என்பதனை அறிவித்தது. இச்சொல்லுக்கான மூலச்சொல்லாக ஆதிசக்தியான, படைப்பு தொடங்கி அழிப்பு வரை சக்தியினைக்கொண்டுள்ள  துர்க்கையைக் குறிப்பதாகவும், தற்காலத்தில் தம் வாழ்வினைத் தானே தேர்வு செய்துகொள்கின்ற ஆற்றலை மகளிர் கொண்டுள்ளதைக் குறிக்கும் வகையில் இச்சொல் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளதாகவும் அவ்வகராதி கூறியது. 

ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் விரைவில் அமையும் என்று நம்புவோம். எனினும் இப்போதுள்ள சூழ்நிலையில்  நெகிழியானது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அங்கிங்கெனாதபடி தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி, தூக்கி எறிகின்ற நெகிழியைத் தடை செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ச்சொல்லாக ப்ளாஸ்டிக் எனப்படுகின்ற நெகிழியையே நாமும் கொள்வோம்.

துணை நின்றவை
The people’s word of 2018, Cambridge Dictionary
‘Nomophobia’ Declared People’s Word of 2018 by Cambridge Dictionary, Guess What It Means,  News18, December 1, 2018
Collins Dictionary, Word of the year 2018
Collins 2018 Word of the year Shortlist, 7 November 2018
Oxford Word of the year 2018 is toxic  
Toxic: Oxford Dictionaries sums up the mood of 2018 with word of the year, CNN, December 5, 2018
‘Toxic’ Is Oxford’s Word of the Year. No, We’are Not Gaslighting You, The New York Times, 14 November 2018
2018ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம், வீரகேசரி, 17 நவம்பர் 2018
2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்  - ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு, மாலை மலர், 16 நவம்பர் 2018
‘இந்த ஆண்டின் சிறந்த சொல் விஷம்..! - ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு, ஹிக்சிக், 17 நவம்பர் 2018
Word of the Year 2017: Oxford, Cambridge, Merriam-Webster and Collins Dictionaries select words that defined 2017, India Today
'Misinformation' chosen as word of the year by Dictionary.com
'Misinformation' is crowned Dictionary.com's word of the year, CNN, November 26, 2018
Word of the Year: Justice
‘Justice’ is Merriam-Webster’s word of the year, beating out ‘lodestar’ and ‘nationalism’, Washington Post, 17 December 2018 
Children’s word of the year : 2018 Insights, OUP
‘Plastic’ is Oxford’s Children’s Word of the Year 2018 as per 134,000 short stories by children, India Today, 11 June 2018
‘Oxford Dictionaries Hindi word of the year 2018 is….’, Oxford Dictionaries, 26 January 2019

திகிரி இதழுக்கு நன்றியுடன்..







12 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது

13 comments:

  1. அறியாத பல தகவல்கள் தங்களது தளத்திலிருந்து... மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பல புதிய விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. தமிழ் சொற்கள் தேர்வு செய்யும் காலம் விரைவில் வரும் நாம் காத்திருக்க முடியாது ஐயா. அறிவுசார் பெருமக்கள், கல்விப்புலத்தில் இருப்பவர்கள் இதற்கான முன்னெடுப்புகளை செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறப்பான தகவல்கள். மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  5. nomophobia என்னும் சொல்லை முதலில் namophobia என்று படித்தேன் ஆனால் அதுவும் ஒருவகையில் சரியாய்த்தான் இருக்கும் ....!

    ReplyDelete
  6. பிளாஸ்டிக் என்பதற்கு நெகிழி என்று எப்படிக் கொண்டார்கள்?
    தாங்கள் அறிந்திருந்தால் விளக்கிச் சொல்ல முடியுமா, ஐயா?..

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கூறவில்லை. பிளாஸ்டிக் என்பதற்கு நாம் வழக்கமாக தமிழில் பயன்படுத்தும் நெகிழி என்பதை எழுதியிருந்தேன். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவேண்டுகிறேன். ஆங்கிலத்தில் வெளிவந்து தமிழில் வெளிவராதனவற்றை வெளிக்கொணரும் சிறு முயற்சியாக இவ்வகையான செய்திகளை மொழிபெயர்த்து, பகிர்கிறேன்.

      Delete
  7. தங்கள் வழியே அரிய தகவல்களை அவ்வப்போது அறிந்து கொள்ள‌ முடிவது மகிழ்ச்சியைத்தருகிறது. தங்களுக்கு உள்மார்ந்த நன்றி!

    ReplyDelete
  8. சிறப்பான பல அரிய தகவல்கள் ஐயா!

    Nomophobia (கேம்பிரிட்ஜ்)// இப்புதிய சொல்லை அறிந்து கொண்டோம்.

    மிக்க நன்றி ஐயா.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  9. நாரிசக்தி சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பு. பெண்களின் சக்தி எத்தனை பெரிய சக்தி!

    கீதா

    ReplyDelete
  10. அறியாத தகவல்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  11. ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத்திலிருந்து ஒரு சொல் சிறந்த சொல்லாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களாலும் அகராதிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதைச் சிறு வயதிலிருந்தே பார்க்கிறேன். தற்பொழுது அப்பட்டியலில் இணைய அகராதிகளும் இணைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி! தமிழ்ப் பல்கலைக்கழகங்களும் இதைச் செய்யலாமே? தமிழிலும் புதிது புதிதாகப் பல சொற்கள் அன்றாடம் உருவாகித்தாம் வருகின்றன. அவற்றில் ஒரு சொல்லைச் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுக்கலாம்; ஒவ்வோர் ஆண்டும் அவ்வாண்டில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட தமிழ்ச் சொல் எது என்பதைப் பார்த்து அதற்கு மகுடம் சூட்டலாம். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் நினைத்தால் இது போல் இன்னும் எவ்வளவோ செய்யலாம். பல பெரியவர்களும் பல்துறைப் பெருமக்களும் படிக்கும் தங்களுடைய வலைப்பூவில், குறிப்பாக இந்தப் பதிவில் இதைத் தெரிவிப்பதன் மூலம் இது உரியவர்களின் கவனத்துக்குச் சென்று சேரும் என நம்புகிறேன் ஐயா!

    ReplyDelete