முகப்பு

02 October 2021

எங்கள் இல்லத்தில் காமராஜர்

எங்கள் தாத்தா திரு ரெத்தினசாமி அவர்கள்,  பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். காமராஜர் இறந்த செய்தியைக் கேட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. கட்சிக்காரர்களும், உறவினர்களும் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் துக்கம் விசாரிப்பதைப் போல எங்கள் தாத்தாவைப் பார்த்துச் சென்றனர். எங்கள் வீட்டில் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தன. அதன் நினைவாக தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில் தலைவர்களின் படங்களை வைத்துள்ளேன். அவர்களைப் பற்றிய உணர்வினையும், நாட்டுப்பற்றையும் இளம் தலைமுறையினரிடையே ஊக்குவிப்பது நம் கடமையென்று கருதுகிறேன். கட்சியுடனான அவருடைய ஈடுபாடு என்னுள் சில தாக்கங்களை உண்டாக்கியது.    

எங்கள் இல்லத்தின் உள்ள காமராஜர், காந்தி படங்கள்

அப்போதைய தேர்தல்
எங்கள் தாத்தா அப்போதைய காங்கிரஸ்காரர். எங்களது வீட்டின் மாடியில் கட்சிக்காரர்கள் சேர்ந்து கூட்டம் போடுவார்கள். அப்போது நாங்கள் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்போம். தேர்தல் நேரங்களில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் எங்கள் வீடு தொடங்கி, தெருவில் இறுதி வரை காங்கிரஸ் கட்சி பேனர்களைக் கட்டுவார்கள். தேர்தலுக்குப் பின் அந்த பேனர்களை எங்கள் வீட்டு மாடி அறையின் உத்தரத்தில் வைத்துவிடுவார் எங்கள் தாத்தா. எனக்கு நினைவு தெரிந்து அவ்வாறாக ஐந்தாறு பேனர்கள் இருந்தன. வீட்டு வாசலில் கொடிக்கம்பத்தில் கொடி பறந்துகொண்டே இருக்கும். 

வாக்குக் கேட்டது மற்றொரு அனுபவம். வாக்குக் கேட்பதற்காக கையில் கொடியை ஏந்திக்கொண்டு குழாய் போன்ற மைக்கை வைத்து "போடுங்கம்மா ஓட்டு, காளைச்சின்னத்தைப் பாத்து, போடுங்கய்யா ஓட்டு, காளைச்சின்னத்தைப் பாத்து" என்று சொல்லிக்கொண்டே ஓட்டுப்போடக் கேட்டு தெருத் தெருவாகச் செல்வோம். அப்போது ஒன்றுபட்ட காங்கிரஸின் சின்னமாக ரெட்டைக்காளைச்சின்னம் இருந்தது. 1960களின் இறுதி. அப்போது நான் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்தேன். காங்கிரஸ் பிளவுபட்டு ஸ்தாபன காங்கிரஸ்/பழைய காங்கிரஸ் (ராட்டை நூற்கும் பெண் சின்னம்), இந்திரா காங்கிரஸ் (பசுவும் கன்றும் சின்னம்) என்றானது. காங்கிரஸ் உடைந்தது எங்கள் தாத்தாவுக்கு வருத்தத்தைத் தந்தது. இந்திரா காந்தியின் அபிமானியான அவர் ஸ்தாபன காங்கிரஸின் ஆதரவாளரானார். அதன் சின்னம் ராட்டை நூற்கும் பெண். தொடர்ந்து வந்த  தேர்தலின்போது எங்கள் வீட்டருகில் ராட்டை நூற்கும் பெண்ணின் படத்தை வரைந்து ஓட்டு கேட்டிருந்தார்கள். அந்தந்த கட்சிக்காரர்கள் இவ்வாறாக மாணவர்களை ஓட்டுக் கேட்க அழைத்துச்செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் ஓட்டுக் கேட்கச் சென்ற நினைவு உள்ளது. யாராவரு ஒருவர் கட்சியின் சின்னத்தை ஒரு குச்சியில் வைத்திருப்பார். அவர் முன்னே செல்ல மற்றவர்கள் பின் செல்வோம். கூட்டத்தில் உள்ளோர் கட்சியின் கொடியினைக் ஒரு குச்சியில் கட்டிக்கொண்டு வருவர். சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் புறப்பட்டு, மேட்டுத்தெரு, மேல மேட்டுத்தெரு, சிங்காரம் செட்டித்தெரு, நேரமிருந்தால் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி மற்றும் வடக்கு வீதிகளில் செல்வோம். அவ்வாறு ஒரு முறை நாங்கள் போகும்போது எங்களுடைய திருமஞ்சனவீதி நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு ஆசிரியர் (மேல மேட்டுத்தெருவிலிருந்த திரு கோபால்) பார்த்துவிட்டு மறுநாள் பள்ளியில் என்னை வெளுத்து வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு தேர்தலுக்காக ஓட்டுக் கேட்டுச் செல்வோருடன் போவதே இல்லை. அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசுவதும் இல்லை. 

நவசக்தி, நாத்திகம் இதழ்கள்
எங்கள் வீட்டிற்கு நவசக்தி இதழ் வந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போதைய காங்கிரஸ்காரர்கள் அவ்விதழைப் படிப்பதைப் பார்த்துள்ளேன். அதன் முதன்மைச் செய்திகளைப் படித்துக் கூறச் சொல்வார் எங்கள் தாத்தா. போல்ஸ்டார் (போல்ஸ்டார் அல்லது நாத்திகம் என்பது இதழின் பெயர், சரியாக நினைவில்லை) என்ற இதழ் அப்போதே டேப்ளாய்ட் வடிவில் வந்தது இன்னும் நினைவில் உள்ளது. அதன் ஆசிரியர் நாத்திகம் ராமசாமி என்று நினைக்கிறேன். நாத்திகம் இதழின் செய்திக்கான தலைப்புகள் விறுவிறுப்பாக இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஏதோ ஒரு நிகழ்வினைப் பற்றி குறிப்பிடும்போது நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள், சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் என்ற தலைப்பினைக் கண்டோம். (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் வந்த காலகட்டம்). கல்லூரிக்காலத்தில் டேப்ளாய்ட் வடிவில் பிளிட்ஸ் ஆங்கில இதழை ஆர்வமாகப் படிக்க இவ்விதழ் காரணமாக அமைந்தது. 
எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

அவ்வாறே நவசக்தியில் ஒரு செய்தி (மேலுள்ள ஒளிப்படம்) இன்னும் நினைவில் உள்ளது. அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார், பள்ளிக்கூடம் போகமுடியவில்லை என்று ஒரு சிறுவன் அழுதுக்கொண்டே கூறுவது தலைப்புச் செய்தியாக அப்போது வந்திருந்தது.  (இதே நாளிதழ் உள்ள காட்சி 1973இல் வெளிவந்த, சிவாஜிகணேசன் நடித்த எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அக்காட்சியில் பட்டாக்கத்தி பைரவன் விடுதலை என்ற செய்தியைக் கேட்டுக்கொண்டே நாகேஷ் பயந்து ஓடுவார்). சுமார் 50 ஆண்டுகளாக நாளிதழ் படிப்பதற்கு அடித்தளம் அமைத்துத்தந்தது அப்போது நாங்கள் படித்த இந்த நாளிதழ்களே.   

மூர்த்திக்கலையரங்கம்
நான் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது (நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம், அறுபதுகளின் இறுதியில்) கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் காமராஜர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திற்கு எங்கள் தாத்தா எங்களை அழைத்துச்சென்றார். பெருந்தலைவரை நேரில் பார்த்தபோது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எங்கள் தாத்தா அவருடன் பேசிக்கொண்டிருந்ததை மிக அருகில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மறுநாள் பள்ளியில் அவரை அருகில் பார்த்ததைப் பற்றி பெருமையுடன் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒழுக்கம், நேர்மை என்பனவற்றை எங்கள் தாத்தா பெருந்தலைவரைப் பற்றியும், பிற தலைவர்களைப் பற்றியும் எடுத்துரைப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னர் விருதுநகர் சென்றபோது காமராஜர் இல்லம் சென்றேன். அனைவரும் பார்க்கவேண்டிய முக்கியமான இடம். எங்கள் தாத்தாவின் தாக்கம் என்னிடம் இன்னும் இருப்பதை உணர்கிறேன். 

காமராஜரைப் போன்ற பெருந்தலைவரைப் பற்றிய எண்ணங்களும், அவர் வழியிலான கொள்கைகளும் என்றென்றும் வீட்டையும் நாட்டையும் முன்னுக்கு எடுத்துச் செல்லும். 


9 அக்டோபர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

8 comments:

  1. மிகவும் சுவாரஸ்யமான நினைவுகள்.  அந்தக் காலத்திலேயே மாணவர்களை, அதுவும் சின்னஞ்சிறு மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்தும் அவலம் இருந்திருக்கிறது!

    ReplyDelete
  2. தங்களது சிறுவயது நினைவுகள் ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. நினைவுகள் இனிமையானவை

    ReplyDelete
  4. உங்களின் சிறுவயது அனுபவங்கள் மிகவும் ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்து அவை உங்களின் நற்பண்புகளுக்கு வித்திட்டிருக்கின்றன என்பதும் தெரிகிறது.

    நல்ல நினைவுகள்.

    துளசிதரன்

    ReplyDelete
  5. அப்பொழுதே சிறுவர்கள் தேர்கலுக்கு ஓட்டுப் போடச் சொல்லி தெருதெருவாகப் போனது அறிய வியப்பாக இருக்கிறது. அப்போதிருந்தே இருக்கிறது போலும்.

    சுவாரசியமான நினைவுகள். அனுபவங்களும் தான்.

    கீதா

    ReplyDelete
  6. மலரும் நினைவுகள் என்றுமே இனியவை.. அழகுறப் பதிவு செய்திருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. தெள்ளிய நீரோடையாய் .... துல்லியமான பதிவு. உணர்வுப்பூர்வமான ஈடுபாடே மனிதனின் நினைவலைகளுக்கு வலுசேர்க்கின்றன. ஆகவேதான் ”இளமையில் கல்” என்றனர். தாங்கள் ”பருவத்தே பயிர் செய்தவர்” என்பதையும், ”எத்தகைய குணாளன்” என்பதையும் தங்களின் படைப்புகள் சொல்கிறது. வளமான படைப்புகளை வையகத்திற்கு வழங்க தாங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறையோன் அருள் தருக.
    மு.பழனிவாசன்
    சென்னை-35
    9841950033

    ReplyDelete