23 March 2019

கோயில் உலா : 16 மார்ச் 2019

16.3.2019 கோயில் உலாவின்போது காவிரியின் தென்கரைத் தலங்களில் நான்கையும்,  (சக்கரப்பள்ளி), (திருப்பாம்புரம்), (செருகுடி), (திருச்சோற்றுத்துறை) மங்களாசாசனம் பெற்ற தலங்களில் ஒன்றையும் (சிறுபுலியூர்) கண்டோம். பயண நிறைவாக காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்றான திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமானின் திருமண நிகழ்வினைக் காணும் பேற்றினைப் பெற்றோம். நாங்கள் பெற்ற இறையனுபவத்தைக் காண உங்களையும் அழைக்கிறேன், வாருங்கள். 

சக்கரப்பள்ளி (சக்கரவாகேஸ்வரர்-தேவநாயகி)




சிவபுராணத்துடன் எங்கள் பயணம் ஆரம்பித்த தலம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சக்கராப்பள்ளியாகும். இது சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ளது. திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்ற தலமாகும். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்கள் சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்பனவாகும். திருவையாற்றினைப் போலவே இக்கோயில்களிலும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விரைவில் சப்தஸ்தான விழா நடைபெறவுள்ள நிலையில் கோயில் அதற்கான ஆயத்தான நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது.

திருப்பாம்புரம் (பாம்புரேஸ்வரர்-பிரமராம்பிகை)
அடுத்து  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருப்பாம்புரம் சென்றோம். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் காரைக்கால் சாலையில், பேரளத்திற்கு மேற்கே கற்கத்தியை அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது.  நாகராஜன் வழிபட்ட  இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையென்றும், வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போய்விடும், கடிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். ஆதிசேஷன் உலகைத்தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெற இறைவனருளை வேண்டி, உலகிற்கு வந்து மகாசிவராத்திரி நாளில் முதற்காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் நலம் பெற்ற பெருமையுடையது. வழிபாட்டிற்குப் பின் காலை உணவை திருப்பாம்புரத்தில் உண்டோம். அங்கிருந்து அருகில் உள்ள செருகுடி நோக்கிக் கிளம்பினோம்.

செருகுடி (மங்களேசுவரர்-மங்களநாயகி)

அங்கிருந்து ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற செருகுடி சென்றோம். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தை அடுத்து வலப்புறம் பிரியும் நாச்சியார்கோயில் கும்பகோணம் சாலையில் கடகம்பாடியை அடுத்து வலப்புறமாகப் பிரியும் சாலையில் 3கிமீ தொலைவில் உள்ளது.  அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது.  செவ்வாய் வழிபாடு சிறப்பானது.

சிறுபுலியூர் (சலசயனப்பெருமாள்-திருமாமகள் நாச்சியார்)

குழுவில் வந்த அன்பர் ஒருவர் அருகில் சிறுபுலியூர் இருப்பதாகவும், அதில் சிறிய வடிவில் கிடந்த நிலையில் உள்ள பெருமாளைக் காணலாம் என்று கூறியதன் அடிப்படையில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற சிறுபுலியூர் சென்றோம். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடியிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. புஜங்க சயனத்தில் மிகவும் சிறிய உருவத்தில் பெருமாள் உள்ளார். தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத மூலவர்.  ஒரு காலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச் சமாதானப்படுத்த பெருமாள் பால சயனத்தில் எழுந்தருளியதாகக் கூறுவர். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் மதிய உணவிற்காக கும்பகோணம் நோக்கிப் புறப்பட்டோம். மதிய உணவிற்குப் பின் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். தொடர்ந்து கோயில் உலாவில் நாங்கள் பார்க்க விடுபட்ட திருச்சோற்றுத்துறையை நோக்கிக் கிளம்பினோம்.

திருச்சோற்றுத்துறை (தொலையாச்செல்வர்-அன்னபூரணி)
திருச்சோற்றுத்துறை  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற, திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் ஒன்றுறாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் கண்டியூருக்குக் கிழக்கே 2 கிமீ தொலைவில் உள்ளது. திருவையாறு சப்தஸ்தானத் தலங்கள் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,  திருக்கண்டியூர், திருப்பூந்திருத்தி, திருநெய்த்தானம் என்பனவாகும். திருவையாற்றினை மையமாகக் கொண்ட இவ்விழாவின் தொடக்கமாக நந்தியெம்பெருமான் திருமணம் நாங்கள் பயணித்த அதே நாளில் நடைபெற்ற நிலையில் அங்கிருந்து திருமழபாடிக்கு எங்கள் பயணம் தொடர்ந்தது.   

திருமழபாடி (வைத்தியநாதர்-சுந்தராம்பிகை)


ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருமழபாடி அரியலூர் மாவட்டத்தில், திருவையாற்றுக்கு வடமேற்கே 16 கிமீ தொலைவில் உள்ளது. கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை திருமணம் நடைபெற்றது. முதலில் இரு கலசங்களை (ஒன்று நந்தி, மற்றொன்று சுயசாம்பிகை) வைத்து யாகம் உண்டாக்கி அக்னி வளர்க்கின்றனர். தொடர்ந்து கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பெருமானுக்கு பூணூல் அணிவிக்கப்படுகிறது. இருவருக்கும் காப்பு அணிவிக்கப்பட்டது. நிகழ்வின்போது மாற்றும் மாலையையும், தாலியையும் உயரப்பிடித்துக் காண்பிக்கும்போது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது பெண் மாப்பிள்ளை மாலை மாற்ற, மணமகன், மணமகளுக்கு தாலி அணிவிக்க திருமண நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது. முன்பொரு கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுவந்துள்ளோம். ஒரு மகாமகத்தையே நினைவுபடுத்திய அவ்விழாவினைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம். இரவு 9.00 மணிவாக்கில் திருமண விழா நிறைவுற்று, திருவையாற்றில் இரவு உணவுக்குப் பின் சுகமாக தஞ்சாவூர் வந்து சேரந்தோம்.
முனைவர் வீ.ஜெயபால் தலைமையில் கலந்துகொண்டோர் 
திருச்சோற்றுத்துறையில் எங்களுடன் இணைந்துகொண்டோர்
நன்றி
வழக்கம்போல உலா ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

துணை நின்றவை
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
ஆ.எதிராஜன், 108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு, ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், காரைக்குடி, ஐந்தாவது பதிப்பு, 2002
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

15 comments:

  1. சிறப்பான தகவல்கள். அருமையான தரிசனம்.

    ReplyDelete
  2. சிறப்பான பயணம். சப்தஸ்தானத் தலங்கள் தகவல் சிறப்பு.

    எத்தனை எத்தனை சிறப்பான தலங்கள் காவிரிக்கரையில்....

    ReplyDelete
  3. இந்த மாதிரி டிரிப்பை யார் ஆர்கனைஸ் பண்ணுகிறார்கள், எவ்வளவு ஆயிற்று, உணவுக்கு என்ன அரேஞ்மெண்ட்ஸ் என்று எழுதலையே....

    திருப்பாம்புரம் - இது ஏதோ படித்த நினைவை உண்டாக்குகிறது. பாடகர் சீர்காழியின் குரு இந்த ஊரைச் சேர்ந்தவரோ?

    ReplyDelete
    Replies
    1. 9 டிசம்பர் 2017 அன்று முனைவர் வீ.ஜெயபால் : கோயில் உலா 2014-2017 என்ற தலைப்பில் உலா ஏற்பாடு, நோக்கம் பற்றி எழுதியுள்ளேன்.
      சீர்காழியின் குரு தொடர்பாக விவரம் அறியேன். நன்றி.

      Delete
  4. படங்களும் பயணக் குறிப்புகளும் அருமை.

    ஸ்ப்தஸ்தானத் தலங்கள் பற்றிய விவரணங்களும் சிறப்பு. அறிந்து கொண்டோம் ஐயா.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. இந்த மாதிரி குழுவினர்களுடன் சென்றால்தான் கோவில்களை விரைவில் பார்க்க முடியும்.
    நாமாக ஒவ்வொன்றாக பார்த்தால் பாடல்பெற்ற தலங்களை பார்த்து முடிக்க நாட்கள் ஆகும்.

    அருமையான படங்கள், செய்திகள்.
    திருப்பாம்புரம் எவ்வளவு மாறுதல் அடைந்து இருக்கிறது!
    முன்பு கூட்டமே இருக்காது.

    ReplyDelete
  6. அருமையான பயணம். சுவையாகவும், சுருக்கமாகவும் விளக்கியுள்ளீர்கள். நன்றி. நம் தமிழ் நாட்டிலேயே எதனை கோவில்கள் பார்க்கவேண்டி இருக்கின்றன!?

    ReplyDelete
  7. மனநிறைவு தரும் அன்மீகபயணம் அருமை...

    ReplyDelete
  8. திருப்பாம்புரம் போயிருக்கோம். திருவையாறும் போயிருக்கோம்.திருமழபாடி போகலை! இங்கே உள்ள ஈசன் தானே, "மழபாடியுள் மாணிக்கம்?" செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்டது என்னும் தகவலைக் காட்டும் சிற்பம் உள்ள சக்கரப்பள்ளி கோயிலுக்கும் போனதில்லை. அருமையான தகவல்கள் கொண்ட பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மழபாடியுள் மாணிக்கமே..இவர்தான்.

      Delete
  9. பல கோவில்களுக்கும் போய் இருக்கிறோம் ஆனால் பதிவில்கண்ட கோவில்கள் பார்த்ததில்லை உங்கள்பதிவே பார்த்த நிறைவைத் தருகிறது

    ReplyDelete
  10. படங்களும் செய்திகளும் அருமை

    ReplyDelete
  11. கோவில்கள் பலவும் கண்டுகொண்டோம்.நன்றி.

    ReplyDelete