முகப்பு

10 October 2023

பேராசிரியர் வே.இரா. மாதவன் (6.4.1952-8.10.2023)

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் 8.10.2023 அன்று இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பழகுவதற்கு இனியவர், மிகச்சிறந்த பண்பாளர், மென்மையான பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1993இல் ஆய்வில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் பல ஆசிரிய, அலுவலக நண்பர்களுடன் அவ்வப்போது என்னுடைய ஆய்வினைப் பற்றிப் பேசுவதுண்டு. அவ்வாறு நான் ஆய்வு தொடர்பாக பேசி வந்த ஆசிரியர்களில் ஒருவர் திரு வே.இரா.மாதவன் அவர்கள். அவரிடம் பேசும்போது பெரும்பாலும் கோயில்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டறிவேன். கருத்துகளை அவர் நுணுக்கமாக எடுத்துக்கூறும் விதம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு அவருடைய நூல் தொடர்பாக நான் எழுதிய கடிதம் தி இந்து நாளிதழில் வெளியானது. சற்றே திரும்பிப்பார்ப்போம்.

2008இல் தி இந்து (ஆங்கிலம்) இதழில் வெளியான ஒரு கட்டுரையில் தமிழில் தல புராணங்கள் தொடர்பாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த நூலும் இல்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை வெளியானது. ("..Nobody has done any serious work on Tamil sthalapuranams.", The Vandalization of Heritage, Interview, The Hindu, Magazine Section, 10.2.2008, p.7)




அவர் எழுதிய தமிழில் தல புராணங்கள் நூலை (தமிழில் தல புராணங்கள், முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி, பாவை வெளியீட்டகம், சி1, முன்றில் சாலை, தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், திருச்சி நெடுஞ்சாலை, தஞ்சாவூர், 1995) நான் படித்துள்ளேன். நாளிதழில் நான் படித்த செய்தியை அவரிடம் கூறி, இது தொடர்பாக அவ்விதழுக்கு நான் கடிதம் எழுதவுள்ளதைக் கூறினேன். அப்போது அவர் அவ்விதழில் 1997இல் வெளியான நூல் மதிப்புரையின் (Sthalapuranas in Tamil, The Hindu, 14 October 1997) படியைத் தந்தார். தொடர்ந்து அவ்விதழுக்கு நான் எழுதிய கடிதம் (More on sthalapuranams, The Hindu, Magazine, 24 February 2008) வெளியானது.

அவரைப் போன்ற அறிஞர்களுடன் விவாதம் செய்தது என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் மிகவும் துணையாக இருந்தது. அவருடைய மறைவு என்னைப் போன்றோருக்குப் பேரிழப்பு.

தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் 2014இல் தமிழில் தல புராணங்கள் (நூல்) என்ற தலைப்பிலும், 2015இல் திருக்குடந்தை புராணம் என்ற தலைப்பிலும் பதிவுகளை ஆரம்பித்தேன்.

5 comments:

  1. எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள். தமிழுக்கான அவர் தொண்டு போற்றப்பட வேண்டியது.

    ReplyDelete
  3. காலத்தின் வலிமை சில காலங்களில்....வலிமை இழந்தும்...வலிமை புத்துணர்ச்சியுடனும் நிகழ்கிறது.....பழகிய நாட்களை....மீட்க...அன்னாரது உடல்.....பொருள்...ஆவி...மூன்றும்...மமுத்தழுக்கு அர்பணிப்பு....தங்களின் கருத்து....சிகரம் தொடும்.

    ReplyDelete