முகப்பு

23 June 2022

கோயில் உலா : 4 ஜூன் 2022

4 ஜூன் 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவிற்குப் பிந்தைய இரண்டாவது உலாவின்போது தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களான அவளிவணல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, கொள்ளம்புதூர், திருவிடைவாயில்,  கோடியக்கரை, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இடும்பாவனம், உசாத்தானம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் ஆலங்குடி, கோடியக்கரை, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இடும்பாவனம் ஆகிய கோயில்கள்  முன்னர் நான் பார்த்த கோயில்களாகும்.

அவளிவணல்லூரில் குழுவினர் சிவ புராணம் ஓத அங்கிருந்து உலா தொடங்கியது. 

1) அவளிவணல்லூர், திருவாரூர் மாவட்டம் 
சாட்சிநாதர்-சௌந்தரநாயகி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடல் பெற்றது
கும்பகோணத்திலிருந்து அம்மாப்பேட்டை செல்லும் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
மூலவருக்குப் பின்புறத்தில் சாட்சிநாதராக-ரிஷபாரூடர், பார்வதி காட்சி தருகின்றனர்.


2) அரித்துவாரமங்கலம், திருவாரூர் மாவட்டம் 
பாதாளேஸ்வரர்-அலங்காரவல்லி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன.
திருமால், வராக அவதாரம் எடுத்து இறைவனை வழிபட துவாரம் தோண்டியமையால் அரி+துவாரம்+மங்கலம் என்று பெயர் பெற்றது. இவ்வூர் அரதைப்பெரும்பாழி என்றும் அழைக்கப்படுகிறது. 


3) ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் 
ஆபத்சகாயேஸ்வரர்-ஏலவார்குழலி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
கும்பகோணம் நீடாமங்கலம் சாலையில் உள்ள தலம். 
கோட்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கியபின் மூலவரைக் காணும்படி உள்ளது. 


4) கொள்ளம்புதூர், திருவாரூர் மாவட்டம் 
வில்வவனநாதர்-அழகுநாச்சியார் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
கும்பகோணம் வழியாகக் குடவாசல் செல்லும் பேருந்தில் செல்லலாம்.  
ஊருக்கருகில் உள்ள முள்ளியாறு எனப்படும் வெட்டாற்றில் ஞானசம்பந்தர், அடியவரோடு ஓடம் ஏறிப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரையைச் சேர்ந்த அற்புதம் நிகழ்ந்தது. 


5) திருவிடைவாயில், திருவாரூர் மாவட்டம் 
புண்ணியகோடியப்பர்-உமையம்மை 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
கொரடாச்சேரி-கூத்தாநல்லூர் சாலையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் என்னும் வழிகாட்டி உள்ள வழியில் 2 கிமீ தூரத்தில் உள்ள தலம்.   
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருமுறைத்தலம். கி.பி.1917இல் கண்டுபிடிக்கப்பட்ட இத்தலத்தை ஐயடிகள் காடவர்கோன் ஷேத்திரக்கோவையில் தென்இடைவாய் என்று குறிப்பிடுகிறார்.

இங்கிருந்து அகத்தியான்பள்ளி செல்லும் வழியில் மதிய உணவினை உண்டோம். வழக்கமாக கோயில்களில் மதியம் சற்று இளைப்பாறிவிட்டுச் செல்வோம். போதிய நேரமின்மையால் பயணம் தொடர்ந்தது.


6) கோடியக்கரை, நாகப்பட்டினம் மாவட்டம் 
குழகேஸ்வரர்-மைத்தடங்கண்ணி 
சுந்தரர் பாடல் பெற்ற தலம்
சேரமான்பெருமாள் நாயனாருடன் வந்த சுந்தரர் கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்திப் பாடியதாகக் கூறுவர்.



7) அகத்தியான்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம் 
அகஸ்தீஸ்வரர்-மங்கைநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
வேதாரண்யம்-கோடியக்கரை சாலையில் உள்ளது. 
அகஸ்தியர், இறைவனின் திருமணக்கோலத்தைக் காண தவம் செய்த தலம் என்ற சிறப்புடையது.


8) வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம் 
வேதாரண்யேஸ்வரர்-யாழைப் பழித்த மொழியம்மை 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடல் பெற்ற தலம்
மூலவருக்குப் பின்புறத்தில் மறைக்காட்டுறையும் மணாளர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.



9) இடும்பாவனம், திருவாரூர் மாவட்டம் (தென்கரைத்தலம்)
மணக்கோல நாதர்-மங்களநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
மூலவருக்குப் பின்புறத்தில் மணவாளக் கோலத்தில் இறைவனும் இறைவியும் உள்ளனர்.  


10) திருவுசாத்தானம், திருவாரூர் மாவட்டம் (தென்கரைத்தலம்)
மந்திரபுரீஸ்வரர்-பெரியநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
இவ்வூர் முத்துப்பேட்டை கோயிலூர் என்றும் அழைக்கப்படுகிறது.

அதிக தூரத்தில் மதிய ஓய்வு இன்றி முழுக்க முழுக்க தொடர் பயணமாக இவ்வுலா அமைந்தது. சென்ற நினைவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். திருவுசாத்தானத்தில் இறைவனை வழிபட்டு, உலாவினை நிறைவு செய்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு சுமார் 11.30 மணியளவில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

கோடியக்கரை
 
திருவுசாத்தானம்

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா

முந்தைய கோயில் உலாக்கள்