14 October 2017

The Hindu : 40 வருட வாசகனின் கடிதங்கள்

வலைப்பூவில் 200ஆவது பதிவு
எழுத்திற்குத் துணைநிற்கும் வலைப்பதிவர்கள், நண்பர்கள், உறவினர்கள், 
ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

The Hindu வாசகனாக வாசிப்பு அனுபவத்தை The Hindu   40 வருட வாசிப்பு என்ற பதிவில் 28 அக்டோபர் 2016இல் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதில் இந்த வாசிப்புப் பழக்கமானது மொழி நடை, பயன்பாடு, உத்தி, அமைப்பு, ஒப்புநோக்கல் புதியனவற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்பன போன்ற பல நிலைகளில் என்னை உயர்த்தியுள்ளதை அனுபவத்தில் கண்டதையும் குறிப்பிட்டிருந்தேன். 

1970களின் இடையில் The Hindu இதழை நான் வாசிக்க ஆரம்பித்தாலும், கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் அக்காலகட்டத்தில் என்னுள் தோன்றவில்லை. வாசிப்புக்கே முக்கித்துவம் கொடுத்தேன். எந்த செய்தியை முதலில் படிப்பது, எப்படி புரிந்துகொள்வது என்ற உத்திகளை அறிய ஆரம்பித்தேன்.

1983இல் முதன்முதலாக வங்கித்தேர்வில் கடைபிடிக்கப்படுகின்ற முறை தொடர்பாக அதில் உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு, The Hindu மற்றும் Indian Express இதழ்களுக்குக் கடிதம் எழுதினேன். அவற்றில் நான் எழுதிய கடிதம் Indian Express இதழில் வெளியானது. அதே பொருளில் மாயவரத்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது The Hindu இதழில் கடிதம் எழுதியிருந்ததைக் கண்டேன். நான் வாசிக்கும் இதழில் கடிதம் வரவில்லையே என்ற குறை மனதில் தோன்றியது. 

ஆரம்பத்தில் தட்டச்சிட்டு கடிதங்களை அனுப்பினேன். பின்னர் அஞ்சலட்டையில் எழுதியோ, தட்டச்சிட்டோ அனுப்ப ஆரம்பித்தேன். அண்மைக்காலமாக மின்னஞ்சலில் அனுப்பிவருகிறேன். பொதுவாக நான் அனுப்பி வெளியாகின்ற கடித நகல்களை மட்டுமே பாதுகாத்து வருகிறேன். 

வங்கித்தேர்வில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை சிரமங்களைக் குறிப்பிட்டு The New Indian Express இதழுக்கு 1983இல் எழுதிய கடிதம் எவ்வித மாற்றமுமின்றி வெளியானது. முதன்முதலாக நான் எழுதிய வாசகர் கடிதம். இக்கடிதம் அக்காலகட்டத்தில் அறிமுகமான ஆங்கில மின்சாரத் தட்டச்சுப்பொறியில் (Electric typewriter) கோல்ப் பால் (Golf ball or Type ball) வடிவிலிருந்த எழுத்துக்களைக் (Font) கொண்டு என்னால் தட்டச்சிடப்பட்டதாகும். 
இரு இதழ்களுக்கும் நான் அனுப்பிய கடிதம்

தொடர்ந்து வாசகர் கடிதங்களை எழுத ஆரம்பித்தேன். அப்போது செவ்வாய்க்கிழமைகளில் வெளியான Know Your English பகுதிக்கு 'cre'me de la cre'me' என்ற சொல்லுக்கான பொருளைக் கேட்டு எழுதியிருந்தேன். நான் கேட்ட கேள்விக்கான மறுமொழி 19 செப்டம்பர் 1989இல் வெளியானது. அடுத்து இதே பத்தியில் (Coffee Table Book, 15 டிசம்பர் 1998), (Kafkaesque, 22 ஆகஸ்டு 2000)(Mouse jornalism, 14 மார்ச் 2006)  போன்ற சொற்களுக்கான பொருள்களை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன்.
The Hindu இதழில் வெளியான முதல் பதிவு, 19 செப்டம்பர் 1989
  • நவம்பர் 1990இல் The Hindu மாணவர்களுக்காக Young World என்ற இதழை முதன்முதலாக அறிமுகப்படுத்தியபோது அதனைப் பாராட்டி எழுதினேன். The Hindu அலுவலகத்திடமிருந்து எனக்கு 19.12.1990 நாளிட்ட கடிதம் வந்தது. அது நான் பெற்ற முதல் கடிதம்.  "Dear Jambulingam, Thank you for writing to us. Your views are valuable and we will be happy if you continue to correspond with us. We hope you will continue to enjoy Young World. Happy Reading!....Yours sincerely, (Sd) Nirmala Lakshman, Deputy Editor"   
  • நவம்பர் 1991இல் Young World  முதலாண்டை நிறைவு செய்தபோது அவ்விதழில் வெளியானவற்றைப் பாராட்டி (World play, Crayon corner, Eureka, Do it yourself, Spaced out, Discovery, Crossword, Mind quiz, Prof Doodles, Batman, News on India and outside and other columns) எழுதினேன். அவர்களிடமிருந்து நன்றிக்கடிதம் வந்தது. அடுத்து 13 பிப்ரவரி 1993, 20 மார்ச் 1993 ஆகிய நாள்களில் Young Worldஇல் வெளியான கட்டுரைகளைப் பற்றிய என் கடிதங்கள் வெளியாயின. 
  • 1999 நவம்பர் வாக்கில் இதழில் வண்ணப்படங்களுடன் செய்தி சென்னைப்பதிப்பில் வெளியானதை அறிந்து பாராட்டி எழுதினேன். அப்போது "...It is hoped that The Hindu will be in colour in other centres too at early date" என்று மறுமொழி வந்தது. 
  • 30 ஆகஸ்டு 2000இல் இணைப்பு (Opportunities) வண்ணமாக வெளிவந்தபோது பாராட்டி எழுதினேன்.
  • நான் எழுதிய வாழ்வில் வெற்றி என்ற நூல் New Arrivals பகுதியில் 22 அக்டோபர் 2002இல் வெளியானபோது நான் அதிக மகிழ்ச்சியடைந்தேன். 
  • 13 டிசம்பர் 2007இல் The Hindu இதழில் முதன்முதலாக முதல் பக்கம் முழு விளம்பரம் வந்திருந்தது. இவ்வாறான விளம்பரங்கள் ஏற்புடையதல்ல என்று கூறி நான் எழுதிய கடிதத்தைப் பற்றி Readers' Editor தன் பத்தியில் விவாதித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விவாதித்தபோது என் கடிதத்தினையே முதன்முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.
The Hindu நாளிதழில் வெளியான கடிதங்களில் சிலவற்றை வெளியான நாள் விவரத்துடன் கீழே தந்துள்ளேன். அவற்றுள் The Hindu இணைப்புகள் மற்றும் வடிவமைப்பில் மாற்றம், சுற்றுச்சூழல், கலை, அரசியல், சமூகம், வாசிப்பு போன்றவை தொடர்பாக வெளியான கடிதங்கள் அமையும்.
தாஜ்மகால், 4 ஜனவரி 1999

 வடிவமைப்பில் மாற்றம், 20 ஏப்ரல் 1999

அரசியலுக்கு வயது  தடையல்ல, 5 ஆகஸ்டு 2000

தாராசுரம் கோயில், 25 அக்டோபர் 2002

125ஆம் ஆண்டு நிறைவு, 29 ஆகஸ்டு 2003

கும்பகோணத்தில் பௌத்த சான்று, 11 ஆகஸ்டு 2006

முதல் பக்க முழு விளம்பரம், 11 ஆகஸ்டு 2006


மேற்கண்ட வாசக ஆசிரியரின் பத்தியில் என் கருத்து
தமிழில் தல புராணங்கள், 24 பிப்ரவரி 2008

இந்திரா காந்தி மறைவு 25 ஆண்டுகள் நிறைவு, 3 நவம்பர் 2009

சுற்றுச்சூழல் தொடர்பாக 45 நாடுகளில் 56 நாளிதழ்கள் வெளியிட்ட 
ஒரே தலையங்கம், 9 டிசம்பர் 2009
தஞ்சாவூர் பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு விழா,
29 டிசம்பர் 2009
தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டடக்கலை,
17 ஜனவரி 2010

ஆத்தாக்களைப் பற்றிய கட்டுரை, 20 ஏப்ரல் 2010
நாளிதழைப் பற்றி குஷ்வந்த் சிங்கின் கடிதம், 21 அக்டோபர் 2011
காமராஜர் திட்டம், 31 ஆகஸ்டு 2012

தி இந்து ஆசிரியர் இயற்கையெய்தியபோது, 22 செப்டம்பர் 2012
 வடிவமைப்பில் மாற்றம், 2 ஜுலை 2013
தந்தி சேவை, 21 ஜுலை 2013
வாசக ஆசிரியர் பத்தாண்டு நிறைவு, 2 மார்ச் 2016
 வடிவமைப்பில் மாற்றம், 18 பிப்ரவரி 2017


வடிவமைப்பில் மாற்றம், 27 பிப்ரவரி 2017
மேற்கண்ட வாசக ஆசிரியரின் பத்தியில் என் கருத்து

1983இல் வாசகர் கடிதம் எழுதத் தொடங்கியபோது இருந்ததைவிட என் எழுத்தில் மாற்றம் இருப்பதை அனுபவம் மூலம் உணர்கிறேன். ஆரம்பத்தில் நான் எழுதிய கடிதங்கள் பெரும்பாலும் பாராட்டு என்ற நிலையிலேயே அமைந்திருந்தன. தொடர்ந்து எழுதிய பழக்கமானது கூடுதல் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உத்தியை எனக்குத் தந்தது. 1993இல் பௌத்த ஆய்வில் ஈடுபட ஆரம்பித்தபோது வாசிப்பு, களப்பணி என்ற நிலையில் என் எழுத்து நிலையிலும் மாற்றம் வருவதைக் கண்டேன். வாசகன் என்ற நிலையையும் தாண்டி ஆய்வாளனாக பல கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக The Hindu எனக்குத் துணைநின்றது.  

ஆரம்பத்தில் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டபோது நான் அதனை ரசித்தேன். என் இரு மகன்களும் (பாரத், சிவகுரு) அவர்களுடைய பள்ளிக்காலம் தொடங்கி இவ்விதழின் வாசகர்களாயினர். அவர்களுக்கு ஆரம்ப கால வடிவமைப்பு மாற்றத்தில் உடன்பாடில்லை. ஆனால் போகப்போக அதில் வரும் மாற்றத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். மாறாக, அண்மைக்கால வடிவமைப்பு மாற்றங்களை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் செய்திகளைத் தரும் விதம், நம்பகத் தன்மை உள்ளிட்ட பல கூறுகளில் வாசிக்கத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இவ்விதழ் தனித்து நிற்பதை வாசகனாக என்னால் உணரமுடிகிறது. நன்றி, The Hindu.

English abstract:
The Hindu: Selected letters from a four decade old reader
As a four decade old reader of The Hindu I feel happy to share some my published letters in the issue. The reading practice led me to writing practice. The newspaper made me to improve myself from being a reader to a scholar and helped me to discuss on various topics. 

10 செப்டம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

32 comments:

  1. 200-வது பதிவுக்கு முதலில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வளவு ஆவணங்களையும் பாதுகாப்பாக சேமித்து வைப்பதே பெரிய சாதனைதான் இதற்கு தங்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்து இருப்பதற்கு பாக்கியம் வேண்டும்.

    நானும் சிறுவயது முதலே இப்படி சேகரித்து வைக்கும் பழக்கம் உள்ளவன். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இதில் ஆர்வம் கிடையாது

    நான் முதன் முதலில் பயணித்த பேருந்து சீட்டு, திரையரங்க சீட்டு இவைகளைகூட வைத்திருந்தேன் என்றுதான் சொல்ல இயலும் வீட்டில் உள்ளவர்கள் பழைய பேப்பர்களுக்கு போட்டபோது எனது எல்லா நினைவுப் பொக்கிசங்களும் போய் விட்டது மற்றவர்களுக்கு அது சாதாரண பேப்பர் எனக்கு அப்படி அல்ல!

    தங்களது அனுபவங்கள் பிறருக்கு பாடமாக அமையும் பகிர்ந்த முனைவர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. 200 வது பதிவுக்கும், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் கடிதங்கள்வெளியானதற்கும் பாராட்டுகள்.இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் Know Your English பகுதிகளை வெட்டி ஒரு நோட்டில் ஒட்டி பாதுகாத்து வைத்திருந்தேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!! என் அப்பாவும் தொடர்ந்து நானும் ஹிந்துவின் Know your English சேமித்து வைத்திருந்தோம். சில சமயம் கதை போல வரும்.

    வாசகர் கடிதம் எழுத சமூக அக்கறை நிறைய வேண்டும். உங்களுக்கு அது நிரம்ப உள்ளது! மறுபடி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தங்களின் உழைப்புக்கு அன்பின் வணக்கம்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. வாழ்த்துகள்! உங்கள் உழைப்பு போற்றத்தக்கது!

    ReplyDelete
  6. தங்களின் ஆய்வுப் பணி மட்டுமல்ல, ஆவணங்களை பாதுகாக்கும் தங்களின் குணம் போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  7. வலைப் பூவில் 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  8. தங்களது வலைத்தளத்தின் 200 ஆவது வலைப்பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பேரன்பு மிக்க பேரா. முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்களுக்கு

    அடேங்கப்பா...என்ன ஒரு மகத்தான சமூகக் கடமையைத் தொடர்ச்சியாக செய்து வருகிறீர்கள்....வியப்பாக உள்ளது. பேரானந்தமாக இருக்கிறது. மகாகவி பாரதி அந்நாளில் இந்து பத்திரிகைக்குக் கடிதங்களை எழுதியவர். வி ஆர் கிருஷ்ண அய்யர் அவர்களது கடிதம் எதிர்பாராத ஒரு நாளில் பளீரென்று வந்திருக்கும்....legacy உண்டு.நானும் முதலினுள் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அனுப்பியவன் தான்

    தட்டச்சு செய்த அந்தக் கடிதம் பழைய தாளை, அந்தக் காலத்திற்குரிய காகித்தில் பார்க்கவும், அந்தத் தேதிய இந்து நாளிதழில் வாசிக்கவும் முடிகிறது என்பது வியப்புக்குரிய செய்தியாகும். பழைய நினைவுகளைப் போற்றுவது வேறு, அந்தத் தடங்களைக் கண்ணுக்குக்கெதிரில் வைத்து இப்போது பார்க்கவும் உங்களுக்கு சாத்தியமாகியுள்ளது. தொடர்ந்து இத்தகு பணிகளை மேலும் சிறப்புற நிறைவேற்றுவீர்கள் என்பதை அறிவேன்..

    உளமார்ந்த பாராட்டுதல்கள்...வாழ்த்துக்கள்...

    எஸ் வி வேணுகோபாலன்
    சென்னை 24
    94452 59691

    ReplyDelete
  10. கடித இலக்கியத்திற்கென ஒரு சிறப்பு உண்டு. அது வாசகருடன் நிகழ்ந்து விடுகிற நெருக்கமான பேச்சுத் தொனி. மற்றவை நேரில் என்கிற கடிதத் தொகுப்பு கொண்டு வந்த அனுபவத்தில் சொல்கிறேன்...இது காலத்தின் ஆவணம். வாழ்த்துகள்

    ReplyDelete
  11. சுய புதை பொருள் ஆராய்ச்சி ... இத்தனை பத்திரமாக இத்தனை ஆண்டுகள்... ஆச்சரியமாக உள்ளது. நான் நேற்று செய்ததை இன்று தொலைத்திருப்பேன். நான் இப்படி ... நீங்கள் அப்படி. ஆச்சரியத்துடன் ஒரு சல்யூட்!

    ReplyDelete
  12. 200வது பதிவுக்கு வாழ்த்துகள்ப்பா

    ReplyDelete
  13. 200-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. திரு எஸ் வி வேணுகோபாலன், தன் நண்பர்களுக்கு அனுப்பிய கடித நகல் (மின்னஞ்சல்: sv.venu@gmail.com வழியாக)
    பேரா பா ஜம்புலிங்கம் அவர்களது வலைப்பூ பதிவு ஒன்றை அவரது இணைப்புக் கடிதத்தோடு அனுப்பி இருந்தார். அவருக்கான மறுமொழியோடு அதனை இணைத்துள்ளேன்...

    ஜம்புலிங்கம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலையில் பணியாற்றி அண்மையில் பணி நிறைவு செய்திருப்பவர். வரலாற்றுத் தலங்களை பேரார்வத்தோடு நேரில் சென்று கண்டு வந்து எழுதிக் கொண்டிருப்பவர். பவுத்த காலத் தடயங்களை வியப்புற ஆய்வு நோக்கில் மிகுந்த பாடெடுத்துப் பதிவு செய்திருப்பவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன், இன்னும் நேரே சந்திக்க வாய்ப்பு பெறாவிடினும். புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய குறிப்புகளை முன்வைத்து எழுதிய அவரது கட்டுரை ஒன்றும், அண்மையில் கார்டியன் பத்திரிகையில் முதல்நாள் வந்த சே குவேரா குறித்த கட்டுரையை உடனுக்குடன் மொழிபெயர்த்து விரைந்து தமிழ் இந்து நடுப்பக்கத்தில் வாசிக்கத் தந்த எழுத்தும் உள்ளிட்டு வியத்தகு பணிகள் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர். பேராசிரியருக்குரிய தகுதிகள், பட்டங்கள், ஆய்வுப் பணிகள் இருந்த போதிலும், அலுவலகப் பணியிலேயே தமது பணிக்காலத்தை அவர் முடிக்க வேண்டியிருந்தது.

    அவரது வலைப்பூ பதிவை வாசிக்க வேண்டுகிறேன். உங்கள் கருத்துக்களை அவருக்கு அனுப்பி வைத்தால் அல்லது வலைப்பூவில் பதிவு செய்தால் நிச்சயம் அகமகிழ்வார். அதற்குரிய அனைத்து நியாயங்களையும் வாசிப்போர் ஒப்புக்கொள்வீர்கள்.

    அன்புடன்
    எஸ் வி வி

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தி ஹிந்து ஆங்கில இதழுக்கு தமிழ்நாட்டைத்தாண்டியும் வாசகர்கள். டெல்லியில் அதன் பதிப்புவந்ததற்குப்பின் பல தமிழர்கள் அல்லது தென்னிந்தியர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிக்கைகளிலிருந்து தி ஹிந்துவிற்குத் தாவிவிட்டார்கள் என்பதை அறிவேன். ஹிந்துவின் வாசகர்கள் என்பதைவிடவும் அதன் பக்தர்கள் என அவர்களை நான் அழைப்பதுண்டு. அத்தகைய பாரம்பரியம் உள்ள இதழ்தான் உண்மையில் அது.

    அது 40 வருடங்களாக உங்களை ஈர்த்துவைத்திருக்கிறது என்பது தெரிந்து மகிழ்ச்சி. ஹிந்துவிற்கு நீங்கள் இத்தனைக் கடிதம் எழுதியிருக்கிறீர்கள், அதனை சேகரித்தும் வைத்துள்ளீர்கள் என்பது அபாரம்.

    இத்தகைய பழக்கம் - அதாவது அந்தக்காலப் பத்திரிக்கைகளில் தமிழ்பத்திரிக்கைகளோடு, ஆங்கில இதழ்களான தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா (இப்போது வருவதில்லை), ஸ்போர்ட்ஸ்வேர்ல்ட், ஸ்போர்ட்ஸ்டார், சண்டே (இப்போது நின்றுவிட்டது) போன்ற பத்திரிக்கைகளிலிருந்து சுவாரஸ்யப்பகுதிகளை நானும் கத்தரித்து சேகரிப்பது- என்னிடமும் இருந்தது. காலப்போக்கில் அந்த உன்னதமான காகிதங்கள் என்னைவிட்டுப் பயணித்துவிட்டன! வேறென்ன சொல்வது..

    ReplyDelete
  17. உங்களது 200-ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றிநடை போடுங்கள் !

    ReplyDelete
  18. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் கடித தொகுப்பு அருமை.
    பொக்கிஷங்கள் அனைத்தும்.

    ReplyDelete

  19. முதலில் 200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா....
    தங்கள் எழுத்தின் பயணத்தில் பத்திரிக்கையில் எழுதியவை வாசகர் கடிதம் உள்ளிட்ட தொகுப்பினைச் சேகரித்து வைத்து அதை இங்கு பதிவாக்கி எங்களையும் வாசிக்க வைத்தமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதி அது பிரசுரத்தில் வந்தால் நம்கருத்துகள் பலருக்கும் தெரியப்படும் நான் த ஹிந்துவுக்கு கடித்தம் எழுதி அதுபிரசுரமானதை ஒரு பதிவாக்கி இருந்தேன் அதன் சுட்டியை இத்துடன் இணக்கிறேன் /http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_08.html

    200வது பதிவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. திரு சோலச்சி (மின்னஞ்சல் solachysolachy@gmail.com வழியாக)
    மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
  22. 200 வது பதிவுக்கு எங்கள் வாழ்த்துகள் ஐயா! அத்துடன் இத்தனையும் சேமித்து வைத்துப் பாதுகாப்பது மிகப் பெரிய விஷயம்! வாழ்த்துகள். தங்கள் கடிதங்கள் ஹிந்து, எக்ஸ்ப்ரஸில் எல்லாம் வந்திருப்பதற்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    கீதா: ஐயா நானும் know your english பகுதியை சேர்த்து வைத்திருந்தேன்...குழந்தைகள் சிலருக்குப் பயன்படும் என்று கொடுத்துவிட்டேன்..

    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  23. ஒரு காலத்தில் பத்திரிகைகளில் பிரசுரம் கண்டால் தான் வெளி உலகிற்குத் தெரியும் என்றே இருந்தது. என்றும் எழுதுகிறவருக்கு அது ஓர் ஊக்க டானிக்கே.

    உங்கள் புதையல்களை வாசித்து ரசித்தேன். எத்தனை பழைய நினைவுகள்?.. யாழ் நரம்புகளை மீட்டுவது போல எத்தனை நினைவுகளை இவை நெஞ்சத்தில் ரீங்கரிக்க வைக்கின்றன?..

    மனதுக்கு உகந்த பதிவு. மிக்க நன்றி, ஐயா.

    ReplyDelete
  24. காலப்பொக்கிஷங்கள்! இவ்வளவையும் சேமித்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே ஒரு பெரும் கலை! வாழ்த்துக்கள் ஐயா! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. தங்களின் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  26. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  27. தங்களின் இருநூறாவது பதிவிற்கு உளங்கனிந்த வாழ்த்துகள் ஐயா வாழ்க நலம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

    ReplyDelete
  28. Very interesting your letters and the collection,

    ReplyDelete
  29. அருமை ஐயா 💐 தொடரட்டும் தங்கள் பணி, வாழ்த்துக்கள் 💐

    ReplyDelete