முகப்பு

06 March 2024

பனை உறை தெய்வம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள பனை உறை தெய்வம் என்னும் நூல் 25 கட்டுரைகளைக் கொண்டதாகும். அவற்றில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களின் சிறப்புகளை சிற்பம், வரலாறு, இலக்கியம் என்ற  பலவகையான பொருண்மைகளில்  ஆசிரியர் விவாதிக்கிறார். அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கூறுபாடுகளைப் பல இடங்களில்  ஒப்புமைப்படுத்தி சிறப்பாகக் கூறியுள்ளார். சிற்பம், கட்டடக்கலைக்கு அப்பாற்பட்டு சமுதாயத்திற்குத் தேவையான பண்பாட்டு அடிப்படையிலான பல நுட்பங்களை கோயில்கள் வெளிப்படுத்தியுள்ளதையும் முன்வைக்கிறார்.  


நூலின் தலைப்பினைப் பார்த்தபோது, கும்பகோணத்தில் என்னுடைய இளம் வயதில் எங்களின் சின்ன ஆத்தா வீட்டில் குலதெய்வம் பனையடியானுக்கு சிவராத்திரியன்று கொண்டாடப்பட்டுவந்த விழா நினைவிற்கு வந்தது. 

மரங்கள் என்பவை தெய்வத்தோடு தொடர்புடையவை என்பதால் ஒவ்வொரு சிவன் கோயிலிலும் தல விருட்சம் என ஏதாவது ஒரு மரம் புனிதமாகப் போற்றப்பெறுவதாகவும், சில கோயில்களில் பனை மரங்களே தல மரங்களாக விளங்குவதாகவும்  கூறுகிறார். மகாகார்த்திகை நாளான கார்த்திகை மாதத்து கார்த்திகை நாளில் சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் ஒரு மனை மரத்தை கோயிலின் வாயிலில் நட்டு அதனைப் பனை மட்டைகளைக் கொண்டு உச்சி வரை மூடுவதைக் குறிக்கின்ற சொக்கப்பனை என்பது உண்மையிலேயே சொக்கன்பனை என்றும், காலப்போக்கில் திரிந்து சொக்கப்பனை ஆகிவிட்டது என்றும் கூறுகிறார். 

பொ.ஆ.870-900இல் முதல் ஆதித்தசோழன் கும்பகோணத்தில் எடுத்த நாகேஸ்வரன் கோயிலில் கருவறையின் அதிஷ்டானத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட இராமாயணச் சிற்பக் காட்சிகள் கம்பர், இராமன் கதையை இலக்கியமாக நமக்குக் காட்டுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே சோழ நாட்டுச் சிற்பிகளால் செதுக்கப்பட்டதாகவும், இவ்வாறான இராமாயணத் தொடர்ச் சிற்பக் காட்சிகள் கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள புள்ளமங்கை கோயிலில் கலைக்கோட்டு முனிவரின் யாகத்தில் தொடங்கி இராம காதை இறுதி வரை இடம்பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.

சேக்கிழார் பெருமான் வாயிலாக, "மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்..."  என்று தொடங்கும் பதிகம் மலர்ந்த வரலாற்றை நேரில் கேள்வியுற்ற இரண்டாம் இராஜராஜசோழன், கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தில் தான் எடுத்த இராஜராஜேச்சரத்தில் அறுபத்துமூவர் வரலாற்றுக் காட்சிகளைச் சிற்பத் தொடர்களாகப் படைத்தபோது நாவுக்கரசர் திருவையாற்றுக்கு வந்த வரலாற்றைக் காட்டி அப்பதிகத்தின் பதினொரு பாடலுக்கும் பதினொரு சிற்பக்காட்சியை அமைத்து ஒரு பதிகத்தையே கலைப்படைப்பு வாயிலாக அங்கு காட்சிப்படுத்தியதாகக் கூறுகிறார். அதில் அன்றில், மகன்றிலைப் பற்றிக் கூறும்போது, அன்றில் வேறு, மகன்றில் வேறு என்றும், நாரை வகையைச் சார்ந்த அன்றிலை வடமொழியில் கிரவுஞ்சம் என்றும், அன்றில் இறந்தால் அதன் துணை உடன் இறக்கும் என்பது தவறான கருத்தாகும் என்றும் தெளிவுபடுத்துகிறார். 

தென்குடித்திட்டையில் திருஞானசம்பந்தர் கனகமூக்கு என ஒரு அரிய வகை வயல் மீனைக் குறிப்பிடுவதுபோல திருநாவுக்கரசர், காவிரியாற்றில் வந்த கொய்மீன் எனும் அரிய வகை மீனைப் பற்றி தம் பதிகத்தில் குறிப்பிடுவதாகவும் மக்கள் இவ்வகை மீனை பொய்க்கெண்டை என்றழைப்பதாகவும் கூறுகிறார். 

மழைபெய்யத் தொடங்கியடன் சேகரமாகும் அழுக்கு நீரை நந்தவனங்களுக்கு பாயுமாறு அனுப்பத் தனிக் கால்வாயும், தொடர்ந்த பெருமழையால் பின்பு சேரும் தூய நீரைத் திருக்குளங்களுக்கு அனுப்பத் தனிக் கால்வாயும் அமைத்து, மழைநீர் சேகரிப்பை முற்காலத்தில் நம் கோயில்களில் நடைமுறை சாத்தியமாக்கியதை பல கோயில்களின் கட்டுமான அமைப்பால் அறிய முடியும் என்று கட்டுமானத்தின் பொறியியல் சிறப்பை எடுத்துக்கூறுகிறார். 

நூலைப் படிக்கும்போது நேரில் அவ்விடங்களுக்குச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் இயற்கையாக எழுவதை உணரமுடிகிறது. அத்தகைய ஓர் எண்ணத்தைத் தூண்டியுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

---------------------------------------------------------------------------------------------------
நூல் : பனை உறை தெய்வம்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன் (80154 13327)
பதிப்பகம் : அன்னம், 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007  annamakaram@gmail.com (75983 06030/99430 59371)
ஆண்டு : முதற்பதிப்பு, டிசம்பர் 2023
விலை : ரூ.170
---------------------------------------------------------------------------------------------------

4 comments:

  1. விமர்சன விளக்கம் நன்று.
    நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நூலைப் படிக்கும்போது நேரில் அவ்விடங்களுக்குச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் இயற்கையாக எழுவதை உணரமுடிகிறது..

    உண்மை தான்..

    ReplyDelete
  3. புள்ளமங்கை சிற்பங்களை நான் பார்த்திருக்கின்றேன்...

    ReplyDelete