முகப்பு

15 March 2023

வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்" : கும்பகோணம் ஆ.கோபிநாத்

அண்மையில் நான் வாசித்த நூல் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளரான திரு கும்பகோணம் ஆ.கோபிநாத் எழுதியுள்ள வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்" (கூகூர் அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு) என்னும் நூலாகும்.



இந்நூல் ஊர் வரலாறு, கோவில் அமைவிடம், கோவிலின் கட்டடக்கலை அமைப்பு, கோவிலின் சிற்பக்கலை அமைப்பு, கோவிலின் கல்வெட்டுகள் கூறும் செய்திகள், கோவிலின் வரலாறு சொல்லும் மஹாபாரதம், வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும் ஆகிய தலைப்புகளைக் கொண்டுள்ளது. நூலில் துணைநூற்பட்டியலும், கோவிலின் வரைபடமும், கோவிலின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நூலில் ஊரின் வரலாறும், கோவிலின் வரலாறும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம். மற்றவற்றை நூலை வாங்கிப் படித்துப் பகிர்வோம்.

கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் நாச்சியார்கோயில் வழியாக நந்னிலம், நாகூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கூகூர் வரலாற்றின் திருநல்ல கூரூர் என்றழைக்கப்பட்டுள்ளது. ஆம்பரவரனேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் சத்திரிய சிகாமணி வளநாட்டு திருநறையூர் நாட்டு கூற்றத்து கூரூர் என வழங்கப்பட்டுள்ளது. (ப.9)

இங்குள்ள ஆம்பரவனேஸ்வரர் கோயில் காலத்தால் மிகவும் பழமையானதாக உள்ளது என்பதற்குச் சான்றாக அங்குள்ள கல்வெட்டுகளையும், செம்பியன் மாதேவியின் திருப்பணிகளுக்கு உட்பட்ட அழகிய நடராசர் சிலையையும் கூறலாம். (ப.11)

கருவறை முதல் மகா மண்டபம் வரை கோவிலைச்சுற்றி 53 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் சோழ மன்னர்களான மதுரை கொண்ட கோப்பர கேசரி பராந்தக சோழன், ஆதித்த சோழன் (முதலாம் ஆதித்தன்? ஆதித்த கரிகாலன்?), உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், அதிராஜேந்திரன் ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. (ப.31)

படிக்கும் வாசகருக்கு நூலைப் படித்தபின்னர் கோவிலுக்குச் செல்லும் ஆவல் இயற்கையாக எழுந்துவிடும் அளவிற்கு நூலாசிரியர் நேரில் சென்று தரவுகளைத் திரட்டி, பிற சான்றாதாரங்களையும் தந்து மிகவும் சிறப்பாக நூலினைப் படைத்துள்ளார். கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை நுணுக்கமாக அணுகி உரிய விளக்கங்களோடும், படங்களோடும் சிறப்பாகத் தந்துள்ளார். மாணவர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பயனுறும் வகையில் நூலை அமைத்துள்ளார். முதல் நூலாக இந்நூலை வெளிக்கொணர அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. அவர் இம்முயற்சியைத் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இச்சீரிய பணியை அடியொற்றி அச்சங்கத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு பல நூல்களை வெளிக்கொணர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நூல் : வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்" (கூகூர் அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு)

ஆசிரியர் : கும்பகோணம் ஆ.கோபிநாத்  (அலைபேசி 98849 86937)
பதிப்பகம்: கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம், கும்பகோணம்,
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, மார்ச் 2023
விலை ரூ.100

இக்கோயிலைப் பற்றி விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையில் உள்ள ராஜகோபுரம் மற்றும் பிற ஒளிப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.


நூல் வெளியீட்டு நிகழ்வு

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியும், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கமும் இணைந்து 3 மார்ச் 2023இல் நடத்திய தேசிய அளவிலான சோழர்கள் ஒரு மீள்புரிதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இந்நூல் வெளியிடப்பட்டது.



வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலாசிரியரைப் பாராட்டினேன். நான் பயின்ற அக்கல்லூரியில் உள்ள ஆசிரிய நண்பர்களைச் சந்தித்தேன்.








6 comments:

  1. மகிழ்ச்சியூட்டும், பாராட்டப்பபடவேண்டிய பணி. இதுபோல தமிழகக் கோவில்கள் எல்லாவற்றுக்கும் விளக்கப் புத்தகங்கள் போட்டால் சிறப்பாய் இருக்கும்.

    ReplyDelete
  2. ஆதித்த கரிகாலன் கோவில் கைங்கர்யம் எதுவும் செய்ததாய் வரலாற்றில் இல்லை என்று நினைக்கிறேன். பட்டத்துக்கு வருவதற்கு முன்னரே வீரபாண்டியனைக் கொன்ற சில நாட்களில் அவனும் கொலையுண்டு விடுகிறான்.

    ReplyDelete
  3. சிறப்பான ஒரு நூல் அறிமுகம் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ஆவலைத் தூண்டும் நூல். அடுத்தமுறை பயணத்தில் தங்களைச் சந்திக்கிறேன் சில நூல்களையும் வாங்கிக்கொள்கிறேன்

    ReplyDelete
  5. தமிழகக் கோயில்களுக்கு
    வரலாற்றுச் செய்திகளுடன் விளக்கப் புத்தகங்கள் வரவேண்டும்.. சிறப்பாய் இருக்கின்றது பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. சிறப்பு... மேலும் இவை போல் தொடர வேண்டும்... வாழ்த்துகள்...

    ReplyDelete