முகப்பு

25 May 2019

சிற்பக்கலைஞர் ராஜசேகரன்

சிற்பக்கலைஞர் திரு என். ராஜசேகரன் (பி.1958), கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்த காலம் தொடங்கி, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக என் நண்பர். அவருடைய பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். கும்பகோணத்தில் தற்போது சிற்பக்கலை வல்லுநர்களில் முக்கியமானவர். எங்கள் வீடு கும்பகோணம் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் (பின்னர் கே.ஜி.கே.தெரு) இருந்தது. அவருடைய வீடு திருமஞ்சன வீதி பதினாறு கட்டிலும் (10க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட தொடர் வீடுகள்), அவருடைய அத்தை வீடு அருகே பேட்டையிலும் (நடுவில் மைதானம் போன்ற அமைப்புடன் வட்ட வடிவினைக்கொண்ட அமைப்பில் வீடுகள், இப்போது அது இடிக்கப்பட்டுவிட்டது) இருந்தன. இரு இடங்களிலும் அவர் தம் பணிகளை மேற்கொள்வது வழக்கம். எங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருடைய பணியிடத்திற்குச் சென்றுவிடுவேன். அவர் இத்துறைக்கு வந்ததைப் பற்றிப் பேசும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.  

இளமைக்காலம்
இளமைக்காலத்தில் அவருடைய வீட்டிற்குச் செல்லும்போது குமுதம், சாவி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியான ஓவியங்களை அவ்வப்போது வரைந்துகொண்டிருப்பதைப் பார்த்துள்ளேன். ஓவியர் ஜெயராஜ், ராமு, மணியம் செல்வன், மாருதி போன்றோரின் ஓவியங்களைப் பார்த்து அப்படியே வரைந்து காட்டுவார்.

புகுமுக வகுப்பு
கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் மொழி வகுப்புகளில் மட்டும் ஒன்றாக அமர்ந்திருப்போம். ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே அவர் மேசையில் படங்களை வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து ரசிப்போம். ஒரு முறை அதனை கவனித்த தமிழ் விரிவுரையாளர் திரு ஞானசேகரன் அவரைப் பாராட்டி, “நீ படிக்க வேண்டிய இடம் இதுவல்ல. இதே கும்பகோணத்தில் உள்ள கலைக்கல்லூரி உனக்கேற்ற இடம்”  என்று கூறினார். அப்போதுதான் அவருக்கு கலைக்கல்லூரியைப் பற்றிய அறிமுகம் கிடைத்துள்ளது. புதுமுக வகுப்பில் தோல்வியுற்றபோது அவருடைய மனதில் தங்கியிருந்த ஓவியத்தின்மீதான ஆர்வம் வெளிப்படவும், அவருடைய இலக்கிற்கு வடிவம் கொடுக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  

கவின் கலைக்கல்லூரி
கும்பகோணம் கவின்கலைக்கல்லூரியில் நுண்கலையில் டிப்ளமா ஐந்து வருடங்கள் சேர்ந்த அவர் முதல் இரண்டு வருடங்களுக்கு ஒருங்கிணைந்த தொகுப்புப் படிப்பினையும், அடுத்து மூன்று வருட டிப்ளமாவினையும் படித்துள்ளார். முதல் இரண்டு வருடங்களில் வரைகலை, வண்ண ஓவியக்கலை, விளம்பரம் சார் கலை, சிற்பக்கலை என்ற அனைத்து பிரிவுகளையும் கொண்ட பாடங்களைப் பயின்ற அவர், கடைசி மூன்று வருடங்களுக்கு சிறப்புப்பாடமாக சிற்பக்கலையினையும் தேர்ந்தெடுத்துள்ளார். படித்துக்கொண்டிருக்கும்போது நடைபெற்ற சிற்பக்கலைஞர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றதையும், இறுதியாண்டு படிக்கும்போது Extra Dimension என்ற சிற்பத்திற்காக தமிழக அரசின்  ஓவிய நுண்கலைக்குழு விருதினைப் பெற்றுள்ளார்.  

தற்காலக் கலை
கலைக்கல்லூரியில் படித்த அனுபவம் தற்காலக் கலையில் (contemporary art) அரை உருவச்சிலை, மற்றும் முழு உருவச்சிலைகளை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ், செமிண்ட், உலோகங்கள் (வெண்கலம், பித்தளை, வெள்ளி, தங்கம்), ஃபைபர் க்ளாஸ் ஆகியவற்றில் செய்தலும், நவீன சிற்பக்கலையில் (modern art) பொருண்மை எதுவாக இருந்தாலும் அலங்கார அமைப்புகள், வரவேற்பு அறையில் காட்சிப்படுத்தல் போன்றவற்றில் அமைக்கப்படும் வகையில் சிற்பங்கள் செய்தலும் என்ற வகையில் அவருக்கு உதவியது. அவ்வகையில் சுடுமண் சிற்பங்களையும் அவர் வடிக்க ஆரம்பித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க பணிகள், அனுபவங்கள்
படித்து முடித்த பின் வேலை தேடல் என்ற நிலையில் தான் கற்ற கல்வி மிகவும் உதவியாக இருந்துள்ளது. பெரும்பாலான வடிவங்களில், உலோகங்களில் சிற்பங்களை வடித்துள்ளார். அவர் செய்த சிற்பங்களில் மிகவும் சிறியது பாம்பன் முழு உருவச் சிற்பம். மிகவும் பெரியது சுவரில் மேரி மாதா புடைப்புச் சிற்பம். இரு வேறு நிலைகளில் வடித்தாலும் அவற்றை செய்வதற்கு ஒரே மாதிரியாக முக்கியத்துவம் தந்துள்ளார்.
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர்.சீவல் நிறுவனரும் தொழிலதிபருமான ஏ.ஆர்.ஆர். சிலையினை 9 அடி உயரத்தில் குழுவோடு இணைந்து உலோகச் சிற்பமாக வடிவமைத்துள்ளார். திருப்பரங்குன்றம் நகராட்சி பூங்கா வளாகத்தில் இவர் சிமெண்டில் செய்த பாரதியாரின் அரையுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
1970களின் இறுதியில் கலைக்கல்லூரியில் படிக்கும்போதும், படிப்பினை நிறைவு செய்யும் காலகட்டத்திலும் சிற்பக்கலைக்கான வேலை வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருந்ததாகவும், ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல இருந்ததாகவும் “எனக்கு சிலை செய்யத் தெரியும். நீங்கள் தருகின்றீர்களா? என்று யாரிடம் போய்க் கேட்பது”  என்றும் அந்நாளைய அனுபவங்களை வேதனையோடு கூறினார்.  ஆங்காங்கே சுவாமிமலை பகுதிகளிலும், கும்பகோணத்திலும் சிற்பக்கலை வல்லுநர்கள் இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பாலும் கோயில் சார்ந்த சிற்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்ததையும், வழிவழியாக அவர்கள் செய்து வந்ததையும், தனியொருவனாக அத்துறையில் புதிதாக நுழைய சிரமமாக இருந்ததையும் கூறினார்.  ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே கிடைக்கின்ற வேலைகளை சுயமாகத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது என்று ஆதங்கப்பட்ட அவர் அதில் கிடைக்கின்ற வருமானமும் மிகவும் குறைவாகவே இருந்தது என்றார்.


குதிரை (6" miniature resin casting for 5' bronze casting)
காமராஜர் (12" bronze)

கருணாநிதி (8" clay model for bronze casting)

கோயில் வளாகம் (6' fibreglass)

அலெக்ஸாண்டர் (15" fibreglass portrait)


(Clay model, based on photograph)

(Clay model 15")

கட்டிக்குளம் சுட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (bronze)

சுவரோவியம் (terracota)

(Resin portrait with bronze effect 15" x 12")

 தற்போதைய நிலையும் வேலை வாய்ப்புச் சூழலும்
10 ஆண்டுகள் கழித்து சிற்பக்கலையில் ஒரு மாற்றம் வந்ததை அவர் உணர்கிறார். அதற்கான தேவை அதிகரித்துவிட்டதை மக்களின் எண்ணம் தெளிவுபடுத்த ஆரம்பித்த காலகட்டம். ஒவ்வொருவரும் தம் வீட்டில், வரவேற்பறையில், நுழைவாயிலில், தோட்டத்தில் சிற்பங்களை பல உலோகங்களில் அமைக்க ஆரம்பித்தது இத்துறைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அவர் கருதுகிறார். டெர்ரகோட்டா, ஃபைபர் கிளாஸ் போன்றவற்றில் உள் அலங்காரம், வெளி அலங்காரம் செய்யும் வகையில் மக்களின் ரசனை மேம்பட ஆரம்பித்துவிட்டதாகவும், அவர்களின் தேவைக்கேற்ற அளவில், தேவைக்கேற்ற உலோகத்தில் சிற்பங்களை வடிக்கும் பணியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகக் கூறுகிறார். 
அண்மைக்காலத்தில் சுய வேலைவாய்ப்பு மூலமாக இத்துறையைச் சார்ந்தோர் அதிகமாக பணியினைப் பெற வாய்ப்புள்ளது என்றும், சிற்பக்கலையில் படிப்போருக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அதற்கேற்றவாறு அதிகமான ஊதியத்தைப் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார். சுய வேலைவாய்ப்பு என்ற நிலையில் அனிமேசன் துறையும், மினியேச்சர் மாதிரி உருவங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாகவும் அதன் விளைவு நல்ல வேலை வாய்ப்பு என்றும் பெருமையோடு கூறுகிறார்.
ஓவியக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களை தாழ்வு மனப்பான்மையோடே பார்க்கின்றனர் என்றும் கூறும் அவர் பெயிண்டிங், கமர்சியல் ஆர்ட், டிஜிட்டல், விளம்பரப்பதாகை என்பனவே தற்காலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் கூறுகிறார்.
அவருடைய கல்லூரிக்காலத்தில் களிமண், சிமெண்ட் போன்றவற்றைக் கொண்டு பயிற்சிகள் தரப்பட்டதாகவும், தற்காலத்தில் தகடு, செம்பு, பித்தளை மற்றும் வார்ப்பு என்ற நிலையில் வெண்கலம் போன்றவை தொடர்பாக பாடத்திட்டத்தில் பாடங்கள் உள்ளன என்றும் அதற்கான பாடங்கள் செய்முறையுடன் நடத்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் கற்றுக்கொண்டு பயன் பெற முடியும் என்றும் கூறுகிறார். இவ்வளவு இருந்தும் மகளிர் இத்துறையில் அதிகமான ஈடுபாட்டோடு காணப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை அவர் முன்வைக்கிறார். 

எங்களின் மூத்த மகன் (பாரத்-அமுதா, 2013) மற்றும் இளைய மகன் (சிவகுரு-சிந்துமதி, 2019) திருமணங்களின்போதும் மணமக்களுக்கு, புத்தரின் ஓவியத்தை வரைந்து அன்பளிப்பாகத் தந்தார். அவை எங்களின் இல்ல நூலகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.  

கலையின் வாரிசு என்ற நிலையில் அவருடைய மூன்று மகன்களில் ஒருவரான அவருடன் பல பணிகளில் இணைகிறார். அவருடைய ஓவியத்தின்மீதும், சிற்பத்தின்மீதும் காட்டும் அவருடைய ஈடுபாட்டினை நேரில் பார்ப்போர் உணர்வர். எங்களின் அரை நூற்றாண்டு கால நண்பரும், கும்பகோணத்தின் போற்றத்தக்க சிற்பக்கலைஞருமான அவருடைய பணி மென்மேலும் வளர வாழ்த்துவோம்.

சிற்பக்கலைஞரும், வாரிசும் இணைந்து உருவாக்கும் சுவரோவியம்
(Fiber glass wall panel 8' × 6.5' with copper sheet metal effect)
மேற்கண்ட ஓவியம் நிறைவுறும் பணி
சிற்பக்கலைஞரின் பேத்தி


சிற்பக்கலைஞரின் பேத்தி
(pen and ink drawing)


குரு கௌரி வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களுடன் சிற்பக்கலைஞர்


 கும்பகோணம் கலை மற்றும் கவின்கலைக்கல்லூரில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது (1983-84) லலித் கலா அகாடமி நடத்திய 6ஆவது ஆண்டு கலைக்கண்காட்சியில் பெற்ற மாநில விருது சிற்பம்

ஓவியம் வரைதல், சிற்பம் வடித்தல், கவின்கலை தொடர்பான விவரங்கள் மற்றும் ஐயங்களைக் கேட்க சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரன் (9994850847) அல்லது அவரது மூத்த மகனைத் (சிற்பக்கலைஞர் நரேந்திரன் என்கிற முரளி, 9629472849) தொடர்புகொள்ள நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

21 பிப்ரவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது.

18 May 2019

இரு பெருந்தோல்விகள் - 1969க்கும் 2019க்கும் பெரிய வேறுபாடில்லை : முகமது அயூப்

அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு என்பதானது, 1969இல் மொராக்கோவில் உள்ள ராபாட் என்ற இடத்தில் அவ்வமைப்பின் முதல் மாநாட்டுத் துவக்க விழா அமர்வில் இந்தியா கலந்துகொள்ள முயன்று தோற்றதை  நினைவுபடுத்தியது. இரு நிகழ்வுகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான காரணங்களால் ஒத்துள்ளன. அக்காலகட்டத்தில் புதுதில்லி அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பானது பாகிஸ்தானின் வலியுறுத்தல் காரணமாக அப்போது பின்வாங்கப்பட்டது. உலகில் அதிகமான இஸ்லாமியரைக் கொண்ட மூன்றாவது நாடாக இருந்த நிலையில் அவ்வமைப்பில் இடம்பெற தகுதியிருந்தும்கூட அக்கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக ஏற்கப்படவில்லை.   


மதச்சார்பின்மைக்கு எதிர்
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இடம்பெற புதுதில்லி மேற்கொள்ளும் முயற்சி தார்மீக அடிப்படையில் தவறென்றும், அரசியல்ரீதியாகத் தவறு என்றும் அக்காலகட்டத்தில் தலையங்க எதிர்ப்பக்கத்தில் கட்டுரை எழுதியது இன்னும் என் நினைவில் உள்ளது. மதச்சார்பின்மையை அடித்தளத் தத்துவமாகக் கொண்ட இந்தியா மத அடையாளத்தை வரையறுத்துக்கொண்டு இயங்குகின்ற அந்த அமைப்பில் சேர்வது என்பதானது பொருத்தமற்றதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நியதியானது முஸ்லீம், இந்து, கிறிஸ்தவம் அல்லது பௌத்தம் என்று தன்னை மத வரையறைக்குள் கொள்கின்ற அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

மேலும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா ஓர் உறுப்பினராக அமைவது என்பதானது பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட அடிப்படைத்தன்மைக்கான சக்திவாய்ந்த நிராகரிப்பாக எண்ணப்படுவதோடு, அவ்வமைப்பில் இந்தியாவை சேர்த்துக்கொள்வதைக் கடுமையாகத் தடுக்கவும் வாய்ப்பாக அமையும். பாகிஸ்தான், பழமைவாத அரபு முடியாட்சியினருடன் கருத்தியல் தொடர்பாக நல்லுறவைப் பேணிவந்ததோடு, அதன் ராணுவம் அவர்களின் பாதுகாப்பற்ற இடங்களைப் பாதுகாப்பதற்காக நன்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களை தேவைப்படும் காலங்களில் அளித்து வருகிறது.  

அக்காலகட்டத்தில் சோவியத் நாடுகளுக்கு எதிரானதாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவானதாகவும் கருதப்பட்ட சென்டோ எனப்படுகின்ற பாக்தாத் ஒப்பந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களான ஈரானுடனும், துருக்கியுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக புதுதில்லியைவிட பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் அதிகமான செல்வாக்கோடு இருந்து வந்ததோடு, அவ்வமைப்பில் இந்தியா உறுப்பினராவதைத் தடுக்கின்ற அனைத்து முயற்சிகளையும் முறியடித்துவருகிறது. இச்சூழலில் நான் நினைத்தது சரியாகிவிட்டது. புதுதில்லி முன்கூட்டியே நன்கு சிந்தித்திருந்தால் அவ்வமைப்பில் உறுப்பினராகவதற்கு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக எதிர்கொண்ட தேவையற்ற அவமானத்தைத் தவிர்த்திருக்கலாம்.

இன்றைய சூழ்நிலை என்பதானது ஒருவகையில் 1969இல் இருந்த நிலையிலிருந்து மாறுபட்டதாகவும், அப்போதிருந்த நிலையில் இருப்பதைப் போலவும் காணமுடிகிறது. அண்மையில் நடைபெற்ற நிகழ்வு இதனை வெளிப்படுத்துகிறது. அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தானின் எதிர்ப்புக்கிடையிலும், நல்லெண்ண அடிப்படையிலும் விழா ஏற்பாட்டாளர்களான ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சிறப்பு விருந்தினராக அழைக்கவும், சிறப்புரையாற்றவும் முடிவெடுத்தன. இது உலகளாவிய நிலையில் இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நிலையாலும், அதன் தொழில்நுட்பரீதியான திறமைசார் பணித்திறன்களாலும் எழுகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காக வளைகுடா முடியாட்சி நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும்.

ஒரு புதிய திருப்பம்
இங்குதான் 1969க்கும் 2019க்கும் இடையிலான வேறுபாடு நிறைவுற்று, ஒற்றுமைத்தன்மை உருவாகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான சுஷ்மாவின் பேச்சு பாகிஸ்தானையே குறிவைத்தது. இருந்தாலும் அவருடைய உரைக்குப் பின் நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் நடுநிலையாக்கம் செய்யப்பட்டு சரிகட்டப்பட்டன.
முதலாவதாக கூட்ட நிறைவில் கொணரப்பட்ட அபுதாபியின் அறிக்கையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆற்றிய உரைக்கு நன்றி கூறப்படவில்லை. சிறப்பு விருந்தினராக சுஷ்மா கலந்துகொண்டதைப் பற்றியோ சிறப்புரையைப் பற்றியோ அவ்வறிக்கையில் இல்லை. இந்த விடுபாடானது மிகத் தெளிவாகத் தெரிந்ததை, அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்த, துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நிகழ்த்தவுள்ள 2020 எக்ஸ்போ கண்காட்சி போன்ற  முக்கியமற்ற பொருண்மைகள் மூலமாக அறிய முடிந்தது.

இரண்டாவது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்னையைப் பற்றி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அறிக்கையில், அப்பகுதியில் நிலவிவருகின்ற பதற்றத்தைக் குறைப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிப்பதாகக் கூறிய பாகிஸ்தானின் பிரதம மந்திரி இம்ரான் கானின் நேர்மறை நடவடிக்கையை கூட்டமைப்பு வரவேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.  இவ்வாறாக திசைதிருப்பிவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் இந்த ‘முயற்சி’க்கு நேர்மறைத் திருப்பம் தரப்பட்டது. தற்போது நிலவும் இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்குக் காரணமான, தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகின்ற, அதன் விளைவாக புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி எவ்விடத்திலும் எக்குறிப்பும் காணப்படவில்லை.

மூன்றாவதாக, அபுதாபியின் அறிக்கையோடு இணைந்திருந்த காஷ்மீரைப் பற்றிய தீர்மானம் இந்தியக் கண்ணோட்டத்தில் வேதனை தந்ததாகும். மாநிலத்தில் நிலவுகின்ற “அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல்கள்” என்று கூறப்பட்டதோடு மட்டுமன்றி “காஷ்மீரில் இந்தியாவின் தீவிரவாதம்” என்ற சொற்றொடர் அதில் காணப்பட்டது. இந்த தொடர் நிகழ்வுகளிலிருந்தும் கூட்ட அறிக்கையில் சொற்கள் அமைக்கப்பட்ட விதத்திலிருந்தும் என்னதான் சுஷ்மாவுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தபோதிலும், பாகிஸ்தான் தன் குணத்தை மாற்றாது என்பதும் கூட்டமைப்பில் பாகிஸ்தானின் செல்வாக்கு என்பதானது சிறிதளவுதான் சரிந்துள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் சொல்லப்போனால் அபுதாபி மாநாட்டிற்காக சுஷ்மாவிற்கு விடுத்த அழைப்பினை அரைகுறையாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அதனை ஏற்பது குறித்து முன்னரே தீர்க்கமாக முடிவெடுத்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு  இந்திய-பாகிஸ்தான் தொடர்பாக தீர்மானங்களை பாகிஸ்தானுக்கு சாதகமாக எடுத்து வரும் நிலையில் வெளியுறவுத்துறை இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.  இதிலிருந்து இக்கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டதென்பதானது - 1969இல் நடைபெற்ற ராபாட் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா மேற்கொண்ட முயற்சியைப் போல - ஒரு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய பெரிய தோல்வி என்பது புலனாகிறது.

நன்றி : The Hindu
Fifty years apart, the story of two OIC failures, Mohammed, Ayoob, The Hindu, 5 March 2019 என்ற கட்டுரையின் மொழியாக்கம். 

இப்பொருண்மை தொடர்பான மற்றொரு கட்டுரை. வாய்ப்பிருப்பின் விரைவில் மொழியாக்கம் செய்யப்படும்.

11 May 2019

எட்டாம் திருமுறை : திருக்கோவையார் : மாணிக்கவாசகர்

2012 முதல் நாளொரு பதிகம் வாசித்து வரும் நிலையில் எட்டாம் திருமுறையில் திருவாசகத்தைத் தொடர்ந்து திருக்கோவையாரை (மாணிக்கவாசகர்) நிறைவு செய்துள்ளேன். பிற கோவைகளைப் போல பாட்டுடைத் தலைவராக மன்னர்களையோ வள்ளல்களையோ கொண்டு பாடப் பெறாமல், தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நாயகனையே தலைவனாகக் கொண்டு அமைந்துள்ளது. மற்ற கோவைகளைவிட தனக்கென சிறப்பினைக் கொண்டுள்ளது. 

கோவை நூல்களின் அமைப்பாக தலைவன், பாட்டுடைத்தலைவன், கிளவித்தலைவன், தலைவி, பாங்கர், இளையர், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள், அகத்திணையில் பொருட்பாடு, களவியல், கற்பியல்  என்ற வகையில், இதுவரை படித்த திருமுறைகளில் பொருளைப் புரிந்துகொள்வதற்குச் சற்றே சிரமமாக திருக்கோவையார் உள்ளதை உணரமுடிந்தது.  400 பாடல்களைக் கொண்ட திருக்கோவையாரில் தினமும் படித்து வந்ததில், சில பாடல்களைப் பொருளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். வாருங்கள், வாசிப்போம். 



கரும்புறு நீலம் கொய்யல் 
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழியொ(டு) ஆயத்து 
நாப்பண் அமரர்ஒன்னார்
இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி 
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் 
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. (167)
பொருள்: பிரிவதாக நினைத்த பெரிய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவன் அழகிய ஆபரணங்களையுடைய பாங்கியுடன் நித்திரை கொள்கென்று சொன்னது. 
தேவர்களுக்குப் பகைவராகிய அசுரருடைய இரும்பால் ஆகிய மிகப்பெரிய மதிலும், பொன் மதிலும், வெள்ளி மதிலும் அன்று ஓர் துரும்பின் தன்மையாய் உறும்படி அழித்த வெற்றியினையுடைய எம்முடைய சுவாமியுடைய பெரும்பற்றப்புலியூரைச சூழ்ந்த பொழிலிடத்தே, வண்டுகள் பொருந்தின நீலப்பூக்களைத் தனியே நின்று கொய்யாது ஒழிவாயாக. பெறுதற்கரிய தோழியுடனே ஆயக்கூட்டத்தில் நடுவே உறங்குவாயாக.  


நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலது
கல்லா கதிர்முத்தம் காற்றும்
எனக்கட்டு டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே இதுநின்னை
யான்இன்(று) இரக்கின்றதே. (192)
பொருள் : பிரிந்தவர் வந்து நின்றபடியை அறிந்து நின்ற நாயகியுடைய நிலையைச் சிறப்புடைய தோழி சிறைப்புறமாகச் சொன்னது.
ஒளியார்ந்த சந்திரனே! திருஅம்பலத்தில் பழையவனுடைய அருளில்லாதாரைப் போலப் பிரிந்தவர், பிரிந்த துயரமெல்லாம் நீயே கண்டாய். ஆதலால் 'வளைகளும் தம்முடைய நிலைகளில் நின்றனவல்ல; நெஞ்சமானது நெகிழ்ந்து உருகா நின்றது. நெடுங்கண்கள் உறங்காவாய் ஒளியுடைத்தாகிய முத்துமாலைகளை இடா நின்றன; என்று சொல்லுவாயாக வேண்டும். இது நான் இப்பொழுது உன்னை வேண்டிக்கொள்கிறது.

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழும்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப் பின்னைச் சென்றஎன் நெஞ்(சு)என்
கொலாம்இன்று செய்கின்றதே. (273)
பொருள் : நாயகன் பிரிய அழகினையுடையாள் வாடியது.
அழகிய பின்னைப் பிராட்டி தோள்களை முன் பொருந்தின புருடோத்தமன் ஏத்தப் புகழ் விளங்கா நின்ற செம்பொன்னை வெற்றி செய்கிற வீரக்கழல் செறிந்த சீபாதங்களை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த முத்தை ஒத்த வெள்ளிய மணலில் கூடிப் பிரிந்தவருடைய தேரின் பின்னே சென்ற என் நெஞ்சம் இவ்விடத்தினின்று செய்கின்றதென்னோ? அறிகின்றிலேன்.

கருந்தினை ஓம்பக் கடவுள்
கராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றில்துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே. (279)
பொருள் : காந்தளானது அரும்பத் தெய்வத்தினார் வந்த மழை காண் என்று ஆபரணங்களை உடைய பாங்கி மிகுத்துச் சொன்னது.
பச்சென்ற தினையைப் பரிகரிப்பதாகத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு நம்முடைய உறவினர் ஆரவரிக்க நீரைச் சொரிந்தன மேகங்களானவை; அப் பெரிய அருளைப் பொறுக்கமாட்டாமையினால் தானாளும் வாய்மை மறுத்து என்னை அடிமை கொண்ட திருச்சிற்றம்பலநாதனுடைய திருப்பரங்குன்றில் நெருங்கி விரிந்தன காந்தளானவை; வெள்ளிய வளைகளை உடையாய்! இது காரென்று பயப்படாதே. இது தெய்வ மழை காண்.

நன்றி:  
பன்னிரு திருமுறைகள்,  தொகுதி 12, மாணிக்கவாசகரின் திருக்கோவையார்,
உரையாசிரியர் வித்வான் எம். நாராயண வேலுப்பிள்ளை,
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 600 017
தொலைபேசி 28144995, 28140347, 43502995,
அலைபேசி :9094963125, 9941863542, 9380630192 (24 தொகுதிகள் ரூ.4500)




இதற்கு முன் நாம் வாசித்தது : எட்டாம் திருமுறை : திருவாசகம் : மாணிக்கவாசகர்

04 May 2019

பெருமகளூரில் மோடி கல்வெட்டு கண்டெடுப்பு

          தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூருக்கு நண்பர் திரு மணி.மாறனுடன் களப்பணி சென்றபோது அங்குள்ள சிவன் கோயிலில் ஓர் அரிய கல்வெட்டைக் காண முடிந்தது. தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாமசிம்மன் காலத்தில் அளிக்கப்பட்ட கொடையைப் பற்றிய மராத்திய மொழியில் மோடி எழுத்தில் அமைந்த அக்கல்வெட்டைப் பற்றிக் காண்போம். 




பெருமகளூர், பேராவூரணி-அத்தாணி-கட்டுமாவடி பேருந்து வழித்தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
          இவ்வூரில் இடுபாடுற்று கிடக்கும் சிவாலயத்தினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வூர் மக்களின் சார்பாக பெரியவர் சண்முகநாதன் கோயில் வளாகத்தில் புதையுண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியினைப் படித்தறியும்படி கேட்டுக்கொண்டதன்பேரில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தமிழ்ப்பண்டிதரும், தொல்லியல் ஆய்வாளருமான மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், வை.இராமமூர்த்தி ஆகியோருடன் அவ்வூருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி மணி.மாறன் கூறியதாவது.
          களப்பணியின்போது சோமநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதும் குலோத்துங்க சோழனாலும், பாண்டிய மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டதை அறியமுடிகிறது என்றும், பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னனான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளிக்கப்பெற்ற செய்தியினைக்கூறும் மராத்தி மொழி மற்றும் மோடி எழுத்திலமைந்த கல்வெட்டே தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இக்கோயில் சோழர் காலக்கோயில் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக அக்கோயிலுக்கு நேர் எதிராக காவிரிக் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றபோது நடராஜர், விநாயகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் புதையுண்டிருந்து, கண்டெடுக்கப்பட்டது. இவை தற்போது தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
          சோழ நாட்டில் முதலாம் இராஜராஜனால் உருவாக்கப்பெற்ற வளநாடுகள் பலவற்றை முதலாம் ராஜேந்திரசோழன் மேலும் பல வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்தான். அவற்றுள் பாண்டிய குலாசனி வளநாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பெற்ற ஜெயசிங்க குலகால வளநாட்டில் அடங்கிய ஒரு பேரூரே பெருமுள்ளூர் என்னும் ஊராகும். அன்று பெருமுள்ளூர் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பெயர் மருவி இன்று பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது.
வரலாற்றில் இவ்வூர், பெருமுள்ளூரான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் எனக் குறிக்கப்பெறுகின்றது. குலோத்துங்கசோழன் காலத்திற்கு (கி.பி.1070-1125) முன்னதாகவே இராஜராஜனால் இச்சிவாலயம் எழுப்பப்பெற்றிருக்கவேண்டும். நம் வரலாற்றில் பல்வேறு சான்றுகள் மறைந்தும் புதைந்தும் கிடப்பதால் பல செய்திகளை வெளியுலகு அறிய இயலாமல் போய்விடுகிறது. கோயிலோடு இணைந்து திகழும் பெருங்குளமான தாமரைக்குளத்தின் நீர் வெளியேறும் அமைப்பும், கட்டுமானமும் இராஜராஜன் காலத்துப் பாணியைக் காட்டுகின்றன.
பாண்டிய மன்னர்களால் இவ்வூரும், இங்கு திகழும் கோயில்களும் போற்றப்பெற்றுள்ளன. பாண்டிய நாட்டின் எல்லையான வெள்ளாற்றின் அருகே இவ்வூர் அமைந்துள்ளதே இதற்குக் காரணம் ஆகும். இங்கு கிடைத்த கல்வெட்டில் காலத்தால் முந்தையது குலோத்துங்க சோழனின் கல்வெட்டாகும். பல்வேறு காரணங்களால் பிற கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிந்துள்ளன.
இங்கு புதிதாகக் கண்டறியப்பட்ட மராத்திய மொழியின் ஒரு வடிவமான மோடி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாம சிம்மன் (கி.பி.1739-1763) காலத்தில் வெட்டப்பட்டதாகும். இக்கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1674 என்றும் கலி ஆண்டு 4854 என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இதன்படி இக்கல்வெட்டு வெட்டப்பெற்ற ஆங்கில ஆண்டு கி.பி.1753 ஆகும். இக்கல்வெட்டுச் சாசனத்தில் செப்பேடு மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுவதுபோன்று முத்திரை இடப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மேலும், சூரிய, சந்திரரைக் குறிப்பிடும் வட்டமும் பிறையும் வெட்டப்பட்டுள்ளது. மராத்தி மோடி எழுத்துக்கள் கலந்து காணப்படும் இக்கல்வெட்டு பிரதாபசிம்மன் பெருமுள்ளூர் சிவாலயத்திற்கு வழங்கிய கொடையினை விவரிக்கிறது.
கிட்டத்தட்ட 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் பக்கவாட்டில் இதே செய்தி, தமிழிலும் வெட்டப்பட்டுள்ளது.  ஆனால் தமிழ்ப்பகுதி மிகவும் சிதைவுற்று இருப்பதால் படித்தறிய முடியா நிலையில் உள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்துக் கோயிலில் கிடைத்துள்ள மராத்தி மொழி மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இதுவேயாகும் என்று மணி.மாறன் தெரிவித்தார்.

அழகான இயற்கைச்சூழலில் அமைந்துள்ள இக்கோயிலைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள பதிவினை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். இக்கோயிலில் உள்ள மூலவர் திருமேனியானது உளியால் செதுக்கப்படாத விடங்கத்திருமேனியாகும். மேற்கண்ட கல்வெட்டு தொடர்பான செய்தி தற்போது விக்கிபீடியாவில் இணைக்கப்பட்டுள்ளது. 



நன்றி : திரு மணி.மாறன்
விக்கிபீடியா
செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்