முகப்பு

02 October 2019

காந்தி 150 : எங்கள் இல்லத்தில் காந்தி

காந்தியடிகளின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வினிய வேளையில், எங்கள் இல்லத்தில் என்றும் இருக்கும் காந்தியின் புகைப்படமும் அதற்கான பின்புலமாக எங்கள் தாத்தாவும் அமைந்தது நினைவிற்கு வந்தது. 



1960களின் இறுதியில் கும்பகோணம் திருமஞ்சனவீதியில் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த நேரம்.  கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதர் அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு எங்கள் தாத்தாவைக் காண ஒருவர் வந்திருந்தார். அவரைப் பற்றி விசாரிப்பதற்குள், அவர் எங்கள் வீட்டு வாசலில் நிலைப்படியின்மேல் பொக்கைவாயுடன் சிரித்துக்கொண்டிருந்த மகாத்மா காந்தியின் படத்தைப் பார்த்து வணக்கம் சொன்னார். அந்த புகைப்படத்துடன் நேரில் பேசுவதைப் போல பேசினார். அதற்குள் எங்கள் தாத்தா வந்துவிடவே, இருவரும் வீட்டிற்குள் வரவேற்பறையில் வந்து பேச ஆரம்பித்தனர். எங்கள் தாத்தா அப்போதைய காங்கிரஸ்காரர். எப்போதும் கட்சிக்காரர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். அரசியல்ரீதியாக எங்கள் தாத்தா கும்பேஸ்வரர் மேலவீதியில் குடியிருந்த பி.ஆர்., தெற்கு வீதியில் இருந்த தேரி, பேட்டைத்தெருப்பள்ளி அருகே இருந்த குமரசாமி உள்ளிட்ட பலருடன் தொடர்பு வைத்திருந்தார்.  பலர் அவரைப் பார்க்க வருவர். அவரும் பல பிரமுகர்களைப் பார்க்கச் செல்வார். அந்த வகையில் அவர் வந்திருந்தார் என்பதை பின்னர் அறிந்தோம். எங்கள் வீட்டில் காங்கிரஸ் கொடியுடன் கூடிய கொடிக்கம்பம் இருந்தது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய விழாக்களின்போது எங்கள் தாத்தா எங்கள் வீட்டில் கொடி ஏற்றுவார் .  தொடர்ந்து நண்பர்கள் அழைப்பிற்கேற்ப ஊரின் பல இடங்களில் சென்று கொடி ஏற்றுவார். பின்னர் இனிப்புகளும் சில சமயங்களில் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களும் வழங்குவார். அவ்வாறான விழாக்களில் காந்தியின் படம் நடுநாயகமாக இருப்பதைப் பார்த்துள்ளேன்.

பொக்கைவாய்ச்சிரிப்பு
காந்தி படத்துடன் பேசிய அவருடைய அன்னியோன்னியமான பேச்சு என்னுள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. இரு பக்கங்களும் திண்ணைகளைக்கொண்ட எங்கள் வீட்டில் நிலைப்படியின் இரு புறங்களிலும் மாடங்கள் இருக்கும். அந்த மாடங்களுக்கு மேலே சற்று நடுவில் அமைந்திருந்த அந்த படத்தில் இருந்த காந்தியை பின்னர் அடிக்கடி பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு நல்ல ஆரம்பமாக அதனை நினைத்தேன். அந்தச் சிரிப்பானது பிறரைச் சிந்திக்கவைக்கும் சிரிப்பு, செயலாற்றவைக்கும் சிரிப்பு என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

வரவேற்பறையில் தலைவர்களின் படங்கள்
கும்பகோணத்தில் எங்களது வீட்டில் வாயிலில் நிலைப்படிக்கு மேலாக புன்சிரிப்புடன் காணப்படுகின்ற மகாத்மா காந்தியின் படம் இருக்கும். முதல் நிலைப்படியைக் கடந்து உள்ளே  செல்லும்போது இரண்டாவது நிலைப்படி. அதில் மிகப்பெரிய அளவில் அமர்ந்த நிலையில் கழற்றிய மூக்குக்கண்ணாடியைக் கையில் வைத்தபடி உள்ள பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும். இரு நிலைப்படிகளுக்கும் இடையேயுள்ள வரவேற்பறையில்  நடுவில் நின்ற நிலையில் மகாத்மா காந்தி, மார்பளவு வரையிலான  நேரு படங்களும், அறையின் வலது புறச்சுவற்றில் இராணுவ உடையுடன்  சுபாஷ் சந்திரபோஸ் படமும், இடது புறச்சுவற்றில் கம்பீரமாக கைகட்டிக்கொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தர் படமும் காணப்படும். இவற்றில் காமராஜரின் படம் கிட்டத்தட்ட மூன்றடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டதாகும். மேலிருந்து இதனை இறக்க இருவர் தேவைப்படுவர். மற்ற படங்கள் இப்படத்தைவிட சற்றுச் சிறியதாக இரண்டரை அடி உயரத்தில் இருக்கும். வரவேற்பறையை கம்பீரமாக இவை அலங்கரித்தன. இந்த அறையில்தான் தாத்தாவைக் காண வருவோர் அமர்ந்து பல மணி நேரங்கள் விவாதித்துக்கொண்டிருப்பர். தற்போது தஞ்சாவூரில் எங்கள் வீட்டில் உள்ளே நுழையும்போதே காந்தி மற்றும் காமராஜரின் படங்களே உள்ளன. இல்ல நூலகத்தில் விவேகானந்தர்சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்கள் உள்ளன.

கமலா நேரு வாசகசாலை
எங்கள் தாத்தாவும், பிற நண்பர்களும் கூடும் மற்றொரு இடம் கமலா நேரு வாசகசாலை. கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியும், மேல வீதியும் சந்திக்கும் இடத்தில் அந்த வாசகசாலை இருந்தது. வாசகசாலைக்கு நாளிதழ்கள் வர தாமதமானாலோ, அங்கு இதழ்கள் இல்லையென்றாலோ எங்கள் தாத்தா எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் நவசக்தி, மற்றும் நாத்திகம் இதழ்களை அங்குகொண்டுபோய் வைத்துவரச் சொல்வார். படிக்கவேண்டிய அன்றைய நாளுக்கான இதழ்கள் வெளியே இருக்கும். படிக்கப்பட்ட இதழ்கள் அங்குள்ள ஒரு மரப்பெட்டியில் வைத்து மூடப்பட்டிருக்கும். அங்கும் காந்தியின் புகைப்படத்தினைப் பார்த்துள்ளேன். இவையனைத்தும் சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்தவை. 

சத்திய சோதனை
எங்கள் வீட்டிலும், வாசகசாலையிலும் காந்தியைப் பார்த்ததும்,  வீட்டில் அப்போது பெரியவர்கள், தலைவர்களைப் பற்றி பேசியதும் மனதாரப் பதிந்தது. நாளடைவில் காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை வாங்கி, அதனை ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். ஒரு வித்தியாசமான ஆன்மாவாகவே அவர் என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். எங்கள் இல்ல நூலகத்தில் சத்திய சோதனை நூல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இடம்பெற்றுள்ளது.





சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டுப் பிரிந்து, தஞ்சை வந்த பின்னர் தாத்தா வைத்திருந்தபடியே படங்களை வைக்க விரும்பினேன். எங்கள் வீட்டில் காமராஜர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர் ஆகியோரின் படங்களை வைத்தேன். என் தாத்தா அவர்களைப் பற்றிக் கூறிய சொற்கள் இன்னும் மனதில் உள்ளன. 



இன்றும் காந்தி
இன்றும் எங்கள் இல்ல நிலைப்படியின் கதவுகளுக்கு மேல் மகாத்மா காந்தி நின்ற நிலையில் உள்ள படமும், அருகில் பெருந்தலைவர் காமராஜர் நின்ற நிலையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளன. வளரும் தலைமுறையினருக்கு இத்தலைவர்களைப் பற்றி எடுத்துச் சொல்வது நம் கடமையாகும். அந்த வகையில் முக்கியமான இடத்தைப் பெறுபவர் மகாத்மா காந்தி ஆவார். காலம் கடந்தும் நிற்கும் காந்தியின் கொள்கைகள்.

------------------------------------------------------------------------
பெருந்தலைவர் காமராஜர் தொடர்பான கட்டுரையைப் பற்றி (அப்பச்சி சாமி, சமஸ், தி இந்து, 17 மார்ச் 2016)  நான் எழுதிய கடிதத்தை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி.
------------------------------------------------------------------------
7 செப்டம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

20 comments:

  1. தங்களது கடந்த கால அனுபவத்தை சுவையானபடி பகிர்ந்து கொண்டது நாங்களும் அதை நேரில் அனுபவிப்பது போன்ற உணர்வை தந்தது பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கும்பகோணத்தில் எங்கள் அப்பா பணிபுரிந்த காலத்தில் நாங்களும் அங்கே இருந்திருக்கிறோம்.எந்த ஏரியா என்றுநினைவில்லாத வயது!  அந்த வீட்டைப்பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வைத் தந்தன.

    ReplyDelete
  3. மகான் புகழும், பெருந்தலைவர் புகழும் என்றேன்றும் நிலைத்திருக்கும். நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    தங்களின் பழைய கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிகவும் சுவாரஸ்யமாக நாங்களும் உங்களுடன் இருந்த உணர்வை தந்தது.

    தேசப்பிதா காந்தியடிகளின் புகைப்படங்களும், திரு. காமராஜர் அவர்களின் படமும் கம்பீரமாக உள்ளது. தாங்கள் அவர்களை போற்றி வருவதும் பெருமைக்குரிய விஷயமே.! எங்களுடன் இந்த அக்டோபர் 2 ல் இவையனைத்தையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. காலத்தைக் கடந்து நிற்பவர் காந்திஜி..

    தியாகிகளான பெருந்தலைவர்களை நினைவுகூர்ந்த விதம் அருமை..

    வாழ்க அவர்தம் புகழ்...

    ReplyDelete
  6. ஒரு வீட்டில் இவ்வாறான படங்கள் வைத்திருப்பது எதிர்கால சமுதாயத்துக்கு இவர்களைப் போலஎடுத்துச் சொல்வதற்கு வசதியாக இருக்கும் அதை விட இவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதே எனக்கு முன் மாதிரியாக இருக்கும். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. சிறந்த கருத்துப்பதிவு .தேசப்பற்று இளைஞர்களிடம் வளரும்.தேசீயம் காக்கப்பட இந்த அனுபவம் மகத்துவம் நிறைந்தது

    ReplyDelete
  8. அற்புதமான பார்வை...
    அனுபவப்பகிர்வு

    ReplyDelete
  9. காந்தியை நேரில் கண்டிருக்கிறேன் இவர் மறைவை எங்கள்தெருவில்முதலில் அறிவித்தவனும் நான் அப்போது அரக்கோணம்தாசில்தார் தெருவில் இருந்தோம் காந்தியைப்ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு காந்தியின் பிறந்த நாளில் நான் எழுதிய பதிவு ஒன்றுக்கு வச்ந்தபின்னூட்டமொன்று மறக்கமுடியாது நைந்து போனசெய்தி என்று இருந்தது அதுகாந்தியைப்பற்றி பலவிதக் கருத்துகள் நிலவுகின்றன அவரைக்குறை கூறும் செய்திகள் மட்டும்நைந்து போகாமல் இருக்கின்றனவோ

    ReplyDelete
  10. பொக்கிஷங்களோடு வாழ்ந்து வந்திருக்கும் உங்களின் சிறு வயது நினைவுகளை சொல்லியிருக்கும் விதம், பகிர்ந்திருக்கும் விதம் மிக அருமை! முதல் வரியைப்படிக்க ஆரம்பித்த நான் அந்த பெரியவர்களைப்பற்றி அறிய அறிய அதிலேயே ஆழ்ந்து விட்டேன். உயர்ந்தவர்களின் நினைவுகளைப்பகிர்ந்து கொண்டதற்கு இனிய நன்றி!

    ReplyDelete
  11. Very Nice Recalling sir.Good to hear many new infos

    ReplyDelete
  12. தாங்கள் பகிர்ந்த விதம் அருமை

    ReplyDelete
  13. Wonder full experience and our duty to educate younger generation ...thanks..k.sridaran.

    ReplyDelete
  14. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  15. அருமை ஐயா, காந்தியின் சத்திய சோதனையை அவ்வப்போது படிப்பேன்.

    ReplyDelete
  16. நல்ல அருமயான அனுபவப் பகிர்வு ஐயா

    கீதா

    ReplyDelete
  17. மிக மிக அருமை ஐயா.
    அந்தச் சிரிப்பானது பிறரைச் சிந்திக்கவைக்கும் சிரிப்பு, செயலாற்றவைக்கும் சிரிப்பு என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.
    அற்புதம்.

    ReplyDelete
  18. அருமையான அனுபவப் பகிர்வு. நன்றி அய்யா

    ReplyDelete