முகப்பு

21 May 2022

செஞ்சி வேங்கடரமணர் கோயில் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி

அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி எழுதியுள்ள செஞ்சி வேங்கடரமணர் கோயில் என்னும் நூல் செஞ்சி வேங்கடரமணர் கோயில், கோயில் மண்டபமும் தூண்களும், தூண் சிற்பங்கள், கோயில் உள்ளமைப்பு ஆகிய உட்தலைப்புகளையும், இணைப்புகளையும் கொண்டுள்ளது.



கோயில் உள்கட்டட அமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக விஜயநகர அரசர்கள், செஞ்சி நாயக்கர் அரசர்களின் மண்டபம், தூண்கள் அமைப்பைத் தெரிந்துகொள்வது அவசியம் என்று கூறி, நூலாசிரியர் அவற்றை விளக்கமாகத் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. அபிசேக மண்டபம் தொடங்கி 19 வகையான மண்டபங்கள், ருசகம் தொடங்கி 70 தூண்களின் பெயர்கள், பிரம்மத்தூண் தொடங்கி 36 வகையான தூண்கள் ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாக அவர் தந்துள்ளார். கோயில் சார்ந்த தூண்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை சமயம், சமயம் சார்ந்த புராணம், வேதங்கள் சார்ந்த சமயம், அரசு மற்றும் அரசர் கால நிகழ்வுகள், அரசு கால (அரசர்களைக் குறித்த) வரலாறு, மக்கள் வாழ்க்கையின் பண்பாடு, கற்பனை, வானியல், மாந்திரீகம், தாந்திரீகம், காமம் தொடர்பான சிற்பங்கள் என்று வகைப்படுத்தி உரிய குறிப்புகளைத் தந்துள்ளார். இக்கோயிலைப் பற்றி மட்டுமன்றி பிற கோயில்களைப் பற்றி வாசிப்போருக்கும் இப்பகுதி துணையாக இருக்கும்.

நூலின் பின்னிணைப்பில் உள்ள, கோயில் மற்றும் விழாக்கள் தொடர்பான ஒளிப்படங்கள் கோயிலுக்கு சென்றுவந்த ஓர் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. கோயிலைப் பற்றிய சில குறிப்பிடத்தக்கனவற்றைக் காண்போம்.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள, திருவேங்கடமுடையான் கோயில் என்றழைக்கப்படுகின்ற வேங்கடரமணர் கோயில் செஞ்சிக் கோட்டையில் உள்ள கோயில்களில் குறிப்பிடத்தக்கதாகும். இக்கோயில் 11 மார்ச் 2014க்கு முன் முழுமையான வழிபாடு இல்லாதிருந்தது. (.13)

விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் விஜயநகர அரசின் கலையமைப்பை மிகுதியாகக் கொண்டுள்ளது. விஜயநகர அரசர்களின்கீழ் அரசோச்சிய நாயக்கர்கள் காலத்தில் பல அமைப்புகள் கட்டப்பட்டு விரிவாக்கப்பட்டது என்பது இக்கோயிலுக்குரிய தனித்தன்மைகளில் ஒன்று. செஞ்சி வட்டத்தில் உள்ள நாயக்கர் காலக் கோயில்களில் இது பெரியதாகும். இக்கோயில் முத்தியாலு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1540-1550) கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பிறகு செஞ்சியை ஆண்ட அடுத்தடுத்த நாயக்கர்கள் கோயிலின் வளர்ச்சியில் தனிக்கவனம்  செலுத்திவந்துள்ளனர். (.14)

ஏறக்குறைய 10,000 மீட்டர் பரப்பளவில் கோயிலும், கோயிலுக்குரிய மண்டபமும் உள்ளிட்ட பல அமைப்புகளும் உள்ளன. கொடி மரம், பலி பீடம் அமைப்புடன் தொடக்கத்தில் அமைக்கப்பட்டு, பின்னர் விரிவு பெற்றுள்ளது. (.18)

கோயிலின் சில சன்னதிகளில் படிமங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற மக்களின் விருப்பம் நிறைவேறும் என நம்புவோம். செஞ்சியைப் பற்றிய ஒரு பொதுப்பார்வைக்கும், கோயிலைப் பற்றிய சிறப்புப்பார்வைக்கும் இந்நூல் பெரிதும் உதவும். கல்வெட்டு, இலக்கியச்சான்றுகள் இல்லாததன் காரணமாக செய்திகளைச் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டியதாக அமைந்தது என்கிறார் நூலாசிரியர். இருப்பினும் முடிந்தவரை தொடர்புடைய செய்திகளைத் திரட்டி சிறப்பாக நூலாகத் தந்துள்ள விதம் போற்றத்தக்கதாகும்.

நூல் : செஞ்சி வேங்கடரமணர் கோயில்    ஆசிரியர் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி (அலைபேசி 94421 35516)                    பதிப்பகம்: ஸ்ரீரங்கபூபதி பதிப்பகம், 13, 3ஆவது மாடி, விசுவல் அடுக்ககம், 4ஆவது முதன்மைச்சாலை (விரிவாக்கம்), கோட்டூர் கார்டன், கோட்டூர்புரம், சென்னை 600 085, அலைபேசி 94435 39539

பதிப்பாண்டு: அக்டோபர் 2018
விலை ரூ.170

13 May 2022

கோயில் உலா : 7 மே 2022

7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், பள்ளியின்முக்கூடல், திருவாரூர் (மூன்று கோயில்கள்) உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் திருவாரூர் கோயில்கள்  முன்னர் நான் பார்த்த கோயிலாகும்.

இவற்றுள் விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், தேவூர், பள்ளியின்முக்கூடல், திருவாரூர் ஆகிய தலங்கள் காவிரியின் தென் கரையிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகும். எண்கண் தலத்தில் மூலவர் சிவன். அங்கு முருகனுக்காக தனி சன்னதி உள்ளது.

காலை 7.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து கிளம்பி, வரும் வழியில் காலை சிற்றுண்டியை முடித்தோம். நாங்கள் பயணித்த முதல் கோயிலான விளமலில் குழுவினர் இறைவனின் முன்பாக சிவபுராணம்  ஓதினோம். வழிபாட்டிற்குப் பின் தொடர்ந்து பயணித்தோம்.

பதஞ்சலி மனோகர்-யாழினும் மென்மொழியம்மை 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் திருவாரூருக்கு அருகில் 3 கிமீ தொலைவில் உள்ளது. 
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.


அபிமுக்தீஸ்வரர்-ஏலவார்குழலி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் உள்ளது. 
மாடக்கோயில்.
கௌதம முனிவர், பிருங்கி முனிவர் வழிபட்ட தலம்.
முருகப்பெருமான் வழிபட்டதால் வேளூர்.
பெருவேள் என்பவன் வாழ்ந்த இடமாதலால் பெருவேளூர்.



ஆடவல்லநாதர்-திருமடந்தை 
நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் பெருவேளூர் அருகில் உள்ளது. 
கபில முனிவர் வழிபட்ட தலம்.
தாருகாவன முனிவர்கள் அனுப்பிய முயலகனை அடக்கி அவன் முதுகில் இறைவன் திருநடனம் புரிந்த தலம். 


மேற்கண்ட கோயில்களுக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்குப் பின் சிக்கல் கோயிலில் சற்று இளைப்பாறினோம்.  

நவநீதேஸ்வரர்-வேல்நெடுங்கண்ணி 
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ளது. 
மாடக்கோயில்.
மூலவருக்கு வலது புறம் முருகன் சன்னதி (சிக்கல் சிங்காரவேலர்) புகழ் பெற்றது. 
திருமால் வழிபட்ட தலம்.

இக்கோயிலில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் விமானங்களும், கோபுரங்களும் மூடப்பட்டிருந்ததால் ஒளிப்படங்கள் எடுக்க முடியவில்லை. இறைவனை தரிசித்துவிட்டு அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தோம். 

தேவபுரீஸ்வரர்-தேன்மொழியம்மை 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
கீழ்வேளூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது. 
மாடக்கோயில்.
தேவர்கள் வழிபட்டதால் தேவூர். 





பிரம்மபுரீஸ்வரர்-பெரியநாயகி
இங்குள்ள முருகன் சன்னதி புகழ்பெற்றது. இந்த முருகன் சிற்பத்தைச் செதுக்கிய சிற்பி எட்டுக்குடி, சிக்கல் ஆகிய முருகன் கோயில்களில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர் என்று கூறப்படுகிறது.
மூலவர், இறைவி, முருகன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. சிக்கலைப் போலவே இங்கும் மூலவர் சன்னதிக்கு இடப்புறத்தில் முருகன் சன்னதி உள்ளது. 




நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
திருவாரூர் கோயிலிலிருந்து சுமார் 6 கி.மீ.தொலைவில் உள்ளது. 
ஜடாயு வழிபட்டு பேறு பெற்றதால் குருவிராமேஸ்வரம் எனப்படுகிறது.
13 மே 2022ல் குடமுழுக்கு



வன்மீகநாதர்-கமலாம்பிகை.
5 வேலி பரப்பளவுடைய கமலாலயம்.
மூவர் பாடல் பெற்ற தலம்.

அகிலேஸ்வரர்-வண்டார்குழலி.
திருவாரூர் கோயிலுக்குள் உள்ளது.

தூவாய்நாதர்-பஞ்சின்மென்னடியாள்
தேர்நிலைக்கு அருகில் கீழ வீதியில் உள்ளது.
சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
அண்மையில் குடமுழுக்கு ஆன கோயில்.


திருவாரூர் தொடர்புடைய, பாடல் பெற்ற மூன்று கோயில்களிலும் தரிசனத்திற்குப் பின் திருவாரூரில் இரவு சிற்றுண்டிக்குப் பிறகு சுமார் 9.30 மணிவாக்கில் கிளம்பினோம், தஞ்சாவூரை நோக்கி, மன நிறைவுடன். 

விக்கிப்பீடியாவில் உள்ள பதிவுகளில் நாங்கள் சென்ற கோயில்கள் தொடர்பாக கட்டுரைகளில் ஒளிப்படங்கள் இல்லாதவற்றில் நான் எடுத்த ஒளிப்படங்களை இணைத்து மேம்படுத்தினேன். 

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா

முந்தைய கோயில் உலாக்கள்

06 May 2022

அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம் : ஆண்டு மலர் 2020-21

கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)  வெளியிட்டுள்ள 2020-2021 ஆண்டு மலரில், நான் இக்கல்லூரியில் எடுத்த ஒளிப்படங்கள் இடம் பெற்றுள்ளன.  


இம்மலரில் கல்லூரியின் 2020-2021க்கான ஆண்டறிக்கை, தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை, இயற்பியல் துறை, விலங்கியல் துறை, உயிர் வேதியியல் துறை, புவியியல் துறை, கணினி அறிவியல்-கணினிப் பயன்பாட்டுத்துறை, பொருளியல் துறை, வரலாற்றுத்துறை, இந்தியப்பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறை, வணிகவியல் துறை, தாவரவியல் துறை, வணிக நிர்வாகவியல் துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள்,  கல்லூரியில் நடைபெற்ற விடுதலை நாள், குடியரசு நாள், தேசிய இளைஞர் தின விழா, உலகத்தாய்மொழி தினம், கல்விக்குழுக்கூட்டம், மகளிர் தின விழா, பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம், ஆட்சிக்குழுக்கூட்டம், இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்பான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் பங்களிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மலரின் முத்தாய்ப்பாக பல்கலைக்கழக நிலையில் தகுதி பெற்றவர்களைப் பற்றிய விவரங்கள் (Bharathidasan University Rank Examinations (URE) April 2020, Under Graduate and Pot Graduate students) புகைப்படங்களுடன் உள்ளன. 

கல்லூரியின் பழைய கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணி அழகான புகைப்படங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல புதிய கட்டிடங்களின் புகைப்படங்களும் இதில் காணப்படுகின்றன. 

இவற்றுடன் ஒரு பக்கப்புகைப்படங்களில் நான் எடுத்த ஐந்து புகைப்படங்கள் (பா.ஜம்புலிங்கம், உதவிப்பதிவாளர், பணி நிறைவு, கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற குறிப்புடன்) இடம்பெற்றுள்ளன. (கீழுள்ள புகைப்படத்தில் முதல் இரு வரிசை)

1975-79இல் நான் படித்த கல்லூரி வெளியிட்டுள்ள மலரில் நான் எடுத்த ஒளிப்படங்கள் வெளியானது எனக்கு மகிழ்வினைத் தருகிறது. முதல்வருக்கும், மலர்க்குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

17 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.