2012 முதல் நாளொரு பதிகம் வாசித்து வரும் நிலையில் ஏழாம் திருமுறையைத்
தொடர்ந்து அண்மையில் எட்டாம் திருமுறையில் திருவாசகத்தை (மாணிக்கவாசகர்)
நிறைவு செய்துள்ளேன். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் திருமுறைகளுடன்
நோக்கும்போது அதிகமான மெய்யியல் சார்ந்த கருத்துகளை திருவாசகத்தில் காணமுடிகிறது. அதனால்தான்
திருவாசகத்திற்கு உருகார் எவ்வாசகத்திற்கும் உருகார் என்று கூறுகின்றார்கள் போலுள்ளது.
திருவாசகப் பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் வாசிப்போம், வாருங்கள்.
5.திருச்சதகம், 7.காருணியத்திரங்கல்
(கருணையாலே இரங்கும்படி இறைவனை வேண்டுவதைக் குறிப்பது)
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. (72)
தனிப்பெரும் முதல்வனே! வணக்கம்! நிகரில்லாத தந்தையே வணக்கம்! தேவர்களுக்குக்
குருவானவனே வணக்கம்! எங்களுடைய அழகிய சோதியே, வணக்கம்! “இங்கே வா” என்று அடியேனை உன்னிடம்
நீ அழைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வணக்கம்! துணையற்ற என்னுடைய தனிமையை நீக்குக. உன்னுடைய
திருவடித் துணையைத் தந்தருள்க வணக்கம்!
10.திருக்கோத்தும்பி, சிவனோடு ஐக்கியம் (அரச வண்டை அழைத்து இறைவன்
திருவடிக் கமலத்தின்கண் சென்று ஊதவேண்டும் என்று கூறுவது போல அமைந்தது. இறைவன் திருவடிக்கண்
பிரிவின் நிற்கும் பண்பு)
ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ. (222)
அரச வண்டே! ஒரு பொருளாய் முளைத்துத் தோன்றியவன். எத்தனையோ கிளைகளாக
விரிந்த எனக்கு நன்மை உண்டாக வைத்தவன். நாயைச் சிவிகையில் ஏற்றினாற் போல எனக்குச் சிறப்பு
செய்தவன். என் தந்தைக்கும் தந்தையானவன். என் தாய்க்குத் தலைவன் போன்றவன். குறைவுபடாத
அச் செல்வனிடத்தே சென்று நீ ரீங்காரம் செய்வாயாக!
15.திருத்தோணோக்கம், பிரபஞ்ச சுத்தி (தோணோக்கம் என்பது மகளிர் விளையாட்டுகளில்
ஒன்று. மகளிர் ஒருவர் தோளை மற்றொருவர் அன்பொழுகத் தொட்டும் தட்டியும் மகிழ்ந்து விளையாடும்
விளையாட்டாகும். உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்துஇறைவன் திருவருளால் அவன் திருவடிப்பேற்றினைப்
பற்றி வாழ்வது பிரபஞ்ச சுத்தியாகும்.)
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. (327)
அறிவில்லாத
அடியேனாகிய நான் பல காலம் மேலான கடவுளை வணங்காமல் வீணாகக் கழித்தேன். அவ்வாறு இருந்தும்
ஊழிமுதல்வனும் என்றும் அழியாத சிறந்த மாணிக்கம் போன்றவனுமாகிய எம் இறைவன் தானே எழுந்தருளி
வந்து என் பிறவியின் வேரை பிடுங்கிக் களைந்தான். அதனைப் ப்டித் தோள் நோக்கம் ஆடுவோமாக.
25.ஆசைப்பத்து, ஆத்தும இலக்கணம் (ஆசைப்பத்து என்பது இறைவன் திருவடியை
அடைவதற்கு ஆசைப்படும் தன்மையாகும். ஆன்மாவின் இயல்பு இறைவனை அடைய விரும்புவதே. இதனைக்
கூறுவது ஆத்தும இலக்கணம்.)
கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரத்திட் டிங்கே வாவென் றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. (418)
தலைவனே! கருடக் கொடியை உடைய திருமாலும் காண முடியாத வீரக் கழலணிந்த திருவடி
என்கிற செல்வத்தை எனக்குக் கொடுத்து, இங்கு என்னை ஆட்கொண்ட தொளையில்லாத மாணிக்கம் போன்றவனே!
‘ஓ’, எனது அறியாமையை நீக்கி “இங்கே வா” என்று வீட்டுலகிற்கு என்னை அழைக்கின்ற உள் அருளைப்
பெற நான் பெரிதும் ஆசைப்பட்டேன்.
31.கண்ட பத்து, நிருத்த தரிசனம் (நடராசப்பெருமானது திருநடனத்தைக்
கண்டு வியந்து பாடியது. திருப்பெருந்துறையில் கண்ட பெருமானைத் திருக்கழுக்குன்றத்திலே
மீண்டும் கண்டார். அவருடைய அருட்கூத்தைத் தில்லையில் கண்டு பாடியது. அதுவே நிருத்த
தரிசனம்.)
சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யான்எனதென் னுரைமாய்த்துக்
கோதிலமுது ஆனானைக் குலாவுதில்லை கண்டேனே. (479)
சாதி, குலம், பிறப்பு என்கின்ற சுழலிலே அகப்பட்டு அறிவு தடுமாறும்
நாய் போன்றவன் நான். என்னுடைய பிறவித் துன்பத்தைத் தொலைத்து அடிமை கொண்டு, பேதை குணத்தையும்,
அன்னியர் வடிவம் என்ற எண்ணத்தையும், நான் எனது என்று சொல்லும் வார்த்தைகளையும் அறவே
ஒழித்தான். அத்தகைய குற்றமற்ற அமுதம் போன்றவனை அழகு பொருந்திய தில்லையம்பலத்தில் கண்டேன்.
35.அச்சப் பத்து, ஆனந்தம் உறுதல் (உலக மக்கள் உண்மையறியாது உழல்வதைக்
கண்டு அஞ்சிப் பாடியது அச்சப்பத்து. இறைவனது திருவருள் இறவா இன்பம் நல்கும். எனவே இது
இன்பம் பெறுதல் என்னும் பொருளமைந்த ஆனந்தம் உறுதலாம்.)
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. (520)
துணிநிலா அணியினான்தன் தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. (520)
எத்தகைய நோய் வந்தாலும் நான் அஞ்ச மாட்டேன். பிறப்பு இறப்பிற்கும் நான் அஞ்ச மாட்டேன். பிறைச் சந்திரனைச் சூடியவன். தொண்டரோடு பொருந்தியவன். அந்தத் திருமால் தான் காணவேண்டுமென்று வலிமையான நிலத்தை அகழ்ந்து பார்த்தும் காண முடியாத சிவந்த திருவடியையுடையவன். அத்திருவடியைத் துதித்துத் திருவெண்ணீறு அணியாதவரைக் கண்டால், ஐயோ, நான் அஞ்சுகின்ற வகையை என்னவென்று சொல்வேன்!
நன்றி:
பன்னிரு திருமுறைகள், தொகுதி 11, மாணிக்கவாசகரின் திருவாசகம்,
உரையாசிரியர் புலவர் அ.மாணிக்கம்,
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 600 017
தொலைபேசி 28144995, 28140347, 43502995,
அலைபேசி :9094963125, 9941863542, 9380630192 (24 தொகுதிகள் ரூ.4500)
திருவாசகம் பற்றிய விக்கத்தை பாரா வாரியாக சொன்ன விதம் அருமை.
ReplyDeleteதொடர்ந்து செல்லட்டும் தங்களது அரும்பணி.
நன்றி ஐயா
ReplyDeleteதிருவாசகம் படித்து பாடல்களுக்கு விளக்கம் கொடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்று
ReplyDelete#சாதி, குலம், பிறப்பு என்கின்ற சுழலிலே அகப்பட்டு அறிவு தடுமாறும் நாய் போன்றவன் நான்#
ReplyDeleteஇதையெல்லாம் தெரிந்து கொண்டும், பலரும் திருந்துவதாக தெரியவில்லையே அய்யா :)
நல்ல விளக்கம் ஐயா....
ReplyDeleteதிருவாசகப் பாடல்களில் சிலவற்றை மீண்டும் படிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.
ReplyDelete"பொல்லா மணியேயோ" என்பதற்கு மாத்திரம் அர்த்தம் நெரடுகிறது. மற்றவற்றை மிகவும் ரசித்தேன்.
ReplyDelete35 தருமால், அகாழ்ந்து போன்ற எழுத்துப்பிழைகள்
ReplyDeleteபோற்றி என்பதற்கு "வணக்கம்" என்பது சரியான அர்த்தமாக உரைக்கவில்லை.
எழுத்துப் பிழைகளைத் திருத்திவிட்டேன். நன்றி.
Deleteசிறப்பான விளக்கம்..... பன்னிரு திருமறைகளையும் படித்துப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஅருமையான விளக்கம்
ReplyDeleteகடந்த ஐந்து ஆண்டுகளாக இடைவிடாது நாள்தோறும் நீங்கள் பதிகம் பாடுவது பெருவியப்பை அளிக்கிறது. அது என்ன ஆத்தும இலக்கணம்?
ReplyDeleteஅருமை
ReplyDeleteவிளக்கம் அருமை. நன்றி
ReplyDeleteஎளிமையாக்கித்தந்த தங்கள் விளக்கம் அருமை ஐயா.
ReplyDeleteகோ