முகப்பு

11 May 2019

எட்டாம் திருமுறை : திருக்கோவையார் : மாணிக்கவாசகர்

2012 முதல் நாளொரு பதிகம் வாசித்து வரும் நிலையில் எட்டாம் திருமுறையில் திருவாசகத்தைத் தொடர்ந்து திருக்கோவையாரை (மாணிக்கவாசகர்) நிறைவு செய்துள்ளேன். பிற கோவைகளைப் போல பாட்டுடைத் தலைவராக மன்னர்களையோ வள்ளல்களையோ கொண்டு பாடப் பெறாமல், தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நாயகனையே தலைவனாகக் கொண்டு அமைந்துள்ளது. மற்ற கோவைகளைவிட தனக்கென சிறப்பினைக் கொண்டுள்ளது. 

கோவை நூல்களின் அமைப்பாக தலைவன், பாட்டுடைத்தலைவன், கிளவித்தலைவன், தலைவி, பாங்கர், இளையர், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள், அகத்திணையில் பொருட்பாடு, களவியல், கற்பியல்  என்ற வகையில், இதுவரை படித்த திருமுறைகளில் பொருளைப் புரிந்துகொள்வதற்குச் சற்றே சிரமமாக திருக்கோவையார் உள்ளதை உணரமுடிந்தது.  400 பாடல்களைக் கொண்ட திருக்கோவையாரில் தினமும் படித்து வந்ததில், சில பாடல்களைப் பொருளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். வாருங்கள், வாசிப்போம். 



கரும்புறு நீலம் கொய்யல் 
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழியொ(டு) ஆயத்து 
நாப்பண் அமரர்ஒன்னார்
இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி 
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் 
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. (167)
பொருள்: பிரிவதாக நினைத்த பெரிய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவன் அழகிய ஆபரணங்களையுடைய பாங்கியுடன் நித்திரை கொள்கென்று சொன்னது. 
தேவர்களுக்குப் பகைவராகிய அசுரருடைய இரும்பால் ஆகிய மிகப்பெரிய மதிலும், பொன் மதிலும், வெள்ளி மதிலும் அன்று ஓர் துரும்பின் தன்மையாய் உறும்படி அழித்த வெற்றியினையுடைய எம்முடைய சுவாமியுடைய பெரும்பற்றப்புலியூரைச சூழ்ந்த பொழிலிடத்தே, வண்டுகள் பொருந்தின நீலப்பூக்களைத் தனியே நின்று கொய்யாது ஒழிவாயாக. பெறுதற்கரிய தோழியுடனே ஆயக்கூட்டத்தில் நடுவே உறங்குவாயாக.  


நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலது
கல்லா கதிர்முத்தம் காற்றும்
எனக்கட்டு டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே இதுநின்னை
யான்இன்(று) இரக்கின்றதே. (192)
பொருள் : பிரிந்தவர் வந்து நின்றபடியை அறிந்து நின்ற நாயகியுடைய நிலையைச் சிறப்புடைய தோழி சிறைப்புறமாகச் சொன்னது.
ஒளியார்ந்த சந்திரனே! திருஅம்பலத்தில் பழையவனுடைய அருளில்லாதாரைப் போலப் பிரிந்தவர், பிரிந்த துயரமெல்லாம் நீயே கண்டாய். ஆதலால் 'வளைகளும் தம்முடைய நிலைகளில் நின்றனவல்ல; நெஞ்சமானது நெகிழ்ந்து உருகா நின்றது. நெடுங்கண்கள் உறங்காவாய் ஒளியுடைத்தாகிய முத்துமாலைகளை இடா நின்றன; என்று சொல்லுவாயாக வேண்டும். இது நான் இப்பொழுது உன்னை வேண்டிக்கொள்கிறது.

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழும்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப் பின்னைச் சென்றஎன் நெஞ்(சு)என்
கொலாம்இன்று செய்கின்றதே. (273)
பொருள் : நாயகன் பிரிய அழகினையுடையாள் வாடியது.
அழகிய பின்னைப் பிராட்டி தோள்களை முன் பொருந்தின புருடோத்தமன் ஏத்தப் புகழ் விளங்கா நின்ற செம்பொன்னை வெற்றி செய்கிற வீரக்கழல் செறிந்த சீபாதங்களை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த முத்தை ஒத்த வெள்ளிய மணலில் கூடிப் பிரிந்தவருடைய தேரின் பின்னே சென்ற என் நெஞ்சம் இவ்விடத்தினின்று செய்கின்றதென்னோ? அறிகின்றிலேன்.

கருந்தினை ஓம்பக் கடவுள்
கராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றில்துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே. (279)
பொருள் : காந்தளானது அரும்பத் தெய்வத்தினார் வந்த மழை காண் என்று ஆபரணங்களை உடைய பாங்கி மிகுத்துச் சொன்னது.
பச்சென்ற தினையைப் பரிகரிப்பதாகத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு நம்முடைய உறவினர் ஆரவரிக்க நீரைச் சொரிந்தன மேகங்களானவை; அப் பெரிய அருளைப் பொறுக்கமாட்டாமையினால் தானாளும் வாய்மை மறுத்து என்னை அடிமை கொண்ட திருச்சிற்றம்பலநாதனுடைய திருப்பரங்குன்றில் நெருங்கி விரிந்தன காந்தளானவை; வெள்ளிய வளைகளை உடையாய்! இது காரென்று பயப்படாதே. இது தெய்வ மழை காண்.

நன்றி:  
பன்னிரு திருமுறைகள்,  தொகுதி 12, மாணிக்கவாசகரின் திருக்கோவையார்,
உரையாசிரியர் வித்வான் எம். நாராயண வேலுப்பிள்ளை,
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 600 017
தொலைபேசி 28144995, 28140347, 43502995,
அலைபேசி :9094963125, 9941863542, 9380630192 (24 தொகுதிகள் ரூ.4500)




இதற்கு முன் நாம் வாசித்தது : எட்டாம் திருமுறை : திருவாசகம் : மாணிக்கவாசகர்

10 comments:

  1. படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  2. தங்களின் தொடர் வாசிப்பு வியப்பைத் தருகிறது ஐயா

    ReplyDelete
  3. தங்களது வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  4. படித்தேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. எட்டாம் திருமுறை வாசித்து நிறைவு செய்து விட்டீர்களா? மகிழ்ச்சி. என் கணவரும், என் மாமியாரும் பன்னிரு திருமுறைகளை சித்திரையில் ஆரம்பித்து பங்குனியில் நிறைவு செய்வார்கள்.

    ReplyDelete
  6. வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். அப்பொழுது தான் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று தெரிகிறது. நன்றி.

    ReplyDelete
  7. அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றி. பொருள் புரிந்தாலும் மீண்டும் கொஞ்சம் நான் ஆழ்ந்து வாசித்தால்தான் மனதில் பதியும் என்றும் தோன்றுகிறது.

    மிக்க நன்றி ஐயா

    கீதா

    ReplyDelete
  8. என்னவோ தெரியவில்லை இம்மாதி வாசிப்பனுபவம் கிடைத்ததில்லை

    ReplyDelete