முகப்பு

13 October 2021

மனதில் பதிந்த நினைவுகள் : நவராத்திரி

ஒவ்வொரு நவராத்தியின்போதும் கொலுவின் முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை முழு ஈடுபாட்டுடன் இருப்பார் எங்கள் அத்தை திருமதி இந்திரா. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் அழகாக கொலு அமைந்ததற்குக் காரணம் அவரே. எங்கள் வீட்டில் பெரிய பொம்மைகள் அதிகமாக இருக்கும்.  
கும்பேஸ்வரர் கோயில் கடைகளில் உள்ள கொலு அலங்காரத் தொகுப்பு, 2018 நவராத்திரி 

ஒவ்வொரு படியின் இரு ஓரங்களிலும் உரிய பொம்மைகளை வைத்தல், அதன் அளவிற்கும், வண்ணத்திற்கும் தகுந்தபடி அடுக்குதல், கண்களுக்கு எளிதாகத் தெரியும்படி பெரிய பொம்மை, சிறிய பொம்மை என்று அமைத்தல், தசாவதாரம் போன்றவற்றை அந்தந்த வரிசைக்கிரமப்படி வைத்தல், முதல் படி முதல் கடைசிப்படி வரை ஒவ்வொரு படியிலும் சரியாக அமைத்தல் என்றவாறு நுணுக்கமாகச் செய்வார். 

வீட்டில் இல்லாத கொலுப்பொம்மைகளை வாங்கிச் சேர்த்தல் என்ற வகையில்  எனக்கு நினைவு தெரிந்து சேர்ந்த பொம்மைகளில் சிவனும் நந்தியம்பெருமானும், திருமண செட், தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், பொய்க்கால்க்குதிரை, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை அடங்கும். ஒவ்வோராண்டும் வாங்கிச் சேர்க்கச் சேர்க்க எங்கள் வீட்டில் கொலு பொம்மைகள் அதிகமாயின. உடையும் பொம்மைகளுக்குப் பதிலாக புதிய பொம்மைகளை எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கொலுக்கடைகளில் வாங்கி வைத்துவிடுவார். 

கொலுவின்போது பலர் தலையில் கூடையில் பொம்மைகளை விற்றுக்கொண்டுவருவர். அவர்களிடமும் அவர் பொம்மை வாங்கிய நினைவு உள்ளது. கும்பேஸ்வரர் கோயில் மேலவீதியில் அவருடைய வீட்டில் திண்ணையில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் கொலு பொம்மைகளை விற்றுக்கொண்டு சென்றார். அவரை அழைத்தார். கூடையை இறக்க நான் உதவினேன். ராமர், சீதை, லட்சுமணர் நின்ற நிலையிலும் அனுமார் அமர்ந்த நிலையிலும் இருந்த பொம்மைகள் அவரை அதிகம் ஈர்த்தன. எங்கள் வீட்டுக்கொலுவில் இல்லாத அவர் வாங்க ஆசைப்பட்ட பொம்மைகள். ராமர் பொம்மையின்  உயரம் சுமார் ஒன்றரை அடி. மற்ற பொம்மைகள் அடுத்தடுத்து சற்றுச் சிறிதாக இருந்தன. அவற்றை நான்கு ரூபாய்க்கு வாங்கினார். வாங்கும்போது அந்த பொம்மைகளில் அடிக்கப்பட்டுள்ள வண்ணம் சீராக உள்ளதா என்று பார்த்து, ராமர் பச்சை சரியாக உள்ளது என்றார். அப்போதுதான் ராமர் பச்சை என்ற சொல்லை நான் அறிந்தேன்.  அப்போது நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்தேன். ராமர் பச்சை கலரைக் காணும்போது கொலு வாங்கிய அந்த நாள் நினைவிற்கு வந்துவிடும். 
     
மற்றவர்களின் வீட்டிற்குக் கொலு பார்க்கச் செல்லும்போது எங்கள் வீட்டில் இல்லாத பொம்மைகள் அங்கிருந்தால் அதனைக் கவனித்து வாங்கி வைத்துவிடுவார். எந்த பொம்மைகளும் விடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். 

ஆரம்பத்தில் கள்ளிப்பெட்டிகளை அடுக்கி, மேலே துணியை விரித்துவைத்து அதில் கொலு பொம்மைகளை வைத்தோம். ஒரு நவராத்திரியின்போது எங்கள் அத்தை ஏழு மரப்படிகளை (ஏழோ, ஒன்பதோ மறந்துவிட்டேன்) இரு புறமும் பக்கப்படிகளுடன் வாங்கிவைத்தார். அதற்குப் பின் கொலுவின் அழகு இன்னும் பிரமிப்பாக இருந்தது.  

எங்கள் பள்ளிக்காலத்தில் நான் எங்கள் அத்தை கொலு வைக்கும் அழகினை ஆர்வத்தோடு பார்த்துள்ளேன். அதில் அவருடைய முழு ரசனையும் ஈடுபாடும் இருக்கும். இப்போதெல்லாம் ஒவ்வொரு நவராத்திரியின்போதும் பொறுமையாக கொலுவினைப்  பார்க்கிறேன். அவர் கூறியபடி சரியாக உள்ளதா என்று பார்க்கிறேன், ரசிக்கிறேன், லயிக்கிறேன். நவராத்திரி கொலுவில் வழிபாடு, நம்பிக்கை, கடவுள் பக்தி ஆகியவற்றுடன் ரசனை இழையோடிருப்பதை உணர்கிறேன். கும்பகோணத்தைவிட்டு நான் வந்தாலும், அவர் எங்களை விட்டுப் பிரிந்தபோதிலும் அவர் காட்டிய ஈடுபாடும், ரசனையும் ஒவ்வொரு கொலுவின்போதும் இயல்பாகவே என் மனதிற்குள் வந்துவிடுகிறது. மூன்று மாமாங்கங்களுக்கு மேலாகியும் மனதில் பதிந்த அந்த இளமைக்கால கொலு நினைவுகளும், ரசனையும் இன்னும் தொடர்கின்றன. 

நவராத்திரி தொடர்பான முந்தைய பதிவுகள் : 

14 அக்டோபர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

8 comments:

  1. சுகமான சுண்டல் நினைவுகள்! தஞ்சாவூர் கும்பகோணம் பக்கமெல்லாம் விசேஷமாக இருக்கும்.

    ReplyDelete
  2. அன்பு முனைவர் ஐயா. கொலு நினைவுகளும் படங்களும் அருமை.

    இவ்வளவு பெரிய கொலுவைப் பார்த்து
    நிறைய வருடங்கள் ஆகிறது.

    உங்கள் அத்தைக்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பொம்மைகளைப் பார்க்கும் பொழுது, இளமைத் திரும்பதான் செய்கிறது. ஒவ்வொரு பொம்மையும் ஒரு காலப்பதிவேடு.

    ReplyDelete
  4. அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. இனிமையான நினைவுகள். என்னுடைய குழந்தை பருவத்தில் வீட்டில் கொலு வைத்ததில்லை. திருமணத்திற்குப் பிறகு அதுவும் மகள் பிறந்த பிறகு அவள் ஆசைப்பட்டதால் சில வருடங்களாக கொலு வைத்து வருகிறோம். பொம்மைகளை வாங்குவதும் பராமரிப்பதும் ஒரு பெரிய வேலைதான்.

    ReplyDelete
  6. நவராத்திரி கொலு நினைவுகள் அருமை.
    உங்கள் அத்தையின் ஈடுபாடு மகிழ்ச்சி அத்ருகிறது.
    கும்பகோணம் கொலு கடை அழகு.
    மகன் வீட்டு கொலுவிற்கு 2017ல் நிறைய பொம்மை கும்பேஸ்வரர் கோயில் கடையில் வாங்கினோம்.

    எங்கள் வீட்டில், மாமியார் வீட்டில் கொலு வைப்போம். என் கணவருக்கு திருமணம் ஆனதும் விடுமுறை இல்லை கொலுவிற்கு போக என்றவுடன் எங்கள் வீட்டில் கொலு வைக்க ஆரம்பித்தோம் குழந்தைகளுக்கு கொலு வைப்பது தெரியவேண்டும் என்று.

    வருடா வருடம் கொலு பொம்மைகள் சேகரிப்பு இருக்கும்.

    ReplyDelete
  7. கொலுக்கால நினைவலைகள் அருமை

    ReplyDelete
  8. "மூன்று மாமாங்கங்களுக்கு மேலாகியும் மனதில் பதிந்த அந்த இளமைக்கால கொலு நினைவுகளும், ரசனையும் இன்னும் தொடர்கின்றன."
    Truly nostalgic.

    ReplyDelete