முகப்பு

29 October 2023

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு : சிறப்பு மலர் 21-23 சூலை 2023

21-23 சூலை 2023இல் கோலாலம்பூரில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையொட்டி வெளியான மாநாட்டுச்சிறப்பு மலர் பண்பாடு, கலை மற்றும் வரலாறு, இசை, இலக்கியம், சிறார் இலக்கியம், பதிப்பியல், அறிவியல் மற்றும் கணினி அறிவியல், தொல்லியல் ஆகிய பொருண்மைகளில் 390 பக்கங்களில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 



மலேசியப் பிரதமர், கல்வியமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், துணைக்கல்வியமைச்சர், மனித வளத்துறை அமைச்சர், தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சகத் துணையமைச்சர், மாநாட்டுத்தலைவர் ஆகியோரின் வாழ்த்துகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. 

வரலாற்றறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், துறைசார்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்பினையும் இம்மலர் அருமையாக முன் வைக்கிறது. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவம் பெறுகிறது. மலரின் சில கட்டுரைகளிலிருந்து.......

"இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்கு தாய்மொழிமீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும்.." (ப.35)

"சங்க, காப்பியக் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த துடி பத்திமைக் காலத்தில் உடுக்கை என்றும் அழைக்கப்பெற்றுச் சோழர் காலத்தில் ஆடலுக்குகந்த இசைக்கருவியாகத் திகழ்ந்ததுடன், சிவபெருமானின் சில கோலங்களிலும் இடம்பெற்றது... " (ப.73)

"கடல் கடந்தும் காரைக்கால் அம்மையார் பயணித்திருக்கிறாள். கம்போடியாவில் உள்ள பண்டிஸ்ரீ கோவிலில் சிவநடனக் காட்சியில் அம்மை காட்டியிருப்பது சிறப்பு.." (ப.76)

"சேவல்தான் முதன்முதலில் காலத்தால் முந்திய நூல்களில் முருகனது அடையாளம். இது ஓர் இனக்குழுக்குறி. மயில் பின்னால்தான் வருகிறது." (ப.94)

"இசை என்பது ஒன்றுதான். மெலடி, மெட்டு, சேர்ந்திசை, தூய சங்கீதம், வர்ணம், பதம், நிரவல், நம் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டவை.. " (ப.105)

"பேச்சு முதலில் தோன்றியது என்பதும் எழுத்து பிறகு காலவரிசையில் மனிதர்கள் கண்டுபிடித்திருப்பார்கள் என்பதும் எல்லோரின் நம்பிக்கை.." (ப.134)

"காலனியக் காலத்தில் அறிவியல் சொல்லாடல்களால் கட்டப்பட்ட தேசியம் என்ற கருத்தியலுக்கு ஏற்ப இறைபக்தி, தேசபக்தியாக மடைமாற்றம் அடைந்தது. அதனால், பக்தி இயக்க மரபு தமிழில் நிகழ்ந்த வேதமதம் சார்ந்த வைதீக உணர்வை பரவலாக்கிறது." (ப.187)

"மூல மொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம்." (ப.200)

"தமிழர்கள் பன்னிரண்டு மாதங்களின் பெயர்களை, சூரியன் இயங்கும் உடுக்கணத்தின் பெயர்களாகக் கொண்டிருந்தனர்..." (ப.298)

"உலக அளவில் தனியாகப் பல வணிகச்சின்னங்கள் இருந்துவருகின்றன. சூப்பர்மென், அயர்ன்மேன், ஸ்பைடர்மேன் என நாளுக்கு நாள் அயல்நாட்டு வணிகச்சின்னங்களை கொண்டுசெயல்பட்டு வருகின்றோம். ஆனால் நமது தமிழிலிருந்து வரலாற்றுச் சின்னங்களை, கதாநாயகர்களை அடிப்படையாகக் கொண்டு, வணிகச்சின்னங்களை நாம் உருவாக்கவில்லை என்பதே உண்மை." (ப.324)

"தமிழ் விக்கிப்பீடியா தொகுப்பு குறித்துத் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள், ஆசிரியர்களிடையே உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நிலை மாறவேண்டும்." (ப.329)

சங்க இலக்கியம் தொடங்கி இக்காலம் வரையிலான பல்துறை சார்ந்த மிக நுட்பமான கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த மலரானது ஆய்வாளர்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவரும்  பாதுகாக்கப்படவேண்டிய மலராகும். தேவையான இடங்களில் அடிக்குறிப்புகளும், படங்களும் வாசகருக்கு  தெளிவினைத் தருகின்றன. படிக்க அயர்ச்சி தராத எழுத்துரு, வாசிப்பு வேகத்தை மேம்படுத்த ஆங்காங்கே படங்கள், கோட்டோவியங்கள், வேறுபடுத்திக்காட்ட தடித்த எழுத்துரு என்ற வகையில் ஒரு கலையியல் ரசனையாடு அமைந்துள்ளது இம்மலர். சிறப்பான முறையில் மலரை வெளிக்கொணர்ந்த மலர்க்குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.














11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பு மலர்
வெளியிட்டோர் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியக்கிளை, 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 044 28340488, மின்னஞ்சல் : 11worldtamilconf@gmail.com, www.iatrinternational.org.
மலர் தேவைக்கு : 
மலராசிரியர் திரு சுகவன முருகன், அலைபேசி 98426 47101, muruguarch@gmail.com

6 comments:

  1. எடுத்துக் காட்டி இருக்கும் உதாரணங்களை படிக்கும்பொழுது, புத்தகம் சிறப்பான தகவல்களைக் கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. கொடுத்திருக்கும் தகவல்களே சிறப்பு...

    அருமை ஐயா...

    ReplyDelete
  4. மலர் வாங்கிவிட்டேன் ஐயா. இனிதான் படிக்க வேண்டும். நன்றி

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்கள் கொண்ட மலர் என்று தெரிகிறது.

    //மொழிபெயர்ப்பாளர்களடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம்."//

    மிக மிக அருமையான கருத்து.

    கீதா

    ReplyDelete
  6. அருமைங்க அய்யா

    ReplyDelete