முகப்பு

01 November 2022

சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்

சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்னும் நூல் எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதியைப் பற்றிய அறிமுகம், நேர்காணல், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிற்பக்கலையைப் பற்றிய அவருடைய கருத்துகளைக் காண்போம். 

"பெரும்பாலும் என்னுடைய படைப்புகளில் என் தாய்நாட்டு மணம் கமழ வேண்டும், இந்தியக் கலை கலாச்சாரத்தை எல்லா நாட்டவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே செய்யவே ஆசைப்படுகிறேன், செய்தும் வருகிறேன். எனது வளர்கலை சிற்பத்தை ஒரு வெளிநாட்டவர், ஒரு கலைப்பிரியர் வாங்கிச்செல்லும்போது அந்தச் சிற்பத்தில் உள்ள இதிகாச புராண வழிகளை இந்திய மரபு வந்த இதன் நிகழ்ச்சி, கதை, அதன் அடிப்படையில் இருக்கும் அந்த சிற்பம் செல்லும் இடம் எல்லாம் இந்திய மணம் கமழும் என்பது அய்யமில்லை...." (பக்கம் 13)

"இந்தியாவில் என்ன இல்லை? என்று கூறமுடியும். அயல்நாடுகளில் உள்ள கியூபிசம் முப்பரிமாணம் இயற்கை செயற்கை மற்றும் பல இசங்கள் இங்கு இந்தியாவில் இல்லையா? அதைவிட அதிகமாக இருக்கிறது. இதைக்கூர்ந்து ஆராய்ச்சிகள் செய்து வெளிக்கொண்டுவந்து புதிய வளர்கலை சிற்பங்களாக செய்ய முயற்சிக்கிறேன்...." (ப.15)

"கலை ஓவியங்களும், சிற்பங்களும் நாம் வாதிப்பதற்காக செய்யப்படவில்லை. கலைப்பொருளை உருவாக்கும் கலைஞனின் முயற்சி அது ரசிக்கப்படவேண்டும் என்பதே. ஒவ்வொரு கலைஞனும் தன் மன திருப்திக்காக கலைப்பொருள்களை உருவாக்கினாலும், அவற்றை ரசிக்கும் ரசிகனால்தான் முழு திருப்தி அடைகிறான்...." (ப.29)

"ஒரு தட்டையான தகடு என்கிற ஒரு பரிமாணத்தை வைத்து முப்பரிமாணத்துல சிற்பமாகக் கொண்டு வந்துகாட்டினது நான் ஒருவன்தான் 1964இல். அதற்கு அப்புறம்தான் என் சக நண்பர்கள் எல்லாம் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள்...." (ப.44)

"இங்கிருக்கிற நடராஜர் சிலை லண்டனுக்குப் போனா அது தமிழ்நாட்டுச் சிற்பம் என்று சொல்லுகிறான். ஆனால் லண்டனிலிருந்தோ, நியூயார்க்கிலிருந்தோ வீனஸ் சிலையைக் கொண்டு வந்தால் இங்கிருக்கு யாருக்கும் தெரியாது. அது யாராவது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். படித்தவர்கள் சொன்னால்தான் தெரியும்...." (ப.47)

"நவீன படைப்புகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் எனது தந்தையாரிடம் மரவுழி சிற்ப சாஸ்திரங்களை இலக்கண சுத்தமாகக் கற்றவன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் கிறுக்கனாகத் தெரியலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மரபின் அம்சம் மாறாமல் புதுமை நிகழ்த்துபவனாகவே என்னை நான் உணருகிறேன்....." (ப.74)

"நான் காலத்திற்கேற்ப சிந்தித்தேன். செப்புக்குடங்களின்மீது செய்யப்படும் நகாசு வேலையை மாற்றியதைத்தான் எனது முதல் படைப்பு என்று சொல்லமுடியும்......நடராஜர் சிலையை 'ப்ரேக்' செய்தேன். இதுபோன்ற துணிச்சலான படைப்புகளில் எனக்கான தனித்தன்மையை எடுத்துக்கொண்டேன்....தெள்ளத் தெளிவாக சிற்ப மரபுகளைக் கற்றுத் தேர்ந்த பிறகே உடலில்லாத கை, கால்களில்லாத புதிய படைப்புருவங்களை கற்பனை செய்கிறேன். என்னுடைய சிற்பங்கள் ராகம் தொலைத்த பாடல்கள் போலத் தெரியலாம். ஆனால் அதன் உயிரில் சிற்ப மரபுகள் படிந்திருக்கின்றன....." (ப.86). 

நூல் : சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்
விலை ரூ.600
ஆசிரியர் : எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதி
பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, தொலைபேசி : 044-25361039
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, செப்டம்பர் 2019




சிற்பகலாரத்னம் கலைச்செம்மல் திரு வித்யா சங்கர் ஸ்தபதி (முன்னாள் முதல்வர். அரசு கவின்கலைக் கல்லூரி. கும்பகோணம்) அவர்களை நானும், அவரது மாணவர் மற்றும் என் நண்பரான சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரும் கும்பகோணத்தில் 9 செப்டம்பர் 2022இல் அவருடைய இல்லத்தில் சந்தித்த இனிய தருணங்கள்.

5 comments:

  1. //ஒரு தட்டையான தகடு என்கிற ஒரு பரிமாணத்தை வைத்து முப்பரிமாணத்துல சிற்பமாகக் கொண்டு வந்துகாட்டினது நான் ஒருவன்தான் 1964இல்.//

    சிறப்பு. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  2. நல்லதொரு கலைஞனை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா !

    என்னுடைய சிற்பங்கள் ராகம் தொலைத்த பாடல்கள் போலத் தெரியலாம். ஆனால் அதன் உயிரில் சிற்ப மரபுகள் படிந்திருக்கின்றன....." (ப.86)

    இந்த வார்த்தைகளில் தெரிகிறது அந்த நூலின் சிறப்பும் எழுதியவர் திறமையும் இருவருக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete