முகப்பு

15 June 2019

நியூசிலாந்தின் தாய் ஜெசிந்தா அர்டேர்ன்

“நியூசிலாந்தின் இருண்ட நேரத்தில் நம்பிக்கைக்கீற்று”, “இரக்கம், மன உறுதி, நேர்மையுடன் நடந்துகொண்டவர் நம் பிரதமர். நான் ஒரு நியூசிலாந்துக்காரர் என்பதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குடிமகனும் அவ்வாறே நினைக்கின்றார்”, “பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பல பத்தாண்டுகளில் செய்யவேண்டியதை ஏழே நாட்களில் செய்து காட்டியவர்”, “அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. டிவிட்டரில் சிக்கித்தவிக்கிறார் ட்ரம்ப், பிரெக்சிட் இழுபறியில் மாட்டிக்கொண்டுள்ளார் தெரசா. ஆனால் ஜெசிந்தாவின் மன உறுதி அவரை அனைவரும் பேசும்படி செய்துவிட்டது. இக்கட்டான சூழலில் இரும்பு போன்ற உறுதித்தன்மையை அவரிடம் பார்த்துவிட்டோம்” என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.  
 “ஜெசிந்தாவின் அசாதாரணமான செயல்பாட்டிற்காக தன் நாட்டிலும் உலகளவிலும் போற்றப்படுவார்“ என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார் ஒரு அரசியல் விமர்சகர். “துயரங்களையும் சோகங்களையும் எதிர்கொண்டுள்ளார்” என்கிறார் வாஷிங்டன் போஸ்ட் இதழாளர். “அவரால் முடியுமா என்ற கேள்வியானது அனைத்துப் பெண் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதும் கேட்கப்படுகிறது. அவரிடம் உள்ள சக்தி என்ன? உறுதித்தன்மை எங்கேயுள்ளது? இதோ பார்த்துவிட்டோம், மிக மோசமான சூழலை அவர் கையாண்டபோது அந்த உறுதியைக் கண்டோம்” என்கிறார் கார்டியன் பத்தியாளர்.
இவ்வாறாக உலகமே பாராட்டுமளவு பேசப்பட்டு வருபவர் நியூசிலாந்தின் பிரதமரான, போர்ப்ஸ் 2018ஆம் ஆண்டு பட்டியலில் சக்தி வாய்ந்த மகளிர் பட்டியலில் 29ஆம் இடத்தைப் பெற்றுள்ள ஜெசிந்தா அர்டேர்ன் (38) ஆவார். அந்நாட்டின் கிழக்குக்கடற்கரையோர நகரமான கிரைஸ்ட்சர்ச் என்னுமிடத்திற்கு அருகேயுள்ள மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 50 பேர் இறந்தது அண்மைக்கால வரலாற்றில் மிகவும் மோசமானதாகும். தாக்குதல் நிகழ்ந்தபோது ஜெசிந்தா அதிகமான அளவு சோதனைக்குள்ளானார். இவ்வாறான ஒரு சூழல் இதற்கு முன்னர் நியூசிலாந்தின் எந்தத் தலைவருக்கும் அமையவில்லை.
அடுத்து செய்யவேண்டியது பற்றி சிந்தித்து, தாக்குதல் நிகழ்ந்த நாளன்று மாலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அமைதியான ஒரு நாடு பேரதிர்ச்சியை எதிர்கொள்கிறது என்று அவர் கூறியபோது குரலில் தளர்ச்சி இருந்தாலும், ஒற்றுமை மற்றும் இரக்கத்தினை அச்செய்தி உறுதியாக வெளிப்படுத்தியது.  “நியூசிலாந்தின் கருப்பு நாள்களில் ஒன்று இந்நாள். 200  வகையான இனத்தவரையும், 160 மொழிகளையும் கொண்ட பெருமையுடையது நம் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையில் பொது மதிப்புகளை நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்கிறோம். இந்த சோகத்தின் மூலமாகப் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்முடைய இரக்கமும், ஆதரவும் தேவை. இரண்டாவதாக, நாம் விடுக்கும் உறுதியான கண்டனம். இத்தாக்குதலுக்காக நீ எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் - ஆனால் நாங்களோ உன்னை மறுப்பதோடு உன் செயலைக் கண்டிக்கிறோம்“, என்றார்.
மறுநாள் காலை தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்றார். உடன் அவருடைய சக அமைச்சர்களும், எதிர்க்கட்சித்தலைவர்களும் சென்றனர். கருப்பு நிற முக்காடு அணிந்து, சோகத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இனத்தவரை சந்தித்தார்.  அவர்கள் அழ ஆரம்பிக்கும்போது தன் கைகளில் தாங்கிப்பிடித்தார், ஆறுதல் மொழிகளை மென்மையாக எடுத்துரைத்தார், தன் கன்னத்தை அவர்களுடைய கன்னங்களில் வைத்து சோகத்தைப் பகிர்ந்துகொண்டார். அவருடைய இந்த அரவணைப்புகளைக் கொண்ட வீடியோ உலகம் முழுவதும் வைரலானது.  துக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியபோது அதனை அவர் புகைப்படத்திற்காகச் செய்ததாகத் தெரியவில்லை. அவருடைய கண்களில் இருந்த இயல்பான சோகத்தினையும், முகத்தில் இருந்த அக்கறையையும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் உணர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்களோடு கைகோர்த்து நடந்தார். அவருடைய இலக்கு அவர்களுடைய துக்கத்தைப் பகிர்வதில்  மட்டுமே இருந்தது. 
 “தாக்குதல் நிகழ்ந்த முதலாக நியூசிலாந்தில் வெறுப்பையோ கோபத்தையோ வெளிப்படுத்தும் பேச்சுகள் காணப்படவில்லை. நாம் இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வோம், இதனை எதிர்கொள்வோம்” என்றார் ஆக்லாந்து பல்கலைக்கழக பொதுக்கொள்கை நிறுவனப் பேராசிரியரான ஜெனிபர் கர்ட்டின்.   மேலும் அவர், ”பிரதமர் மிகவும் அமைதியாகவும் உறுதியாகவும் நடந்துகொண்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார். கொலையாளியைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை”  என்றார்.
”பிரதமர், சிக்கலான சூழலில் நிதானத்தைக் கடைபிடித்து கடமையில் விஞ்சிவிட்டார். அதிகாரத்தை எப்படி பங்களிப்பது என்பதை நன்கு உணர்ந்து அதிர்ச்சியடைந்த நாட்டின் பாதுகாப்புப்பணிகளைப் பிரித்தளித்து கண்காணித்து வருகிறார்” என்றார் 36ஆம் பிரிவினைச் சேர்ந்த பாதுகாவலர் பால் பச்சன். ”நாட்டு மக்களுக்கு அவர் தாயாக இருக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அவருடைய இந்த பாணியானது  மிகவும் நிறைவாக உள்ளது” என்றார் அவர்.
 “தலைமைப்பண்பு என்பதானது நியூசிலாந்துக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. நியூசிலாந்தில் இனவெறி உள்ளது. இருந்தாலும் அவர் இனவெறித்தனத்தை எதிர்கொள்ளவும், எங்களின் வழியை மாற்றியமைத்துக் கொள்ளவும் எங்களுக்கு மிகவும் துணையாக இருக்கிறார்“, என்றார் அவர்.
தெளிந்த நீரோடையான அவருடைய எண்ணத்தில் உறுதியும் காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வினைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்கவேண்டும் என்றார்.   நிகழ்விற்குப் பின் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியபோது அஸ்ஸலாமு அலைக்கும் என்று அரபியில் பேசத் தொடங்கினார்.  “தாக்குதல் நடத்தியவரின் பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்” என்று உறுதிபடக் கூறினார். ”இறந்தவர்களைப் பற்றி யோசிக்கவேண்டிய தருணம் இது, கொலையாளியைப் பற்றி அல்ல”, என்றார். அவருடன் மாற்றுக்கருத்து கொண்டவர்கள்கூட அமைதியானார்கள்.  அவருடைய தெளிவிற்காகவும் உறுதிக்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.
நொறுங்கிப்போன நியூசிலாந்து குணமடைய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்மீது கடுமையான தண்டனை பெற்றுத்தரும் வகையில் அவர்மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்கப்படும் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி, இன வெறியர், அவருக்கு வேறு பெயரில்லை என்றும் கூறினார். ராணுவ வகை தானியங்கி மற்றும் உயர் ரக குண்டுகள் அடங்கிய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை நியூசிலாந்தில் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.
அண்மையில் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் அவர், உலகிலேயே இளம் வயதில் தலைவரான பெண்மணியாவார். 150 ஆண்டு கால நியூசிலாந்தின் வரலாற்றில் குறைந்த வயதில் பிரதமரானவர். 2018இல், பிரதமராக பணியில் இருந்தபோது தாயானவர் என்ற பெருமையைப் பெற்ற இரண்டாவது பெண்மணியாவார். அவருக்கு முன்பாக  1990இல் பாகிஸ்தான் பிரதராக இருந்தபோது பெனாசிர் பூட்டோ குழந்தை பெற்றவர். 
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்ட அரங்கில் நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டிற்குச் சென்றபோது, பிறந்து மூன்று மாதங்களே ஆன, நீவ் என்ற பெயருள்ள, தன் மகளை அழைத்துவந்திருந்தார் ஜெசிந்தா. குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டே மாநாட்டில் பேசினார். அவருடைய கணவருடன் உடன் இருந்தார். அப்போது எங்கு பார்த்தாலும் ஜெசிந்தாமானியா என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர்தான் மனித நேயத்துடனும் உறுதியுடனும் தற்போது நாட்டை நடத்திச் செல்கின்றார்.  முக்காடுடன் உள்ள அவருடைய புகைப்படம் தற்போது உலகளவில் பிரபலமாகி வந்ததோடு, அவருடைய தலைமைப்பண்பையும் வெளிப்படுத்தியது. க்ரைசிஸ் என்ற இதழ் ஜெசிந்தாவைப் பற்றி இவ்வாறு ட்வீட் செய்தது : “கருணை, கண்ணியம், தைரியம்…உண்மையான தலைவர்கள் இன்னும் இருக்கிறார்கள்“.

துணை நின்றவை
  • ஐ.நா.சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை : அசத்திய நியூசிலாந்து பிரதமர், தினமணி, 25 செப்டம்பர் 2018
  • ‘Real leaders do exist': Jacinda Ardern uses solace and steel to guide a broken nation,  Guardian, 19 March 2019
  • PM Jacinda Ardern Says New Zealand Killer Doesn't Deserve to Be Named, the Internet Agrees, News18.com, 19 March 2019
  • Picture of Grieving New Zealand PM Jacinda Ardern in Hijab After New Zealand Shooting Goes Viral, News18.com, 19 March 2019 New Zealand shooting: The world is praising Jacinda Ardern’s response to terrorist attack  Picture, Independent, 20 March 2019
  • தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை:  நியூஸி பிரதமர் அதிரடி, தினமணி,21 மார்ச் 2019 New Zealand Prime Minister has helped a broken nation, Independent, 23 March 2019
  • An image of hope: how a Christchurch photographer captured the famous Ardern picture, Guardian, 25 March 2019 
  • Forbes, Power Women 2018, #29, Jacindra Ardern, Prime Minister, New Zealand
18 ஜுன் 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

18 comments:

  1. தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்துள்ளார் இவரை பார்த்தாவது நம் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  2. நல்லதொரு தலைவரைப்பற்றிய செய்திகள். அந்த நாட்டு மக்கள் கூட பொறுப்புடன் நடந்துகொண்டிருந்திருக்கின்றனர். மோசமாகவோ, இன, மத வெறியைத் தூண்டும் விஷயங்களை பொதுவெளியில் பகிராமல் இருந்திருக்கிறார்கள். பாராட்டப்படவேண்டிய செயல், ஒற்றுமை.

    ReplyDelete
  3. கருணை கண்ணியம் தைரியம் அருமை பெண் தலைவர் பற்றி படிக்க படிக்க நம் நாட்டில் கிடைப்பார்களா என் உங்க வைக்கிறார்.

    ReplyDelete
  4. மன்னிக்கவும் என ஏங்க வைக்கிறார்

    ReplyDelete
  5. நல்ல தலமை, நல்ல மக்கள். இவர்களை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    கருணை, கண்ணியம், தைரியம் கொண்டஉண்மையான தலைவர்களை பார்க்கும் போது மனது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. உலகம் இன்னும் இயங்குவது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால்தான்.

    ReplyDelete
  7. good ..நல்ல பதிவு ..நன்றி!!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு ஐயா. நம் நாடு கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.

    பதிவை மிகவும் ரசித்டோம். ஜெசிந்தா அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை.

    எத்தனை அழகான நடவடிக்கைகள். எதிர்கொண்ட விதம் மிக மிக போற்றத் தக்கஒன்று.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  9. சங்க காலத்தில் கூட இவ்வாறான ஆட்சி முறை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மனுநீதி சோழன் நீதி யாவரும் அறிந்ததே. தற்போது கூட இவ்வாறான அரசியல் வாதிகள் இருப்பது மெச்சத்தக்கதே.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. நல்லதொரு பொறுப்பான நாட்டுத் தலைவரை பற்றி அறிய தந்துள்ளீர்கள். இவரைப்பற்றி படிக்கவே மனதுக்கு அமைதியாக. திருப்தியாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. ஸ்விசர்லாந்தை விட நியூசிலாந்து மிக அழகான நாடு என்பது அந்த மக்கள் மனதிலும் பிரதிபலிக்கிறது. நல்ல பதிவு ஐயா . பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. நல்லதொரு தலைவரைப் பற்றிய நல்ல பகிர்வு...
    அருமை அய்யா.

    ReplyDelete
  13. மக்களுக்கான தலைவரைப் பற்றிய அருமையான பதிவு

    ReplyDelete
  14. மனித நேயத்தை ஒரு சிக்கலான தருணத்திலும் கடை பிடித்த ஜெசிகா விடம்நம் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  15. ஜெசிந்தா ஜெசிகாவாக மாறியது என் தவறு

    ReplyDelete
  16. அனைவரும் அறியப்ப்ட வேண்டிய தலைவர். சிறப்பான பதிவு

    ReplyDelete
  17. மற்றவர் பின் பற்றத்தக்க முன்மாதிரி நடவடிக்கைகள் பலவற்றின் பதிவு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. வெறுப்பையோ கோபத்தையோ வெளிப்படுத்தும் பேச்சுகள் காணப்படவில்லை
    சிறப்பு. இதுபோன்ற சிறப்பான நிகழ்வகளை அள்ளித்தரும் தங்களுக்கு மிகுந்த நன்றி

    ReplyDelete