முகப்பு

30 April 2022

ஃப்ரண்ட்லைன் வாசகனின் கடிதங்கள்

1970களின் இடையில் ஆரம்பித்த தி இந்து வாசிப்பு அவ்விதழின் சகோதர இதழான, 1984இல் முதன்முதலில் வெளியான, ஃப்ரண்ட்லைன் இதழோடு தொடர ஆரம்பித்தது.


ஃப்ரண்ட்லைன் வெளியானபோது அதன் முதல் இதழை நான் வழக்கமாக நாளிதழ்களை வாங்கும் கடைக்கார நண்பர் தனியாக எடுத்துவைத்திருந்தார்.  நீங்கள் வாசிக்கின்ற தி இந்து புதிதாக ஒரு இதழை வெளியிடுகிறது என்று கூறி, எனக்காகத் தனியாக எடுத்து வைத்துள்ளதாகக்கூறி அதனைத் தந்தார். இதழின் விலை ரூ.6. இந்த இதழ் எங்கள் இல்ல நூலகத்தில் நூற்கட்டு செய்யப்பட்டு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

ஃப்ரண்ட்லைன் வெளியிட்ட அனைத்து சிறப்பிதழ்களையும் படித்தவன் என்ற வகையில் அண்மையில் அவ்விதழ் வெளியிட்ட சத்யஜித் ரே சிறப்பிதழை அதிகம் ரசித்து வாசித்தேன். வழக்கமான பத்திகளோ, நடப்புக்கட்டுரைகளோ இன்றி முழுக்க முழுக்க அவருக்காக மட்டுமே அவ்விதழ் அமைந்திருந்தது. அட்டைப்படம் முதல் இறுதிப்பக்கம் வரை எங்கும் விளம்பரமும் இல்லை. இது ஃப்ரண்ட்லைன் இதழின் பொதுச்சிறப்புகளில் ஒன்று.

பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதியுள்ள கடிதங்கள் அவ்விதழில் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

இவ்விதழில் நான் எழுதி வெளியான முதல் கடிதம். Mission Eagle தொடர்பாக Manoj Joshi, "To the brink in Sri Lanka," Frontline, January 13-26, 1987 என்ற கட்டுரைக்கானது. "I felt as if I were with 'Mission Eagle' as a participant in 'Operation Poomalai' while reading Manoj Joshi's report. The photographs were excellent." B.Jambulingam, Thanjavur, Tamil Nadu.
பூமாலை நடவடிக்கை, 1987

மறு வடிவமைப்பு 2006



காஸ்ட்ரோ சிறப்பிதழ் வெளியானபோது நான் எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியானது. அப்போது கூடுதலாக மற்றொரு சிறப்பாக ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் திரு என்.ராம், திருச்சியிலுள்ள தி இந்து அலுவலகத்திலிருந்து ஒருவரை (Mr S.Narayanan, Sales Executive, The Hindu, Senthanneerpuram, Trichy) இதற்காகவே என் இல்லத்திற்கு 10.3.2008 அன்று அனுப்பி என் கடிதத்திற்காக பாராட்டு தெரிவித்திருந்தார். வந்தவர் கேட்டபடி என்னுடைய தன்விவரக்குறிப்பினையும், நான் எழுதிய நூலினையும் திரு ராம் அவர்களுக்கு அனுப்பக்கூறி, அவரிடம் தந்தேன். 

பீடல் காஸ்ட்ரோ சிறப்பிதழ், 2008

 வெள்ளிவிழா ஆண்டு சிறப்பிதழ், 2010



ஜாப் தாமஸ் கட்டுரைக்கு மறுமொழியாக கூடுதல் செய்திகள், 2011

கட்டுரைக்கான கடிதம், 2011

ஜான் செரியன் கட்டுரைக்கான கடிதம், 2013

இந்திய சினிமா நூற்றாண்டு சிறப்பிதழ், 2013


 30ஆம் ஆண்டு சிறப்பிதழ், 2015

ஏப்ரல் 2022இல் பணி நிறைவு பெறுகின்ற இவ்விதழின் ஆசிரியர் திரு ஆர்.விஜயசங்கர் அவர்களுக்கு, அவருடைய பணியையும், இதழின் சிறப்பையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவர் அதனை தன் முகநூல் பக்கத்தில் ஒரு தீவிர வாசகரின் பாராட்டு என்று பகிர்ந்திருந்தார். அவருக்கு என் நன்றி. வாசிப்பு தொடரும்..


தொடர்புடைய பதிவுகள்:

11 மே 2024இல் மேம்படுத்தப்பட்டது.

15 April 2022

மயிலாப்பூர் சப்த சிவத்தலங்கள்

மார்ச் 2022இல் அறக்கட்டளைச்சொற்பொழிவிற்காகச் சென்னை சென்றிருந்தபோது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிந்தேன்.

அப்போது எனக்குக் கும்பகோணத்தில் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு சென்றது நினைவிற்கு வந்தது. கோயிலைச் சுற்றி பெரிய அழகான வீதிகள். அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா வரும் காட்சியைக் கண்டு ரசித்து உடன் சிறிது தூரம் சென்றேன். அழகான பெரிய குளத்தைக் கண்டு சிறிது நேரம் அங்கே நின்றேன்.

கபாலீஸ்வரர் கோயிலுடன் தொடர்புடைய கோயில்கள் மயிலாப்பூரில் இருப்பதாகவும், அவற்றை ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பு என்றும் கூறினர். அவை 1) கபாலீஸ்வரர் கோயில், 2) காரணீஸ்வரர் கோயில், 3) வெள்ளீஸ்வரர் கோயில், 4) மல்லீஸ்வரர் கோயில், 5) விருப்பாட்சீஸ்வரர் கோயில், 6) வாலீஸ்வரர் கோயில், 7) தீர்த்தபாலீஸ்வரர் கோயில் என்பனவாகும். இவற்றில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் திருவல்லிக்கேணியில் உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் அடுத்தடுத்து சென்று சுமார் இரண்டு மணி நேரத்தில் தரிசனத்தை நிறைவு செய்தேன்.


கபாலீஸ்வரர் கோயில் விமானம்
அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா

கபாலீஸ்வரர் கோயில் குளம்


வெள்ளீஸ்வரர் கோயில் விமானம்

மல்லீஸ்வரர் கோயில் விமானம் 

விருப்பாட்சீஸ்வரர் கோயில் நுழைவாயில்

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

வாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

காரணீஸ்வரர் கோயில் விமானம்

ஏழு சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, மாதவப்பெருமாள் கோயிலுக்கும், முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கும் சென்றேன்.



அட்டவீரட்டத்தலங்கள், சப்தஸ்தானத்தலங்கள், சப்தமங்கைத்தலங்கள் என்பதைப் போல இக்கோயில்களை சப்த சிவத்தலங்கள் என்று கூறுகின்றனர். கும்பகோணத்தில் மகத்தின்போதும் பிற விழாக்களின்போதும் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுள்ளேன். அத்தகைய கோயில்களுக்குச் சென்ற நினைவினை மயிலாப்பூரில் உணர்ந்தேன். மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினேன்.

இவற்றுள் காரணீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், விருப்பாட்சீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு விக்கிப்பீடியாவில் பதிவு இல்லாத நிலையில் புதிய பதிவுகளை தொடங்கி உரிய ஒளிப்படங்களை இணைத்தேன். தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பதிவு இருந்த நிலையில் ஒளிப்படத்தை இணைத்தேன். இணைப்புகளைச் சொடுக்கி விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரைகளைக் காண அழைக்கிறேன். தொடர்ந்து அப்பதிவுகளை மேம்படுத்துவேன்.