முகப்பு

15 October 2023

அத்தையின் ரசனை

எங்கள் அத்தையின் குணங்களில் நான் அதிகம் ரசித்தது அவருடைய அழகியல் ரசனை ஆகும். அத்தையின்  ரசனைத்தன்மை என்னை இயல்பாகப் பற்றிக்கொண்டுவிட்டது. கும்பகோணத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு இவ்வாறான ஒரு ரசனையை ரசிக்கும் குணம் உடையவராக நண்பர் திரு தேணுகா அவர்களைக் கண்டேன்.  

ஒவ்வொரு நவராத்தியின்போது கொலுவின் முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை முழு ஈடுபாட்டுடன் இருப்பார் எங்கள் அத்தை திருமதி இந்திரா. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் அழகாக கொலு அமைய அவரே காரணம். கொலுப்படியின் இரு ஓரங்களிலும் உரிய பொம்மைகளை அளவிற்கும், வண்ணத்திற்கும் தக்கபடி முதல் படி முதல் கடைசிப்படி வரை சரியாக வைத்தல், தசாவதாரம் போன்றவற்றை உரிய வரிசையாக அமைத்தல், இல்லாத பொம்மைகளை ஒவ்வொரு ஆண்டும் வாங்கிச் சேர்த்தல், உடைந்த பொம்மைகளுக்குப் பதிலாக புதிதாக வாங்குதல் என்ற வகையில் அவருடைய ஈடுபாடு இருந்தது.   

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் நவராத்திரி கொலுவின்போது இடம்பெற்ற, அத்தை வாங்கிய, அம்மா பின்னிய பொருள்களில் உள்ளவற்றில் சில மட்டும் இன்று எங்கள் இல்ல காட்சிப்பேழையில் உள்ளது. 

அவருடைய அழகியல் ரசனையானது நவராத்திரி கொலுவில் மட்டுமல்ல. அழகான பொருள்கள் கிடைத்தால் ஆர்வத்தோடு வாங்குவார். நகையாகட்டும், ஆடையாகட்டும், அழகான பொம்மைகளாகட்டும் எதுவாக இருந்தாலும் வாங்கி விடுவார். ஆடை வகைகளை அணிந்து அழகு பார்ப்பார். என் தாயாரும் அத்தையும் மணி பின்னல் தொடங்கி காட்டன் துணி விதம் விதமாகப் பின்னுதல் மற்றும் எம்ப்ராய்டரி வேலைகள் செய்வர்.

கும்பேஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேரானது தெற்கு வீதியிலிருந்து மேல வீதிக்கும், அங்கிருந்து வடக்கு வீதிக்கும் திரும்பும்போது அதனை நின்று ரசிப்பார். தேரின் அழகினைத் திரும்பும்போது பார்க்கவேண்டும் என்பார்.

உறவினர்கள், நண்பர்களின் மகள்களுக்கு ஆர்வமாக விதம்விதமாக பூ தைப்பார். சாதாரணமாக பூ தைத்தல், தாழம்பூ வைத்து தைத்தல், வங்கி மாடல், பல வகைகளில் பூ தைக்கும் அழகே அழகு. வாழைப்பட்டையை சமமாக அறுத்தெடுத்து, கோர்த்த பூவை அதில் வங்கி மாடல், நேர் மாடல் என்ற வகைகளில் தைப்பார்கள். சில சமயங்களில் அழகான ஈர்க்குச்சிகளை எடுத்துக்கொண்டு அதில் வரிசையாக பூவினைச் செருகி சடையின் இரு பக்கங்களிலும் அமைத்து, நடுவில் அழகழகான வண்ணப் பூக்களை வரிசையாக அமைத்து, இடையே வண்ண நூல்களை பூப்போல சுருட்டி அமைத்து, நடுவில் மாறுபட்ட வண்ணத்தில் இடத்திற்குத் தக்கவாறு பூவையோ வண்ண நூலையோ அமைப்பார். அனைத்து வகையான பூக்களும் அதில் இடம்பெற்றுவிடும். சில சமயங்களில் கருப்பு திராட்சைப்பழம் வைத்தும் தைப்பர். நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள்கூட பூ தைப்பார்கள். பூப்பு நீராட்டு, வளைகாப்பு போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது அவர் சடை பின்னப் பார்த்திருக்கிறேன். தலை முழுக்க பூவும், வண்ண நூலும் மட்டுமே. தலையில் வட்ட வடிவ கல் பதிந்த ராக்கடி, இரு புறமும் கல் பதிந்த வட்ட வடிவ சூரியன், பிறை வடிவிலான சந்திரன் வைப்பர். நடுவில் வட்டமாக மூன்றடுக்கில் பின்னிய மல்லிகைச்சரத்தை ரிங் பால் வடிவில் அமைக்கப்பட்ட கொண்டையைச் சுற்றி அடியில் முடிச்சுப் போடுவர்.  பூ தைக்கப்படுகின்றவர் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், பொறுமையாக இருப்பார். பூ தைத்து முடிந்தபின் பூ தைக்கப்பட்டவர் நண்பர்கள், உறவினர்களிடம் சென்று காண்பித்துவிட்டு வருவார். அதனை ஆர்வமாகப் பார்த்து அவர்கள் கருத்து கூறுவர். சில சமயங்களில் போட்டோ ஸ்டுடியோக்களில் சென்று போட்டோவும் எடுப்பர். பூ தைத்தவர், தைக்கப்பட்டவர் என்ற ஒரு பிணைப்பானது அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ஆர்வத்தினை இயல்பாகவே உண்டாக்கிவிடும். எப்போதாவது பூ தைத்துப் பெண் குழந்தைகளைக் காண நேரும்போது அதனை அத்தை பின்னியதோடு ஒப்புநோக்கிப் பார்த்துவிடுகிறேன்.

வளையலணி விழாவிற்காக பூ தைக்கும்போது அந்தப்பெண் அதிக நேரம் உட்கார இயலா நிலை ஏற்படும். அச்சூழலில் விழாவின் முதல் நாளே வாழைப்பட்டையில் அளவெடுத்து வெட்டி அதில் பூவை வைத்துத் தைத்து ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட்டு, மறுநாள் தலையில் வைத்துத் தைப்பர்.  

பிள்ளைகளின் நடவடிக்கைகள், பேச்சுகளை மனம் லயித்து ரசிப்பார். தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடுபுலி, பரமபதம், பம்பரம், ஏழாங்கல், உப்புமூட்டை, கூட்டாஞ்சோறு, கோலிகுண்டு, கிச்சுகிச்சு தாம்பலம்,  கிட்டிப்புல், ஒத்தையா ரெட்டையா, ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையாம் முந்திரிக்கா, நொண்டி விளையாட்டு, கேரம் போர்டு என்ற விளையாட்டுகளை  நாங்கள் விளையாடும்போது ஆர்வமாகப் பார்ப்பார். அதிக நேரம் விளையாடும்போது திட்டியதும் உண்டு.

மீன் குழம்பு ஊற்றி சாப்பிடும்போது நமக்கும் சாப்பிட ஆசை வந்துவிடும். பொறுமையாக நிதானித்து மீனின் முள்ளை எடுத்து லாவகமாக ருசித்துச் சாப்பிடுவார். இன்னும் மீன் குழம்பை நான் அதிகம் விரும்பிச் சாப்பிட அவரே காரணம். 

மருதாணி போடுவதில் ஆர்வம் காட்டுவார். உள்ளங்கையினை அடைத்து முழுமையாகப் போடுதல், நடுவில் மட்டும் போட்டு சுற்றி சிறு ரவுண்டு வைத்தல், அனைத்து கைகளுக்கும் மோதிரம் போடுதல் என்றவாறு விதம் விதமாகப் போடுவார். மருதாணி போட்டவர்களைக் கண்டால் எவ்வாறாக போட்டுள்ளார்கள் என்று ஆர்வமாகப் பார்ப்பேன். இன்றும் எனக்கு மருதாணி வைத்தலில் ஒரு ஈடுபாடு உண்டு.    

ஆடையில், குணத்தில், பழகும் முறையில், நடத்தையில் பிறரிடம் காணும்போது அவருடைய கலையியல் ரசனையை ஆர்வத்தோடு ரசிப்பேன். குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை கொலுசு அணிந்த குழந்தை, அழகான சடைப்பின்னல், தலை நிறைய பூ, பாவாடை தாவணி, புடவை கட்டி அழகுபார்த்தல், நெற்றியில் அழகான பொட்டு, அழகான ஆடை என்ற வகையில் அவருடைய ரசனையானது நீண்டுகொண்டே இருக்கும். தாத்தா, ஆத்தாவைப் போல குழந்தைகளும், வளரும் பிள்ளைகளும் அணியும் ஆடைகளையும், ஆடை அணியும் முறைகளையும் ரசிப்பார். பிள்ளைகள் உடல் தெரிவது போன்ற ஆடை, மெல்லிய ஆடை, கருப்பு வண்ண ஆடை, முட்டிக்காலுக்கு மேல் டவுசர், ஆண் பிள்ளைகள் அதிகமாக முடி வைத்திருத்தல் நீண்ட கிருதா வைத்தல் என்பனவற்றைக் கண்டிப்பார். ஒருவரின் பண்பினை நிர்ணயிப்பதில் ஆடைக்கும், தலை முடிக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினர். அத்தகைய பண்பாடுகளைக் கடைபிடிக்கும்போது கண்ணியமும், ஒழுங்கும் இயல்பாக வந்துவிடும் என்பதையும், அவற்றைக் கடைபிடிக்காத நிலையில் பல விளைவுகள் உண்டாகும் என்பதையும் அவர்கள் உணர்த்தினர். இன்றும் அந்த ரசனைகளையும், ஆடை முறையையும் நினைக்கும்போது அத்தையின் நினைவு இயல்பாக வந்துவிடும். அந்த நாள்கள் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்த நாள்கள். அந்நாள்களையும் நவராத்திரி கொலுவையும் மறக்கவும் முடியுமோ?

9 comments:

  1. தங்களது அத்தை மற்றும் தங்களது ரசனையையும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  3. //அத்தை வாங்கிய, அம்மா பின்னிய பொருள்களில் உள்ளவற்றில் சில மட்டும் இன்று எங்கள் இல்ல காட்சிப்பேழையில் உள்ளது.//

    என் அம்மாவும், என் அக்காவும் இது போல பாசியில் நிறைய கொலுவிற்கு செய்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் அந்த கை வேலைதான் சிறப்பாக செய்வார்கள்.
    குழந்தைகள், நாய் , கிலு கிலுப்பை, வீணை , மற்றும் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் , ஷோபா செட் எல்லாம் எங்கள் வீட்டில் உண்டு.
    உங்கள் அத்தை நல்ல ரசனையானவர்கள். அம்மாவின் கைவேலைகள் அற்புதம்.
    நவராத்திரி நினைவுகள் பகிர்வு அருமை.

    ReplyDelete
  4. ரசனையான நினைவுகள். அந்த நாளும் வந்திடாதோ...

    ReplyDelete
  5. உங்கள் அத்தையின் ரசனையை ரசித்து வாசித்தேன். நல்ல ரசனையானவங்களா இருந்திருக்காங்க. உங்கள் அம்மாவின் கை வேலைகளும் ரொம்ப அழகாக இருக்கின்றன. ரசனையான நினைவுகள்.

    எனக்கும் இம்மாதிரியான ஆர்வங்கள் உண்டு என்பதால் ரசித்து வாசித்தேன். பூஜடை தைத்ததுண்டு. தாழம்பூ ஜடையும் தைத்ததுண்டு. முத்து கோர்த்த சடை என்று. பின்னாளில் அட்டையிலும் நான் பூக்களை வைத்து ராக்குடி போல் அலங்காரம் செய்ததுண்டு.

    கீதா

    ReplyDelete
  6. சிலருக்கு அழகியல் ரசனை நாம் வியக்கும் அளவிற்கு அமைந்துவிடுகிறது.

    ReplyDelete
  7. அருமையான ரசனையான நினைவுகள் ஐயா...

    ReplyDelete
  8. /// அந்த நாள்கள் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்த நாள்கள். அந்நாள்களையும் நவராத்திரி கொலுவையும் மறக்கவும் முடியுமோ?... ///

    மறக்கத்தான் முடியுமோ..

    சிறப்பான பதிவு..

    ReplyDelete
  9. அருமையான நினைவலைகளை அத்தையின் கதையாக....கொலுவேற்றியதில்...விழாக்கோலம் கண்டது தாங்களின்...சிறுகதை...வளர்க வளமுடன்....வேப்பத்தூர் கோவில் வரலாற்றை படிக்க...தங்களின்...பக்கத்திற்கு படிக்க வாய்ப்பு.

    ReplyDelete