முகப்பு

27 February 2023

தமிழ்நாடு புலவர் பேரவை : தகைசால் தமிழர் விருது

“தமிழுக்கு மாறுவோம்” என்னும் இயக்கத்தை தமிழ்நாடு புலவர் பேரவை முன்னெடுத்து சீரிய பணிகளைச் செய்துவருகிறது. அதில் ஒரு பணியாக ஆங்கிலத்திலிருந்த முகநூல் கணக்கின் பெயரைத் தமிழுக்கு மாற்றுவதும் ஒன்றாகும். அதில் ஈர்க்கப்பட்டு பலர் தம்முடைய முகநூல் கணக்கின் பெயரைத் தமிழில் மாற்றி வருகின்றனர். நானும் என் முகநூல் கணக்கினை தமிழில் மாற்றம் செய்தேன்.

அவ்வாறு மாற்றம் செய்பவர்களுக்கு “தகைசால் தமிழர்” என்னும் தலைப்பிட்டு அவ்வப்போது அவர்கள் பெயருடன் நிழற்படத்தையும் முகநூலில் வெளியிட்டுப் பாராட்டிவருகின்ற சிறப்பான பணியைச் செய்கிறது தமிழ்நாடு புலவர் பேரவை. 
அவ்வகையில் உறுப்பினராக இருக்கும் 80 பேருக்கு தகைசால் தமிழர்” என்னும் விருதினை அளித்துச் சான்றிதழ் வழங்கியது இப்பேரவை. விருதுச் சான்றிதழ் வழங்கும் விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் 26 ஜனவரி 2023இல் நடைபெற்றது. இதே நாளில் விக்கிப்பீடியாவின் வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள ஆனைக்கட்டி சென்றதால் விருதினை நேரடியாகப் பெறமுடியவில்லை. என் சார்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி அவர்கள் விருதினைப் பெற்றுக்கொள்ள பேரவையினர் இசைந்தனர். விருதினை அவர் பெற்று வந்தார்.
தமிழ்நாடு புலவர் பேரவைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 





ஒளிப்படம் நன்றி : தமிழ்நாடு புலவர் பேரவை

முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001







அருமொழி விருது, 2021




நிகரிலி சோழன் விருது, 2022

01 February 2023

வேங்கைத் திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை : 26-28 ஜனவரி 2023

2023 ஜனவரி 26-28இல் விக்கிப்பீடியாவின் வேங்கைத் திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை ஆனைக்கட்டியில் உள்ள ஸ்டர்லிங் உல்லாச விடுதியில் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு விக்கிப்பீடியாவிற்கு அப்பாற்பட்டு, அதன் சகோதர அமைப்பின் பணிகளையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன்.



பயிற்சிப்பட்டறையின் முதல் நாளன்று பயனர் என்ற முறையில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பிறரைப் பற்றியும் அறிந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் என்னுடைய பங்களிப்பினைப் பற்றியும், குடியரசு நாள் என்ற நிலையில் எங்கள் தாத்தா தொடங்கி வைத்த, எங்கள் இல்லத்தில் இன்றும் கொடியேற்றும் நிகழ்வினைப் பற்றியும் பேசினேன்.  




தொடர்ந்து விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் பற்றிய அறிமுகம்  ஆரம்பமானது. ஐந்து குழுவாகப் பிரிந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.  உள்ளடக்கம் மற்றும் வார்ப்புரு சார்ந்த அடிப்படைப் பயிற்சி, தொழில்நுட்பம், விக்கி பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கிசெய்திகள், விக்கிதரவு, விக்கிப்பீடியாவின் கொள்கைகள், தகவற்பெட்டி அமைத்தல் மற்றும் இணைத்தல், மேஜிக் வேர்ட்ஸ், மேப் உருவாக்கம்  உள்ளிட்ட பல தலைப்புகளில் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவும் சிறப்பாக உரையாற்றினர். பயனர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு அவர்கள் மறுமொழி அளித்து, தெளிவுபடுத்தினர். பலவற்றிற்கு உரிய இணைப்புகளைச் சொடுக்கிக் காண்பித்து, மனதில் பதிய வைத்தனர். புதியவர்களை கட்டுரை எழுத பழக்கப்படுத்துதல், ஊக்குவித்தல், அவர்கள் எதிர்கொள்ளும் ஐயங்களுக்கு விடை தரல் உள்ளிட்டவையும் விவாதிக்கப்பட்டன. பஞ்சாபி, வங்காள மொழியைச் சார்ந்த பயனர்களும் வந்திருந்தனர். அவர்களில் சிலர் உரையாற்றினர். 

இக்கூட்டத்தில் பல மூத்த பயனர்களையும், வளர்ந்து வருகின்ற இளம் பயனர்களையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. பல ஐயங்களை மூத்த பயனர்களிடம் கேட்டறிந்தேன். இளைய பயனர்களோடு கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். பலரை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.  உள்ளடக்கம் என்பதற்கு அப்பாற்பட்டு தொழில்நுட்பம் என்ற வகையில் உரையாளர்கள் தத்தம் கருத்தினைப் பரிமாறிக்கொண்டபோது அதன் பரிமாணத்தை அறிந்து வியந்தேன். 

   . 

நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுதல், பொதுவகத்தில் ஒளிப்படம் இணைத்தல் என்பதற்கு மேலாக விக்கிமூலம், விக்கிதரவு உள்ளிட்டவற்றில் பல நிலைகளில் பங்களிக்க ஓர் உந்துதலை இந்த பயிற்சிப்பட்டறை தந்துள்ளதை உணர்கிறேன். அத்தகைய உந்துதலை விரைவில் செயல்படுத்துவேன்.


இதற்கு முன் மதுரையில் 14 ஆகஸ்டு 2022இல் நடைபெற்ற விக்கிமேனியாவில் கலந்துகொண்டபோது பெற்ற அனுபவத்தைவிட இது சற்றே வித்தியாசமானதாக இருந்ததை அறியமுடிந்தது.







ஒளிப்படங்கள் நன்றி  : சக விக்கிப்பீடியர்கள்

3 பிப்ரவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது.