முகப்பு

12 October 2019

ரியலி கிரேட்டா தன்பர்க் : புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019

ரியலி கிரேட்டா தன்பர்க் என்ற தலைப்பில் 
புதிய தலைமுறை பெண் அக்டோபர் 2019 இதழில் (மலர் 3,இதழ் 4, பக்.88-89) வெளியான கட்டுரையினையும், 
அதன் மேம்படுத்தப்பட்ட வடிவினையும் பகிர்வதில் மகிழ்கிறேன், 
திரு சு.வீரமணி, புதிய தலைமுறை பெண் இதழுக்கு நன்றியுடன்

“2078இல் நான் என்னுடைய 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன். அந்த மகிழ்ச்சியான பொழுதில் என் குழந்தைகளோடு இருப்பேன். அவர்கள் உங்களைப் பற்றி என்னிடம் கேட்பார்கள். பருவ நிலையைக் காக்க போதிய நேரம் இருந்தபோதும் நீங்கள் எங்களுக்காக ஏன் எதுவும் செய்யவில்லை என்பார்கள்.  அனைத்திற்கும் மேலாக நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிப்பதாகக் கூறுகின்றீர்கள். ஆனால் அவர்களின் கண்களுக்கு முன்பாகவே அவர்களுடைய எதிர்காலத்தை முற்றிலும் சுக்குநூறாக்கிவிடுகின்றீர்கள்”. இப்படிப் பேசியவர் ஒரு மாணவி என்றால் அனைவருக்கும் வியப்பாக இருக்கும். 


பார்ப்பதற்கு நம் அண்டைவீட்டுப் பெண்ணைப் போலக் காணப்படுகிறார். தினமும் நாம் பார்த்த முகம் போலத் தெரிகிறது. பள்ளி மாணவியான இவர் நம்மை வித்தியாசமாகப் பார்க்கவைக்கின்றார்.  இதுவரை வரலாறு கண்டிராத, 20.9.2019 முதல் 27.9.2019 வரை ஒருவார காலம் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் 4000 இடங்களில் நடைபெறுகின்ற, இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போராட்டத்திற்கு வித்தாக அமைந்தவர். உலக கவனத்தை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமன்றி முதன்முதலாக பெரியவர்களும் கலந்துகொண்டனர். இந்தியாவிலும் இப்போராட்டம் நடைபெற்றது. நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டார் கிரேட்டா தன்பர்க்.

உலக வெப்பமயமாதலும், பருவ நிலை மாற்றமும் மனித மற்றும் பிற உயிரினங்களின் அழிவிற்கான தொடக்கம் என்பதால் பருவ நிலை காக்கப்படவேண்டும் என்ற அறைகூவல் விடுத்து, இதுதொடர்பாக அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி ஆகஸ்டு 2018இல், தன்னுடைய 15ஆம் வயதில் (பி.3 ஜனவரி 2003) ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒரு சிறிய பதாகையுடன் போராட்டத்தைத் தொடங்கிய கிரேடடா தன்பர்க் அதனைத் தொடர்கிறார்.
சுற்றுச்சூழல் தொடர்பான அப்பிரச்னையை முன்னெடுத்தபோது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளி வகுப்பினைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்.  இதையடுத்து, ‘எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமாக்கினார்.  இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து பருவ நிலை தொடர்பான விழிப்புணர்வினைத் தொடர்ந்து மேற்கொள்ள ஆரம்பித்தார். பள்ளி மாணவியின் இச்சாதனையை உலகமே வியந்து நோக்குகின்றது.


ஜனவரி 2019இல், லண்டனிலிருந்து வெளிவருகின்ற கார்டியன் இதழில் கிரேட்டா தன்பர்க் எழுதுகிறார்: "ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பான கால நிலை மாற்றம் தொடர்பான இடை அரசு, நாம் நம் தவறுகளைச் சரிசெய்யாத நிலையில் 12 ஆண்டுகளுக்கும் குறைவான இடைவெளியில் உள்ளோம் என்று கூறுகிறது. அக்காலகட்டத்திற்குள் எதிர்பார்க்கமுடியாத பலவிதமான மாற்றங்கள் சமூகத்தின் அனைத்துநிலைகளிலும் காணப்படும். அதில் குறைந்த அளவு 50 விழுக்காடு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வும் அடங்கும்."

அதே இதழுக்கு 11 மார்ச் 2019இல் அளித்த பேட்டியில், “நான் சற்று அதிகமாக நினைக்கிறேன். சிலர் அப்படியே விட்டுவிடுவர். எனக்கு வருத்தம் தருவதையோ, சோகம் தருவதையோ அப்படியே விட்டுவிட முடியவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் சிறியவளாக இருக்கும்போது எங்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம் திரைப்படங்களைப் போட்டுக் காண்பிப்பர். அப்போது கடலில் பிளாஸ்டிக் மிதப்பதையோ, பசியோடு இருக்கின்ற போலார் கரடிகளையோ பார்க்கும்போது முழுதும் அழுதுகொண்டேயிருப்பேன். என் நண்பர்களோ படத்தைப் பார்க்கும்போது மட்டுமே வருத்தப்படுவர், படம் முடிந்ததும் மற்றவற்றைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பர். என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அந்தப் படங்கள் அனைத்தும் என் மனதில் ஆழமாகக் பதிந்துவிட்டன.”

முதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள் முக்கிய கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்ற டெட் மாநாடு ஸ்டாக்ஹோமில் ஒவ்வோராண்டும் நடைபெறும். 24 நவம்பர் 2018இல் நடைபெற்ற அம்மாநாட்டில் பேசும்போது அவர், பருவநிலை மாற்றம் பற்றி முதன்முதலாக தன் எட்டு வயதில் கேள்விப்பட்டதாகவும், அதற்கு முக்கியத்துவம் தராப்படாததற்குக் காரணம் புரியவில்லை என்றும், தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தாவிட்டால் தான் இறந்துகொண்டிருப்பதாக உணர்வதாகவும் கூறினார். 2018வாக்கிலேயே நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற தன்பர்க், உரையின் நிறைவாக  “விதிமுறைகளுடன் விளையாடிக்கொண்டு நாம் உலகை மாற்றமுடியாது. ஏனென்றால் விதிகள் மாற்றப்படவேண்டும்” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அந்தோனியோ குத்தேரஸ் தன்பர்க்கால் முன்னெடுக்கப்படும் பள்ளிப்போராட்டங்களைப் பற்றிக் கூறும்போது “என் தலைமுறை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள என் சந்ததியினர் தவறிவிட்டனர். தற்போது இளம் சமுதாயத்தினரால் அது நன்கு உணரப்படுகிறது. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை, அவர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள்”  என்றார்.

அவருடைய முயற்சிக்கு பல நாடுகளும், அரசுகளும் ஆதரவினைத் தர ஆரம்பித்துள்ளன. பலர் அவரைப் பாராட்டுகின்றனர். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலர் மைக்கேல் கோவ் கூறுகிறார் :  “உன்னை கவனிக்கும்போது நான் பெருமைப்படுகிறேன். அதேசமயம் பொறுப்புணர்வையும், குற்ற உணர்வினையும் அடைகிறேன்.  நான் உன் பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்தவன். பருவநிலை மாற்றத்தை உணரவோ, சுற்றுச்சூழல் சீரழிவினை சரிசெய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.”

ஐக்கிய ராஜ்யத்தின் பருவநிலைச்சட்டம் அறிமுகக் காரணமான தொழிற்கட்சியின் அரசியல்வாதியான இட் மிலிபான்ட் கூறுகிறார்: “நீ எங்களை விழிக்க வைத்துவிட்டாய். நாங்கள் உனக்கு நன்றி கூறுகிறோம். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு கண்ணாடியாக விளங்கினர். நீ நல்ல பாடத்தைக் கற்பித்துவிட்டாய். கூட்டத்திலிருந்து தனியாக நின்று தெளிவுபடுத்திவிட்டாய்.” 



அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவை செப்டம்பர் 2019இல் சந்தித்தபோது ஒபாமா கூறுகிறார்: “நீயும் நானும் இணைந்து குழுவாக செயல்படுவோம்.” மேலும் அவர் “பருவ நிலை பாதுகாப்பு தொடர்பான தாக்கத்தைப் புரிந்துவைத்துள்ள இந்த இளம் தலைமுறையைக் கொண்டு தன்பர்க்கால் முன்னேற்றத்தை உண்டாக்க முடியும். அவர் சரியான மாற்றத்திற்கான போராடுகிறார்” என்கிறார்.  

அவள் வகுப்பிற்குப் போகாமல் இருப்பதை அவளுடைய தந்தையார் விரும்பவில்லை. இருந்தாலும் அவளுடைய நிலைப்பாட்டை அவர் மதிக்கின்றார். “அவள் வீட்டில் இருந்துகொண்டு மகிழ்ச்சியின்றி இருக்கலாம் அல்லது தன் எதிர்ப்பைத் தெரிவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம். வீட்டிலுள்ளோர்  இறைச்சி உண்பதை விட்டுவிடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தாள். எங்களுடைய எதிர்காலத்தை அவர்கள் திருடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவள் கூறுகிறாள்.”  அவருடைய தாயார், தன்பர்கும் அவளுடைய சகோதரியும் அஸ்பெர்கர் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

நோபல் அமைதிப் பரிசுக்காக தன்பர்க்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பரிசினை அவர் பெறுவாரேயானால் உலகில் மிக இளம் வயதில் அதைப் பெற்ற பெருமையை அடைவார். இதற்கு முன்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தன்னுடைய 17ஆவது வயதில் நோபல் அமைதிப்பரிசைப் பெற்ற பெருமையுடையவராவார்.

தன் 15ஆம் வயதில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடன் பாராளுமன்றத்தின்முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உலகை தன் பக்கம் இழுத்தார். அதுமுதல் அவர் பருவ நிலை ஆர்வலாகக் கருதப்படுகிறார்.

23 ஜனவரி 2019இல் ஸ்விட்சர்லாந்தில் டாவோஸில் அமைந்துள்ள உலகப்பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராளர்கள் 1500க்கும் மேற்பட்ட தனியார் சொந்த விமானங்களில் வந்தபோது தன்பர்க் 32 மணி நேர ரயில் பயணத்திற்குப் பின் அங்கு வந்தடைந்தார்.
அதுபோலவே 23 செப்டம்பர் 2019இல் நியூயார்க்கிலும், 2-13 டிசம்பர் 2019இல் சான்டியாகோவிலும் நடைபெறவுள்ள பருவநிலை மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக 14 ஆகஸ்டு 2019இல் அமெரிக்காவிற்குப் படகில் புறப்பட்டு சென்றார். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக விமானத்தில் பயணிக்காமல் படகுப்பயணத்தை மேற்கொண்டார். ஆடம்பரம் என்ற நோக்கில் இல்லாது வேகம் என்ற இலக்கினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படகில் அவரது இரு வார பயணம் சற்று சவாலானதாகவே இருந்தது. பயணத்தின்போது தினமும் தன் ட்விட்டரில் தன் பயண அனுபவங்களைப் பதிந்தார்.  16 ஆகஸ்டு 2019இல் தன் போராட்டத்தை தொடங்கி 52 வாரம் அதாவது ஓராண்டு ஆவதை தன் கடல்பயணத்தின்போது நினைவுகூர்ந்தார்.  பருவநிலை காக்க பள்ளிப்போராட்டம் என்ற பதாகையுடன் தன் புகைப்படத்தை கடலில் பயணித்தபடியே ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அவரது எண்ணம், செயல் என்ற அனைத்தும் பருவ நிலைக் காப்பது என்பதை நோக்கியே செல்கிறது.

பள்ளி மாணவியின் டைரியில் பொதுவாக ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற வகுப்பினைப் பற்றித்தான் காண்போம். எந்த ஆசிரியர் என்ன வகுப்பு எடுக்கிறார் என்பதையே ஒரு மாணவி சிந்திப்பார். 

டைரியில் இடம் இல்லாத அளவிற்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கிரேட்டா எஃபெக்ட் எனப்படும் கிரேட்டா விளைவினை உண்டாக்கி, பயணித்துக்கொண்டேயிருக்கிறார் இந்தப் பள்ளி மாணவி. அவருடைய ஆதங்கத்தை உணர்ந்து அவருக்குக் கைகொடுத்து, நாமும் செயலில் இறங்கி பருவ நிலை காக்க ஒன்றுசேர்வோம்.



இதற்கு முன் தினமணியில் வெளியான கட்டுரை : 
மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்ர்க்

12 comments:

  1. பிரமிக்க வைக்கிறார்.   நாமெல்லாம் பேசிக்கொண்டே இருக்கும்போது செயலில் இறங்கியிருக்கிறார்.  இவர் உரையை நான் கேட்ட நினைவு.  சிலர் சமூக விழிப்புணர்வு என்கிற பெயரில் பல விஷயங்களையும் முன்னெடுத்து ஒன்றையும் சரியாய்ச் செய்யாமல் போவர்.  இவர் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார்.  என்றாலும், இவர் கோரிக்கையை உலகம் நிறைவேற்றுமா?

    ReplyDelete
  2. நோபல் பரிசுக்கு தகுதியான பெண்மணியே...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    சிறு வயதிலேயே அசாத்தியமான உலக சிந்தனை வந்த இந்த சிறந்த பெண்மணி பாராட்டப்பட வேண்டியவர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி இவர் கூறுவது அத்தனையும் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு இவர் செய்யும் தியாகங்கள் நம்மை வழி நடத்த வேண்டும். கட்டுரை மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. இப்பெண்ணின் உணர்வுபூர்வமான பேச்சு யுட்யூபில் பார்த்த போது வியப்படைந்தேன். சிறிய பெண் எப்படி இத்தனை அழகாகத் தான் செய்ய நினைப்பதை செயலில் காட்டுகிறார் என்று. பொதுவாக நாம் எல்லோரும் எழுதுவோம், பேசுவோம் வாய்ச்சொல்லில் வீரரடி என்பது போல். ஆனால் இவரோ அதைச் செயல்படுத்தியும் காட்டுகிறார் அதுவும் இந்த இளம் வயதில். இவரது ஆதங்கத்தைக் கொஞ்சமேனும் உலகம் கேட்டு மெய்ப்படுத்தவேண்டும் என்றும் தோன்றுகிறது. இவர் சொல்லுவது அனைத்தும் நியாயமானது என்றாலும் நடைமுறையில் பல விஷயங்கள் இனி மாறுவது என்பது கடினம்தான்.

    அவள் கனவு மெய்ப்பட வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

    கீதா

    ReplyDelete
  5. அருமையான படைப்பு
    இந்தப் பள்ளி மாணவியைப் பாராட்டுவோம்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு _ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. அவசியமான அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அருமை ஐயா

    ReplyDelete
  8. நான் இவரைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதிய போது நண்பர் ஒருவர் எழுதிய விமர்சனம் இது.

    இவர் வாழும் நாட்டில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்று நினைத்தாலே போதுமானது. இந்தோனோசியா காடுகளை அழித்து உலகம் முழுக்க வியாபாரம் செய்கின்றது. அந்த நிறுவனத்தை இந்தப் பெண்மணியால் மாற்ற முடியுமா? நிறுத்த முடியுமா? என்று எழுதினார். வளர்ந்த நாடுகளில் உள்ள முதல் 50 நிறுவனங்கள் நினைத்தாலே போதுமானது. ஆனாலும் இவரின் தீர்க்கமான செயல்பாடுகள் பேச்சு ஆச்சரியத்தைத் தந்தது. நன்றி.

    ReplyDelete
  9. Make up போட்டுக்கொண்டு பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொண்டு சமூகத்தை பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெண் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது பிரமிக்க வைக்கின்றது அதுவும் ஒரு சிறுமி. நாம் நன்றாக வாழ வேண்டும் அதற்கு இந்த உலகம் வேண்டும் ஆனால் அந்த உலகத்தை அழித்து நாம் வாழ்வோம் என்று நினைப்பவர்களுக்கு இந்தச் சிறுமியின் செயல் சிந்திக்க வைக்கின்றது

    ReplyDelete
  10. அசத்தல் பெண். இந்த சிறு வயதில் பெரிய விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். வாழ்க! 

    ReplyDelete
  11. ஜோதிஜி எழுதி உள்ள விவரம் உண்மை.
    வியக்க வைக்கும் இந்தப் பெண் சாதிக்கவும்
    முடிந்தால் நம் அதிர்ஷ்டம் தான்.மிக நன்றி ஐயா.

    ReplyDelete
  12. உண்மையில் கிரேட்டாவை எண்ணி நான் வியக்கிறேன். இத்தனை சிறிய வயதில் அந்தப் பெண் எப்பேர்ப்பட்ட பொறுப்பைச் சுமக்க முன்வந்திருக்கிறார்! உலகத் தலைவர்கள் வெறுமே அவரைப் பாராட்டிக் கொண்டிருக்காமல் அவர் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரட்டும். அதுதான் அவருக்கான உண்மையான பாராட்டு!

    ReplyDelete